ஆனந்த் பவன் [நாடகம்] காட்சி-4

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

Picture -5a

 

 

இடம் ஆனந்தராவின் வீடு.

 

காலம்: முற்பகல் பதினோரு மணி.

 

பாத்திரங்கள்: ஆனந்தராவின் மனைவி கங்காபாய் (வயது 45 ராஜாமணி, சிறுமி ஒருத்தி.

 

(சூழ்நிலை: சீடைக்காகப் பிசைந்து வைத்திருந்த மாவை, சிறு சிறு அளவில் உருண்டையாக உருட்டிக் கொண்டிருக்கிறாள். கங்காபாய் ராஜாமணி வருகிற ஷூ ஓசை கேட்டு நிமிர்ந்து பார்க்கிறாள்)

 

 

ராஜாமணி: என்னம்மா சீடைக்கு மாவா? அடிசக்கை, எப்போ சுடப் போறே?

 

கங்காபாய்: என்னடாது, சீடை சாப்பிட்டு மாமாங்கம் ஆனவன் மாதிரி பறக்கிறே! போன மாதம்தானே சீடை டின் காலியாச்சு.

 

ராஜாமணி: நீ பண்ற சீடை காலியாகி, ஒரு மாதம் ‘கேப்’ விழுந்தா மாமாங்கம் மாதிரி தோணிப் போறதும்மா.

 

கங்காபாய்: அதிருக்கட்டும்! நீ ஏன் டிபன் சாப்பிட வரலே?

 

ராஜாமணி: இன்னிக்கு எங்க கிரிக்கெட் மேட்ச் நடக்கலேம்மா.

 

கங்காபாய்: என்னவாச்சு?

 

ராஜாமணி: ரெண்டு பயல்கள் கம்பி நீட்டிட்டாங்க. அதனாலே ஹோட்டலுக்குப் போய் அங்கயே பல் தேய்ச்சுக் குளிச்சி, ஒரு சேஞ்சுக்காக அங்கயே டிபன் சாப்டுட்டேன்.

 

கங்காபாய்: கோயம்பத்தூர்லேருந்து லெட்டர் வந்தது.

 

ராஜாமணி: சேது அண்ணாவா?

 

கங்காபாய்: ஆமாம்—

 

ராஜாமணி: என்னவாம்? பொண்டாட்டி பெருமையும் மாமனார் மகிமையும் தானே!

 

கங்காபாய்: டேய், அவன் உங்கண்ணாடா! கூடப் பொறந்தவன்! அந்த மதிப்பும் மரியாதையும் வையி.

 

ராஜாமணி: அதுக்கு மேல அவன் எழுதறதில்லே. அதைத்தானே சொன்னேன்! கல்யாணமான மறு மாசம் மாமானார் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போய்ச் சேர்ந்தா, வேறு என்ன தோணும்?

 

கங்காபாய்: போனா  என்ன? ஒருநாள்  திரும்பி வர மாட்டானோ? போனவனுக்கு வரவும் வழி தெரியும். புத்தியும் தெளியும். ரத்த பாசம் ரத்தாகாது.

 

ராஜாமணி: ஒனக்குப் பெற்ற பாசம்

 

கங்காபாய்: (ஒன்றும் பேசுவதில்லை)

 

ராஜாமணி: என்னம்மா எழுதியிருந்தான்?

 

(கங்காபாய் எண்ணெய்க் கிண்ணத்தைத் தூக்கி பொட்டென்று கீழே வைக்கிறாள்)

 

ராஜாமணி: சொல்ல மாட்டியா?

 

(கங்காபாய் தாம்பாளத்தை நகர்த்துகிறாள்)

 

ராஜாமணி: மௌன விரதமா? சரி இரு. நீ மௌன விரதம் இருந்தா, நான் உண்ணா விரதம் இருக்கேன்.

 

கங்காபாய்: (சிரிப்பு பீறிட) ஆமா, நீ பெரிய காந்தி! உண்ணாவிரதம் இருக்கப் போறே!

 

ராஜாமணி: ஏம்மா, நான் காந்தியாக மாட்டேனா? நீ மட்டும் மாட்டேன்னு சொல்லு. ஒரே வருஷத்திலே ஆயிக்காட்டிடறேன் பாரு.

 

கங்காபாய்: ஆவே! ஆவே! ஒரு வாரம் இருப்பே. அப்புறமா பிஸிபேளா ஹூளி ஏம்மா செய்ய லேண்ணு சத்தம் போடுவே!

 

ராஜாமணி: பெற்ற அன்னையே மகனைப் புறக்கணித்தால் உலகம் எப்படி மதிக்கப் போகிறது?

 

கங்காபாய்: போதும்டா டயலாக்கு! சினிமாவிலே சேர்ந்துரு. அதான் சரி.

 

ராஜாமணி: நான் சினிமாவிலே சேர்ந்துட்டா  டி.எஃப். ஓ ஆவது எப்படி?

 

கங்காபாய்: (பெருமூச்செறிந்து) நீ டி.எஃப்.ஓ. ஆயிடணும்னு துடிக்கிறே! சேதுவோ மாமனார் வீட்டு மாப்பிள்ளையா கோயம்பத்தூர்ல அவா ஹோட்டலைப்  பார்த்துண்டிருக்கான். அவருக்கோ ஒடம்பு தளர்ந்துண்டே  வர்றது. பதினெட்டு வருஷமா ராத்திரி பகல் பாராமே பிஸினஸை ஒரு பக்கம் கட்டிண்டு அழறார்.  நான் ஒருத்தி சீக்காளி. வாரத்துக்கு ரெண்டு நாள் எனக்கும் சமைச்சுப் போட்டுண்டு அழறார். அவர் சம்சார பாக்கியம் அப்படியிருக்கு.

 

(ராஜாமணி  ஊஞ்சல் மீது உட்கார்ந்து அதை லேசாக உந்தி விட்டுக் கொண்டே பேசுகிறான். அதன் கிறீச் கிறீச் ஒலி கேட்கிறது)

 

ராஜாமணி: என்னை என்னம்மா பண்ணச் சொல்றே?

 

கங்காபாய்: இப்படி ஹாய்யா ஊஞ்சல் ஆடிண்டு. ஹாயா கேள்வி கேட்கச் சொல்றேன். பண்றது என்னடா பண்றது. ஒனக்கும் வயசாயிடுத்து. காலா காலத்திலே ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. ஹோட்டலைப் பார்த்துக்கோ, ஒன் ஆமடையா வந்து வீட்டைப் பாத்து எங்க ரெண்டு பேருக்கும் ரெஸ்ட் குடு.

 

ராஜாமணி: ஓட்டலை என் தலையிலே கட்டறதுன்னு ஒங்களுக்குத் திட்டமிருந்தா என்னை ஏம்மா காலேஜ்லே சேர்த்தீங்க?

 

கங்காபாய்: காலேஜில படிச்சா என்னடா? போன வருஷம் பி.ஏ. பெய்ல் ஆன ஒருத்தன் சர்வரா வரலே?

 

ராஜாமணி: அப்ப பாஸ் பண்ணிட்டு நான் சர்வராயிடணுங்கறே?

 

கங்காபாய்: மூக்கு மேலே ரோஷம் வர்றதே! பிள்ளைகளை வளர்த்து அவர் அடைஞ்ச சொகம் என்னடா?

 

ராஜாமணி: நான் பெரிய ஆபீசராகப்பறம்னா அந்த சொகம் ஒங்களுக்குப் புரியப் போறது! வசதியான மாமனார் வீடு கெடைச்சா அதுவே சொக்கம்ணு நான் ஓடிட மாட்டேன்!

 

கங்காபாய்: அவந்தான் போய்ட்டான்! சொல்லிச் சொல்லிக் காட்டினா வந்துடப் போறதல்லே… அவனுக்கா தோணறப்போ வருவான். ஒங்க அப்பா அடிக்கடி சொல்வார். எனக்கு சேதுவும் ராஜாமணியும் மட்டும் பிள்ளை இல்லே; ஆனந்தபவனும் ஒரு பிள்ளை, இவாள்ளாம் இவா போற திக்குக்குப் போகட்டும். ஆனந்தபவன் நம்மைக் காப்பாத்தும் பார். அதான் நடக்கப் போறது!

 

ராஜாமணி: ஆரம்பிச்சுட்டியாம்மா! எங்க லெக்சரர் ராமபத்ரன் இருக்காரே அவர் சொல்வார். இந்திய வாழ்க்கையில் சுதந்திரம் இல்லை. அம்மா பிள்ளைண்ணு குடும்பம் மனுஷனை ஒரு தளையாப் பூட்டிடும். தனி நபர் சுதந்திரம்லாம் வெறும் கற்பனை. எவனாவது ஒருத்தன் கொஞ்சம் தைரியமா பிச்சுண்டு வெளியே கௌம்புவான். பாதி வழி பறக்கறதுக்குள்ளே, அவனுடைய சஞ்சாரம் அவனையே காபரா படுத்திவிடும். பொசுக்குணு திரும்பி வந்துடுவாம்பார்.

 

கங்காபாய்: போடா… போடா… நீயும் உன் லெக்சரரும்! ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு போக்கு! சுதந்திரம் சுதந்திரம்ணு எங்கே அலைஞ்சு, என்ன சாதிக்கணுமாம் ஒங்க லெக்சரருக்கு?

 

ராஜாமணி: அதெல்லாம் ஒனக்குப் புரியாதும்மா.

 

கங்காபாய்: ஒங்க லெக்சரர் என்னத்துக்கு இப்படி பசங்க மனசை பாழாக்கிண்டு கெடக்கார்? அவரைப் போயி சாதிக்கச் சொல்றது தானே!

 

(ஒரு சிறுமி உள்ளே நுழைகிறாள். கையில் ஒரு எவர்சில்வர் தூக்கு)

 

சிறுமி: மாமீ, மாமீ

 

கங்காபாய்: யாரம்மாது?

 

சிறுமி: ஜம்னாக்கா இதைக் கொடுத்தனுப்பிச்சாங்க!

 

கங்காபாய்: எங்கே கொண்டா!

 

(பாத்திரத்தை வாங்கிக் கொண்டு திறந்து பார்க்கிறாள்) பால் பாயாசம்.

 

ராஜாமணி: இன்னிக்கு ஜம்னா ஆத்திலே என்னமோ விசேஷம்மா! யாரோ ஊர்லருந்து வந்திருக்கா.

 

(சிறுமி நகர முற்படுகிறாள்)

 

கங்காபாய்: இருடீ  இரு! பாத்திரத்தை அலம்பிக் கொடுத்துடறேன். இந்த ஜம்னாப் பொண்ணு விசேஷமா எதைச் செஞ்சாலும் பொறந்த பொண்ணாட்டமா, கொஞ்சமாவது கொடுத்தனுப்பிச்சுடறது. என்னாலே ஒண்ணும் பண்ணவும் வளையறதில்லே. கொடுக்கவும் முடியறதில்லே ம்ஹ்ம்… ரங்கையன், இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டா ஒத்தை மரமா நிண்ணு போவான். கப்பல்லே சீமை சுத்தற பையன், இவனுக்கு எங்கே உதவப் போறான். இந்தக் காலத்துப் பசங்களுக்கே மூளை பரபரன்னு பிறாண்டறது

 

(குழாயைத் திறக்கிறாள். தண்ணீர் பீய்ச்சிப் பாத்திரத்தைக் கழுவும் ஒலி)

 

கங்காபாய்: ரங்கையன் சம்சாரம் தவறி பத்து வருஷமாப் போறது. ஆரம்பத்திலே வேலூர் கோட்டைலே, கச்சேரிக்குப் பக்கமா ஒங்க அப்பா சின்னதா தண்ணீர்ப் பந்தல் நடத்தறச்சே, ரங்கையன் தான் சப்ளை! ஒங்கப்பா சரக்கு போடுவார். அப்பவே அவனுக்குப் பெரிய பையன் பொறந்துட்டிருந்தான். அன்னன்னி லாபத்திலே ஒரு படி அரிசி மளிகை சாமான், இருபது ரூவாண்ணு முகம் கோணாமே வாங்கிண்டு போவான் அவன் பட்ட கஷ்டமும் இந்த ஹோட்டல் நிலைக்க அவன் பண்ணி யிருக்கிற தியாகமும் சொல்ல முடியாதுடா!

 

ராஜாமணி: சரிம்மா, அந்த பொண்ணு நின்னுண்டேருக்கா பாத்திரத்தைக்  கொடுத்தனுப்பு, ஒரு சின்ன கப்ல, எனக்கு பால் பாயாசம் கொடு.

 

கங்காபாய்: தோ தறேண்டா! சாப்டறச்ச தரலாம்னு பார்த்தேன் (உள்ளே போகும்போது தனக்குள்) ம்ஹ்ம்… தங்க விக்ரமாட்டாம் இருக்கா ஜம்னாவப் பார்த்தா கிளி கொஞ்சறது.  அவளுக்கு எப்போ கங்கண யோகம் சித்திக்கப் போறதோ? (திரும்பி வந்து) இந்தாடா பாயாசம்!

 

ராஜாமணி: நாம கச்சேரித் தெருவிலே இருக்கறச்சே எவ்வளவு சின்னவளா  இருந்தாம்மா ஜம்னா… இப்ப மடமண்ணு குதிரை மாதிரி வளர்ந்துட்டாளே! வீட்டுக்கு வர்றதே இல்லே.

 

கங்காபாய்: பெரியவளாயிட்டாளோல்லியோ? குமாரசாமி கோயில்லே நவக்கிரகம் சுத்த டெய்லி வர்றா! என்னைப் பார்த்தா உன்னைப் பத்தி விசாரிக்காமே இருக்க மாட்டா!

 

ராஜாமணி: ஸ்…ஸ்… (உறிஞ்சுகிறான்)

 

கங்காபாய்: என்னா!

 

ராஜாமணி: பாயாசம் ஏ ஒன்மா… தேவாமிர்தம்னு  சொல்லலாம்.

 

கங்காபாய்: ஜம்னா நன்னா சமைப்பா.  யார் வீட்டுக்கு கோலம் போட வரப் போறாளோ ?

 

(திரை)

 

[தொடரும்]

Series Navigation
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *