எங்கே செல்கிறது இயல்விருது?

author
3
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 26 in the series 13 ஜூலை 2014

புகாரி

எங்கே செல்கிறது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின்
பொன்னான இயல்விருது?

வானுயர்ந்து
தாய்த்தமிழ் வாசம் சுமந்து

புலம்பெயர்ந்தும்
தமிழ்த்தேன் வேர் பெயரா
கர்வத்தோடு

உயர்ந்து உயர்ந்து
பறக்கப் பிடிக்கப்பட்ட பட்டம்

ஓரிரு வாசல்களின் முன் மட்டும்
மண்டியிட்டுத் தாழ்ந்து
பின்னெலும்பு மடிந்து

அந்நிய மோகத் தனலில்
தானே வலிந்து விழுந்து
கருகிக் கருகி

சிதையும் சிறகுகளோடு
கீழ்நோக்கிப் பறக்கும்
அவலம் ஏன்?

நெஞ்சு
பொறுக்குதில்லையே!

*

28 ஜூன் 2014ல் நிகழ்ந்த 2013ன் இயல்விருது விழாவிற்கு மிக ஆர்வமாகச் சென்றிருந்தேன். இயல்விருது பெறுபவரின் பேச்சைக் கேட்க என் செவிகள் காத்துக்கிடந்தன.

ஆனால் பெருத்த ஏமாற்றம்.

இயல்விருதினைப் பெற்ற தியடோர் பாஸ்கரன் நாலு வரியை மேடையில் பேச எட்டுமுறை மூச்சுமுட்டினார்.

முழுவதுமே எழுதிக்கொண்டுவந்து மேடையில் வாசித்தும்கூட தங்குதடையற்று அவரால் பேச இயலவில்லை.

கணிஞர் மணி மணிவண்ணன் ஒண்ணேமுக்கால் நிமிடங்களே பேசினாலும் தங்குதடையின்றி சிறப்பாகப் பேசினார். அவரையே இயல்விருது பெற்றவரின் சார்பாகப் பேச வைத்திருக்கலாமோ என்று தோன்றியது

தொகுத்து வழங்கிய பெண் முழுவதும் ஆங்கிலத்திலேயே தொகுத்து வழங்கினார் (அவர் ஒரு தமிழ்ப் பெண் தான் – சந்தேகம் வேண்டாம் தமிழர்களே).

என்ன ஒரு சரளமான ஆங்கில நடை அந்தப் பெண்ணுக்கு? ஆனால் ஒரு தமிழரின் பெயரைக்கூட அவரால் உச்சரிக்கவே முடியவில்லை.

ஒரே ஒரு தமிழ்ச் சொல்லும் சொல்லத்தெரியாத தமிழ்ப்பெண்கள் புலம்பெயர்ந்த கனடாவில் எதை நோக்கித்தான் செல்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அவர் தொகுத்து வழங்கியதைக் கேட்டு வெள்ளைக்காரர்கள் எல்லாம் அப்படியே பூரித்துப் போயிருப்பார்கள். ஆனால் அப்படி எந்த வெள்ளைக்காரரும் விழாவிற்கு வந்திருக்கவில்லை.

அமெரிக்க மோகம் கொண்ட தமிழர்களோ அதைவிடவும் புல்லரித்துப் பூரித்துப் போயிருப்பார்கள்.

ஓ…. அவர்களுக்காகத்தான் இவரோ?
புரிகிறது, வாழ்க!

ஆனால், தமிழரின் செவிகள் எல்லாம் செத்துத் தொலைந்தனவே இயல்விருந்து வழங்கும் எவராவது கவலைப்பட்டீர்களா?

Series Navigationஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமைமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // இயல்விருதினைப் பெற்ற தியடோர் பாஸ்கரன் நாலு வரியை மேடையில் பேச எட்டுமுறை மூச்சுமுட்டினார்.

  முழுவதுமே எழுதிக்கொண்டுவந்து மேடையில் வாசித்தும்கூட தங்குதடையற்று அவரால் பேச இயலவில்லை. //

  நீங்கள் திராவிட கழக போர்வாள்களின் மேடை கர்ஜனைகளை எதிர்பார்த்துப்போயிருப்பீர்கள் போலிருக்கிறது.

  திரு.தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் இயங்கும் தளமே வேறு. அதில் அவர்களது சாதனைகளுக்காகத்தான் விருதே ஒழிய மேடைமுழக்கத்திற்காக அல்ல.

  எனவே இயல் விருது தனது பாதையை விடுத்து வேறு எங்கும் போகவில்லை என்பதை உணரவும்.

 2. Avatar
  ஒரு அரிசோனன் says:

  உயர்திரு புகாரி அவர்களே,

  உங்கள் மன ஆதங்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது.

  எந்த மொழியில் தாய் தனது குழந்தையுடன் பேசி வளர்க்கிறாளோ, அதுதான், அக் குழந்தையின் தாய் மொழி ஆகிறது.

  இக்காலத் தமிழச்சிகள் — தமிழ் நாட்டில் இருந்தால் கூட — தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவைத்தானே பாலுடன் ஊட்டி வளர்க்கிறார்கள்!?

  இப்பொழுது தமிழை எழுதப் படிக்கத் தெரிந்த இளைஞர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், இன்னும் ஓரிரு தலைமுறைகளிலேயே தமிழ் அழிந்து விடுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது.

  தமிழின் எதிர்காலம் “தமிழ் அன்னைகள்” கையில்தான் இருக்கிறது! அவர்கள் நினைக்காவிட்டால், அவர்களின் ஆங்கில மோகம் தணியாவிட்டால், தமிழும் வடமொழியைப் போல ஒரு “இறந்தமொழி”யாக ஆகிவிடும்.

  வடமொழியைத் தூக்கி நிறுத்த இந்தியா ஒன்றாகத் திரண்டு நிற்கிறது.

  தமிழர்களான நாமோ, ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டு, யார் தமிழர், யார் தமிழரல்லர் என்று பிரிவினையை விதைத்துக்கொண்டு திரிகிறோம்.

  அதை நிறுத்திவிட்டு, தமிழர்களை ஒன்றாகச் சேர்க்க, தமிழர்களிடம் பரஸ்பர ஒற்றுமையை வளர்க்க முயல்வோமாக!

 3. Avatar
  இன்னும் ஓர் அரிசோனன் says:

  என் வீட்டில் கட்டாய தமிழே. பால்ய வயதிலிருந்தே இதை வலியுறுத்துவது நல்லது. புலன்பெயர்ந்த நாட்டில் இதை எதிர்பார்ப்பது சற்று கடினமே ஆயினும், மொழி என்பதை எதற்க்காகவும் விட்டுகொடுக்க கூடாது. இது வெறும் புலம்பலாக நின்றுவிடாமல் நடைமுறைப்படுத்துவது நம் கைகளில் தான் உள்ளது. தமிழ் நாட்டில் இதைவிட மிக கொடுமை. போலி அடையாளங்களை தேடி சுயத்தை தொலைத்தவர்கள் பல கோடி. பொருள் தேடலில் வந்த “பொருளாதார” மொழியை(ஆங்கிலம்) நன்கு பயின்றும் பேசி பழகியும் வரும் நம் தமிழர்கள், அது நம் கலாச்சாரமோ அல்லது நம் பாரம்பர்யத்தை பறை சாற்றும் மொழி அல்ல என்பதை ஏன் உணரமாட்டேன்கிறார்கள்? ஆங்கில மொழிதான் தன் அடையாளம் என்றால் இவர்களை போல ஒரு மகா சுயநலவாதியை எங்கே பார்க்கமுடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *