மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1

This entry is part 19 of 26 in the series 13 ஜூலை 2014

Michael-Baigent

 

 

 

 

(Michael Baigent)

இதுதான் மெய்யியல் என்று

மெய்யியலுக்கு திட்டவட்டமான வரையறை ஏதாவது இருக்கிறதா என்று

பார்த்தால் அப்படி எதுவும் இல்லை.

பொருட்களின் உண்மை குறித்து ஆய்வது மெய்யியல் என்கிறார்

திருவள்ளுவர். கண்ணால் கண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,

தீர விசாரிப்பதே மெய் என்று நம்மிடம் ஒரு முதுமொழி உண்டு.

இவ்விடத்து மெய் என்பது உண்மை, என்ற சொல்லுடன்

தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆனால் உண்மை மட்டும்தான்

மெய்யியலா? எது உண்மை? உண்மையை தீர்மானிப்பதில்

நாட்டுக்கு நாடு மொழிக்கு மொழி இனத்துக்கு இனம் எத்தனையோ

வேறுபாடுகள் இருக்கிறதே. தமிழனுக்கு மெய்யெனப் படுவது

வடக்கில் வாழும் இன்னொரு இந்தியனுக்கு மெய்யென

தோன்றுவது இல்லையே? என்ன காரணம்?

 

நம் நாட்டில் கோவில்களின் கோபுரங்களின் உச்சியில்

யாளி வடிவத்தை தூக்கி வைத்தனர். யாளி வடிவம்

வெறும் சிறபமோ கலைவெளிப்பாடோ மட்டுமல்ல.

அது நம்முடைய மெய்யியலில் வெளிப்பாடு.

யாளி விலங்குமல்ல, மனிதனுமல்ல, பறவையுமல்ல,

அது நிற்பது விண்ணிலும் அல்ல, மண்ணிலும் அல்ல,

நீரிலும் அல்ல, நிலத்திலும் அல்ல. மாறாக விலங்குகள்,

பறவைகள், மனிதர்கள், நிலம்., நீர், புவி, ஆகாயம் என்று யாவற்றையும்

இணைத்துப் பார்க்கும் பார்வையின் வெளிப்பாடு யாளி.

கிரேக்கத் தொன்மங்கள் ஆகட்டும் எகிப்து பிரமிடுகள் ஆகட்டும்

மனிதனின் அறிவாற்றலை வலிமையை உணர்த்தும் மனித

மையப்பார்வை கொண்டவை.

உலத்தின் உயிரியக்கத்தைக் காட்டுவது நம் யாளி . யாளியை விட வேறு எந்த கலைச்சின்னமும் இதை வெளிப்படுத்தவில்லை.

 

மெய்யியல் சிந்தனைகள் . அவரவர் வாழ்நிலை

சார்ந்தும் சூழல் சார்ந்தும் அவை தோன்றி கட்டமைக்கப்படுகின்றன.

எல்லா மனிதனுக்கும் மெய்யியல் உண்டு. ஆனால் எல்லா மனிதனின்

மெய்யியலும் ஒன்று போலிருப்பதில்லை. இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனது மெய்யியல் உங்களுடைய மெய்யியலாக

இருக்க வேண்டும் என்று நினைப்பதே சரியல்ல. மெய்யியல் புத்தக்கத்திலிருந்தோ புத்திஜீவிகளிடமிருந்தோ அப்படியே இன்செடென்ட்

காபி போல ரெடிமேடாக நமக்கு கிடைக்கிற ஒன்றல்ல. என்னைப் பொறுத்த

வரையில் அது ஒரு தொடர் தேடல். இந்தப் புரிதலை நான் அடைவதற்கு

ஐம்பது வயதைக் கடந்து வர வேண்டிய தொடர் பயணமும் தேடலும்

என் போன்றவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது.

 

கடவுள் என்பது மனிதச் சமூகம் படைத்துக் கொண்ட ஒரு கருப்பொருள்.

உலகின் முதற்பொருள் நிலமும் பொழுதும் என்று சொன்ன தொல்காப்பியர்

நிலம், பொழுது ஆகியவற்றின் இயக்கம் சார்ந்து தோன்றும் கருப்பொருள்களாக

பறவை, விலங்கு என்று பட்டியலிடும் போது நிலம் சார்ந்த கருப்பொருள்களில்

ஒன்றாக மக்கள் வழிபாட்டுக்குரிய கடவுளையும் பட்டியலிடுகிறார்..

அதனால் தான் கடவுள் என்பது மனித சமூகம் படைத்துக் கொண்ட

ஒரு கருப்பொருள் என்பது தெளிவாகிறது.

கடவுள் என்ற அந்தக் கருப்பொருள் இயறகையுடன் தொடர்புடையது.

கதிரவனையும் திங்களையும் மழையையும் போற்றி இளங்கோவடிகள்

தன் காப்பியத்தைத் தொடங்குவது தமிழர் மெய்யியல் சிந்தனைதான்.

இயற்கை நிகழ்வுகள் முதலியவற்றைப் பொருள்முதல்வாத நோக்கில்

தொடர்ந்து விளக்க முடியாத பழங்காலச் சூழலில்தான் இயற்கை>

இறை>இறைவன் என்ற கருத்துருவாக்கம் ஆளுமை பெறுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பழமையான வேதமான ரிக் வேதமும் இயற்கை வழிபாட்டையே முன்னிறுத்தி இருக்கிறது.

 

முருகன் என்ற தமிழ்க்கடவுளின் ஆரம்பகாலங்களில் முருகு என்று ஆண் பெண்பால் என்ற பால்பேதத்தைக்

க்டந்த சொல்லாகவே இருந்ததையும் அறிவோம்.

யூதர்களின் கடவுளுக்கு கூட பால்பேதம் ஆரம்பத்தில் இல்லை என்று வாசித்திருக்கிறேன்.

 

இந்துமதத்தில் சிவனின் அர்த்த நாரீஸ்வரர் கோலமும் விஷ்ணுவின் மோகினி

அவதாரமும் கூட ஒருவகையில் இறைவனின் ஆண்=பெண் பால் சமத்துவத்தையும் இறைவன் இரண்டுமாக இருக்கும் நிலையையும்

பால்பேதமற்றவன் என்கிற ஆதிநிலையின் எச்சமாகவும் எண்ண வேண்டி இருக்கிறது.

 

இறைவன் என்கிற ஆண்பாலுக்கு நிகரான இறைவி என்ற பெண்பால் சொல்.

பரமேஸ்வரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பரமேஸ்வரி என்ற பெண்பால்

சொல் இந்திய மெய்யியலில் மட்டுமே இருக்கிறது. மற்ற மதங்களில் எல்லாம்

இறைதூதன், பிதா, மகன் என்ற ஆண்பால் அடையாள்மே முன்னிலை வகிக்க இந்திய மெய்யியல் மட்டுமே பெண்ணுடலை நிராகரிக்கவில்லை என்பதை

நாம் இன்றைக்கு பெருமையுடன் நினைவு கூர வேண்டும்.

 

 

வாசலில் கோலமிடுவது என்பதில் தமிழரின் மெய்யியல் அடையாளம்

இருக்கிறது. பொதுவாக நம் பெண்கள் புள்ளி வைத்து அதைக் கோடுகளால்

இணைத்து கோலம் வரைவார்கள். இங்கே வரையப்படும் ரங்கோலி

கோலத்தை நான் சொல்லவில்லை. பார்ப்பதற்கு மிக எளிதாகத் தோன்றும்

பெண்களின் கோலம் உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல. கணித விதிகளுக்கு உட்பட்டது. எங்காவது ஒரு புள்ளியிலோ அல்லது கோட்டிலோ

பிசகி விட்டால் கோலம் அலங்கோலமாகிவிடும். கோலமிடும் போது

ஒவ்வொரு புள்ளியும் அதனதன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டே

கோலம் என்ற ஒரு வடிவமெடுக்கும். ஒரு புள்ளியாக கருவில்

தோன்றும் பயணம் பல்வேறு புள்ளிகளை இணைத்தும் இணைக்காமலும்

வாழ்க்கை என்ற கோலத்தை பூர்த்தி செய்கிறது. இதைக் காட்டும்

தமிழ்ப் பெண்களின் கோலம் அவர்கள் மெய்யியலின் அடையாளம்.

 

எனவே மெய்யியலின் தேடல் பயணத்தில் பெண்கள் என்ற பாலியல் அடையாளம் இயற்கை வைத்திருக்கும் ஒரு புள்ளி. அவள் விரும்பினாலும்

விரும்பாவிட்டாலும் அவளுடைய தேடல் இந்தப் புள்ளியில் இருந்து தான்

ஆரம்பிக்கப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் பெண்ணின் உடல் என்பது மெய். மெய் என்றால் உடல் என்றும் ஒரு பொருளுண்டு. தானே!

மெய்யியல் என்றால் தேடல். உண்மையைத் தேடல் உயிரியக்கத்தின்

தேடல் என்ற புரிதலுடன் நாம் அணுகும் போது பெண் என்ற

உயிரின் மெய்வெளி தேடலில் உடல் என்ற மெய்வெளியைக்

பெண்ணால் கடந்து செல்ல முடிந்ததா? பெண்ணுடல் என்ற

இயற்கையுடன் பெண் எதிர் கொண்ட சவால்கள் என்னென்ன?

அந்தச் சாவல்களை சமூகத்தின் கட்டமைப்புகளை இன்னும்

கொஞ்சம் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இச்சமூகம்

பெண்ணின் உடலுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை

அவிழ்த்தும் அறுத்தும் அவள் நடத்திய மெய்யியல் பயணம்

மிக முக்கியமானது. தனித்துவமானதும் கூட..

 

கிறித்துவ மதத்தில் புனித ஏசுவைப் பெற்றெடுத்த கன்னிமேரி

குறித்த ஒரு செய்தியை இங்கே பதிவு செய்வது கூட பொருத்தமாக

இருக்கும் என்று நம்புகின்றேன். THE JESUS PAPERS என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக்கல் பைகன்ட் (MICHAEL BAIGENT) சில உண்மைகளை முன்வைக்கிறார். ஹிப்ரு மொழியில் தான் பைபில் முதன் முதலில்

எழுதப்பட்டது என்பது நமக்குத் தெரியும். அதில் யங் வுமன் ஓர் ஆண்மகவைப்

பெற்றெடுத்தாள் என்று வருகிறது. யங் வுமன் என்ற ஹிப்ரு சொல் அல்மா.

(alma) அல்மா என்ற சொல் கிரேக்க மொழியில் கி.மு 3 ஆம் நூற்றாண்டில்

மொழிபெயர்க்கப்பட்ட போது பர்த்தனஸ் (parthenos) என்று மொழியாக்கமாகிறது.

கிரேக்க மொழியில் பர்த்தனஸ் என்றால் வெர்ஜின் – கன்னிப்பெண் என்று

பொருள். இப்படித்தான் கன்னிமேரியாகிறாள் ஏசுவைப் பெற்றெடுத்த பெண்.

ஆண் பெண் பாலியல் உறவை கடவுள் பிறப்பில் விலக்கியதன் மூலம்

இன்றளவும் கிறித்தவ மத போதகர்கள், கன்னியாஸ்திர்களும் பாலியல்

உறவு விலக்கி வைத்திருப்பவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

கடவுளின் பிறப்பு பெண்ணின் கருப்பையில் தான் என்பதை ஏற்றுக்கொள்ளும்

கிறித்தவமதம் அவள் கருப்பையின் புனிதத்தை ஆண்வாடையிலிருந்து

காப்பாற்றிக் கொண்டது ஒரு வரலாறு. இது மேற்கத்திய மெய் தேடலில்

பெண்ணின் முதல் பங்களிப்பு.

 

Series Navigationநான் தான் பாலா ( திரை விமர்சனம்)வேலையத்தவங்க
author

புதிய மாதவி

Similar Posts

5 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  புதிய மாதவியின் ” மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் ” பகுதி ஒன்று நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் அருமையாக எழுதப்பட்டுள்ளது. கடவுளை முதலில் மனிதன் படைத்ததின் நோக்கம் குறித்து கூறியுள்ள விளக்கம் நியாயமானதே. அதுபோல் கன்னி மரியாள் பற்றிய கருத்தும் ஒரு வகையில் உண்மையானதே. அது பற்றி நான் கருத்து கூற இயலைல்லை. இந்தத் தொடரை நான் விரும்பி படிப்பேன் என்பது திண்ணம். பாராட்டுகள் புதிய மாதவி …அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 2. Avatar
  ஷாலி says:

  //இயற்கை நிகழ்வுகள் முதலியவற்றைப் பொருள்முதல்வாத நோக்கில்
  தொடர்ந்து விளக்க முடியாத பழங்காலச் சூழலில்தான் இயற்கை>
  இறை>இறைவன் என்ற கருத்துருவாக்கம் ஆளுமை பெறுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்//
  இந்த உலகில் காணும் இயற்கையின் மூலமே புதிய மாதவியால் இறைவனை கண்டு கொள்ளமுடிகிறது.இந்த உலகிற்கும் அப்பால் உள்ள கோள்கள்,நட்சத்திரங்கள்,எண்ணிறந்த பிரபஞ்சங்களைப் படைத்து பரிபாலித்துவரும் அம்மாபெரும் சக்தியை புதிய மாதவியால் புரிந்து கொள்ள முடியவில்லை.
  பைபிள் அறிமுகப்படுத்தும் கர்த்தர் என்னும் கடவுள் பூமியில் உருவாக்கப்படவில்லை இதோ பழைய ஏற்பாடு கூறுகிறது.
  1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
  2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது.
  ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது.
  நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. -ஆதியாகமம்-1:2

  இந்து மத புராணங்களும், வைகுண்டத்தில் திருப்பாற்க் கடலில் மகா விஷ்ணு “க்ஷீராப்தி நாதன்“ (திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன்) பள்ளிகொண்டிருப்பதாக கூறுகிறது.

  “ ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான்.அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை.(பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் (அரியாசனம்)தண்ணீரின் மீது இருந்தது.பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள்,பூமியைப்படைத்தான்.” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறுவதாக இஸ்லாம் சொல்கிறது.

  அனைத்து வேதங்களும் ஆதியில் விண்வெளியில் நீர் படைக்கப்பட்டதை அறிவிக்கின்றன.அதில் கடவுள் (தேவன்-மஹா விஷ்ணு-அல்லாஹ்) பள்ளி கொண்டிருந்தே பின்பு வானம் பூமியை படைத்தான்.இன்று விண்வெளியில் மாபெரும் கடல் அளவிற்கு நீர் இருப்பதை நவீன அறிவியல் உலகம் உண்மைப்படுத்தி விட்டது.

  மூன்று மதங்கள் கூறும் ஒரே இறைவன் பூமியை படைப்பதற்கு முன்பே ஆதியாகவும் அந்தமாகவும் உள்ளான். இந்த வேத உண்மைகளை புரிந்துகொள்ளாமல் “ இயற்கை-இறை-இறைவன் “ என்று பூமிக்குள்ளே இறைவனைத் தேடாமல் வானத்தை நோக்கியும் புதிய பார்வையை செலுத்தினால் அந்த மாபெரும் பிரபஞ்ச இறைவனை கண்டு கொள்ளலாம்.

 3. Avatar
  Dr.G.Johnson says:

  கடவுள் உலகில் படைக்கப்பட்டவர் அல்ல, உலகம் அவரால் படைக்கப்பட்டது, ஆதலால் உலகில் நாம் காணும் யாவும் கடவுளை நமக்கு நினவூட்டுகின்றன. பறந்த வான்வெளியையும், அதில் மிதந்து செல்லும் கோடிக்கணக்கான விண்மீன்களும், சூரியன்களும், கோள்களும், உலகங்களும், சமுத்திரங்களும், இன்ன பிற இயற்கையின் அதிசயங்களான காற்றும், மழையும், மின்னலும், இடியும், புயலும், பூகம்பமும் கடவுளின் மகா சக்தியையே வெளிப்படுத்துகின்றன. அந்த இறைவனை அறிந்து கொள்ளவோ, அவர் பற்றி விளக்கம் கூறவோ கிஞ்சிற்றேனும் தகுதி இல்லாதவன் மனிதன். ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளை மனிதன் சொந்தம் கொண்டாடி அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒருவரையொருவர் மாய்த்துக்கொண்டிருப்பது அறியாமையின் உச்சம்! … டாக்டர் ஜி. ஜான்சன்.

 4. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  ஆதி மனிதன் முதன்முதல் சூரியனைத்தான் இறையாக வழிபட்டான். வட அமெரிக்கா மாயா கலாச்சரத்தில் மாயா குடியினர், எகிப்தில் பிரமிட் கட்டிய ஃபெரோ வேந்தர்கள், இந்தியாவில் இந்துக்கள் காலைச் சூரிய வழிபாட்டில்தான் இறைமையை மதித்தார்கள்.

  மனிதன் சூரியனை உண்டாக்க வில்லை. புராணக் கதைகளில் வரும் ஆயிரம் தெய்வப் பெயர்களை எடுத்துச் சொல்லி, கடவுளை மனிதன் படைத்தான் என்பது பொருளற்றது.

  எல்லா மதங்களும் வணங்குவது ஒரே ஒரு கடவுளைத்தான்.

  கடவுளை நம்பாத திமுக கூடத் தமது சின்னமாகச் சூரியனை மறைமுகமாக வணங்கி வருகிறதல்லவா ?

  சி. ஜெயபாரதன்.

  1. Avatar
   தங்க.ராசேந்திரன் says:

   //கடவுளை நம்பாத திமுக கூடத் தமது சின்னமாகச் சூரியனை மறைமுகமாக வணங்கி வருகிறதல்லவா ?//
   சி.ஜெயபாரதன் அண்ணா இன்னும் கூட திராவிடக் கட்சிகளைப் புரிந்துகொள்ளாமல் தங்களைப் போன்றவர்கள் இருப்பதை நினைத்து வருந்துகிறேன்! அவனெல்லாம் இப்போது வணங்குவது நித்தியா,பங்காரு,கல்கி,யேசுவை அழ வைக்கும் தினகரன்,கஸ்பார்,ஆதீனங்கள்,சங்கர ஆச்சாரியார்கள்,பாபாக்கள் இன்னும் பலரைத்தான்; இயற்கையையோ கல்லையோ மண்ணையோ சூரிய சந்திரனையோ வணங்குவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *