இலங்கை

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

 

(1)

 

என்ன ஆனான் அவர்களிடம்

அவன்?

 

காணவில்லை

அவன்.

 

’காணாமல் போய் விட்டானெ’ன்று

ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும்.

 

கரைந்த

கனவா அவன்?

 

பொய்த்தவர் முதலில்

தம்மிடம் தோற்றுப் போனவரென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

 

எப்படி அவர்கள்

கொலை நிழலை மண்ணில் குழி தோண்டிப் புதைத்து விட முடியுமென்று நம்புகிறார்கள் ?

 

மண்ணிலிருந்து மீட்டெழும் அவன் எலும்புக் கூடு

மானுடத்தின் சாட்சியாய்.

 

அது

அவன் இருந்திருந்தால்

 

உரைத்திருக்கும்

அவனின் கதையை உரைக்காமல்  இருக்கப் போவதில்லை.

 

சொல்லியிருக்கும்

அவனின்  சோகத்தைச் சொல்லாமல் இருக்கப் போவதில்லை.

 

இசைத்திருக்கும்

அவனின் உயிரின் பாடலை இசைக்காமல் இருக்கப் போவதில்லை.

 

கேட்டிருக்கும் அவனின் நீதியைப்

பின் துரத்தும் நிழலாய்க் கேட்காமல் இருக்கப் போவதில்லை.

எப்படி ஓடி கொலை முகத்தை ஒளித்துக் கொள்ள முடியும்

அவர்கள்?

 

ஒரு போதும் காணாமல் போகாது வழியெல்லாம் கல் தெறிக்கும் உண்மையின் முன்.

 

(2)

 

இருளின்

கனத்த கதவைத் தட்டுவது போல் இருக்குமோ?

 

திசைகளெல்லாம்

திடுமெனச் சரிந்து விழுந்தது போல் இருக்குமோ?

 

தொடு வானை நம்பித்

தேடி விடலாமென்று தலை தெறிக்க ஓடுவது போல் இருக்குமோ?

 

குகைக்குள் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு

செங்கதிர் உதயத்தை எதிர்பார்ப்பது போல் இருக்குமோ?

 

கடவுளைச் சோதிப்பதில் நிரூபிக்க வேண்டிக் கெஞ்சும்

கடைசித் தருணமாய் இருக்குமோ?

 

தினம் தினம் வலி சுமந்து தாளாது கூன் மனம் கோலூன்றித்

தடயம் மண்ணில் தேடுவதாய் இருக்குமோ?

 

வாசலில் சதா காத்திருப்பதாய்

விழிகளைப் பிடுங்கி நட்டு வைத்தது போல் இருக்குமோ?

 

எப்படியிருக்கும் களப் போரில்

அடியோடு உறவெல்லாம் காணாமல் போன எம் மக்களின் உயிர் வலி?

 

ஒடிந்த ஒரு மரக் கிளையில்  வெயிலெரிக்கும் பாழ் வெளியில்

ஒரு பறவை மட்டும் பறக்காமல் வெறித்து உறைந்திருப்பது போல்

 

யாம்

உறைந்திருந்தால் எம் உளந் தொடுமோ?

 

எம் இரத்த உறவில் யாரேனும் ஒருவர் காணாமல் போயிருந்தால்

கொஞ்சமாவது

 

எம்

உயிர் உணருமோ?

 

 

கு.அழகர்சாமி

Series Navigation
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *