வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”

author
0 minutes, 7 seconds Read
This entry is part 30 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

                    Mr.Jeyarama Sarma                              எம்.ஜெயராமசர்மா மெல்பேண்

 

       நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள்கதைகள் எழுதினார்.கட்டுரைகள் எழுதினார் விமர்சனங்கள் எழுதினார்.நாவலும் எழுதினார்.   செய்திகளையும் தொகுத்து எழுதிவந்துள்ளார்.

  

 

 

 

( எம்.ஜெயராமசர்மா)

இப்பொழுது எங்களுக்காக தமிழிலே புதிய ஒரு வடிவத்தில் தனது எழு த்தைத் தந்திருக்கிறார்.   அந்த முயற்சிதான் ” சொல்லமறந்த கதைகள்.

     இவை கதையா? கட்டுரையா?விபரத்தொகுப்பா?அல்லது சுயசரிதையா? எங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறார் முருகபூபதி.

 வாசிப்பவர்களுக்கு பல தலைப்புகளின் கீழுள்ள விஷயங்கள் நல்ல ஒரு கதையாகவே தெரியும்.சிலவற்றை வாசிக்கும் பொழுது நேரே இருந்து பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்படும்.சிலவற்றை வாசிக்கும் பொழுது முருகபூபதி இப்படியெல்லாம் இருந்தாரா? என எம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும்.என்ன… நான் உங்களை திகைக்க வைக்கிறேன் என நினைக்கிறீர்களா? அவரின் படைப்புக்களை வாசித்தால் உங்களுக்கே அது புரிந்துவிடும்.

     எங்களிடமும் பலகதைகள்இருந்திருக்கும்.ஒருசிலவற்றை உறவினருக்கும், ஒருசிலவற்றைநண்பர்களுக்கும், சொல்லி இருப்போம்.சிலவற்றைச் சொல்லாமலும் விட்டிருப்போம்.அப்படிச் சொல்ல மறந்தவைகள் சிலவேளை முக்கியமானதாகவும் யாவரும் அறியவேண்டியதாகவும் கூட இருக்கலாம் அல்லவா?

       சில சம்பவங்கள் நம்மையும் பாதித்திருக்கும்.நாம் வாழ்ந்த இடத்தையும் பாதித்திருக்கும்.ஏன்… நமது உறவுகளை, நட்புகளையும் கூடப்பபாதித்து இருக்கும்.அவைகள் எம்மனத்துள் இறுகிப்போய்கூட இருக்கலாம் அல்லவா? அவற்றை நம்மளவில் வைத்துக் கொள்வதைவிட  மற்றவர்களுக்கும் எடுத்துச் சொன்னால் அது ஒரு நல்ல செயற்பாடாக அமையும்தானே!அந்த நல்ல கைங் கரியத்தினையே ” சொல்லமறந்த கதைகள் ஆக்கிஎமக்குத் தந்திருக்கிறார் முருகபூபதி.

     நாடுபற்றியும், வீடுபற்றியும், தொழில்பற்றியும், நட்புப்பற்றியும், இலக்கியம் பற்றியும், சொல்லியிருக்கின்றார்.ஆனால் சொல்லும் பொழுது.. அவை செய்தியாகவோ, அறிக்கையாகவோ , இல்லாமல் … கூடவே கூட்டிச் சென்று கதை சொல்வதுபோல எழுதப்பட்டிருக்கிறது.இது முருகபூபதியின் எழுத்து ஆளுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

       அரசியலாகட்டும், இடப்பெயர்வாகட்டும், சில சம்பவங்களாகட்டும், யாவும் சுவைபட இலக்கியமாக்கித் தந்துள்ளார் பூபதி. இப்படி இலக்கியமாக்கி எழுத்தில் வடித்துத் தந்த முயற்சி தமிழுக்கு ஒரு காத்திரமான படைப்பென்றே கருதுகின்றேன்.எனவே முருகபூபதியை கட்டாயம் பாராட்டவே வேண்டும்.

       சொல்ல மறந்த கதைகளை ஆரம்பிக்கும் பொழுதே நம்பிக்கை ” என்பதே முதலில் எடுக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது.உலகத்திலே ஏதோ ஒன்றிலாவது நம்பிக்கை என்பது யாவருக்கும் இருக்கத்தான் செய்யும்.அதிலும் தங்களின் எதிர்காலம் குறித்து அவர்களுக்குள் பல சந்தேகங்கள் வந்தபடியே இருக்கும்.அதற்காக அரசன்முதல் ஆண்டிவரை ஆரூடத்தை நம்புவது என்பது இயல்பானதே!இந்த உளவியலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே

” நம்பிக்கை”.

அதில் வரும் மகாலிங்கம் சாத்திரியாரும் அவருக்கு பூபதி உதவியாளாக இருந்ததும், இலங்கையின் பிரபல அரசியல் தலைவர்களின்… ஆசைகளும், மிகவும் அருமையாக இதில் சொல்லப் படுகிறது. மகாலிங்கத்தை நாங்களும் ஒருதரமாகினும் பார்க்காமல் விட்டு விட்டோமே என்னும் ஏக்கமும் எங்கள் மனத்துள் எழச்செய்திருக்கும் விதமாக பூபதியின் கதை ஓட்டம் அமைந்திருக்கிறது எனலாம்.

கிண்டல்களும் கேலிகளும் இதில் அவ்வப்போது வந்தாலும் அவை யாவும் அர்த்தமுள்ளனவாகவே சொல்லப்பட்டிருக்கிறதை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

     ” எதிர்பாராதது” பூபதியின் வாழ்வில் வந்த பலதை இது சொல்கிறது. ரஷ்ஷியா சென்றதும், அங்கு நடந்த பல சம்பவங்களும் சுவைபடச் சொல்லப் படுகிறது.பூபதியின் விமானம் ஏறும் கனவு பூர்த்தியானதும் எதிர்பாராததே. மாஸ்க்கோவில் ரஷ்ஷிய வழிகாட்டிகள் சிங்களத்தில் பேசி அசத்தியதும் எதிர்

பாராததே.பல நாட்டவர்களைச் சந்தித்ததும் எதிர்பாராததே.இப்படிப்பல எதிர்பாராதது தன் வாழ்வில் வந்தது என்பதும் எதிர்பாராததுவில்சுவையாக வருகிறது

       இலங்கையில் இன்றளவும் பிரச்சினைக்குக் காரணமே அங்கு காணப்ப படும் மொழிக்கொள்கைதான். சிங்கள மொழியைத் தமிழர்களும் ,   தமிழ் மொழியைச் சிங்களவரும் படித்துவிடின் பிரச்சினைக்கே இடமில்லாமல் போய்விட்டி ருக்கலாம்.  ஆனால் – அது நடந்தபாடுதான் இல்லை. அப்படி நடக்கவைக்கவேண்டும் எனக் கனவுகண்ட ஒரு படித்த பக்குவமான பெளத்த துறவிதான் ரத்ன வன்ஸ தேரோ அவர்கள்.

       தமிழில் உரையாற்றியும் எழுதியும் அவர் தனது தமிழ்ப் புலமை யை சிங்களவர் மத்தியிலும் தமிழர் மத்தியிலும் காட்டியுள்ளார் என்னும் செய்தியை முருகபூபதி ‘ காவிஉடைக்குள் ஒரு காவியம் ‘ மூலமாகக் காட்டி நிற்கின்றார். இப்படியும் பெளத்த துறவிகள் இருந்திருக்கிறார்கள் என்னும் செய்தி இன்றைய பிக்குகளுக்கும், துவேஷ அரசியல் வாதிகளுக்கும் ஒரு நல்ல பாடத்தைப் போதிக்குமல்லவா?

   ” ஒரு இனத்தையோ மொழியையோ அடிமைப்படுத்தி வேறு இனமோ மொழியோ சுபீட்சம் பெறமுடியாது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனநாயகத்தீர்வு காணப்படல் வேண்டும். அப்பொழுதுதான் இலங்கை யில் தேசிய ஒருமைப் பாட்டை ஏற்படுத்த முடியும்” என்று சிங்கள மக்கள் மத்தியிலே ரத்னவன்ஸ தேரர் தமிழில் உரை நிகழ்த்தியுள்ளார் என்று பூபதி காட்டுவது யாவருக்கும் நல்ல ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தெளிவு இல்லாமைதான் தொடர்கிறது.

       கொழும்பு என்றவுடன் யாவருக்கும் நினைவில் நிற்பது காலிமுகம்தான். காதலர் கூடுவதும் , களிப்புடன் இருப்பதும் அங்குதான். அது அன்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது. அது தொடர்கதைதான்.   இது சாதாரணமாக எங்களால் மட்டும் எடுத்துக்கொள்ளப்படக்கூடிய விஷயம் என்பது பூபதி அவர்களுக்கும் தெரியும்.

ஆதலால் அதனையும் மறவாது குடையுள் பெய்யும் குதூகலத்தை மட்டும் சொல்லுவதோடு நின்றுவிடவில்லை. இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த எளிமையான மனிதரான தஹாநாயகாவையும் இணைத்து ‘காலி முகம்’ காட்டியிருப்பதுதான் முருகபூபதியின் இலக்கிய உள்ளம் எனலாம். இளகிய உள்ளமும் எனலாம்.

‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்’ … என்னும் ஐயன் வரிகளை ஞாபகப் படுத்தும் வகையில் அமைந்ததுதான் “கண்ணுக்குள் சகோதரி”. சிங்களச் சகோதரி. சிங்கள இராணுவச்சிப்பாய்கள், இவர்களிடமும் ஈவு இரக்கம் இருக்கிறது. கருணைக்கு மொழி, இனம், மதம், கிடையாது என்பதை மிகவும் நயமாக எடுத்துச்சொல்லும் சித்திரம்தான் ” கண்ணுக்குள் சகோதரி”.

தமிழிலே பேசினால், தமிழன் என்று தெரிந்துவிட்டால் தமிழன் பிறந்த இலங்கையிலேயே    மரண பயம்தான்.   இதற்கு யார் காரணம்? என்பதை கடவு ளைத்தவிர யாருக்கும் தெரியாது.   சிங்களவர்களும் தமிழர்களும் மோதிக் கொள்ளும்    தருணங்களில் தமிழருக்கு உயிராபத்து  என்பது சாதாரணம். அதே வேளை சிங்களவர்களும் சிங்களவர்களும் முறுகி    நிற்கும் பொழுது தமிழர்  தப்பிக்க வழி  ஏற்படும்.  அப்படி  ஒரு நிகழ்ச்சிதான் ” உயிர்ப்பிச்சை ” மூலம் சொல்லப்படுகிறது.   ஜே. வி .பி. காலக் கெடுபிடியில் பூபதி அவர்களின் வாழ்க்கையில்  ஏற்பட்ட    உயிர்போகும் வரை வந்த  ஆபத்தை அரசியல் பின்னணி யுடன் மிகவும்    சுவாரசியாமாகச்    சொல்ல  வந்ததுதான் “உயிப்பிச்சை” . தமிழன்  என்றால்  ஆபத்து என்பது    போய் …. தமிழ்பேசி தமிழன்  என இனம்    காணப்பட்ட தால்    உயிப்பிச்சை கிடைத்தது  என்று பூபதி    சொல்லுவது    நல்ல  நயம்.

எங்களின் சின்ன வயதில் பல சிக்கல்களில்  மாட்டியிருப்போம்.   அவை சிறிய தாகவும்    பெரியதாகவும் ஏன்   சிலவேளை    ஆபத்தானதாகவும் கூட இருந்திருக்கலாம்.   அப்படி    நடந்த    சிறியவயது சம்பவம்    ” கண்டம் ” ஆக வருகிறது.    அக்கா, தம்பி,   நண்பர்களுடன்   கடற்கரையில் நாங்களும் விளையாடி இருப்போம்.   ஆனால்  பூபதி விளையாடி  அது    விபரீதமாகப் போனதை    ” கண்டம் ”   சொல்லுகிறது.   கண்டத்துள் … அவரின் கவலைகளும்    சேர்ந்து    விடுகின்றன.

நாங்களாவது   நீந்தக் கற்றுக்கொள்வோம்.

முருகபூபதியின் அரசியல்  உறவுகள் பற்றியும், அதனூடாக் பெற்ற அனுபவம்    பற்றியும்,   அதிலிருந்து    விடுபட்ட விதம்  பற்றியும், மனம்திறந்து காட்டுவதுதான் ” விபத்து”.   எத்தனை அரசியல் தலைவர்களோடு   பூபதி  பழகி இருந்திருக்கிறார்    என்பதை வாசிக்கும் பொழுது   முருகபூபதியை   சாதாரணமாக    எடைபோட முடியாது  என்ற சிந்தனையே    ஏற்பட்டது.    தேர்தல்   பிரசாரத் தின் பொழுது வாகனத்தில் விபத்துக்குள்ளான    சிறுவனை கவனிப்பதில் இருந்தும் அவர்   தவறவில்லை.     அதே வேளை இடம்பெயர்ந்து    யாழ்ப்பாணம்  சென்றதும் அவரின்    மனதில்  அவருக்கே தெரியாத  ஒரு   மாற்றம்.  சிறுவன் வீதியில் விபத்துக்கு   ஆளானான்.   பூபதி  அரசியல்   விபத்தில் சிக்குண்டார்.   பின்பு அதிலிருந்து   மீண்டதாக    மிகவும்    நாசூக்காக    விபத்தைத் தந்துள்ளார்.

” தமிழ்மூவேந்தர்களும் ருஷிய மன்னர்களும்” … ரஷ்ஷிய அனுபவம் பற்றியதாகும்.ரஷ்ஷியத் தமிழறிஞரான பூர்ணிகாவை சந்தித்ததும் அவரால் இலங்கையில் சோவியத்தூதரகத்தில் தமிழ் தெரிந்த ரஷ்ஷிய அதிகாரியைச் சந்தித்து வீரகேசரிக்காக பேட்டி எடுத்தும் ..கடைசி வேளையில் பிரசுரிக்கப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டதும் சுவைபட இதில் வருகிறது. “தமிழ் பேசும் அதிகாரி தூதுவராலயத்தில் இருப்பது இலங்கைஅரசாங்கத்துக்கு தெரியக் கூடாது ” இதுதான் பேட்டியைத் தடை செய்யக்காரணமாக இருந்ததாம்.   பூபதியின் மனம் படும் வேதனை இதில் இழையோடுகிறது.

பத்திரிகைத்துறை என்பது பஞ்சு மெத்தையல்ல.அங்கே வேலைசெய்வது என்பது கம்பியில் நடப்பது போன்றது.அதுவும் இலங்கை சற்று பாரதூரமானது என்பதை “அநாமதேய  தொலைபேசி அழைப்பு ” விபரிக்கிறது.

பூபதியின் தர்மாவேசம்தான் ” வீணாகிபோன வேண்டுகோள் ” ஆகும். ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யப்போவது யாவரதும் நம்பிக்கையாகும்.அந்தப் பிரார்த்தனைக்குப் போனவர்களுக்கே பிரச்சினை என்றுவரும்பொழுது யாரை நோவது? யாரிடம்தான் முறையிடுவது? அப்படியான ஒரு சம்பவம்தான் இங்கே சொல்லப்படுகிறது. மடுத்திருப்பதிக்கு வாகனத்தை பிரார்த்தனைக்கு எடுத்துச்சொன்றவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.

அவர்களை இழந்த குடும்பத்தார் இறைவனிடம் எத்தனையோ வேண்டுகோள்களை மனமுருக வைத்த போதும் காணாமல் போனவர்கள் போனவர்கள்தான்.பரிதவிக்கும் குடும்பமோ பூபதி வீட்டுக்கு பக்கத்து வீடு. அவர்கள் படும் சொல்லொணா துயரத்தை சொற்களால் பூபதி வடிக்கும் பொழுது நாங்களும் கூடவே சேர்ந்துவிடுகின்றோம்.

” லிபரேஷன் ஒபரேஷன் ” யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சியில் இருந்தவர்களுக்கே இதன் கோரதாண்டவம் பற்றித்தெரியும்.வட இலங்கையே அல்லோலகல்லோலப்பட்டது.அந்த அகோரதாண்டவம் பற்றியும் அதில் ஊடகத்துறையினர் எவ்வாறு இன்னலுடன் செயற்பட்டார்கள் என்பதையும் கண் முன்னே காண்பதுபோல எழுத்தால் வடித்திருப்பதுதான் ” லிபரேஷன் ஒபரேஷன்”.படித்தால் மனம் பதறும்.

சிங்களமக்கள் மத்தியில் தோன்றிய புரட்சியும், தமிழர் மத்தியில் தோன்றிய போராட்டப் புரட்சியும் அதன் தலைமைகளும் என்ன ஆனார்கள் என்பதை அரசியல் பின்புலத்துடன் அதேவேளை நல்லதோர் அணுகு முறையுடன் சொல்லிநிற்பதுதான் ” நிதானம் இழந்த தலைமை”.இதனைஎழுத்தில் வடிப்பதற்கு அசாத்திய துணிவு வேண்டும்.அது பூபதியுடன் கூடவே இருக்கிறது. அதனால்தான் எல்லாத் தலைமைகளிடமும் பழகிப் பேசும் பண்பும் வந்திருக்கிறது.

murugapoopathy 05

யாழ்.மண்ணில் இன்றும் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சம்பவங்கள் பல. அவைகள் மனத்துக்குள் இறுகிப்போய் கிடக்கின்றன.அந்த வடுக்கள், அந்த வேதனைகள், அந்த அவலங்கள் ஒரு வரலாறாகி நிற்கின்றன.பூபதி அதனை அனுபவித்து” வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை ” என்று எங்களுக்கெல்லாம் எழுத்தாக்கி விக்கலுடனும் விசும்பலுடனும் தந்துள்ளார்.குஞ்சி அம்மாவை எங்களுடன் கூட்டிக்கொண்டே வந்து விடுகிறார்.குஞ்சியம்மா அழுதால், அவஸ்த்தைப்பட்டால் நாமும் அவரோடு சேர்ந்து விடுகிறோம்.எங்களை பூபதி சேர்த்தே விடுகிறார். உண்மையை படம் பிடித்துக்காட்டி இருக்கும் ஒரு எழுத்துத்தான் ” வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை”.

‘ ரத்த திலகம் ‘ படம்பார்த்த ஞாபகத்தை மீண்டும் எனக்குள் கொண்டு வந்தது ” காத்திருப்பு – புதுவை நினைவுகள்”. நாயகனும் நாயகியும் ஒரே கல்லூரியில் படித்து ஒருவர்க்கொருவர் மனத்தை பரிமாறிக்கொண்டாலும் காலம் அவர்களை வேறு வேறு பாதைகளில் விட்டுவிடுகிறது.அப்படித்தான் புதுவையும் – பூபதியும்.புதுவையின் ஆற்றலின் மேலும், அவர்மீது கொண்ட நட்பின் மீதும் பூபதிக்கு இருக்கும் உறுதிப்பாடு இதில் சொல்லப்பட்டிருக்கிறது. “பசுமை நிறைந்த நினைவுகளை பாடித்திரிந்த பறவைகளே ” என்ற            பாடலைத்தான் ” காத்திருப்பு ” நினைவூட்டுகிறது.

” ஏரிக்கரைச் சிறைச்சாலை” பல ஏக்கங்களை வெளிப்படுத்துகின்றது. அதேவேளை பொங்கல், பூசனை, வழிபாடு யாவும்…. துயர் துடைக்கும் தொண்டுக்குள்தான் வரவேண்டும் என்ற கருத்தையும் தந்து நிற்கிறது. பூபதியின் தன்னார்வத்தொண்டுக்குத்தான் இந்த நடவடிக்கைகள் என்பதும் வெளிப்படை.வந்தவர்கள் வாழ்கிறார்கள்.வாழ நினைப்பவர்கள் வரமுடியாமல் உள்ளே இருக்கிறார்கள்.இந்த ஏக்கம் பூபதிக்கு உள்ளத்தில்.இதுதான் “ஏரிக்கரைச் சிறைச்சாலை”‘

எது சரி எது பிழை என்று வாதிடாமல் நடக்கும் சம்வங்களை நடந்த சம்பவங்களை மனத்திற் கொண்டு ” மனமாற்றமும் மதமாற்றமும் ” புனையப்பட்டிருக்கிறது.நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் உரியதாகும்.அதில் தலையிட்டு மற்றவரை குழப்புதல் பொருத்தமற்றதாகும்.   போர்ச்சூழலால் தாக்கப்பட்ட வைதீகக் குடும்பம் எப்படி மாறியது? என்பதையும், கேட்டும் உதவாத சமயத்தாரையும், கேளாமலே குழப்பவரும் சமயத்தாரையும்      நயம்படச் சொல்லுவதாக ” மனமாற்றமும் மதமாற்றமும் ” அமைகிறது. நிறைவில்    சொல்லப்பட்ட ” பகுத்தறிவுவாதிகளை பகுத்தறிவு காப்பாற்றட்டும்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கடவுள் காப்பாற்றட்டும்”. அருமையான வார்த்தைகள்.அதே நேரம் அனைவருக்கும் ஏற்ற வார்த்தைகள்.

விறு விறுப்பான துப்பறியும் படம் பார்ப்பது போன்று இருந்தது   “‘மரணதண்டணைத் தீர்ப்பு”.உண்மைச்சம்பவத்தை உயிர்த்துடிப்போடு எழுத்தில்    வடித்தமை    மிகவும் அற்புதம். பத்திரிகைத்துறையில்  இருந்த காரணத்தால்    வாசிப்பவர்களை    தன்வசப்படுத்தும்    எழுத்துக்  கலை கையில்    நிறைந்தே    காணப்படுகிறது.   சமரநாயகாவுக்கு    மரணதண்டனை எப்படியும்    கிடைக்க  வேண்டும்    என்றே யாவரதும்  எதிர்பார்ப்பும் இருந்திருக்கும்.  அந்த எதிர்பார்ப்பும்   எப்படியோ    முடிவில்    வந்ததுதான் துரோகத்துக்குக்  கிடைத்த பரிசு.

கல்லுக்குள்ளும் ஈரம் கசியும்.   பலவேளை  அது    தெரியாமலும் இருக்கும்.    கல்லு  என்று    எடைபோட்டுவிடாதீர்கள்.  ” மனிதம் ”    மூலமாக பல சம்பவங்களைக்காட்டி   ஈரம்    என்பது    எல்லோருள்ளும்,   எல்லா, இடத்திலும்    இருக்கும்.    சமயம்    வரும் பொழுது    அது தன்னை வெளிப்படுத்தும் .   அப்பொழுது    எமக் கெல்லாம் ஆச்சரியத்தை   ஏற்படுத்தும் என்று  ” மனிதம் ” வாயிலாக    பூபதி    காட்டுகின்றார்.   இது    அவரின்  நல்ல தேடலை    எமக்குக்  காட்டுகிறதல்லவா?

” பின்தொடரும் வியட்நாம்  தேவதை”   வாசித்தால் மனமெல்லாம் என்னவோ செய்யும்.    இப்படியும்  கொடுமைகள் நடந்தனவா?   ஆயுதங்கள் இன்னும்    உலகத்துக்குத்தேவையா?   ஆயுத  வியாபாரிகளே  உங்களுக்கு அன்பு    பற்றித்தெரியாதா?   அல்லது    அன்பையே அறுத்தெறிந்து விட்டீர்களா?   என்றுதான்    கேள்விமேல்    கேள்விகளாய் கேட்கத்தோன்றும்.வியட்நாமின்    கோரயுத்தத்திலிருந்து    உயிர்பிழைத்த ” கிம்புக்” உயிர்தெழுந்த    ஒரு   பறவைதான்.    அவளைப் போன்று கொடுமைக்கு ஆளானவர்கள்    ஈழத்தில் எத்தனை    பேர்?   ஈழம்   சந்தித்தித்த இடர்கள்தான்   எவ்வளவு?   இவை   அனைத்தையும்   முருக பூபதி  தார்மீகக் கோபத்துடன்   ” பின்தொடரும்   வியட்நாம்  தேவதை ”    கொண்டு    சொல்ல முனைகின்றார்.

நாங்கள்    நினைப்போம்.    மறந்துவிடுவோம்.   ஆனால் – முருகபூபதி மறக் காமல்   தனது    அனுபவங்களைச்    சொல்லுகிறார்.   ” சொல்ல  மறந்த கதைகள் ” வாசித்துவிட்டு    மூலையில் வைக்கக்கூடியதல்ல.   தனது சுய சரிதையை சொல்லாமல் சொல்லும்    உத்தியை இதில் அவர் கையாண்டுள்ளார்.   சுயசரிதைகள் பல    உலகவரலாற்றைச்    சொல்லி இருக்கின்றன.    இதற்குப்    பல உதாரண ங்கள்    இருக்கின்றன.    அவற்றை நான்    இங்கு   விபரிக்கவில்லை.   ஆனால் – ஒரு    சுயசரிதையை   இப்படியும் எழுதலாம்  என்று முருகபூபதி எங்களுக்கு கோடிட்டுக் காட்டி இருக்கிறார் என்றே எண்ணுகின்றேன்.

 

இதனைப்பார்த்துவிட்டு நீங்களும் கூட உங்களின் மறந்த கதைகளைச் சொல்லவந்தாலும் வருவீர்கள்.அப்படி வந்தால் அதற்கு வழிகாட்டி முருகபூபதி அவர்கள்தான்.முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ‘  எனக்கு தென்கச்சி சுவாமிநாதனைத்தான் நினைவில் கொண்டு வந்தது.    அவர்தனது  எழுத்தின் நிறைவில் ஒரு செய்தியை வைப்பார்.  அப்படி முருகபூபதியும்    நறுக்குத்தெறித்தாற் போல சில கருத்துக்களைத் தந்திருப்பது மிகவும் பயனுடயதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் அமைகின்றது.

தமிழுக்கு நல்லதொரு படைப்பை அளித்த எழுத்தாளர் முருகபூபதி மேலும் பல ஆக்கங்களை எமக்கெல்லாம் தரவேண்டும்.எனவே எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கி மகிழ்கின்றேன்.

 

Series Navigationதிரைதுறையும், அரசியலும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *