வாழ்க்கை ஒரு வானவில் 16

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

 

சேதுரத்தினத்துக்குஒன்றும் விளங்கவில்லை. எனினும் ராமரத்தினம் கேட்டுக்கொண்டபடியே எதுவும் பேசாமலும், கேள்வி எதுவும் கேட்காமலும் அவனோடு நடந்தான். ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும்புரிந்தது. அந்த இரண்டு மனிதர்களையும் தாங்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்என்பது.

“எம்புட்டுப்பணம்டா கிடைச்சிச்சு?”

“ரெண்டுபவுன் போக ரெண்டு பவுன்தானே பாக்கி இருந்திச்சு? லீலாராம் சேட்டு பத்தாயிரம்குடுத்தான். பழகின சேட்டா இருந்ததாலே அம்புட்டுக் குடுத்தான்…”

“அல்லாத்தையும்இன்னாடா பண்ணினே?”

“ரெண்டுஒய்ன் ஷாப்ல எட்டாயிரம் கடன் இருந்திச்சில்லே? அத்த அடச்சேன். ஒரு ஆயிரம்செலவளிஞ்சு போயிடிச்சு. மீதி ஆயிரம் இருக்கு.”

ராமரத்தினம், “சேது சார்! ரெண்டு பேர்ல உசரமா பரட்டைத்தலையோட இருக்கிற ஆளைக் கவனிச்சுவெச்சுக்குங்க. விஷயமெல்லாம் அப்புறம் சொல்றேன். … கொஞ்சம் வேகமா நடந்துஅவங்களைத் தாண்டிப் போய்த் தற்செயாலாத் திரும்புற மாதிரி திரும்பி நல்லாப் பார்த்துவெச்சுக்கணும் அவங்க ரெண்டு பேரையும்….இன்னும் சொல்லப் போனா அவங்களை ஃபாலோபண்ணிப் போய்த்தான் அவங்க யாரு, என்னன்ற சங்கதியை யெல்லாம் கண்டுபிடிக்கணும்….” என்றான் கிசுகிசுப்பாய்.

இருவரும்அப்படியே அவர்களைக் கடந்து சென்று நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார்கள்.

“சேதுசார்! எல்லா விவரமும் அப்புறம் சொல்றேன். எவ்வளவு நேரமானாலும் இவங்களை ஃபாலோபண்ணிண்டு போய் இவங்க இருப்பிடத்தைக் கண்டு பிடிச்சே ஆகணும்…”

“செஞ்சுடலாம்…”

இருவரும்மெல்ல நடந்தார்கள். பரட்டைத் தலையனும் மற்றவனும் தங்களைக் கடந்து சென்ற பின்அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். இருவரில் வழுக்கைத் தலையனாக இருந்தவன் பாதிவழியில்பிரிந்து சென்றதன் பின் பரட்டைத் தலையனை இருவரும் பின்தொடர்ந்தனர்.

பரட்டைத்தலையன் பேருந்து நிறுத்தத்தை யடைந்து நின்றான். இவர்களும் நின்றார்கள். சற்றுப்பொறுத்து வந்த 25 ஆம் இலக்கமிட்ட பேருந்தில் அவன் ஏறினான். இவர்களும் ஏறி, அவன்எங்கு இறங்குவான் என்பது தெரியாத நிலையில், கடை நிறுத்தத்துக்குப் பயணச் சீட்டுஎடுத்தார்கள்.

இவர்கள்வாங்கிய பிறகே அவன் ஸ்டெர்லிங் ரோடு நிறுத்தத்துக்குச் சீட்டு வாங்கினான். இருவரும்அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டார்கள்.

ஸ்டெர்லிங்ரோடு நிறுத்தத்தில் அவன் இறங்கினான். அவர்களும் இறங்கி அவனுக்குப் பின்னால் சற்றேஇடைவெளி விட்டு நடந்தார்கள். நேர்ப்பாதையில் சிறிது தொலைவு நடந்த பிறகு அந்த ஆள்ஒரு குறுக்குச் சந்தினுள் புகுந்து நடந்தான். இரண்டாம் குறுக்குச் சந்து என்றுதெருமுனை அறிவித்தது. சந்தின் கோடியில் இருந்த ஒரு குடிசை வீட்டின் கதவைத்திறந்துகொண்டு அவன் உள்ளே போனான்.

இருவரும்எதிரே நடைபாதையில் நின்று அந்த வீட்டைக் கவனித்தார்கள். மிகச் சிறிய வீடு அது.கடைசி வீடாக இருந்ததால், தெருவில் நடப்பவர்கள் போல் வீட்டை இருவரும் சுற்றினார்கள்.ஒளிந்திருந்து வீட்டுக்குள் கவனித்ததில் அவன் மட்டுமே அதில் இருந்தது தெரிந்தது.ஒருவேளை குடும்பம் இல்லாதவனாக இருக்கக்கூடும்; அல்லது குடும்பத்தினர் வெளியூர்சென்றிருக்கலாம் என்று நினைத்தார்கள். ஒரே ஓர் அறையும் ஒரு சிறு கூடமும் மட்டுமேஅடங்கிய வீடு அது என்று கண்டார்கள். கூடத்தின் ஓர் ஓரத்தில் தகரக் கதவுடன் தென்பட்டசிறு தடுப்பறை கழிப்பறையாக இருக்கலாம் என்று ஊகித்தார்கள்.

சற்றுப்பொறுத்து அவன் அவ்வறைக்கதவைத் தள்ளிவிட்டு நுழைந்த போது அது கழிப்பறைதான் என்றுகண்டார்கள்.

“சேதுசார்! நான் சந்தேகப்பட்ட ஆள் இவன் தானான்கிறதை முதல்ல கண்டு பிடிக்கணும். வாங்கபோகலாம். எல்லாம் விவரமாச் சொல்றேன்…”

இருவரும்தெருவுக்கு வந்து நடக்கத் தொடங்கினார்கள்.

“உங்கம்மாஇன்னைக்கு ரொம்ப கவலைப்படப் போறாங்க. ரொம்பவே லேட்டாயிடுத்து.”

“ஆமா, சேது சார். ஆனா என்ன பண்றது…? உங்க கிட்ட எப்படிச் சொல்றதுன்னே தெரியல்லே. என்பெரிய தங்கை விஷயம் ஒரு விதமான கவலைன்னா, சின்னத் தங்கை பத்தின கவலை அதை விட மோசம்.அவ விஷயம் விபரீதமாயிடுத்து, சேது சார்.”

“என்னஆச்சு, ராமு?”

கோமதிகோவிலில் வன்னுகர்வு செய்யப்பட்ட சேதியை ராமரத்தினம் அவனுக்குச் சொல்லிவிட்டுக்கண்கலங்கினான்.

“கோமதிஅவனோட போராடினப்போ, அவன் கழுத்துச் சங்கிலி அறுந்து ஒரு சாண் போல அவ கையிலசிக்கிடுத்து. அதைப் பத்திரமா எங்கிட்ட குடுத்தா. தன்னைக் கெடுத்தவனோட தலைமுடிபரட்டையா இருந்ததுன்னும் ரொம்ப உயரமா யிருந்தான்னும் சொன்னா. அவன் காதுல கடுக்கன்போட்ட துளை இருததுன்னு சொன்னா. கும்பிருட்டானதுனால வேற எதுவும் தெரியல்லேன்னும்சொன்னா. நாம இப்ப பார்த்த அந்த ஆள் கிட்ட இந்த அடையாளங்கள் பொருந்தி யிருந்ததாலதான்அவங்களை ஃபாலோ பண்ணலாம்னு சொன்னேன்.”

“அப்படிஇன்னொரு ஆள் இருக்க மாட்டானா என்ன? அதை மட்டும் வெச்சு எப்படி நீ…”

“இருங்க, சேது சார். நான் அவசரப்பட்டு அது மாதிரி சந்தேகப்படல்லே. நாம பீச்ல உக்காந்துபேசிட்டிருந்தப்ப நீங்க ஒண்ணைக கவனிக்கல்லே. `என் சங்கிலியையும் பிடிச்சுஅறுத்துடிச்சு. பாதிச் சங்கிலி அதுங்கையில…’அப்படின்னு அவன் சொன்னது என் காதுலதுல்லியமா விழுந்தது….அதுக்கு அப்புறந்தான் அவனை நல்லா கவனிச்சேன்…”

“அப்ப, நீ ஊகிக்கிறது சரியா இருக்கலாம். இருந்தாலும் இன்னும் சில சோதனைகள் செஞ்சு இவன்அவன் தானான்னு நிச்சயப் படுத்திக்கணும்.”

“லீலாராம்சேட்ங்கிறவரு எங்க தெருவிலதான் அடகுக்கடை வெச்சிருக்காரு. அநேகமா அந்தக்கடையாத்தான் இருக்கும். போய் விசாரிச்சா உண்மை தெரிஞ்சுடும் .”

“சேட்டுசொல்லணுமே!”

“எனக்குத்தெரிஞ்ச் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தன் இருக்கான். அவனோட போய் மிரட்டி விசாரிச்சாசொல்லிடுவான்.”

“நல்லயோசனை. அப்படியே பண்ணிப் பார்க்கலாம். ஆனா எத்தனையோ லீலாராம் சேட்டுங்கஇருக்கலாமே?”

“இந்தரவுடி எங்க பேட்டையிலதான் இருக்கான்னு தோணுது. அதனால அடகுக் கடையும் அதேபேட்டையாத்தான் இருக்கணும்…. இன்னும் கொஞ்ச தூரத்துல தான் சார் எங்க வீடுஇருக்கு. ஒரு நடை வந்துட்டுப் போங்களேன்.”

“ராத்திரியாறதே, ராமு?”

“அதனாலஎன்ன, சேது சார்? ரெண்டே நிமிஷம் இருந்துட்டுப் போயிடலாம் . உங்களை எங்ககுடும்பத்தாருக்கு அறிமுகம் செஞ்சு வெச்சாப்லயும் இருக்கும்…”

“சரிப்பா.உன்னிஷ்டம்.”

“இப்பவிட்டா அப்புறம் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கிறதுக்கு நாளாகும், சார்…. ஆனாஒண்ணு. மறந்தும் ஓட்டல் பத்தி பேசிடாதீங்க.”

சேதுரத்தினம்சிரித்தான்.

“அப்புறம்…இப்ப எனக்கு வேற ஐடியா தோணுது, சார். அந்த கான்ஸ்டபிளைக் கூட்டிட்டுப் போறதுக்குப்பதில் நீங்களும் நானுமே போய் அந்த லீலாராம் சேட்டை விசாரிக்கலாம்னு தோணுது.சி.ஐ.டின்னு சொல்லலாம். கான்ஸ்டபிள்னா அவனும் இல்லாத பொல்லாத கேள்வியெல்லாம்கேப்பான். எதுக்கு சார் வம்பு?”

“நீசொல்றதும் சரிதான், ராமு…ஆனா உன்னோட லொகேலிட்டியில இருக்கிற சேட்டு உன்னைஅடையாளம் கண்டுப்பானே?”

“அதுஎனக்குத் தோணல்லே. கெட்-அப்பை மாத்திக்கிறேன். என்னோட என்.சி.சி. ட்ரெஸ் இருக்குசார். அதைப் போட்டுண்டு ஒரு கூலிங் க்ளாஸையும் மாட்டிண்டா போச்சு.”

“ஐடியா…”

இருவரும்நடந்தார்கள்.

“என்னடா, ராஜா, வர வர ரொம்ப லேட் பண்றே?” என்றவாறு கதவு திறந்த பருவதம், அவனுக்குப் பின்னால்நின்றிருந்த சேதுரத்தினத்தைப் பார்த்ததும் கொஞ்சம் அசடு வழிந்தாள்.

“என்னோடஎங்க ஆஃபீஸ்ல வேலை பண்றவர்ம்மா. சேதுரத்தினம்னு பேரு…. வாங்க, சார்…இந்தப்பக்கம் வர வேண்டிய ஜோலி அவருக்கு இருந்தது… அதான் அப்படியே கூட்டிண்டுவந்தேன்…. வாங்க, சார்.”

“வாங்க, தம்பி. உக்காருங்க.”

பருவதம்விரித்த பாயில் இருவரும் உட்கார்ந்தார்கள்.

ராமரத்தினம்தன் அம்மாவையும் தங்கைகளையும் அவனுக்கு அறிமுகப்படுத்தினான்.

“காப்பிபோடும்மா…”

“இதுகாப்பி சாப்பிடுற நேரமா? தண்ணி குடுங்க. போதும்.”

“அப்பமோர் குடிங்க. ராத்திரி நல்லா துக்கம் வரும்,” என்ற பருவதம் உள்ளே போய் ஒருகுவளையில் மோர் கொண்டுவந்து கொடுத்தாள். சேதுரத்தினம் பிகு பண்ணாமல் வாங்கிக்குடித்தான்.

“இன்னொருநாள் சாவகாசமா வாங்க, தம்பி.”

“ஆகட்டும்…அப்ப நான் வரட்டுமா?” என்ற சேதுரத்தினம் எல்லாரையும் நோக்கித் தலையசைத்து விடைபெற்றான்.

… மறு நாள் மாலை இருவரும் லீலாராம் சேட்டின் அடகுக்கடையை அடைந்தார்கள். ஏற்கெனவேதிட்டமிட்டிருந்தபடி ராமரத்தினம் ஓட்டலிலிருந்து என்.சி.சி. சீருடையில் கிளம்பிஇருந்தான்.

லீலாராம்தலை உயர்த்தி அவர்களைப் பார்த்தான் : “என்ன ஓணும்?”

“நாங்கசி.ஐ.டி. பயப்படாதீங்க சேட்ஜி. ஒரு சின்ன தகவல் வேணும். அதைச் சொன்னீங்கன்னா நாங்கபோய்ட்டே இருப்போம். உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது…இத பாருங்க. இந்தச்சங்கிலியோட இன்னொரு பாதியை உங்ககிட்ட கொண்டுவந்து ஒருத்தர் வித்ததாத் தெரியவந்திச்சு. அதை நாங்க பாக்கணும். அந்த ஆளோட விலாசமும் வேணும். வேற எதுவும் வேணாம்.அந்தச் சங்கிலியை நீங்களே வெச்சுக்குங்க. காசு குடுத்திருக்கீங்கல்ல? ஆனா பின்னாடிஅந்தப் பணத்தை வாங்கிட்டு அதை நீங்க திருப்பிக் குடுக்க வேண்டி யிருக்கலாம். அதனாலஅதை பத்திரமா வெச்சிருங்க…”

ராமரத்தினம்நீட்டிய சங்கிலியை வாங்கிப் பார்த்த லீலாராம் தன் பெட்டியைத் திறந்து அதன் மறுபாதியை எடுத்து மறு பேச்சுப் பேசாமல் அவனிடம் கொடுத்தான்.

“அதேதான், சார்…”

“ஆமா…சரி.வெச்சுக்குங்க. ஆனா அந்தாளோட அட்ரெஸ் வேணும்.”

“அந்தாளுமுரடன் மாதிரி இருந்தாங்க. என்னை அவன் கிட்ட காட்டிக் குடுத்துட மாட்டீங்களே?”

“இல்லே, சேட்ஜி. பயப்படாதீங்க…”

லீலாராம்தன் பெரிய பேரேட்டைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “இதோ இருக்கு. நீங்களே பாத்துஎளுதிக்கிங்க. என் கையெளுத்துல வேணாம்…” என்று சொல்ல ராமரத்தினம் அதைப்பார்த்துவிட்டு, “அவன் பேரு முத்துவாம் சார். அதே விலாசம்தான் …” என்றான்.

“எழுதிக்கத்தேவை யில்லே. எங்களுக்கே தெரிஞ்ச விலாசம்தான்,” என்றான் சேதுரத்தினம்.லீலாராமுக்குத் தைரியம் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டார்கள்.

வழியில், “நாளைக்கு ஒரு நடை அந்தாளோட வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன், சேதுசார்.”

“பார்த்துஎன்ன செய்யறதா இருக்கே, ராமு?” என்று சேதுரத்தினம் வியப்புடன் வினவினான்.

“சொல்றேன்.உங்க கிட்ட சொல்லாம நான் எதுவுமே செய்ய மாட்டேன். உங்க உதவி கூட எனக்குத்தேவைப்படும், சேது சார்!” என்று ராமரத்தினம் பதில் சொன்னான்.

சேதுரத்தினம்திகைப்புடன் அவனைப் பார்த்தாரன்.

(தொடரும்)

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *