டிமிட்ரி ரோகோஜின் [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]
எதிர்பாராத சிதைவுகளைப் பூமியில் உண்டாக்கும் முரண்கோள்களின் அபாயத்தைக் கண்டறிய பொதுநபர் பேரளவில் எங்களுக்கு உதவி செய்ய வழிகள் உள்ளன. உலக மாந்தரின் ஆக்கபூர்வச் சிந்தனைகள், செயற்பாடுகளைப் பயன்படுத்தி, முரண்கோள் தகவல் அறிவிப்பில் கலந்து கொண்டு, நமது பூமியை ஓர் பாதுகாப்பு அரங்கமாகச் செய்திடப் பங்கேற்க வேண்டும்.
ஜேஸன் கெஸ்லர் [Program Executive, NASA Asteroid Grand Challenge [AGC] Spacecraft]
“இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”
நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]
முரண்கோள் திசை திருப்புத் திட்டங்களோடு அடுத்து 2020 ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் அனுப்பும் ஆழ்வெளி முயற்சிகளையும் விருத்தி செய்து, முரண்கோள் மோதுதலிலிருந்து பூமியைக் காக்கும் செயல்களைத் தீவிரமாக மேற்கொள்ளப் போகிறோம்.
வில்லியம் கெர்ஸ்டென்மையர் [NASA Human Exploration & Operation Mission]
சூரிய மண்டலத் தோற்ற காலத்தின் எச்சத் துண்டுகள் நமது பூமியை நோக்கி நெருங்கி வரும் போது தொலைநோக்கிகள் மூலம் கூர்ந்து ஆராய்வது நம் அறிவைப் பெரிதும் விரிவாக்கியுள்ளது. முரண் கோள்களை நெருங்கி உளவு செய்து, சோதிப்பது, நமது புவியைப் பாதுகாக்க உதவும் சவாலான சாதனைக்கு நம்மைத் தயார் செய்யும். அத்தகைய அரிய பணிகளுக்கு ஏற்ற சாதனங்களில் ஒன்றுதான், ஸ்பிட்ஸர் விண்ணோக்கி. [Spitzer Observatory]
ஜான் குருன்ஸ்ஃபெல்ட் [NASA Science Mission Directorate]
பூமியைத் தாக்கவரும் முரண்கோள் போக்கைத் திசைமாற்றும் நாசா விண்ணுளவி
2014 ஜூன் 19 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பூமியை நெருங்கும் முரண்கோள்கள் [Asteroids] போக்கைத் திசை திருப்பும் சுயத்தடுப்பு விண்கப்பலைத் [Robotic Spacecraft] தயாரிக்கத் திட்ட மிட்டிருப்பதாய் வான்பௌதிக வெளியீட்டில் [Astrophysical Journal] அறிவித்துள்ளது. தயாராகும் அந்த விண்கப்பலின் பெயர் : முரண்கோள் பெருஞ்சாதனைச் சவால் விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft]. அத்திட்டப் படி நாசா தான் ஏவிய சுயத் தவிர்ப்பு விண்ணுளவி [Robotic Spacecraft] மூலம் பாதை தவறிப் பூமியைத் தாக்க நெருங்கி வரும் முரண்கோளைத் திசைமாற்றி நமது நிலவை நிரந்தச் சுற்றுவீதியில் வலம்வரச் செய்கிறது. நாசா முரண்கோள் திசைமாற்றுத் திட்டத்தின் பெயர் [Asteroid Redirect Mission (ARM)]. 2019 ஆம் ஆண்டில் நாசா அந்தச் சுயத் தவிர்ப்பு விண் வெளிக் கப்பலைத் தயாரித்து ஏவத் திட்ட மிட்டுள்ளது. அதற்குச் செல்வாகும் நிதித் தொகை 4.9 மில்லியன் டாலர் [2014 நாணய மதிப்பு]. அப்போது சோதனைக்கோர் முரண்கோளை நாசா தேர்ந்தடுக்கும். முதலில் சிறிய முரண்கோளை விண்வெளியில் கண்டுபிடித்து, திசை திருப்பச் சோதிக்கும். பின்னர் பெரும் முரண்கோளைத் தொட்டு மாதிரி எடுத்துச் சோதித்து, பூமிக்கு நெருங்கி வருவதை, வசப்படுத்தித் திசை மாற்றும்.
2014 ஜூன் 9 ஆம் தேதிவரை 11,140 மேற்பட்ட முரண்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பூமிமேல் மோதி அபாயம் விளைவிக்கலாம் என்று கருதப்படுபவை : 1483. சிறுநிறை, பெருநிறை முரண் கோள்களைத் திசை திருப்ப இவ்விரு முறைகளும் 32 அடி [10 மீடர்] அளவுக்குக் குன்றிய விண்கற்களையே தேர்ந்து, நமது நிலவைச் சுற்றிவரக் கட்டுப்படுத்தும். 2014 ஆண்டில் தான் நாசா விஞ்ஞானிகள் இவ்விரு முறைகளில் [சிறுநிறை அல்லது பெருநிறை முரண்கோள் திசை திருப்பல்] ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். 2013 ஜூனில்தான் நாசா முரண்கோள் பெருஞ்சவால் விண்கப்பல் [Asteroid Grand Challenge Spacecraft] திட்டத்தைத் தீவிரமாக மேற்கொள்ள தீர்மானித்து, இப்போது விருத்தி செய்து வருகிறது.
ரஷ்ய தேசத்தில் நேர்ந்த விண்கல் பாய்ச்சல் அபாயம்
ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது. 30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு. வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT]. வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன. 50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார். விளைந்த சேதாரச் செலவு : சுமார் 33 மில்லியன் டாலர். பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky
Institute of Geochemistry] கூறுகிறார்.
அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது. வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது. அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது. இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது ! 150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது ! இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !
விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:
“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி, டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சிறப்பு அறிவிப்பு மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார். மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15
ஒலி மிஞ்சிய வேகத்தில்பாய்ந்த விண்கல் [Meteor]
ஒன்று பேரொளி வீசி வெடித்தது !
தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள் [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை. அவை விண்வெளியி லிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க முடியா. விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா ! விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும். மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள் மேன்மைப் படுத்த வேண்டும்.

இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப் போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும். அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும். அந்தத் துணைக்கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவுகணைகள் அனுப்ப வேண்டும். அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும், பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது. விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம் பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.
ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி. சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார். நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார். முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார். இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.


1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது. “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்த நிகழ்ச்சி யில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.
இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளு மன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.
++++++++++++++++++++