தொடுவானம் 27. கலைந்த கனவுகள்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

 

          என்னுடைய ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் போட்டிக்குத் தேர்வாகி விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் விக்டோரியா அரங்கில் போட்டி நடைபெறும் என்று தகவல் அனுப்பியிருந்தனர்  நாடக ஒத்திகையின்  போது  அதை நான் நான் வெளியிட்டு அன்று இரவே அதை வெற்றி விழாவாகக் கொண்டாடினோம்.
         தமிழ் முரசு பத்திரிகையில் சிங்கப்பூர் அரசின் விளம்பரம் ஒன்று  வந்திருந்தது. அதில் சிங்கப்பூர் சட்டமன்றத்தில் தமிழ் ஆங்கில பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்றிருந்தது. சட்டமன்றம் கூடும் நாட்களில் மட்டும் மொழிபெயர்ப்பு செய்து அன்றைக்குரிய  ஊதியத்தைப் பெற்றுச் செல்லலாம் . மணிக்கணக்கில் தரப்படும் அந்த தொகை,  நேரம் கூடக்கூட இரட்டிப்பாகும். மொத்தத்தில் ஒரே நாளில் நிறைய வருமானம் கிடைக்கும் வேலை அது.
          அதற்கு விண்ணப்பம் செய்தேன். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். அது வேறு விதமானது. அன்று நான் ஒருவன் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தேன். ஒலி புகாத ஓர் அறையில் என்னை அமரவைத்து, செவிகளில் கேட்கும் கருவி மாட்டினர். சிறிது நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் ஒருவர் பேசுவது கேட்கும். அது கேட்ட மாத்திரத்தில் நான் அதை அப்படியே தமிழில் கூறவேண்டும். அது முடிந்ததும். ஒருவர் தமிழில் பேசுவது ஒலிக்கும். அதை கேட்டு உடன் ஆங்கிலத்தில் கூறவேண்டும். ஒரு அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. என்னைத் தேர்வு செய்து விட்டனர்! எனக்கு அதில் ஆச்சரியம் இல்லை! இரு மொழிகளிலும் என்னுடைய ஆர்வம் அப்படி இருந்தது! அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் எப்போது என்று எனக்குத் தெரிவிப்பதாகக் கூறி அனுப்பினர். நான் அந்த இரண்டாவது வேலை கிடைத்த மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.
          அதன் பின்பு சில நாட்களில் சிங்கப்பூர் தொலைக்காட்சியின் தமிழ்ப் பிரிவில் செய்திகள் வாசிக்க வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரம் வெளிவந்தது. உடன் அதற்கும் விண்ணப்பித்தேன். அங்கிருந்தும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.
          எனக்கு  கிடைக்கப்போகும் வேலைகள்  அனைத்துமே தமிழ் ஆங்கிலம் தொடர்புடையதால் நான் அவற்றால் ஈர்க்கப்பட்டது உண்மையே. ஆனால் என் இலட்சியம் ஒரு நல்ல மருத்துவர் ஆகவேண்டும் என்பதை நான் மறக்க வில்லை. அதனால்தான் நான் சிறு வயதிலிருந்தே வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்துள்ளேன் என்றும் நம்பினேன். அப்போதெல்லாம் சிறந்த மாணவர்கள்தான் மருத்துவர்கள் ஆனார்கள் என்பது உண்மை.
         அன்று காலையில் நான் வழக்கம்போல் என்னுடைய அலுவலக அறையில் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அந்த பத்திரிகை ஆசிரியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடன் வந்து  அவரைப் பார்க்கச் சொன்னார். ஏதாவது முக்கியச் செய்திகள் இருப்பின் அவ்வாறு அழைப்பார்.
          நான் வழக்கம்போல் சர்வ சாதாரணமாக அவரைக் காணச் சென்றேன்.
          அவருடைய முகம் வாடியிருந்தது. கையில் ஒரு கடிதத்தைப் பிடித்தவண்ணம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.என் வேலையில்  ஏதும் தவறு நடந்து விட்டதா என நான் அஞ்சினேன்.
          ” உன் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. உனது திறமையும் வேளையில் நீ கட்டும் ஆர்வமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனாலும் என்னால் என்ன செய்ய முடியும்? ” என்று சோகத்துடன் கூறியபடி அக் கடிதத்தை என்னிடம் நீட்டினார்
          நடுங்கிய கையுடன் அதை வாங்கிப் பார்த்தேன்.
          அதை ஒரு வழக்கறிஞர் எழுதியிருந்தார். படித்துப் பாத்தேன்! அதிர்ந்து போனேன்!
           எனக்கு வயது பதினாறுதான் ஆகிறது. இந்த வயதில் என்னை  வேலைக்கு அமர்த்தியுள்ளது சிங்கப்பூர் தொழிலாளர் சட்டப்படி குற்றமாகும். அதனால், என்னுடைய தந்தை என்னை உடனே வேலையிலிருந்து நீக்கி விடுமாறு கோரியுள்ளார். மீறினால் ” ஸ்ட்ரெயிட்ஸ்  டைம்ஸ் ” நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்த வழக்கறிஞர் எச்சரித்திருந்தார்.
கலங்கிய கண்களுடன் அவரை நோக்கினேன்.
           ‘ உன்னை நீக்குவது எங்களின் நிறுவனத்துக்கு பேரிழப்பாகும். என்னை மன்னியும். ” என்றார் அந்த ஆங்கில நிர்வாக ஆசிரியர்!
          சோகம்! சோகம்! சோகம்!
          வாழ்கையே பெரும் சோகம்!
          இந்த பத்து ஆண்டுகளில் நான்  அடைந்த சோகங்கள் தான் எத்தனை எத்தனை!
          இவர் என்ன தந்தையா? உடன் உள்ள மகனிடம் என்றாவது அன்பைக்  காட்டியிருப்பாரா? பாசத்துடன் பேசியிருப்பாரா? எந்நேரமும் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு சந்தேகத்துடன்தானே என்னைப் பார்க்கிறார்? எனக்குத் தேவையான எதையாவது உரிமையோடு அவரிடம் கேட்டு வாங்கியதுண்டா?
          எந்த நேரத்திலும் என்ன  அசம்பாவிதம் நடக்குமோ என்ற அச்சத்தில் தானே ஒவ்வொரு நாளையும் கழித்துள்ளேன்!
          மகன் நன்றாகப் படித்து விட்டால் மட்டும் போதுமா? அவனுடைய அன்பு வேண்டாமா? இந்த சாதாரண உண்மையைக் கூட இவரால் புரிந்துகொள்ள முடியவில்லையே!
          அபூர்வமாகக் கிடைத்த வேலையை இழந்துபோன நான் மிகவும் சோகத்துடன் நடைபிணமாக வீடு திரும்பினேன்.
          எதோ பெரிய சாதனை புரிந்து விட்டவர் போல் மமதையுடன் என்னைப் பார்த்தார். நான் ஏதும் பேசவில்லை.
          மாலையில் வழக்கம்போல் நாடகப் பயிற்சிக்குச் சென்றேன். எனக்கு நேர்ந்த சோகத்தை அனைவரிடமும் கூறினேன். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனுதாபத்துடன் ஆறுதல் சொன்னார்கள்.
           அன்று இரவு வீட்டில் மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அப்பாவுடன் உணவு உண்ண உட்கார்ந்தேன்.
          ” நான் எச்.எஸ், சி.யில் சேரப்போறேன். எங்கள் பள்ளியில் நாளை விண்ணப்பம் செய்யப் போறேன். ” என்றேன்.
          ” அதெல்லாம் வேண்டாம். நீ இங்கு படித்துக் கிழித்தது போதும். நாளை ஜும்மாபாய் கம்பெனிக்குப் பொய் உனக்கு கப்பல் டிக்கெட் எடுக்கப் போகிறோம். நீ ஊருக்குப் போய் படித்து டாக்டர் ஆகணும். ” என் தலை சுற்றியது. மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. எழுந்துவிட்டேன்.
          ” நான் ஊருக்குப் போகலை. இங்கேயே படித்து டாக்டர் ஆக முடியும். “
          ” இங்கேயே படிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவளுடன்  சுத்துவதற்கா? அதெல்லாம் வேண்டாம். ஊரில் உன் தாத்தா,பாட்டி, அம்மா, அண்ணன். அண்ணி, தங்கச்சிகள் இரண்டு பேர் இருக்காங்களே. அவங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா? இவள் ஒருத்தி உனக்கு போதுமா? காதலாம்  பெரிய காதல்! ”  முணுமுணுத்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றார்.
          அன்றைய இரவு நான்  தூங்கவில்லை. என் எண்ணக் கனவுகள் அனைத்தும் அந்த இரவோடு கரைந்து போனது! சிங்கப்பூர் வாழ்க்கையும் சிதைந்து போனது!
           இதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி உள்ளதா  என்று யோசித்தேன். அப்போது மனதில் அந்த பொறி தெறித்தது! ஆனால் அதற்கு  அவளும் சம்மதிக்க வேண்டுமே? சமதிப்பாளா  அவள்?
          காலையில் யில் கப்பல் கம்பெனிக்குச் சென்றோம். ரஜூலா கப்பலில் பிரயாணம் செய்ய டிக்கெட் வாங்கினார். இன்னும் இரண்டு வாரங்களில் பிரயாணம்!
          நான்  ஏற்கனவே ஒரு திட்டத்துடன் இருந்ததால் கவலையை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
          அன்று மாலை  ஜெயப்பிரகாசத்திடமும் கோவிந்தசாமியிடமும் என் திட்டத்தைக் கூறினேன். அவர்கள் இருவருமே சரியென்று ஆமோதித்தனர்
          ஊருக்குக் கொண்டு செல்ல பெரிய தோல் பெட்டி ( சூட்கேஸ் ) வாங்கி வந்தார். நிறையத் துணிமணிகள் வாங்கி நிரப்பினார்.அவற்றில் எனக்கும் புது சட்டைகள் இருந்தன. தாத்தா, பாட்டி, அம்மா, அண்ணன், அண்ணி, தங்கைகள் என அனைவருக்கும் துணிமணிகள் வாங்கி அவற்றில் அவரவர் பெயர்கள் எழுதி ஒட்டினார்.
          நான் எது பற்றியும் கவலை கொள்ளாதது போல் நடித்தேன். ( நடிப்பதற்கு எனக்கு சொல்லித் தரணுமா )
          நாடகத்தில் நான் கதாநாயகன். நான்  தொடர்ந்து நடிக்க முடியாத காரணத்தால் புது கதாநாயகன் வேண்டும். நல்ல வேளையாக  ஜெயப்பிரகாசம் நடிக்க சம்மதித்தான்.
          லதாவைச சந்தித்து திட்டத்தைக் கூறினேன். அவளும் மறுமொழி கூறாமல் சம்மதித்தாள். நான் கப்பல் ஏறியதும் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக ஜெயப்பிரகாசமும் கோவிந்தசாமியும் உறுதியளித்தனர்.
          ஊருக்குப் போவது உறுதியாகி விட்டதால் அந்தக் கடைசி வாரத்தில் நான் நண்பர்களுடன் வெளியில் சென்று வருவதை அவர் பெரிது படுத்தவில்லை. அதைப் பயன்படுத்தி லதாவும் நானும் ஓர் இரவைத் தனிமையில் கழிக்க முடிவு செய்தோம். அந்த நேரம் பார்த்து அவளுடைய அக்காள் கணவருடன் பினாங்கு சென்றிருந்தார்.வீட்டைக் கண்காணிக்க லதா மட்டும் தனியாக அக்காள் வீட்டில்  இருந்தாள். அங்கு இரவில் தனியாகச் செல்ல பயமாக இருந்ததால், ஜெயபிரகாசத்தை அழைத்துக் கொண்டேன்.
          ராயல் திரையரங்கில் புதுப் படம் வெளியானது. நள்ளிரவுக் காட்சி முடிய விடியற்காலை நான்கு மணியாகிவிடும். வீடு வந்து சேர ஐந்து ஆகிவிடும். நள்ளிரவுக் காட்சிக்குப் போவதாக அப்பாவிடம் கூறி விட்டு நாங்கள் இருவரும் சைக்கிளில் புறப்பட்டோம்.
           இரவு பதினொன்றரை மணிக்கு அந்த வீடு சென்றடைந்தோம். அது ஐந்தாவது மாடி. கீழே சீனன் காப்பி கடையில் ஜெயப்பிரகாசம் காத்திருந்தான். நான் மின்தூக்கியில் மேலே சென்றேன்.
          லதா எனக்காக காத்திருந்தாள்.அதுவே எங்களுக்கு முதலும் கடைசியுமான இரவு!
          மறுநாள் எனக்கு இன்னொரு அதிர்ச்சி! காலையிலேயே வெளியே சென்ற அப்பா மதியம் திரும்பினார். வஞ்சகமாக வில்லன் சிரிப்பு சிரித்தபடி ஒரு கவரை என்னிடம் தந்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன்.
          அது ஏர் இந்தியா விமான டிக்கட்! என் திட்டம் தவிடுபொடி ஆனது!
          ” கப்பலில் போனால் பினாங்கில் இறங்கி அவளுடன் ஓடி விடலாம் என்றா எண்ணினாய்? நீ இப்போ ஏர் இந்தியா விமானத்தில் போகிறாய்.தப்பிக்க விரும்பினால் கடலில் குதித்து தப்பித்துக்கொள்! ” வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்!
          நான் பினாங்கில் இறங்கி விடுவது. அங்கு நண்பர்கள் லதாவை அழைத்து வருவது. மலாயாவில் பதிவுத் திருமணம் செய்து கொள்வது. இருவரும் மலாயாவில் வேலை தேடுவது. இதுவே அந்த அருமையான திட்டம். இப்போது அது தரை மட்டம்!
         நான் தமிழகம் சென்றபின் லதாவை நிரந்தரமாகப் பிரிய நேரலாம். நண்பர்களின் தொடர்பு தடைபட்டுப் போகலாம். வாழ்க்கைப் பாதை  மாறிப் போகலாம். சிங்கப்பூரில் நான் ஆற்றிய எழுத்துப் பணிகள் முடங்கிப் போகலாம். சிங்கப்பூரின் சிங்கார வாழ்க்கையும் நழுவிப் போகலாம்.
          ஆனால் இத்தகைய இழப்புகளின் மத்தியிலும் ஒரேயொரு ஆறுதல் இருந்தது. இத்தனைக் கொடிய குணம் கொண்ட அப்பாவின் கொடூரங்களிலிருந்து நிரந்தர விடுதலை பெறலாம்.முற்றிலும் சுதந்திரம் பெற்றவனாக புதிய பாதையில் செல்லலாம்.
          மனதைத் திடப்படுத்திக்கொண்டு லதாவைச் சந்தித்தேன்.படித்து டாக்டராகத் திரும்பி வரச் சொன்னாள். அடிக்கடி கடிதம் போடச் சொன்னாள். எனக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும்  காத்திருப்பதாகச் சொன்னாள். முத்தமிட்டு வழியனுப்பினாள். கண்கள் கலங்கிய நிலையில் பிரிந்து சென்றாள்!
          எனது விமானப் பயணம் எங்கள்  வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அங்கு யாரும் அதுவரை விமானத்தில் சென்றதில்லை. அதோடு நான் தமிழகம் சென்று கல்லூரியில் சேரப்போகிறேன். அங்கு யாரும் அதுவரை கல்லூரி சென்றதில்லை.
           என்னை வழியனுப்பி வைக்க ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி. பன்னீர்செல்வம், சார்லஸ் ஆகியோர் பாயோ லெபார் விமான நிலையம் வந்திருந்தனர். கந்தசாமி மாமா, செல்லப்பெருமாள் மாமா  ஆகியோரும் வந்திருந்தனர்.
          அப்பாவின் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. என்னை லதாவிடமிருந்து பிரித்துவிட்ட பெருமிதம் அவருக்கு!
          என் முகமோ களையற்று கவலையில் வாடியிருந்தது.
          எல்லாரிடமும் கை குலுக்கிவிட்டு விடை பெற்றேன்! அப்போது சிங்கப்பூருக்கும் விடை தருவதை உணர்ந்தேன்!
                                                                                                             * * * * * * * *
          திடீரென்று விமானத்தின் ஒலிபெருக்கி இயங்கியது. என்னுடைய நீண்ட எண்ணவோட்டமும் நின்றது.
          ” காலை  வணக்கம். நான் கேப்டன் கோபிநாத் பேசுகிறேன். நாம் இன்னும் சில நிமிடங்களில் மெட்ராஸ் விமான நிலையத்தில் தரை இறங்கப் போகிறோம்.உங்களின் இருக்கை வார்களை அணிந்து கொள்ளுங்கள். பிரயாணம் இனிதாக இருந்தது என நம்புகிறேன். மீண்டும் சிந்திப்போம். நன்றி. “
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    திரு.ஜான்சன், என்னால் யாரையுமே சுலபமாக ஒத்துக் கொள்ள முடியாது. மிக மிகச் சிலரே நான் மதிப்புக்குள்ளாவராக நினைப்பேன். உங்கள் வாழ்க்கைப் பயணம் சோதனை அதைக் கையாண்ட விதம் அனைத்தும் அருமை. வலிகளில் பலர் சொறிந்து சுகம் காண்பான், நீங்களோ கிளர்ந்து சாதித்துள்ளீர்கள். தமிழில் எழுதப்பட்ட சுய சரிதைகளில் உங்களுடையது தலையாய வரிசையில் இடம் பெறும். இதை சரியான முறையில் நேர்த்தியாக படங்களுடனும் அதே டைரி குறிப்புகளில் பதிவுகளுடனும் வெளியிடுங்கள். இந்த சாதனைக்கு தூண்டாக இருந்த உங்கள் தந்தையின் குணமும் அதை நீங்கள் எதிர் கொண்ட விதத்திற்கும் சமர்ப்பியுங்கள். உங்களுக்கு அப்படியொரு குணம் எப்படி வந்தது. ஜீன்களில் டி என் ஏ மூலம் தானே வந்திருக்க முடியும்? இல்லை எதனால்?

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள புனப்பெயரில் அவர்களே, தங்களுடைய கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். என்னை அளவுக்கு அதிகமாகவே பாராட்டியுள்ளீர்கள். இதுவரை நான் அப்பாவிடம் பட்ட துன்பத்தையும் அதை எதிர்கொண்ட விதத்தையும் எழுதினேன். இனிமேல் நான் தனி மனிதனாக சுதந்திரமாக செயல்பட்டதை எழுதப் போகிறேன். தாங்கள் கூறியுள்ளபடி நிச்சயம் இதை நூல் வடிவில் கொண்டு வருவேன். தங்களின் அன்புக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி. தொடர்ந்து தொடுவானம் படித்து கருத்து கூறுவீர்கள் என்றும் நம்புகிறேன். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு. ஜான்சன் ஐயா,

    தொடுவானம் மிகவும் சுவையான சிறுகதை போன்று ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது! உணர்வுப்பூர்வமான எழுத்துகள். நன்றி.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, தொடுவானம் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி. சிங்கப்பூர் முடிந்து இப்போது தமிழகம் பற்றிய சுவையான செய்திகள் எழுதி வருகிறேன். தொடர்ந்து படித்து மகிழுங்கள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    punaipeyaril says:

    சினிமாவாக வருவதற்குத் தேவையான அத்துனையும் இருக்கிறது.

  6. Avatar
    ஷாலி says:

    //காலையிலேயே வெளியே சென்ற அப்பா மதியம் திரும்பினார். வஞ்சகமாக வில்லன் சிரிப்பு சிரித்தபடி ஒரு கவரை என்னிடம் தந்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன்.
    அது ஏர் இந்தியா விமான டிக்கட்! என் திட்டம் தவிடுபொடி ஆனது!//

    டாக்டர் ஸார்! அப்பா என்னும் நல்ல வில்லன் வாழ்க! இந்த வில்லன் இல்லாவிட்டால் ஜான்சனுக்கு பினாங்கில் லதா மட்டுமே கிடைத்திருப்பார். ஆனால் தமிழ் சமூதாயத்திற்கு நல்ல ஒரு மருத்துவர் கிடைத்திருக்க மாட்டார். காதல் என்னும் கவர்ச்சி கண்ணாடியில் முகம் பார்த்தே முகவரியை தொலைத்த, உடைந்த சில்லுகளே உலகில் அதிகம்.உறுதியான வைரங்களாக உருமாறிய காதல் மிக சொற்பமே! இதை நன்கு உணர்ந்த வில்லன் அப்பா உங்களை இடம் மாற்றியது வாழ்க்கையில் நீங்கள் தடம் பதிப்பதற்க்கே! ஆகவேதான் ஆன்றோர்கள் சொன்னார்கள்.
    “ தாயிற்சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை, அன்னை தந்தையே அன்பின் எல்லை!”

    அருமையான தொடர்.இது இன்னும் மெருகேற எனது தாழ்மையான விண்ணப்பம். எழுத்தில் நான்…நான்…என்னும் ஆளுமை அதிகம் தெரிகிறது.அதற்கு தாங்கள் தகுதி உடையவர்தான்.எனினும் இதை நேரிடையாகச் சொல்லாமல் பிற பாத்திரங்கள்,சம்பவங்கள் மூலமாக உங்கள் ஆளுமையை உயர்த்தலாம். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *