ஜோதிர்லதா கிரிஜா
சிந்தனை தேங்கிய விழிகளால் தொலைப்பேசியின் ஒலிவாங்கியை ஏறிட்டபடி அதை வைத்த ராமரத்தினத்தின் மீது ஓட்டல் முதலாளியின் பார்வை ஆழமாய்ப் படிந்தது.
“என்னப்பா? ஏதானும் பிரச்சனையா?”
ஒரே ஒரு நொடி திகைத்த பிறகு, “எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம், சார். அதான் என் தம்பிதான் கூப்பிட்டுச் சொன்னான்,” என்று சட்டென்று தோன்றிய பொய்யைச் சொல்லிச் சமாளித்தான்.
“என்னமோ `சரிங்க, சார்’னு சொன்னே? `சாயங்காலம் ஓட்டலை விட்டுக் கெளம்பினதும் நேரே உங்க வீட்டுக்கு வர்றேன்’னு வேற சொன்னே?” என்று வினவிய முதலாளி நம்பாத பார்வையுடன் அவனை ஏறிட்டார்.
மறுபடியும் திகைத்துப் போன அவன், சமாளித்துக்கொண்டு, “டாக்டரும் பேசினார், சார். எங்களுக்குத் தெரிஞ்சவர். வீட்டிலேயே க்ளினிக் வெச்சிருக்கார். அவர்தான் எந்தம்பி அம்மாவை அழைச்சுண்டு வந்திருக்கிறதாச் சொன்னார், சார்.” என்று தான் முதலில் சொன்ன பொய்க்கு வண்ணம் பூசினான்.
தன் முகத் தோற்றத்தை உடனே மாற்றிக்கொண்ட முதலாளி, “ஓட்டலை விட்டுக் கெளம்புறப்ப அஞ்சரை மணி ஆயிடுமேப்பா? அதனால நீ இப்பவே கெளம்பிப் போ. இன்னொரு நாள் யாராவது லீவ் போடுறப்ப அதிகப்படியா வேலை செஞ்சு சரிக்கட்டிடலாம். சரியா?” என்றார்.
“வேணாம், சார். அவர் ஆறரை மணிக்குத்தான் வரச் சொன்னாரு. ஒரு பதினஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்பினாப் போதும்.”
“அப்ப சரி.”
ராமரத்தினம் தன் பணிகளுக்குத் திரும்பினான். கூப்பிட்டுப் பேசியவர் ரமணியின் அப்பா. அவனுக்கு வியப்பாகவும் அவரது குரலில் ஒலித்த கடுமையால் சற்றே திகிலாகவும் இருந்தது. காரணம் ஏதுமின்றித் தன் மனம் கலக்கமடைவானேன் எனும் கேள்வி அவனுள் எழுந்தது. அவன் அமைதியற்றுப் போனான்.
சிறிது நேர ஆழ்ந்த அலசலுக்குப் பிறகு, `ஒருவேளை ரமணி என்னைப் பற்றிச் சொல்லியிருப்பானோ? ஏதேனும் வேலையில் என்னை அமர்த்தும் பொருட்டுப் பேசுவதற்கு வரச் சொல்லுகிறாரோ? … அப்படியானால் இன்ன விஷயம் என்பதைச் சொல்லி யிருந்திருக்கலாமே? … ஒருகால். ஓட்டல் முதலாளி அதைப் புரிந்துகொண்டுவிடக் கூடாது என்பது அவரது நோக்கமோ? அதனால, `உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்’ என்று சொன்னாரோ? ரமணிதான் நான் இந்த ஓட்டலில் வேலை செய்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்.. வேறு யாருக்கும் தெரியாதே!… இந்த ரமணிதானாகட்டும், தன் அப்பாவிடம் என் விஷயமாய்ச் சொல்லி வைத்திருப்பதை என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதோ!.. எது எப்படி இருந்தாலும், அவர் குரல் ஏன் ஒரு மாதிரி கடுமையாக ஒலித்தது? ஒருவேளை அது என் பிரமையோ?` – இப்படி யெல்லாம் அவனது சிந்தனை வளைந்து நெளிந்து ஓடியது. மொத்தத்தில் அவன் அமைதியற்றுப் போனான்.
வாடிக்கையாளர் ஒருவருக்குக் காப்பி கொடுத்தபடி இப்படி யெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த அவன் உள்ளத்தில் திடீரென்று ஓர் எண்ணம் உதித்தது. `அட! இது எனக்கு இது வரை தோன்றவே இல்லையே. அப்படித்தான் செய்து பார்க்க வேண்டும்!’
அவன் கல்லாவை நோக்கி விரைந்தான். முதலாளியிடம், “சார்! நான் ஒரு ஃபோன் பண்ணிக்கட்டுமா?” என்று கேட்டு அவரது இணக்கத்தைப் பெற்ற பின் ரமணி வேலை செய்துகொண்டிருந்த கம்பெனியின் இலக்கத்தைக் கண்டுபிடித்தான். பிறகு அத்தோடு தொடர்பு கொண்டு ரமணியைக் கேட்டான்.
தொலைப்பேசி இயக்குநள் ரமணி வெளியூருக்குப் பயணம் போயிருப்பதாகக் கூறினாள். இதனால் அவனது பரபரப்பு மேலும் தீவிரமுற்றது.
ஓட்டல் நண்பன் கணபதியிடம் தான் சற்றே முன்னதாய்க் கிளம்பிப் போகவிருப்பதைச் சொன்னான். அவன் பேசி முடிக்கும் முன்னரே, “உன்னோட அந்த தோஸ்த் வந்தா நல்லா கவனிக்கணும். அதானே?” என்று அவன் சிரித்தான்.
“அதேதான்.”
“அதுக்கென்ன? நான் கவனிச்சுக்கறேன். நல்ல டிகிரி காப்பியாப் போட்டுக் குடுக்கறேன். நீ கவலையே படாதே!”
… அதே நாளில், அலுவலகத்தில், பிற்பகல் சாப்பாட்டு நேரத்தின் போது, “எங்க வீட்டுக்கு ஒரு நாள் வர்றேன்னு சொன்னியே சேது, எப்ப வர்றே?” என்று ரங்கன் சேதுரத்தினத்தை வினவினான்.
“நீ என்னைக்குக் கூப்பிட்றியோ, அன்னைக்கு.”
“ஏன்? இன்னைக்கு சாயந்தரம் கூட வரலாம்.”
“உன் ஒய்ஃப் கிட்ட முன்கூட்டிச் சொல்லாம திடீர்னு போய் உன் வீட்டில நின்னா, அதுக்கு வேற உன்னைக் கோவிக்கப் போறாங்கடா!”
உடனே முகத்தில் பரவிய அசட்டுக்களையை ஓரளவு சமாளித்தபடி,“சேச்சே! அந்த அளவுக்கு அவங்க மோச்மில்லேடா. அதையும்தான் நீயே பாரேன் எங்க வீட்டுக்கு வர்றப்ப – முகம் கடுக்கிறாளா இல்லையான்றதை!”
“அப்ப, ஆஃபீஸ்லேர்ந்து நேரே உங்க வீட்டுக்குப் போகலாம்குறே?”
“ஆமா.”
“எதுக்கும் அக்கம்பக்கத்துல ஃபோன் இருந்தா அவங்களைக் கூப்பிட்டு ஒரு வார்த்தை கேட்டுடேன்.”
“இதென்னடா வம்பாப் போச்சு. அவங்களைப் பத்தி உங்கிட்ட சொன்னாலும் சொன்னேன், என்னை விட நீ நடுங்கிறயேடா?”
“அப்படி இல்லேடா. எதுக்கும் கூப்பிட்டுக் கேட்டுடேண்டா.”
“சரிப்பா.”
ரங்கன் அந்தக் கிளை அலுவலகத்துக்கு மாற்றலாகி வந்து இரண்டு ஆண்டுகள் ஆயின. ஆனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றவர் போனதில்லை.
சாப்பிட்டுக் கை கழுவியானதும், ரங்கன் தன் பக்கத்து வீட்டுத் தொலைப்பேசியுடன் தொடர்புகொண்டு தன் மனைவியை அழைத்துப் பேசினான்: “நாந்தான் ரங்கன் பேசறேன். நான் அடிக்கடி சேது, சேதுன்னு ஒருததரை பத்திச் சொல்லுவேனில்லையா? அவரோட இன்னைக்கு சாநந்தரம் நம்ம் வீட்டுக்கு வர்றேன். திடீர்னு கூட்டிட்டுப் போகாதேன்னு கோவிக்கிறான். அதான் ஃபோன் பண்றேன். உனக்கு வெளியில போகுற வேலை ஒண்ணும் இல்லையே?”
“……………………”
“தேங்க்ஸ், லலிதா. உன் இஷ்டப்படி எது வேணும்னாலும் செய்து வை. …” என்று சொல்லிவிட்டு ரங்கன் இணைப்பைத் துண்டித்தான்.
“என்னப்பா? பச்சைக்கொடி காட்டிட்டாங்களா?”
“ஓ எஸ். வரலாம்னுட்டாங்க.”
ரங்கன் சிரித்த முகத்துடன் இருந்தாலும் சேதுரத்தினத்துக்கு உள்ளூற ஐயமாக இருந்தது. வாக்கியங்களிடையே நிறுத்தாமல் அவன் பேசிய தினுசிலிருந்து ஒருகால் தான் அவனருகில் இருந்ததை அவள் ஊகித்திருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது.
“என்னமோ, `உன்னிஷ்டப்படி எது வேணும்னாலும் செய்து வை’ன்னு சொன்னியேப்பா! என்ன?”
“அவ்ங்களோட ஃபேவரைட் பஜ்ஜிப்பா. அதுவும் சேமியா கேசரியும் பண்றேன்னாங்க. அதான்!”
“எதுக்குப்பா அதெல்லாம்? வெறும் காப்பி மட்டும் பத்தாதா?”
“அவளேதாம்ப்பா சொன்னா. நானாவா அதையெல்லாம் பண்ணுன்னு சொன்னேன்? நீ கேட்டுட்டு இருந்தியில்லே?”
“சரி. அப்ப இன்னைக்கு எனக்கு ஓட்டலுக்குப் போக வேண்டிய வேலை கிடையாது….. ம்ம்ம்…ரங்கா!”
“என்ன, சேது?”
“எனக்குத் தெரிஞ்ச ப்ளஸ் டூ பாஸ் பண்ணின பையன் ஒருத்தன் இருக்கான். நான் அப்பப்ப சாப்பிடப் போற ஓட்டல்ல ஒரு வாரமா வேலை செய்யறான். அந்தப் பழக்கம். நல்ல பையன். அவன் படிப்புக்கேத்த ஏதாவது நல்ல் வேலை அவனுக்குக் கிடைக்குமான்னு பாரேன்.”
“என்னப்பா இது? எனக்கென்னப்பா செல்வாக்கு இருக்கு அந்த அளவுக்கு?”
“உனக்கு இல்லேன்னாலும் உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்கலாமில்லே? அதான் சொல்லி வைக்கிறேன்.”
“தெரிய வந்தா கண்டிப்பாச் சொல்றேன்.”
“ரொம்ப நல்ல பையன். ஓட்டல்ல வேலை செய்யிறதை வீட்டில சொல்லாம ஏதோ கம்பெனியிலே வேலை செய்யிறதாச் சொல்லி வெச்சிருக்கான். கல்யாணத்துக்கு ரெண்டு தங்கைங்க இருக்காங்க. அது அவன் தலையில் விழுந்திருக்கிற இன்னொரு பொறுப்பு. ஏழைங்க. வரதட்சிணைக்கும் இன்னொண்ணுக்கும் எங்கே போவாங்க? அழமாட்டாக் கொறையா வருத்தப்படறான். பாவமா யிருக்கு.”
“வரதட்சிணைங்கிறது பொண்ணுங்களை மட்டுமா பாதிக்குது? நீ சொல்ற அந்தப் பையன் மாதிரி இருக்கிற ஆம்பளைங்களையும்தான் பாதிக்குது. தங்கைங்களுக்குப் பண்ணாம அண்ணங்காரங்க பண்ணிக்கக் கூடாதுன்னு வெச்சிருக்கோம். அப்ப? பையன்களுக்கும் வயசு ஏறிடுது. அதனால இந்தக் காலத்துல ஆம்பளைப் பசங்களும் வயசு போய்த்தான் கல்யாணம் கட்டும்படி ஆறது…;”
“ஆமா, ரங்கா. நீ சொல்றது ரொம்பவும் சரி. நான் ஒரு பைசா கூட வாங்கல்லே. இத்தனைக்கும் அது லவ் மேரேஜ் இல்லே….”
ரங்கன் தலை கவிழ்ந்து உட்கார்ந்த தினுசிலிருந்து அவன் வாங்கி யிருந்திருக்க வேண்டும் என்று ஊகித்த சேதுரத்தினம் அது பற்றிக் கேட்பது பண்பாடு அன்று என்று எண்ணிப் பேசாதிருந்தான்.
சட்டென்று அவர்களிடையே மவுனம் விளைந்தது.
பேச்சை மாற்றும் பொருட்டுச் சில் நொடிகள் கழித்து, ரங்கன், “வழக்கமான நேரத்துக்கே கிளம்பலாமா? இல்லேன்னா பெர்மிஷன் போட்டுட்டு ஒரு மணி நேரம் முன்னாடி கெளம்பலாமா?” என்றான்
“வழக்கமான நேரத்துக்கே கெளம்ப்லாம்ப்பா. நீ சீக்கிரம் வர்றதா உன் ஒய்ஃப் கிட்ட சொல்லல்லையே?”
“ஆமாமா. எப்பவும் போலவே கிளம்பலாம்.”
கெடியாரத்தில் மணி இரண்டு அடிக்க, அதன் பின் இருவரும் தத்தம் வேலைகளில் ஆழ்ந்தார்கள். …
ரங்கன் பேசி முடித்த பிறகு, லலிதா சற்று ஆங்காரத்துடன் ஒலிவாங்கியைக் கிடத்தினாள். ரங்கன் இடைவெளி விடாமல் பேசியதிலிருந்து அந்த நண்பன் அவனுக்கு அருகிலேயே இருந்ததை லலிதா ஊகித்தாள். விருந்தாளிகள் என்றாலே அவளுக்கு ஆகாது என்பதைத் திடீரென்று வருபவர்களிடம் அவள் முகக் கோணலுடன் நடந்து கொள்ளுவதைக் கவனித்திருந்த ரங்கனும் யாரையும் வீட்டுக்கு அழைத்தது கிடையாது. இதுதான் முதல் தடவை. இதுவே கடைசியுமாக இருக்கட்டும் என்பதாய் அவனிடம் சொல்லிவைத்துவிட வேண்டும் என்று அவள் எண்ணினாள். `இதென்ன புது வழக்கம்?’ என்று தனக்குள் அவள் கசப்படைந்து வெகுண்டாள். பக்கத்து வீட்டாரிடம் விடைபெற்றபின் தன்வீட்டுக்குப் போய்ப் படுத்தாள் – மூன்று மணிக்கு மேல் எழுந்து சிற்றுண்டிகளைத் தயாரித்தால் போதும் என்றெண்ணியபடி.
….. ஆறு மணிக்கு ரங்கன் கூப்பிடுமணியை அழுத்திய கணத்தில் அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சேதுரத்தினம் நண்பனால் சிடுமூஞ்சி என வருணிக்கப்பட்ட அவன் மனைவியைக் தரிசிக்கும் ஆவலுடன் கதவையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இதோ வந்துட்டேன்!” எனும் பதில் குரலும் காலடியோசையும் கேட்டன.
கதவைத் திறந்த லலிதா ரங்கனுக்குப் பின்னால் அவனை ஒட்டினாற்போல் புன்னகையுடன் நின்றிருந்த சேதுரத்தினத்தைப் பார்த்தாள். சேதுரத்தினமும் அவளைப் பார்த்தான். இருவர் முகங்களிலும் இலேசான அதிர்ச்சியும், அதை மறைத்துக்கொள்ளும் முயற்சியும் விளைந்ததைச் சற்றும் கவனிக்காத ரங்கன், “வாப்பா, வா. இவங்கதான் என் மனைவி, லலிதா! … இவன் சேதுரத்தினம்!” என்று கூறியவாறே லலிதாவைக் கடந்து உள்ளே சென்றான்.
சேதுரத்தினமும் அவனைப் பின் தொடர்ந்து உள்ளே செல்லத் தொடங்கியதன் பிறகு லலிதா கதவை சாத்திக்கொண்டு நடந்தாள். `ரத்தினம்னுதான் ஊர்லே இவனைக் கூபிட்றது வழக்கம். அதனால சேது, சேதுன்னு இவர் சொன்னப்ப எனக்குத் தோணல்லே. ஆனா ரத்தினம்னு சொல்லி யிருந்தா மட்டும் ஊகிச்சிருந்திருக்க முடியுமா? எத்தனையோ ரத்தினங்கள் இருப்பாங்களே!’ என்று லலிதாவின் சிந்தனை ஓடியது. அவளுள் ஒரு திகில் பரவியது.
• தொடரும்
- வாழ்க்கை ஒரு வானவில் – 6
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 7
- கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்
- ஜோதிஜியின் “ டாலர் நகரம் “
- திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு
- கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்
- இயக்கி
- தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்!
- கவிக்கு மரியாதை
- பாதுகாப்பு
- தந்தை சொல்
- காயா? பழமா?
- திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்
- பத்மா என்னும் பண்பின் சிகரம்
- என் பால்யநண்பன் சுந்தரராமன்
- தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு
- உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்
- கனவில் கிழிசலாகி….
- டைரியிலிருந்து
- நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.
- காஃப்காவின் பிராஹா -4
- Malaysian and Tamil Poets Meet and Interact!
- நீங்காத நினைவுகள் – 49