ஷைன்சன்
எனது குரல் எதுவென்று மறந்து போயிற்று எனக்கு. என் குரலில் தான் பேசிக் கொண்டிருக்கிறேனா, இல்லையென்றால் வேறு யாருடைய குரலிலாவது பேசிக் கொண்டிருக்கிறேனா என்ற சந்தேகம் வெகுநாட்களாக இருக்கிறது. அதிலும் நேற்று அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு, “உங்கிட்ட எனக்குப் பிடிச்சது உன் குரல் தான்” என்ற போது பயம் மனதில் பீறிட்டுக் கிளம்பியது. ஒரு வேளை இந்தக் குரல் என்னுடையதாக இல்லாவிட்டால்?
கல்லூரியில் குரல்வித்தை, அதுதான் மிமிக்ரி செய்ய ஆரம்பித்தேன். ஆண்டுவிழாக்களில் மேடையின் மேலேறி டி.ராஜேந்தரின் குரலில், அல்லது அவரின் குரலைப் போலிருக்கும் ஒரு குரலில் பொருத்தமான ஏற்றத்தாழ்வுகளுடன், ஒரு வரியைச் சொல்லி முடித்தால் அரங்கம் முழுக்க விழுந்து சிரித்துக் கொண்டே கைதட்டும் போது, அந்த மேடையோடு ஏழாம் வானத்துக்குப் போய் வந்ததைப் போலிருக்கும். அதற்கப்புறம் விடாமல் விஜயகாந்தைப் போல்; ரஜினியைப் போல். முடிக்கும் போது முத்தாய்ப்பாக ஒரு பேராசிரியரைப் போல். முழுதாய் முடித்தபின்பு எல்லோரும் கைதட்டும் போது புவியீர்ப்பு விசையற்ற ஒரு பிரதேசத்தில் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
முதலாமாண்டில் தொடர்ந்து மிமிக்ரி செய்யும்போது தொண்டை வலிக்கும். போகப் போக அவ்வலி பழகிவிட்டது. குரலைச் சாதாரணமாகப் பேசும் போது கூட அடிக்கடி மாற்றிக் கொள்ள முடிந்தது; கொஞ்ச நாட்களுக்கப்புறம் சாதாரணமாகப் பேசும் போது குரல் அடிக்கடி மாறுவதாகத் தோன்றியது. நான் எனது குரலில் பேசுவதைக் கேட்பவர்கள் வெகு சொற்பம். அவர்கள் இந்த மாற்றத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்தக் குரல்மாற்றக் காலத்தில்தான் அதுவரைக்கும் தோழியாகப் பழகிக் கொண்டிருந்த அவளிடம் காதலிப்பதாகச் சொன்னேன். எனக்கு இருந்த ஒரே பெண் தோழி அவள்தான். தமிழ் சினிமாவின் எல்லாக் கதாநாயகர்களின் குரலிலும் “ஐ லவ் யூ” என்றேன். சிரித்தாள்; ஆறுதலாக இருந்தது. செருப்பால் அடிக்க மாட்டாள் என்று தெரியும். இருந்தாலும் கோபப்பட்டிருந்தால் அவளைச் சமாளித்திருக்க முடியாது. அதற்கப்புறம் வெவ்வேறு குரல்களில் அவளுடன் டூயட் பாடி ஆடியாகிவிட்டது.
கல்லூரிக் காலம் முடிந்தபின் எனக்கு மிச்சமிருந்த ஒரே ரசிகை அவள் மட்டும் தான். சாகும் வரைக்கும் அவள் என் ரசிகையாய் இருக்க வேண்டுமென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டுதான் இப்போதும் அவளுக்கு முன் எனது குரல்வித்தையைக் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். எல்லாக் குரலிலும் பேசிக்காட்டி, தொண்டை நீர் வற்றிக் களைத்து அந்த பார்க் பெஞ்சில் சாயும் போது கூடவே என் தோளில் சாய்ந்த அவள் சொன்னாள், “உங்கிட்ட எனக்குப் பிடிச்சது உன் குரல் தான்”. உள்ளுக்குள் பயம் இருந்தாலும், அதை வெளியே காட்டாமல் கேட்டேன், “ஏன், இந்த மிமிக்ரிலாம் பிடிக்காதா?”.
“அதெல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனா எனக்கென்னவோ அவங்க எல்லாரோட குரல விட உன் குரல் தான் பிடிச்சிருக்கு”.
இதெல்லாம் கேட்கும் போது ஒரு சராசரிக் காதலனுக்கு என்ன தோன்றியிருக்கும்? அவன் அந்நேரத்தில் அவளின் காலடியில் உயிரை விடவும் தயாராக இருந்திருப்பான். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. தோழியாக இருந்திருந்தால் “சும்மாதான சொல்ற” என்று கேட்டிருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்போது சும்மாதான சொல்ற என்றால், “அப்டின்னா நான் சொல்றதிலெல்லாம் உனக்கு நம்பிக்கையில்லியா?” என்று பிரச்சினை வேறு திசையில் திரும்பக்கூடும்.
சாயங்காலம் அம்மாவுக்கு ஃபோன் பண்ணும் போது கேட்டேன், “என் குரல் ஏதாச்சும் மாறியிருக்கா?”
“என்னடா, ஜலதோஷமா? மழைல நனஞ்சியா?”
“அதெல்லாம் இல்லம்மா. என் குரல் சின்ன வயசில இருந்த மாதிரிதான் இருக்கா, இல்ல மாறிடுச்சா?”
“அது எப்பிடி சின்ன வயசில இருந்த குரல் இன்னும் இருக்கும்? பெரியாளானா குரல் மாறிரும்”.
“அது இல்லம்மா. வேற யார் குரல் மாதிரியாவது மாறிருக்கா?”
“வேற யார் குரல்னா? பேசும்போது உன் தாத்தா ஜாட இருக்கு. அவருதான் வெடுக்குன்னு வேகமாப் பேசுவாரு” என்று இழுத்துக் கொண்டே போனாள். இது வேலைக்காகாது வேறு யாரிடமாவது கேட்க வேண்டியது தான். நலத்தைப் பற்றி, சாப்பாடைப் பற்றி, தின வாழ்க்கையின் பிரச்சினையைப் பற்றிய விசாரிப்புகளுடன் அந்த தூர உரையாடல் முடிந்தது.
பள்ளிக்கால நண்பர்களிடம் பள்ளிப்பருவம் முடிந்தபின்பு பேசியதில்லை. அவர்களிடம் பேசினால் உண்மை தெரிந்துவிடும். சுரேஷிடம் பேசினால் நன்றாக இருக்கும். பள்ளிக்காலத்தில் அவனோடு ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிள்ளை மாதிரி ஒன்றாகச் சுற்றியிருக்கிறேன். ஆனால் கல்லூரிக்குப் போன பிறகு அவனைப் பார்க்கவேயில்லை. அவனைப் பற்றிய நினைப்பு கூட எழுந்ததில்லை. இப்போது அபூர்வமாகத் தோன்றியிருக்கிறது.
அவனது நம்பருக்கு விளித்தேன். மறுமுனை “ஹலோ” என்றது. அவனது குரல்தான். தெளிவாகத் தெரிந்தது.
“ஹலோ சுரேஷ், நான் குமார் பேசுறேண்டா”.
“சொல்லுடா. என்ன குரலே மாறிப் போயிருச்சு?”…..
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 20
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது
- கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது
- பாவண்ணன் கவிதைகள்
- ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்
- கடற் குருகுகள்
- இப்போது
- கவிதைகள்- கு.அழகர்சாமி
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- பேரிரைச்சல்
- ஆனந்த் பவன் [நாடகம்] காட்சி-4
- மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 நாகரத்தினம் கிருஷ்ணா
- வாழ்க்கை ஒரு வானவில் – 19
- மனம்
- தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம்
- இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை
- தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)
- குரல்
- பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…
- காரணங்கள் புனிதமானவை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 91
- பல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்
- தினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு
- தொடுவானம் 32. மனதோடு கலந்த மண் வாசனை
- சிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)