கிருஷ்ணாபுரம் போயிருக்கிறீர்களா? நான் கேட்பது தொல்சிற்பங்கள் நிறைந்துள்ள திருநெல்வேலி மாவட்டக் கிருஷ்னாபுரம் இல்லை. விழுப்புரம் மாவட்ட எல்லைக் கோடியில் இருக்கும் ஒரு சாதாரண கிராமம். ஆனால் அதைக் கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் அளவிற்கு வளர்ச்சியும் கிடையாது. வேண்டுமானால் மூன்றாம் பாலினம் போல கிராம நகரம் என்று சொல்லிக் கொள்ளலாம்.
பண்ருட்டியிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலை அக்கிராமம் வழியாகச் செல்வதுதான் அக்கிராமத்தை ஒரளவிற்கு நகரமயமாக்கி உள்ளது. ஒரு கணினி மையம் இணைய தளத்துடன் வந்துவிட்டாலே எல்லாம் வந்துவிட்டதல்லவா?
சொர்ணாவூர் அணைக்கட்டிலிருந்து பாகூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் அச்சாலையை வழியனுப்ப வருவது போல அதன் கூடவே வருகிறது. அக்கால்வாயின் மீது இருக்கும் சிறிய பாலத்தின் வழியே சென்று அக்கிராம நகரத்தை அடைந்தால் ஊரின் தொடக்கத்திலேயே இருக்கும் தனியார் நடுநிலைப் பள்ளியைக் காணலாம்.
அதையும் தாண்டிச் சென்றால் ஒரு விநாயகர் கோவில். அதற்கு எதிரிலும் அக்கம்பக்கமுமாக நான்கைந்து தெருக்கள். எல்லாமே மண்ணாலானவை; புழுதி பறக்கக் கூடியவை.
அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டு மணி இருக்கும். பெண்கள் களை எடுக்கக் களைக்கொட்டைத் தோளில் மாட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். நெல்லுக்கு உரம்போட உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு டயர் வண்டி சென்று கொண்டிருந்தது. வண்டியை ஓட்டுபவன் “என்னா வேசமா போடறே? வெருசலா நட! ம்……” என்று கூறிக்கையில் இருந்த கோலால் மாடுகளைப் பட் பட்டென்று இரண்டு அடிகள் அடித்தான்.
அப்போது “ஏம்பா, அதுங்க வாயில்லா ஜீவனுங்க, ஏம்பா அடிக்கறே, தட்டிக் கொடுத்து ஓட்டுப்பா” என்ற குரல் கேட்டது.
சொன்னவர் அந்தப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர். அந்த ஊரையே சொந்த ஊராகக் கொண்டவர். ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.
வண்டி போனதும் அதற்கு வழிவிட்டுக் காத்திருந்த பையன்கள் மீண்டும் கோலி விளையாட நடு வீதிக்கு வந்தனர். அவர்களில் ஒருவன் “டேய், நொண்டி வாத்தியார்டா” என்று சொல்லிக் கொண்டே தன் கோலிக்குண்டை எடுத்து ஓட மற்றவர்களும் சிட்டாகப் பறந்தனர்.
ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் காலை வேளைகளில் வீட்டில் படிக்காமல் விளையாடுவது அவருக்குப் பிடிக்காது. தெருவிலேயே கண்டிப்பார், அல்லது மறுநாள் பள்ளியில் தனியாய் அழைத்து தண்டனை தருவார்.
தண்டனை என்பது பாடப் பகுதியில் இருக்கும் திருக்குறள்களை முப்பது அல்லது ஐம்பது முறை எழுதுவது ஆகும்.
அவரது தீர்க்கமான கூரிய பார்வையே எதிரே நிற்பவனின் கண்ணின் வழியாய் மனத்தின் உள்ளே நுழையும். அது இந்தத் தவற்றைச் செய்யலாமா என்று கேட்கும். மீண்டும் அதையே செய்யாதே என்று கண்டிக்கும். செய்தால் எதிர்காலம் பாழாகும் எனப் புத்திமதி கூறும்.
ஊரில் ஒருவர்க்கொருவர் கடன் வாங்கும் பொழுது பாண்டு எழுத வேண்டுமா? விநாயகர் கோவில் திருவிழா கணக்கு சரி பார்க்க வேண்டுமா? தெரு விளக்கு எரியவில்லை என்று மின்துறையில் சொல்ல வேண்டுமா? அண்ணன் –தம்பி, கணவன்—மனைவி ஆகியோரின் சிறு பிணக்குகளைத் தீர்க்க வேண்டுமா” எல்லாவற்றிற்கும் நொண்டி வாத்தியார்தான். மேலும் நொண்டி வாத்தியார் என்று எல்லாரும் அழைத்து அழைத்து அவருக்கே கூட அவர் பெயர் மறந்து விட்டது.
தொடக்கப் பள்ளீயாய் ஐந்தாம் வகுப்புவரை இருந்த பள்ளியை நடுநிலைப்பள்ளியாய் மாற்றியதில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. பக்கத்துக் கிராமங்களுக்கெல்லாம் காலையிலேயே போய் மாணவர்களைத் தன் பள்ளியில் சேர்க்க வேண்டுமெனப் பெற்றோரிடம் கேட்பார். பள்ளியை எல்லாவகையிலும் முன்னேற்றப் பாடுபட்டுக் கொண்டே இருப்பார்.
”டேய், நொண்டி வாத்தியாரைக் கூப்பிடு”
என்று தலைமை ஆசிரியரும் அடுத்த வகுப்பு யாருடா?, நொண்டி வாத்தியார்தானே?” என்று சக ஆசிரியர்களும்,
“என்னை அடிச்சா நொண்டி வாத்தியார் கிட்ட சொல்லுவேன்”
என்று மாணவர்களும் கூறுமளவிற்கு அவருக்கும் நொண்டி வாத்தியார் பட்டம் நிலைத்து விட்டது.
அவர் மனைவி கூட.,
“ஏங்க எல்லாரும் நொண்டின்னு சொல்றப்ப எனக்குக் கஷ்டமாயிருக்குங்க” என்றும், ஆசிரியர்கள் அவர்களின் ஓய்வறையில்
“பிள்ளைங்க கூட நொண்டி வாத்தியார்னு சொல்றச்சே ஒங்களுக்குக் கோபம் வரல்லே?”
என்றும் கேட்கும்போது அவர் கூறும் ஒரே பதில்
:”ஏன் கஷ்டப் படணும்? ஏன் வருத்தப் படணும்? நான் நொண்டிதானே? இந்தக் காலை சாய்ச்சு சாய்ச்சுதான நொண்டிகிட்டு நடக்கறேன். தவிர இத மாதிரி கூப்பிடறதுல்ல அவங்களுக்கு சந்தோஷம்னா இருக்கட்டுமே?”
ஆனால் பள்ளித் தோட்ட வேலைகளிலும், பள்ளீயின் சுற்றுப்புறத்தைத் தூய்மைப் படுத்துவதிலும் அவர் ஆர்வம் காட்டியது சோம்பேறிகளான சக ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. அத்தனைக்கும் அவர்கள் ஒன்றும் உடல் உழைப்பைத் தர வேண்டாம்; மாணவரை மேற்பர்வை செய்தால் போதும் என்றுதான் தலைமை ஆசிரியர் கூறி இருந்தார்.
”இந்த நொண்டிக்குத்தான் வேற வேலை இல்ல; கிறுக்குப் பிடிச்சு அலையறான்; நொண்டிப் பேச்சக் கேட்டுக்கிட்டு ஊரே ஆடுதுன்னா, ஹெச்சமும் கூடத்தான் தாளம் போடறாரு”
என்று அவர் காதுபடவே புலம்பத் தொடங்கினர். அதனால் சில குறும்புக்கார மாணவர்களும் வாத்தியார் என்பதை எடுத்துவிட்டுத் தங்களுக்குள் நொண்டி என்றே பரிகாசமாக ரகசியமாகப் பேசிக் கொண்டனர்.
எல்லாம் தெரிந்தும் காதில் விழாதவர்போல அவர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்றைக்கு வந்த தபால்காரர் அவர் வீட்டு வாசலில்
“அம்மா, நொண்டி வாத்தியார் இருக்காரா? எம் ஓ வந்திருக்கு” என்று கேட்க அவர் மனைவிக்கு கோபம் வந்துவிட்டது.
”ஏம்பா, அதுல நொண்டி வாத்தியார்னா போட்டிருக்கு? எங்க ஊட்டுக்காரரு பேரு சாம்பசிவம்தான, அதான போட்டிருக்கு, நீ ஏன் இப்படிக் கூப்பிடறே? இனிமே அப்படிக் கூப்பிட்டா நடக்கிற கதையே வேற”
என்று பொறிந்து தள்ளி விட்டார். அவரது குரலில் இருந்த கடுமை தபால்காரரை நொண்டி வாத்தியாரிடம் போய் இதைப் புலம்ப வைத்தது. வாத்தியார் வந்து மனைவியைத்தான் கடிந்து கொண்டார்.
“இதோ பாரு, இன்னிக்குதானா எல்லாரும் கூப்பிடறாங்க? முப்பது வருஷமா இதான் என் பேரு, ஏன் இதுக்குப் போயி கோவிச்சுக்கறே?”
அந்தப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முழுநாள் நிகழ்ச்சியாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். காலையில் கொடியேற்றல், மாணவர் ஊர்வலம், விளையாட்டுப் போட்டிகள், மாலையில் பரிசளிப்பு, ஒரு சிறப்பு விருந்தினரின் வாழ்த்துரை என நடத்துவார்கள்.
தலைமை ஆசிரியர் ஆசிரியர்களைக் கூட்டி அறிவித்தார்.
“இந்த ஆண்டு நம் பள்ளிக்குப் புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டித்தர நம் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் நம் பள்ளியில் படித்தவர்தானாம். பெயர் துளசிங்கம். புதுடெல்லியில் தனியார் கம்பெனியில் பெரிய அதிகாரியாக இருக்கிறார்”.
சாம்பசிவத்தின் மேற்பார்வையில் பள்ளி விழாக் கோலம் பூண்டது. இலக்கிய மன்றப் போட்டிகள் முதலில் நடத்தப் பட்டன. விழாநாளன்று ஊராட்சித் தலைவர் கொடியேற்ற ஊர்வலம் முடிந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் பேசிய துளசிங்கத்தின் பேச்சுதான் மிக முக்கியமாக இருந்தது.
தனியார் நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக இருந்தும் பேண்ட், டை, கோட், என வராமல் சாதாரணமாக எளிய வேட்டி சட்டையில் அவர் இருந்தார்.
”எல்லாருக்கும் என் வணக்கம், இந்த விடுதலைத் திருநாள் ரொம்ப முக்கியமானது. நம்மை நாமே ஆள ஆரம்பித்த நல்ல நாள் இது. வாரத்துல ஒரு நாளாவது யாருக்காவது ஏதாவது ஒரு உதவி செய்யணும்னு இன்னிக்கு நாம எல்லாரும் தீர்மானம் எடுத்துக்கணும். வள்ளுவரு அன்புள்ளவங்க தங்கள் எலும்பையும் கொடுப்பாங்கன்னு சொல்றாரு. உண்மைதான். சிலபேரு கொடுத்திருக்காங்க. இங்க ஒரு முக்கியமான விசயத்தைப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் முன்னாடி தலைமை ஆசிரியர் அறையில உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். தலைமை ஆசிரியர் “டேய், நொண்டி வாத்தியார மேசை எல்லாம் போட்டாச்சான்னு பாக்கச் சொல்லு, நொண்டி வாத்தியாரக் கூப்பிட்டு பையங்களை உட்கார வைக்கச் சொல்லு, நொண்டி வாத்தியார்தான் நன்றி சொல்லணும்னு சொல்லு” என்று அடிக்கடி மூச்சுக்கு மூச்சு நொண்டி வாத்தியார்னு சொல்லிக் கொண்டிடே இருந்தார்.
ஒரு பையனும் ஓடிவந்து “சார் நொண்டி வாத்தியார் எல்லாம் சரியாய் இருக்குனு சொல்லச் சொன்னார்” என்றான். ஒவ்வொரு முறையும் அவர் ஊனத்தைக் காட்டி எல்லாரும் நொண்டி வாத்தியார்னு சொல்லும்போது என் மனம் வலித்தது. அவர் எப்படி நொண்டியானார்னு ஒங்க யாருக்காவது தெரியுமா? ரொம்ப வருசம் முன்ன ஒரு நாள் காலையில பிள்ளைங்களக் கூப்பிட எங்க கிராமத்துக்கு வந்திருக்கிறாரு. அப்ப ரோட்டில ஒரு மூணு வயசுப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீர்னு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. இவரு போய் பையனைத் தூக்கிக் காப்பாத்தினாலும் இவரு வண்டியில மாட்டிக்கிட்டாரு. ஆமாம், இவரு கால்ல வண்டி ஏறிடுச்சு. அடிபட்டு நொண்டி நொண்டி நடக்க ஆரம்பிச்சாரு. இதை யாருக்குமே அவர் சொல்லல; இதெல்லாம் எங்கப்பா எனக்கு சொல்லி இருக்காரு. அப்படி அவர் காப்பாத்தின பையன்தான் நான்.
நான் இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்க அவர்தான் காரணம் இவரு இல்லன்னா நான் அன்னிக்கே செத்திருப்பேன். இவரை இனிமே எல்லாரும் தியாகி வாத்தியார்னுதான் கூப்பிடணும்” என்று கூறி முடித்ததோடு அவரை அழைத்து மேடையிலெயே அவர் காலிலும் விழ “தியாகி வாத்தியார் வாழ்க”எனும் வாழ்த்தொலி வானைப் பிளந்தது.
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்