வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 14

author
0 minutes, 0 seconds Read

சேதுரத்தினத்தின் தூக்கக் கலக்கம் அறவே நீங்கியது. ‘உடனே புறப்பட்டு வரவும். ஊர்மிளா’ என்று தந்தி வாசகம் கூறியது. வேறு விவரம் ஏதும் அதில் இல்லை. உடனே கிளம்பி வரும் அளவுக்கு என்ன அவசியம் நேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லாத அத்தந்தி அவனைக் கலவரப் படுத்தியது. ஒரு பெட்டியில் தேவையான உடைகள் முதலியவற்றை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டான். இன்னும் நான்கு நாள்களில் அலுவலக வேலையாக மதுரைக்குக் கிளம்ப வேண்டியிருந்த நிலையில் அந்நான்கு நாள்களுக்கும் விடுப்புக்குத் தன் அலுவலரைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லிவிடத் தீர்மானித்தான். வேலைத் தொடர்புள்ள கோப்புகளைப் படிப்பதற்காக ஏற்கெனவே அவன் அவற்றை அவரது அனுமதியுடன் வீட்டுக்கு எடுத்து வந்திருந்தான். எனவே அவற்றை எடுத்துச் செல்ல அவன் அலுவலகம் போகவேண்டிய தேவை இருக்கவில்லை.

அவன் அவருடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு சேதியைச் சொன்னதும் அவர் சரி யென்றார். அவனும் முதல் ரெயிலைப் பிடித்து ஏறினான்.

…கோயமுத்தூரில் ஊர்மிளாவின் ஒன்றுவிட்ட அக்காளின் வீட்டை யடைந்து அவன் கூப்பிடுமணியை அழுத்தியதும் பணிப்பெண் ஓடி வந்து கதவைத் திறந்தாள். ஊர்மிளாவுக்கு வலி எடுத்திருப்பதால் அவளை அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாகவும், அவள் அக்கா அங்கே அவளுடன் தங்கி யிருப்பதாகவும் சொல்லி அதன் முகவரியையும் அவள் அவனுக்குத் தெரிவித்தாள்.

அவள் கொடுத்த காப்பியைக் குடித்ததும் அவன் தன் பெட்டியை அங்கே வைத்துவிட்டுக் கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். மருத்துவ மனையின் குறிப்பிட்ட அறையை அடைந்து ஊர்மிளாவைச் சந்திக்கும் வரை அவன் அவனாக இல்லை.

அவனைப் பார்த்ததும், ஊர்மிளா புன்னகை செய்தாள். அவள் கட்டிலுக்கு அருகே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் அக்கா நாகவல்லி, “வாங்க, மாப்பிள்ளை! உக்காருங்க,” என்று உபசரித்து எழுந்தாள். அவள் வேறு நாற்காலியில் அமர, அவன் அவள் காலி செய்ததில் உட்கார்ந்தான்.

“என்ன ஆச்சு?”

நாகவல்லி, சிரித்து, “ஒண்ணும் ஆகலை. வலிக்குதுன்னா. உடனே இங்கே சேர்த்துட்டேன். இது பொய்வலின்னு எனக்குத் தோணித்து. இருந்தாலும், தலைப் பிரசவமாச்சேன்னு ஜாக்கிரதையா இருக்குணும்கிறதுக்காக உடனே இங்கே வந்துட்டோம். ஊர்மிளா உங்களைப் பார்க்கணும்னா. அதான் தந்தி குடுத்தோம்… கவலைப்படுறதுக்கு ஒண்ணுமில்லே… பிரசவத்துக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல ஆகும்னுட்டாங்க….நீங்க பேசிட்டு இருங்க. நான் நர்ஸைப் பார்த்துட்டு வர்றேன்,” என்ற நாகவல்லி நாசூக்காக வெளியே போனாள்

“ஏய்! என்ன இப்படி என்னைக் காபராப் படுத்திட்டே? நம்ம பையன் ரொம்பவும் சேட்டை பண்றானா?”

“பையன்னு நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா?”

“அப்படின்னு இல்லே. ஒரு பேச்சுக்குச் சொன்னேன். எதுவானா என்ன? நம்ம கொழந்தை. இல்லையா?”

“ஆமாமா….சிலருக்குப் பொண்ணுன்னா ஒரு உதாசீனம். நான் அப்படி இல்லீங்க. பொண்ணு பொறந்தா தூக்கி எறிஞ்சுடவா போறோம்?”

“அதானே! உங்கம்மா அப்படி உன்னைத் தூக்கி எறிஞ்சிருந்தா நீ எனக்குக் கிடைச்சிருப்பியா?”

ஊர்மிளா சிரித்தாள்.

“பயந்து போய்த்தானே தந்தி கொடுத்தே?”

“ஆமாங்க. நீங்க பக்கத்துல இருக்கணும்னு தோணித்து. அதான்…”

“சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கியே! நம்ம பயம்தான் நம்ம முதல் எதிரி…பயப்படாதே, ஊர்மிளா… தைரியமா இரு. ஊர்லே இருக்கிற எல்லாப் பொண்ணுங்களும்தானே பிரசவிக்கிறாங்க! நீ மட்டுமா?”

“என்னமோ தெரியலீங்க. எனக்கு ரொம்பவே பயமா யிருக்கு. அவநம்பிக்கையாவும் இருக்கு.”

“பயப்படாதேம்மா. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்…”

“உங்களைப் பார்த்ததும் தெம்பு வந்துடுத்துங்க. எத்தனை நாள் லீவ் எடுத்திருக்கீங்க?”

“நாலு நாள். ஆனா, நாலாம் நாள் நான் மதுரைக்கு ஒரு இன்ஸ்பெக்‌ஷனுக்குப் போகணும் அங்க ரெண்டு நாள் இருந்துட்டு இன்ஸ்பெக்‌ஷன் முடிஞ்சதும் திரும்பிடுவேன்… உன் தந்தி விவரமா யில்லாததால நான் எப்படி பயந்து போயிட்டேன், தெரியுமா? இப்படியா அரையும் குறையுமா தந்தி குடுக்கிறது?”

“வேற எப்படிக் குடுக்கிறதாம்? வலி கண்டிடிச்சு, வாங்கன்னா?” என்று கேட்டுவிட்டு ஊர்மிளா இடிஇடி யென்று சிரித்தாள்.

அவனும் சிரித்தான்.

அப்போது நாகவல்லி நர்சுடன் திரும்பிவந்தாள்.

“இவருதான் உங்க வீட்டுக்காரரா? வணக்கம், சார்… இவங்களை டிஸ்சார்ஜ் பண்ணலாம்னுட்டாரு டாக்டர்… குறைஞ்சது இன்னும் ஒருவாரமாவது ஆகும்னுட்டாங்க…” என்று அவள் தெரிவித்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து மூவரும் ஒரு டாக்சியில் வீடு நோக்கிக் கிளம்பிப் போனார்கள்.

…… சாப்பாடு ஆனதன் பிறகு ஓய்வாக இருந்த நேரத்தில் சேதுரத்தினம் ரங்கன்-லலிதா விஷய்ம பற்றி அவளுக்குச் சொல்லிவிட்டு, “நீ என்ன சொல்றே, ஊர்மிளா? உண்மையைச் சொல்லாம இருக்கிறது தப்புன்னா, இல்லாட்டா, அதைச் சொல்லாம இருக்கிறதுதான் சரின்னா?” என்று அவள் வாயைக் கிண்டினான். அவன் தன் முடிவின்படியே நடக்க எண்ணி யிருந்தாலும், அவளது கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள அவாவினான்.

“அய்யய்யோ! வேணாங்க. பழைய குப்பையை எல்லாம் நாம எதுக்குஙக கிளறணும்? அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் பாழாப் போயிடுங்க. வேணாம். சில சந்தர்ப்பங்கள்லே நாம உண்மையைச் சொல்லாம இருக்கிறதுதான் நல்லதுன்னா அப்படித்தாங்க அதைச் சொல்லாம இருந்துடணும்… போஸ்ட் மார்ட்டமெல்லாம் செய்யக் கூடாதுங்க….”

“கரெக்ட். நானும் அப்படித்தான் செய்யறதா யிருக்கேன். இருந்தாலும் உன்னோட அபிப்பிராயம் என்னவா யிருக்கும்னு தெரிஞ்சுக்க ஒரு ஆவல். அதான் கேட்டேன்….உண்மையைச் சொல்லிடுங்கன்னு நீ சொன்னாலும் கூட நான் சொல்றதா இல்லே. …”

“ஆமாங்க. நமக்கெதுக்கு அந்தப் பாவம்?”

சேதுரத்தினம் பெருமை ததும்பிய விழிகளால் அவளை நோக்கினான். “நீ எவ்வளவு நல்லவ, ஊர்மிளா! ஒரு பொண்ணுக்கு இரங்கணும்கிறதுக்காக அப்படிச் சொல்றியா, இல்லே…”

அவன் முடிக்காமல் இழுத்த போது அவள் குறுக்கிட்டாள் : “ஒரு பொண்ணோட வாழ்க்கை மட்டுந்தான் இதிலே சம்பந்தப்பட்டிருக்கா, என்ன! உங்க நண்பர் – அவர் ஒரு ஆம்பளைதானே? – அவரோட வாழ்க்கையும்தானே இதிலே சம்பந்தப்ப்ட்டிருக்கு? ரெண்டு பேரோட நிம்மதியும் அதிலே அடங்கி யிருக்கும் போது ஏன் பொண்ணோடதைப் பத்தி மட்டும் பேசுறீங்க?”

“நல்லாப் பேசுறியே! … சும்மா உன்னைச் சீண்டிப் பார்த்தேன்… உன்னை மனைவியா அடைஞ்ச நான் உண்மையிலே பாக்கியசாலி!”

“நாம ரெண்டு பேருமே பாக்கியசாலிங்கதாங்க!”

“ஆமாமா…”

சற்றுப் பொறுத்து, “அப்பப்ப ஓட்டல் சாப்பாடும் சாப்பிடறீங்க தானே? இல்லே தினமும் நீங்களே ஏதாச்சும் சின்னதா சமையல் பண்ணிக்கிறீங்களா?”

“முடிஞ்சப்ப பண்ணிக்கிறேன். மத்த நாள்கள்லே ஓட்டல்தான். அதுலேயும் ராத்திரி டிஃபன் கண்டிப்பா ஓட்டல்லதான்….அங்க எனக்கு ஒரு புது சிநேகிதப் பையன் கிடைச்சிருக்கான். ப்ளஸ் டூ படிச்சுட்டு, வேற வேலை கிடைக்காததுனால அங்க செர்வெரா இப்போதைக்கு இருந்திண்டிருக்கான். நல்ல பையன். ஆனா ஏழை. ரெண்டு தங்கைங்க இருக்காங்க கல்யாணத்துக்கு. அப்பா இல்லே. குடிச்சுக் குடிச்சே உடம்பைக் கெடுத்துண்டு செத்துப் போனாராம். அம்மா இருக்காங்க. ரெண்டு தங்கைகளையும் எப்படித்தான் கரையேத்தப் போறேனோன்னு கவலைப் பட்றான். அதான் எனக்கும் கவலையா யிருக்கு.”

“உங்களூக்கு என்னத்துக்குங்க ஊரான் வீட்டுக் கவலை யெல்லாம்? நீங்க உருகுறதைப் பார்த்தா அந்தப் பொண்ணுங்கள்லே ஒண்ணைச் சின்ன வீடா செட்-அப் பண்ணிடுவீங்களோன்னு எனக்கு சந்தேகம் வருது.”

“பிள்ளைத்தாய்ச்சிப் பொண்ணுன்னு கூடப் பார்க்காம அறையலாம் போல இருக்கு. என்ன அசட்டுப் பேச்சு இது!”

சேதுரத்தினத்துக்கு உண்மையாகவே ஆத்திரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட ஊர்மிளா, “சாரிங்க. விளையாட்டுக்குச் சொன்னேன்,” என்றாள்.

“இதிலே எல்லாம் என்ன விளையாட்டு?”

“அதான் சாரி சொல்லிட்டேனில்லே?”

“சரி, சரி. விடு…”

“அந்தப் பொண்ணுகளுக்குக் கல்யாணம் திகைஞ்சு வர்றப்ப நாம சில ஆயிரங்களாவது குடுக்கலாங்க. பாவம்!”

“உனக்கு எவ்வளவு நல்ல மனசு, ஊர்மிளா! இது மாதிரி பேசுறதை விட்டுட்டு அசட்டுத்தனமா ஜோக் அடிக்கிறியே!”

“ஜோக்கை ரசிக்கிறதுக்கும் ஒரு ரசனை வேணும்ங்க.”

“இது மாதிரி ஜோக்குகளை யெல்லாம் ரசிக்கிறது ஒரு ரசனைன்னா அந்த ரசனையில இடி விழ!”

அவள் சிரித்தாள். …

… மதுரையில் அலுவலகப் பணிகளை முடித்த பின்னர், ரங்கனுக்கு வாக்களித்திருந்தபடி வத்தலப்பளையத்துக்கு போய்த் திரும்பினான்.

வந்த அன்றே அலுவலகத்தில் சாப்பாட்டு நேரத்தில், ரங்கனிடம், “உனக்கு வந்த மொட்டைக் கடிதத்துல இருந்த தெல்லாம் அண்டப் புளுகுப்பா. அப்படி யெல்லாம் எதுவுமே கிடையாது. நான் சொன்னதுதான் உண்மை. லலிதாமேல ஆசைப்பட்டு அவங்க சம்மதிக்காததுனால வந்த ஆத்திரத்துல எவனோ கிளப்பிவிட்ட புரளிப்பா அது. நம்பாதே. அதை அப்படியே மறந்துடு, ரங்கா. வீணா மனசைப் போட்டு உழப்பிக்காதே.. என்ன?” என்று அவன் இரகசியக் குரலில் சொன்ன போது ரங்கனின் முகத்தில் நிம்மதிப் புன்னகை மலர்ந்ததைக் கவனித்த சேதுரத்தினமும் நிம்மதியுற்றான்.

“தேங்க்ஸ், சேது. இப்பதான் எனக்கு நிம்மதியாச்சு….” என்று கூறிவிட்டு ரங்கன் புன்னகை புரிந்தான்.

அப்போது தலைமை எழுத்தர், “சேது! உனக்கு ஃபோன்ப்பா!” என்று குரல் கொடுத்தார்.

சாப்பிட்டு முடித்திருந்த சேது சம்புடத்திலேயே கையைக் கழுவிய பிறகு மேசையை நெருங்கினான்.

”ஃபோன் எங்கேருந்து, சார்? கோயமுத்தூர்லேருந்தா?”

“நான் கேக்கல்லேப்பா!”

சேதுரத்தினம் ஒலிவாங்கியைக் காதில் பொருத்தி, “ஹல்லோ! சேது பேசறேன்… யாருங்க?” என்றான்.

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *