பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

 

 

 1. அதிகாலையின் அமைதியில்

 

குளிர்பனியில் நடுங்கும் காலையில்

கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென

அங்கங்கே நிற்கின்றன

பேருந்துநிலைய வாகனங்கள்

உச்சியில் ஏறி

காய்கறிக் கூடைகளை அடுக்குகிறார்கள்

கூலிக்காரர்கள்

தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த

வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன

பூ மூட்டைகள்

பாலைச் சூடாக்க

அடுப்பைப் பற்றவைக்கிறார் தள்ளுவண்டிக்காரர்

திருட்டு ரயிலேறி

பிழைப்புக்காக நகருக்குள் வந்தவன்

இருட்டைக் கண்டு அஞ்சியபடி

நடுக்கத்தோடு நிலையத்துக்குள் வருகிறான்

ஆற்றின் மடியில் ஊற்றெடுப்பதைப்போல

ஒரே சமயத்தில்

அவன் நெஞ்சில் சுரக்கிறது

நம்பிக்கையும் அச்சமும்

மாற்றுடைகள் கொண்ட தோல்பையை

மார்போடு அணைத்திருக்கின்றன அவன் கைகள்

குளிரில் சிக்கிய புதிய அனுபவத்தால்

நிலைகுலைந்து தடுமாறுகிறான்

அவனது உதடுகள்

மனைவியின் பெயரையோ மகளின் பெயரையோ

மாறிமாறி உச்சரிக்கின்றன

வாகனத்தைத் தேர்ந்தெடுக்கும் வழிபுரியாமல்

எங்கெங்கோ புகுந்துபுகுந்து வருகிறான்

விடாது துரத்தும் நாய்களின் ஊளையால்

கால்சலித்து மனம்சலித்து அமரும் வேளை

முழக்கமிட்டு வருகிறது காவல் வாகனம்

அவன் முதுகில் அறைகிறது ஒரு கை

முகவாயில் குத்துகிறது இன்னொரு கை

சந்தேக வழக்குக்காக

வாகனத்துக்குள் இழுத்து வீசுகிறது

மற்றொரு கை

அதிகாலையின் அமைதியில்

கரைந்து மறைகிறது

அச்சம் மிகுந்த அவன் அலறல்.

 

 

 1. ஒரு தண்டனைக்காட்சி

 

மனப்பாடச் செய்யுள் மறந்துபோனதால்

வகுப்பு வாசல் அருகே

முட்டி போட்டிருக்கிறாள் சிறுமி

 

ஆறே ஆறு வரிகளை

பிழையின்றி சொல்லத் தெரியாததை நினைத்து

கூச்சத்தில் கவிழ்கிறது அவள் முகம்

அவமானமும் துக்கமும்

பொங்கிப்பொங்கி நெஞ்சை நிரப்புகின்றன

 

ஆசிரியைபோல

இரக்கமேயில்லாத கல்நெஞ்சக்காரர்கள்

யாருமே இருக்கமாட்டார்கள் என்று

நினைத்துக்கொள்கிறாள்

 

அடுத்த பிறவியில்

அவள் ஒரு கழுதையாகவோ, நாயாகவோ பிறந்து

தெருத்தெருவாக அலையவேண்டுமென்று

உள்ளூர சாபமிடுகிறாள்

 

மனத்தில் படரும் எண்ணங்களை

ஆசிரியை படித்துவிடாதபடி

முகத்தில் சோகத்தைப் புலப்படுத்துகிறாள்

 

மதிலருகே ஒதுங்கிய அணில்மீது

பதிகிறது அவள் பார்வை

மறுகணமே மலர்ந்துவிடுகிறது அவள் மனம்

ஒரு பூவைப்போல

ஆட்காட்டி விரலை அசைத்து

மெளனமாக அதைநோக்கி அழைப்பை விடுக்கிறாள்

கண்களைச் சிமிட்டி அழகுகாட்டுகிறாள்

வகுப்பையும் தண்டனையையும்

முழுக்கமுழுக்க மறந்துபோகிறாள்

ஓர் ஆனந்தத் தீவில்

அணிலும் அவளும் ஓடிப் பிடித்து ஆடுகிறார்கள்

அணிலுக்கு அவள்மீது பிரியம் பிறக்கிறது

கிறீச்சிடவும் தாவவும் சொல்லித் தருகிறது

அவள் உள்ளங்கையைப் புதராக நினைத்து

உடல்மடித்து ஆடிக் களிக்கிறது

தன் உலகத்துக்கு பொருத்தமானவளென

சிறுமியின்மீது நம்பிக்கை கொள்கிறது அணில்

அணிலைப்போன்ற உயிர்வான பிறவி

உலகத்திலேயே இல்லையென்று நம்புகிறாள் சிறுமி

என்னோடு வருவாயா என

ஏறிட்டுப் பார்க்கிறது அணில்

அழைப்புக்குக் காத்திருந்ததைப்போல

துள்ளித்துள்ளி ஓடி மறைகிறாள் சிறுமி

 

 1. சந்திப்பு

 

எனது ஜன்னலுக்கு வெளியே

பச்சைப்பசேலென அடர்ந்த தோப்பு

கம்பளம்போல நெளிந்தாடுகிறது

ஏராளமான பறவைகள்

அந்த விரிப்பின்மீது சுதந்திரமாகப் பறக்கின்றன

அவற்றின் குரல் எனக்குக் கேட்கவில்லை

அதன் சிறகடிப்பிலிருந்து

அவை மகிழ்ச்சியாக இருப்பதை அறிகிறேன்

 

ஒரு தாயின் பரிவுடன் நெருங்கும்

குளிர்ச்சியான காற்று

என்னை ஆழ்ந்த அன்புடன் தழுவுகிறது

பனிக்கட்டியின் ஈரத்தைப்போல

அதன் விரல்நுனிகளில்

சொட்டிக்கொண்டிருக்கிறது ஆனந்தம்

 

ஒரு நொடி அணைத்து விளையாடுகிறது

மறுநொடி எதிர்ப்புறம் நகர்ந்து

இடம்மாறி இடம்மாறி

என்னைப் பார்த்து புன்னகைக்கிறது

அடுத்தமுறை சந்திக்க வந்தால்

அடையாளம் தெரியுமா என்று கேட்கிறது

எனக்காக ஒரு பாடலை

இசையுடன் முணுமுணுக்கிறது

எவ்வளவு அன்பானவன் நீ என்றபடி

என் விரல்களைப் பற்றுகிறது

சுற்றிச்சுற்றி வந்து

ஏராளமான சொற்களை இறைக்கிறது

 

புத்துணர்ச்சிக்காக

ஒரு தேநீர் வரவழைத்து அருந்துகிறோம்

பொழுதுபோவது தெரியாமல்

எதிரும் புதிருமாக அமர்ந்து

நெடுநேரம் உரையாடுகிறோம்

 

இரவு கவிந்த வேளையில்

கைகுலுக்கி விடைபெற்றுக் கொள்கிறோம்.

அது இனிமையின் விளிம்புக்கும்

நான் வாழ்வின் புழுக்கத்துக்கும்

 

 

 

 1. இலையின் துக்கம்

 

ஒரு குழந்தையைத் தொடும் ஆசையோடும்

விரல்நீட்டிய கோலத்தோடும்

தாவித்தாவி இயங்குகிறது

கிளையிலிருந்து விடுபட்ட

இலையொன்று

 

அக்கம்பக்கம் பாராமல்

ஆட்ட மும்முரத்தில் குதிக்கும் குழந்தையை

இலையின் திசையிலிருந்து விலக்கி

இன்னொரு திசைக்கு மாற்றுகிறாள் தாய்

 

ஏமாற்றத்தின் துக்கம்

நரம்புகளில் வழிய

தரையில் விழுந்து துடிக்கிறது

மனபாரம் மிகுந்த இலை

 

 

Series Navigation
author

பாவண்ணன்

Similar Posts

Comments

 1. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  பனிபடர்ந்த இருளில் பின்னணியில் கண்விழிக்கும் நகரம், அதன் அழகு, அதன் இயக்கம், அது தரும் நம்பிக்கை, பின்னர் அதன் குரூரம் என ஒரு நகரத்தின் முகம் ;

  அணிலின் மொழி புரிந்து அதன் அழைப்புக்கு துள்ளியோடும் – கூண்டில் அடைக்கப்படக்கூடாத பறவையென ஒரு சிறுமி ;

  அரூபமான குளிர்காற்று உருவம் எடுத்து தாயின் பிரியத்தோடு உறவாடி விடைபெற்றுச்செல்ல, ஏற்பட்ட வெற்றிடத்தை நிறைக்கும் புழுக்கம் ;

  குழந்தையைத்தொடும் ஆசையோடு தரையிறங்க, தனது திசை விட்டு குழந்தை விலக்கப்பட்ட இலையின் துயரம் …

  அற்புதமான கவிதைகள்.

  நன்றிகள் பாவண்ணன் அவர்களே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *