Posted in

கனவில் கிழிசலாகி….

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ருத்ரா இ.பரமசிவன்

குப்பென்று வியர்த்தது.
அப்போது தான் போட்ட நறுமண முகப்பவுடர்
வியர்வையோடு
ஒரு மணத்தில்
ஈரப்படுத்தியது கன்னத்தை.
யாரோ பின்னாலேயே
வருகிறான்.
அருகே நெருங்கி விட்டான்.
என் கழுத்தின் பூமயிர்களை
வருடிக்கொண்டே இருப்பது போல் பிரமை.
என் கூந்தலில் இருந்த‌
குண்டு மல்லிகைப்பூ ஒவ்வொன்றும்
குண்டு விழுந்தது போல்
குலுங்கி குலுங்கி விழுந்து
அந்த நிசப்தத்தின் குடலை
உருவி உருவி கிழித்தது.
கண்ணாடியின்
ரசம்பூசிய பகுதியை வைத்தே
முன்னால் பிம்பத்தின்
அழகை ரசித்து உறிஞ்சிவிடும் கண்கள்
என்னை தன் பார்வைப்பிரளயத்தில்
மூழ்கடித்து விடும் போல் இருக்கின்றன.
மூச்சு முட்டலில்
திணறத்தொடங்கி விட்டேன்.
பின்னால்
கைவிரல்கள்
மைல்கள் கணக்கில்
நீண்டு கொண்டே வருகின்றன.
தீண்டுவது போல்
இடைவெளி
நேனோ மில்லி மீட்டர் தான் இருக்குமோ.
அருகில் மிகவும் நெருங்கி விட்ட‌
அந்த முகவாய்
மூசு மூசு என்று
ட்ரேகான் அக்கினி நாக்கு போல்
நெருடுகிறது.
என் மையுண்ட கண்களின் முன்னே
கார்க் கண்ணாடி உடைந்தால்
சிலந்திப்பூச்சி வடிவில் கீறல்கள் தோன்றுமே
அப்படியொரு வட்டங்களுக்குள்
வட்டங்களாய்…
திடீரென்று
சப்பாத்திக்கள்ளிகள்
ஆயிரக்கணக்காய் முட்கள் சிலிர்த்து
என் முதுகுப்புறமிருந்தே
ரத்த விளாறுகளில்
என்ன கூழாக்கி நசுக்க முற்படும்
மாய ஆலிங்கனம்.
இராட்சசத்தனமாய் கம்பளிப்பூச்சி ஒன்றின்
ஊர்தல் சுவடுகள்.
பிஞ்சுச்சிறகுகளின் வண்ணம் கசிந்து கரைய‌
பட்டாம்பூச்சியின் பரிதவிப்புகள்…
காற்றின் ஊளைகள்
ஆயிரம் ஆயிரம் டெசிபல்களில்
பின்னிருந்து
என்னைக் கொடி சுற்றி தவங்க வைத்தது.

ஐயோ..அம்மா!

பின்னால் திரும்பினேன்.
யாரும் இல்லை.

சே!என்ன இது?
படித்துக்கொண்டிருக்கும் போதே
உருவெளி மயக்கக் கனவா?

கையில் செய்தித்தாள் கசங்கியிருந்தது..
“டெல்லி பேருந்தில் பாலியல் பலாத்காரம்…”
கொட்டையெழுத்து செய்தி
கன்னா பின்னாவென்று கசங்கி
கிழிந்து தொங்கியது.
ஒரு நனவு
கனவில் கிழிசலாகி
அங்கே கிழிந்து தொங்கிக்கொன்டிருக்கிறது.

Series Navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *