1. பிறவி
அதிகாலையொன்றில்
காக்கைக்கூட்டில் விழித்தெழுந்தேன்
என் வருகையை
அருகிலிருந்த நட்புக்காக்கைகள்
கரைந்து கொண்டாடின.
ஏதோ ஒரு திசையிலிருந்து
ஒவ்வொன்றாய் இறங்கிவந்து
நலம் விசாரித்தன
பித்ருக் காக்கைகள்.
அதுவரை கேள்விப்பட்டிராத
ஆயிரமாயிரம் சங்கதிகளைப் பகிர்ந்துகொண்டன.
அவற்றின் நினைவாற்றலும் அன்பும்
நெகிழ்ச்சியடையவைத்தன.
இரையெடுக்கப் புறப்படும்போது
தோழைமையோடு இணைத்துக்கொண்டன.
ஏதாவது கூரையில் படையல்சோறு
எங்கோ மெத்தையில் உலரும் தானியம்
உப்புக் கருவாடு
எல்லாமே பழகிவிட்டது.
செத்த எலியின் நிணத்தில்
கொத்துவது முதலில் அருவருப்பாக இருந்தது.
பழகப்பழக சரியானது அதுவும்
2.பாராமுகம்
சில மாதங்களுக்குப் பிறகு
மருத்துவமனைக்குச் செல்லும் சூழல்
மீண்டும் உருவானது
இயக்கம் பழகிய
சர்க்கஸ்காரர்கள்போல
துல்லியமாக இயங்கினர்
பழைய பணியாளர்கள் அனைவரும்.
புதிய சீருடைகள் அணிய
உதவத் தயாராக நின்றான் வளாக ஊழியன்
தொழில், குடும்பம், நிறுவனம் என
ஆர்வத்துடன் பேசியவண்ணம்
சில்லறைச் சோதனைகள் செய்தார் மருத்துவர்.
போனமுறை படுத்திருந்த அதே அறை
அதே கட்டில்
அதே ஜன்னலோரம்
அதே மருத்துவர், தாதி.
ஆனால் யாருடைய முகத்திலும்
என்னை அறிந்த சுவடே இல்லை
வாய்திறந்து கேட்கவும் கூச்சமாக இருந்தது.
சிறிது நேரம்
பக்கத்தில் இருந்த
பழைய சிகிச்சைக் குறிப்பேட்டில்
பார்வையை ஓட்டினார் மருத்துவர்
அதன் பிறகும் அவர் கேட்கவில்லை.
நானும் சொல்லவில்லை.
3.ஒருத்தி
எங்கெங்கோ தோட்டங்களிலிருந்து
வாங்கிவந்து தொடுத்த
மல்லிகைச் சரங்கல் சிரிக்கின்றன
என் கூடையில்
ஒரு கோவிலும்
பேருந்து நிலையமும் உள்ள வீதி என்பதால்
மக்கள் நடமாட்டத்துக்குக் குறைவில்லை
முழம்போட்டு வாங்குபவர்களும் உண்டு
பந்தாக வாங்குபவர்களும் உண்டு.
எல்லோரும் வாடிக்கையாளர்களே
தோள்பைகளுடன் அரக்கப்பரக்க
அலுவலகம் புறப்படுகிறவர்கள்
சிரித்துப் பேசியபடி
தம்பதியிராய் வருகிறவர்கள்
ஒருகையில் காய்கறிப்பையும்
மறுகையில் வாழை இலையுமாக
கடையிலிருந்து திரும்பும் பெண்கள்
தட்சிணாமூர்த்தி சேவைக்கு
தாமதமாக வந்து சேருபவர்கள்
கதவு திறக்காத கார் ஜன்னலிலிருந்து
கையை மட்டும் நீட்டி
பூப்பொட்டலத்தைக் கேட்பார்கள்
சில பெண்கள்
வெகுநாட்களுக்குப் பிறகுதான் கவனித்தேன் –
தினந்தோறும்
ஏறத்தாழ ஐந்தரைமணிக்கு
கடையைக் கடந்து செல்கிறாள் –
ஒருமுறை கூட பூ வாங்காத ஒருத்தி.
4.காகம்
மரத்தடியிலிருந்து
புல்வெளியைப் பார்க்கிறது
பசிகொண்ட காகம்
சற்றே தலையை உயர்த்தி
வேப்பங்கிளையில் பார்வையைப் பதிக்கிறது
அருகிலிருந்த பாறையின்மீது
பறந்து சென்று அமர்கிறது
வேலிவிளிம்பில் பூத்திருக்கும்
பூக்களையெல்லாம் வெறிக்கிறது
கல்லும் முள்ளும் நிறைந்த பள்ளத்தில்
அசட்டையுடன் அலகால் கொத்துகிறது
விர்ரென்று வானிலெழுந்து
வட்டமடித்துவிட்டு
மீண்டும் வந்து அமர்கிறது.
இறக்கைகளை விரித்து
சடசடவென அடித்துக்கொள்கிறது.
ஏழெட்டு முறைகள்
விடாமல் ஓசையுடன் கரைகிறது
அருகிலேயே பழமொன்று கிடப்பதறியாமல்
தலையைத் திருப்பி எங்கேயோ பார்க்கிறது
- பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி
- ஒரு பரிணாமம்
- சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 15
- நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்
- சுருதி லயம்
- தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு
- மும்பைக்கு ஓட்டம்
- பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…
- சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்
- கவிதைகள்
- செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- தொடுவானம் 27. கலைந்த கனவுகள்
- நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்
- ஆங்கில Ramayana in Rhymes
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27
- மலேசியன் ஏர்லைன் 370
- பாவண்ணன் கவிதைகள்
- அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்
- A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan
- ஏற்புரை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85
- சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.