என் சுவாசமான சுல்தான் பள்ளி

This entry is part 21 of 27 in the series 21 செப்டம்பர் 2014

rajid

1

 

இரவு மணி 10.45. ரொட்டித் துண்டில் லேசாக வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார் முகம்மது. ஒரு கோப்பையில் தண்ணீரில் கலந்த பால். கொஞ்சம் ஊறியபின் சாப்பிட்டால் மெல்லும் வேலை மிச்சமாம்.. மாத்திரைகளைத் தந்துவிட்டு ஒரு தாமிரச் செம்பில் தண்ணீர் எடுத்துவந்தார் கதீஜா. தாமிரம் உடம்புக்கு நல்லதென்று கதீஜா ஊரிலிருந்து வாங்கிவந்த செம்பு அது. மகன் அப்துல்லா அவர் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்.

இந்த முகம்மதைப்பற்றி தெரிந்துகொள்வோம். முப்பது ஆண்டுகளுக்கு முன் அடிவாழைக்கன்றுபோல் 6, 9, 12 வயதுகளில் மூன்று மகள்களையும் மனைவி கதீஜாவையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் வந்தார். ஊரில் அவர் ஒரு பேராசிரியர். ஒரு நாள் இரவு தன் பிள்ளைகள் வரிசையாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இவர்களை நல்லபடியாக கரைசேர்க்க வேண்டுமானால் சிங்கப்பூர் சென்றுதான் தீரவேண்டும் என்று முடிவுசெய்து யாரிடமும் ஆலோசனை கேட்காமல் புறப்பட்டுவிட்டார். அவரிடமிருந்த ஒரே மூலதனம் கணிதம் மற்றும் இயற்பியல் அறிவு மட்டும்தான். சிங்கப்பூரில் தொடக்கக் கல்லூரி வரை அவரால் சொல்லிக்கொடுக்க முடியும். மெக்பர்சன் ரோட்டில் ஓர் ஓரறை வீட்டில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். தனிநிலை ஆசிரியர்தான். சொந்த வருமானம். சிங்கப்பூர் தீவு முழுக்க அவரின் மாணவர்கள் சிதறியிருந்தார்கள். அவரின் இருசக்கர வாகனம் தீண்டாத தெருக்களே சிங்கப்பூரில் இல்லை. ஆங்காங்கே கிடைக்கும் பள்ளிவாசல்களில் தொழுதுகொள்வார். சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லாப் பள்ளிவாசல்களிலும் தொழுதிருக்கிறார். வெள்ளிக்கிழமை ஜும்மா மற்றும் வெள்ளி இரவு திங்கள் இரவு சுல்தான் பள்ளியில் இரவு 10 மணிவரை திக்ரில்

 

2

இருந்துவிடுவார். இமாம் கேட்கும் துஆவுக்கு ‘ஆமின்’ சொன்னாலும் இறுதியாக தன் மூன்று துஆக்களைக் கேட்காமல் அவர் தொழுகையை விட்டு எழுந்ததே இல்லை.

‘என்னுடைய வாழ்க்கையை யாருக்கும் பாரமில்லாமல் பாதுகாப்பாயாக.

எங்களுடைய தேவைக்காக உன்னைத்தவிர வேறு யாரிடத்திலும் கையேந்தும் துர்பாக்கிய நிலையிலிருந்தும் பாதுகாப்பாயாக.

என்னுடைய மௌத்தை மரியாதைக்குரியதாக ஆக்கிவைப்பாயாக.’

 

கடந்த பத்தாண்டுகளாக சர்க்கரை வியாதிக்கு மாத்திரைகள் சாப்பிடுகிறார். பொது மருத்துவமனையின் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். 6 மாதங்களுக்கு

முன்தான் வீட்டுக் கடனின் கடைசித் தவணையை செலுத்தினார். இப்போது வீடு அவரின் சொந்தச் சொத்து. சிங்கப்பூரில் மிகவும் பிடித்த இடம் சுல்தான் பள்ளி என்பார். சுல்தான் மள்ளியின் இரு மகுடங்களில் ஒன்று மன்னர் சுல்தான் ஹுசைன் ஷா. இன்னொரு மகுடம் கவர்னர் ஸ்டாம்போர்டு ராஃபிள்ஸ். 1800 களில் மன்னர் சுல்தான் ஹுசைன் ஷாவிடம்தான் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பு இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்தான் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ். ஒரு முஸ்லிம் அல்லாதவரை பள்ளிவாசலின் மகுடமாகச் சொல்லலாமா என்றெல்லாம் முகம்மதுக்குத் தெரியாது. ஆனாலும் அவர் அப்படித்தான் சொல்வார். இரண்டு மகள்கள் இப்போது சிங்கையிலேயே தனி ஐந்தரை வீடு பணிப்பெண் காரென்று வசதியாக வாழ்கிறார்கள். ஒரு மகள் துபாயில் எல்லா வசதிகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மகன் அப்துல்லா அராப் ஸ்ட்ரீட்டில் மன்சூர் துணிக்கடையின் மேலாளர். முகம்மதுக்கு எந்தக் கடனும் இல்லை. அவர் சம்பாதிப்பது உபரிதான். எல்லாரும் ஓய்வாக இருக்கச் சொல்கிறார்கள். 24 மணி நேரங்களை சும்மா இருந்து கழிப்பது மௌத்தைவிடக்

3

கொடுமை என்பார் முகம்மது. அவருடைய சேமநல நிதியிலும் ஓய்வூதிய நிதியிலும் மருத்துவநிதியிலும் இருக்கும் நாலைந்து லட்ச வெள்ளிக்கு அப்துல்லாவும் கதீஜாவும்தான் வாரிசு. அன்று ஊரில் பிள்ளைகள் வரிசையாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தன்னிச்சையாக எந்த முடிவில் சிங்கை வந்தாரோ அது பூரணமாக நிறைவேறியிருக்கிறது. ‘இந்த சிங்கைக்கும் சிங்கையிலிருக்கும் என் சமுதாயத்திற்கும் நான் ரொம்பக் கடன்பட்டிருக்கிறேன்’ என்று அடிக்கடி சொல்வார். அந்த முகம்மதுதான் இப்போது ரொட்டியில் வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார்.

 

‘ஏன் இப்படி நெற்றியெல்லாம் வியர்க்கிறது. லிஃப்டில் வந்தீர்களா இல்லை படியேறி வந்தீர்களா?’ என்று கேட்டுச் சிரித்தார் கதிஜா. ‘தெரியல கதீஜா. பனியனே கூட ஈரமாகியிருக்கிறது. ஏன் இப்படி வியர்க்கிறது? உனக்கு வியர்க்கிறதா?’ என்றவர் கண்களை திடீரென்று அகல விரித்து பின்னால் சாய்ந்தார். நெஞ்சு கழுத்துக்கு ஏறியதுபோல் உணர்கிறார். ‘அல்லாஹ்’ என்று உச்சரித்த நாவின் நுனி மேலன்னத்தில் ஒட்டியபடியே இருக்கிறது. ‘என்னங்க, என்னங்க, என்று தோள்களை உலுக்கிய கதிஜா ‘என்னங்க’ என்று அலறியதில் மகன் அப்துல்லா மிரண்டபடி எழுந்திருக்க எதிர்வீட்டு சீனரும் ‘என்ன என்ன’ என்று பதறிக்கொண்டே வந்துவிட்டார். ஒரு கோழிக்குஞ்சை தூக்குவதுபோல் முகம்மதை அப்படியே அலாக்காகத் தூக்கி படுக்கையில் சரித்தார் மகன் அப்துல்லா. நெதஞ்சைப் பிசைந்து ஏதேதோ செய்துபார்த்தார். அசைவுகள் இல்லை. அடுத்த அரைமணி நேரத்தில் டாக்டர் மற்றும் தாதியர் படைகளோடு ஆம்புலன்ஸ் வந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர். யாருக்கு யார் எப்படி எப்போது சொன்னார்கள் என்று தெரியவில்லை. கணவர் பிள்ளைகளுடன் இரண்டு மகள்கள் வந்துவிட்டனர். துபாயிலிருந்து மூன்றாவது மகள் புறப்பட்டுவிட்டதாக செய்தி வந்துவிட்டது. ஒரு

4

மாதத்திற்கு முன்தான் தன் எட்டாவது பேரப்பிள்ளையைக் கண்டிருந்தார். அந்தப் பச்சைக்குழந்தையும் அந்தக் கூட்டத்தில் அடக்கம். ‘என்னங்க’ என்று கதிஜா அலறிய அந்தக் குரல்தான் கதிஜா பேசிக்கேட்ட கடைசி குரல். அப்படியே தன் அறையில் ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டார் கதிஜா. கண்கள் மட்டும் பொங்கிக்கொண்டே இருக்கின்றன. மருத்துவர் இறப்புச்சான்று கொடுத்துவிட்டார். அடுத்தநாள் சுவாசூகாங்கில் அசருக்குப் பிறகு மஹ்ரிபுக்கு முன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இரவு மணி 1. வந்தவர்களெல்லால் ஒருவர் பின் ஒருவராகத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கறிஞர் கலாராஜன் மட்டும் அப்துல்லாவோடு கூடவே இருக்கிறார். அவர் முகம்மதுக்கு நெருங்கிய நண்பர். அப்துல்லாவுக்கே அது வியப்பாக இருக்கிறது. ஏதும் காரணமிருக்குமோ?

அடுத்தநாள் மதியம் துபாயிலிருந்து மகள் வந்துசேர்ந்தார் அடங்கிக் கிடந்த வீடு மீண்டும் அதிர்ந்தது. மாலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சுவாசூகாங்கிற்கு பேருந்திலும் காரிலுமாக எல்லாரும் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்துல்லாவை தன் காரில் ஏற்றிக்கொண்டு கலாராஜனும் புறப்படுகிறார்.

அடக்கம் முடிந்து எல்லாரும் திரும்பிவிட்டார்கள். பாட்சா கடையிலிருந்து உணவுப்பொட்டலங்கள் பரிமாறப்பட்டன. வீட்டில் ஊதுபத்திப் புகை சூழ்ந்திருந்தது. அறையில் ‘இத்தா’ என்கிற தனிமை வாழ்க்கையை கதிஜா தொடங்கியிருக்கிறார். பேரர்களோடு மக்கள் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். ஹாலில் இப்போது அப்துல்லாவோடு கலாராஜன் மட்டும்தான் இருக்கிறார். ‘அப்துல்லா! ஒரு முக்கியமான விஷயம்’ என்று ஆரம்பித்தார். அப்துல்லா ஊகித்தது சரிதான். ஏதோ சொல்லத்தான் அவர் கூடவே இருக்கிறார். ‘உங்க அத்தா நாலைந்து மாதங்களுக்குமுன் இந்தத் தருணம்

 

5

ஏற்படும்போது தங்களிடம் சேர்த்துவிடவேண்டுமென்று ஒரு கடித உரையைக் கொடுத்தார். அதை இவ்வளவு சீக்கிரம் உங்களிடம் கொடுக்க நேருமென்று ….’ குரல்

உடைகிறது. மேலும் பேசமுடியாமல் தடுமாறுகிறார். திடுக்கிட்டார் அப்துல்லா. ‘கடிதமா? எனக்கா? அத்தாவா? என்று தொடர்பில்லாமல் மிரண்டார். அந்தக் கடித உரையை தன் கைப்பையிலிருந்து எடுத்து அப்துல்லாவிடம் நீட்டினார். உரையின் மேல் ‘என் மகன் அப்துல்லாவுக்கு’ என்று எழுதியிருந்தது. கைநடுக்கத்தை கவனித்தார் கலாராஜன். அந்தக் கடிதத்தைப் பிரித்துக் கொடுத்தார். நடந்ததைக் கவனித்த எல்லாரும் மௌனமானார்கள். கலாராஜனையே அப்துல்லா படிக்கச் சொன்னார். அந்தக் கடிதத்தைப் படிக்கும் சக்தி அப்போது அப்துல்லாவுக்கு இல்லை.

 

‘மகனே!

அஸ்ஸலாமு அலைககும் (வரஹ்)

நான் எங்கிருக்கிறேன் என்பதை உனக்குச் சொல்லமுடியாது. ஆனாலும் என் இடத்திலிருந்துதான் இந்த சலாம் வருவதாக நினைத்துக்கொள். எனக்கென்று ஒரு விருப்பம் எனக்குள்ளேயே எரிந்துகொண்டிருந்தது. சுல்தான் பள்ளி என்னைக் கவர்ந்த பள்ளி என்று உனக்குத் தெரியும். 200 ஆண்டுகளுக்குமுன் மன்னர் சுல்தான் ஹுசைன் ஷா சிங்கப்பூரை ஆண்டுகொண்டிருந்தார். அவர் தன் அதிகாரங்களை விரிவுபடுத்தவோ வருமானங்களை பெருக்கிக்கொள்ளவோ ஆசைப்பட்டிருந்தால் நிச்சயம் அதில் வெற்றிகண்டிருப்பார். ஆனால் அவர் தன் மொத்த சமூகமும் தொழுவதற்கு வசதியாக ஒரு பள்ளிவாசலை கட்டவேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டார். அப்போதிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ் உடனே அனுமதி வழங்கியதுடன் 3000 டாலரையும் கொடுத்து உடனே பள்ளிவாசல் கட்டும் வேலையைத்

6

தொடங்கச் சொன்னார். இரண்டே ஆண்டுகளில் செங்கற்களால் ஆன சுல்தான் பள்ளி கட்டிமுடிக்கப்பட்டது. மத நல்லிணக்கத்தைப் போற்ற சிங்கையில் தூவப்பட்ட முதல் விதை அதுதான் மகனே! அது மட்டுமல்ல. அதற்குப்பிறகு பொறுப்புக்கு வந்த அவர் பேரர் சுல்தான் அவாவுதீன் ஷா அதற்கும் பிறகு 50 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைக்கு விரிவாக்கம் கண்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் அத்துனை பேருமே மன்னர் சுல்தான் ஹுசைன் ஷாவின் நாடித் துடிப்பை உணர்ந்திருந்ததால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. சிங்கையில் இன்றும் இன்னும் சிறப்பாக மத நல்லிணக்கம் போற்றப்பட இதுதான் மகனே வேராக இருந்துகொண்டிருக்கிறது. அந்தப் பள்ளி இப்போது மிகச்சிறப்பாக கட்டப்பட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிட்டத்தட்ட 5000 பேர் தொழுகின்ற அளவுக்கு மிகப்பெரிய பள்ளியாகி மரபுடைமையைப் போற்றும் சின்னமாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் அங்கே தொழுபவர்களின் துஆக்களின் ஒரு பகுதி மன்னர் சுல்தான் ஹுசேனுக்கும் அவர் சந்ததிக்கும்தான் செல்கிறது மகனே. அதுபோன்ற ஒரு பரிசை உனக்கும் கதிஜாவுக்கும் தர விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டுகளில் எனக்கு எத்தனையோ தடவை வாழ்வா சாவா பிரச்சினைகள் வந்ததுண்டு. இந்த சுல்தான் பள்ளியில் நான் தொழும் இரண்டு ரகாஅத் நஃபீலில் ஈயமாகக் கொதித்த பிரச்சினைகள்கூட பனிக்கட்டியாய்க் குளிர்ந்திருக்கிறது. இந்த பள்ளியை தம் சமூகத்தாருக்கு ஒப்படைக்கும்போதே மன்னர் சுல்தான் ஹுசைன் ஷா நாமெல்லாருக்குமாக அழுது கேட்ட துஆதான் என்னைக் காப்பாற்றி இந்த நிலைமைக்கு உயர்த்தியிருக்கிறது என்று முழுமையாக நம்புகிறேன் மகனே! உண்மையும் அதுதான். என் சேமிப்புகளில் இருக்கும் பணம் எல்லாம் உனக்கும் கதிஜாவுக்கும் கிடைக்கும். அதுதான் நான் உனக்கு விட்டுச்செல்லும் சொத்து. அதில் ஏதாவது ஏற்பாடு செய்துகொள்ளவும். இந்த வீட்டை நான் சுல்தான் பள்ளிக்கு செட்டில்மெண்ட்

7

செய்துவிட்டேன். நண்பர் கலாராஜன்தான் எல்லாவற்றையும் செய்துகொடுத்தார். நான் செய்தது சரிதான் என்று காலம் விரைவிலேயே சொல்லும். நீயும் கதிஜாவும் விரும்பும் காலம்வரை இந்த வீட்டில் இருந்துகொள்ளலாம். அதற்குப் பிறகு இந்த வீட்டை சுல்தான் பள்ளியிடம் ஒப்படைத்துவிடவும். வஸ்ஸலாம்

உன் அத்தா

முகம்மது.

குர்ஆனின் தாள்களைப் புரட்டும் கதிஜாவின் விரல்கள் நடுங்கின. ஒவ்வொரு பக்கமும் கண்ணீரைச் சுமந்துகொண்டு புரண்டது. கலாராஜன் சொன்னார். செட்டில்மெண்ட் செய்த சேதியை நான் மூயிஸில் தலைமை முஃப்தியிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் நாளைக்காலை 10 மணிக்கு உங்களைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 

அடுத்தநாள். காலை சரியாக 10 மணி. முஃப்தி சில முக்கிய உறுப்பினர்களோடு அப்துல்லாவைப் பார்க்க வந்துவிட்டார். ‘மாணிக்கம் பெற்றெடுத்த மாணிக்கமே! என்று அப்துல்லாவைப் கட்டிப்பிடித்து சலாம் சொன்னார். அப்துல்லாவும் கதிஜாவும் ஏற்கனவே

ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். அப்துல்லா சொன்னார். ‘வருகிற வெள்ளிக்கிழமையே நாங்கள் இந்த வீட்டை ஒப்படைத்துவிடுகிறோம். நாங்கள் வேறு வீடு ஏற்பாடு செய்துவிட்டோம்.’ முஃப்தி சொன்னார். ‘ மகனே அப்துல்லா! முகம்மது ஒரு பணக்காரர் இல்லை. அவர் வந்தநாள் முதல் சேர்த்த ஒரு பெரிய சொத்து இதுதான். கிட்டத்தட்ட 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள இந்தச் சொத்தை இந்தப் பள்ளிக்கு தந்திருக்கிறார். இந்தப் பள்ளியைத் தோற்றுவித்த மன்னர் சுல்தான் மீதும் இந்தப் பள்ளியின் மீதும் அவருக்கிருந்த அபரிமிதமான ஈடுபாட்டை என் அனுபவத்தில் ஒரு தனிமனிதனிடம் கண்டதேயில்லை அப்துல்லா..’

8

அப்துல்லா தொடர்ந்தார்.

‘உங்களிடம் ஒன்று கேட்கலாமா?

‘கேளுங்கள் அப்துல்லா. என் சீமான் பெற்ற சீமானே. கேளுங்கள்’

‘இந்த வீட்டை என்ன செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?’

‘இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் ‘முகம்மது’ என்றுதான் எதிரொலிக்கும். இந்த வீட்டை அதற்குள்ள தகுதியோடு நாங்கள் பாதுகாக்க வேண்டும். சவூதி அரேபியாவிலிருந்தும் துபாயிலிருந்தும் ஏராளமான மார்க்க விரிவுரையாளர்கள் சுல்தான் பள்ளிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த வீட்டை மிகச் சிறப்பாக அழகுபடுத்தி அவர்கள் தங்கிக்கொள்ள பயன்படுத்துவோம். இந்தப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதிக்கொடுக்க ஏற்பாடுகள் செய்ய விரும்புகிறோம். வீட்டுவசதிவாரியத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்.’

‘எங்க அத்தா எதைச்செய்ய விரும்பியிருப்பாரோ அதையேதான் செய்கிறீர்கள். ரொம்ப நன்றி முஃப்தி சாகேப். சுல்தான் பள்ளியின் புரவலர்கள் வரிசையில் எங்கள் அத்தா

பெயரையும் சேர்த்துவிடுங்கள். இதோடு எதுவும் முடியப்போவதில்லை. எங்களால் இயன்றதை எப்போதும் செய்துகொண்டிருப்போம்.’

‘சீமானே! நாங்கள் வருகிறோம். சுல்தான் பள்ளியின் வரலாற்றில் முகம்மதின் பெயர் ஏதாவது ஒரு வகையில் இடம்பெறும் அப்துல்லா’

அவர்கள் சென்றுவிட்டார்கள்.

ஓரிரு மாதங்கள் ஓடின. தானும் அம்மாவும் மட்டும் இருந்துகொள்ள ஒரு சிறு வீட்டை ஏற்பாடு செய்துகொண்டார் அப்துல்லா. தன் முதலாளி மன்சூர் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை திடீரென்று சொன்னார். தன் பிள்ளைகள் ஆஸ்திரேலியாவிலிருப்பதால் தானும் அங்கே போகவேண்டுமாம். எனவே கடையை அப்துல்லாவே நடத்தவேண்டும் என்று

9

கேட்டுக்கொண்டார். ‘இருக்கும் காசைக் கொடுங்கள். பாக்கியை பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்றார். ‘எத்தனையோ பேர் வாங்கத் தயாராக இருக்கிறார்கள் முகம்மது. ஆனாலும் இதை நீங்கள்தான் நடத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன். காசு பெரிதல்ல. இது எங்க அத்தா வைத்த கடை. இதில் ஒரு சரிவு வருமேயானால் அது என் அத்தாவுக்கு நான் செய்கின்ற அவமானம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது அப்துல்லா. நிச்சயம் உங்களால் இந்தக் கடையை என்னைவிடச் சிறப்பாக நடத்தமுடியும்’

ஒரு லட்சம் வெள்ளி கைமாறியது. தழைச்சத்து கொழிக்கும் மண்ணில் எள்ளைத் தெளித்ததுபோல் அப்துல்லாவுக்கு பணம் மண்ட ஆரம்பித்தது. வியாபாரம் தாறுமாறாக உயர்ந்தது. இருக்கும் வாடிக்கையாளர்களை நாளை வாருங்கள் என்று வெளியே அனுப்பி கடையை ஒவ்வொரு நாளும் மூடவேண்டியிருந்தது.

இரண்டாண்டுகள் ஓடின. அப்துல்லாவும் கதிஜாவும் இப்போது கம்பங்கானில் ஒரு தனி பங்களா வாங்கி குடியேறிவிட்டார்கள். அப்துல்லாவுக்கு பெண்பார்க்க ஏற்பாடுகள்

நடக்கின்றன. பெரிய பெரிய இடங்களிலிருந்தெல்லாம் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. சவூதி அரேபியாவில் யாரோ மன்னர் பரம்பரையாம். அழைத்திருக்கிறார்கள். நாளை வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் வருகிறார்களாம். ‘சுல்தான் பள்ளியில் ஜும்மாவை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறோம். மற்றவற்றை நேரில் பேசிக்கொள்வோம்’ என்றார்கள்.

பொழுது விடிந்தது. சவூதியிலிருந்து வருபவர்களை வரவேற்க வீடு தயாராகிக்கொண்டிருக்கிறது. கடைக்கு விடுமுறை விடப்பட்டது. அப்துல்லா வீட்டின் தோட்டப் பகுதியில் சமையல் தூள் கிளப்புகிறது. அந்தத் தெருவே பிரியாணி மணக்கிறது. மகள்கள் குடும்பத்துடன் வந்துவிட்டார்கள். ஜும்மா முடிந்தது. இதோ

10

அவர்கள் இரண்டு கார்களில் அப்துல்லா வீட்டுக்கு புறப்படுகிறார்கள். மிகப்பெரிய பரக்கத்தையும் பெரும்புகழையும் அள்ளிவழங்கவரும் அல்லாஹ்வின் பிரதிநிதிகள்தான் வருகிறார்கள் என்பதை அப்துல்லாவும் கதிஜாவும் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

 

Series Navigation
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *