தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014
 thodu34
          நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி சென்றார்.சின்னப் பையனாக நான் மட்டும் கிராமத்தில் இருந்தேன்.
          விவசாயக் குடும்பம் என்பதால் குழந்தைப் பருவத்திலேயே வயல் வெளியிலும் களத்து மேட்டிலும் வளர்ந்துள்ளேன். நாற்றாங்காலில் முதன்முதலாக என்னுடைய கைகளில்தான் விதை நெல்லைத் தந்து நாற்றாங்காலில் விதைக்கச் சொல்வார்கள்.
          சில நாட்களில் தாத்தா, பாட்டி, அம்மா மூவரும் வயல் வெளிக்குப் போகும்போது என்னை உறவினர் வீட்டில் விட்டுச் செல்வார்கள்.
          வீட்டின் அருகிலேயே அற்புதநாதர் ஆலயம் இருந்தது. ஆலயத்தின் பின்புறம் கல்லறைத் தோட்டம். அங்கு வரிசை வரிசையாக சிலுவைகள் காணப்படும். கல்லறைத் தோட்டத்துக்கு அப்பால் நெடிதுயர்ந்த பனைமரங்கள் எல்லையாக அமைந்திருந்தன.
          பனைமரங்கள் காய்க்கும் பருவத்தில் குலை குலையாக பனங்காய்கள் கொண்டு வருவார்கள். அதைச் சீவி நொங்கு சாப்பிடுவது சுவையான அனுபவம். அதோடு பதநீர் விற்பவர்களும் வருவார்கள். அதுவும் குடிப்பதற்கு சுவையானதுதான்.
          சிறு பிள்ளைகளுக்கு பழுத்த பனம்பழம் மிகவும் பிடிக்கும். பழுத்த பழங்கள் மரத்திலிருந்து தானாக விழும்.
         கல்லறைத் தோட்டத்தில் இரவில் பனம்பழங்கள் விழுந்து கிடக்கும். அவற்றை எடுக்க சிறு பிள்ளைகள் அங்கு அதிகாலையிலேயே செல்வதுண்டு.
          நான் சில இரவுகளில் இஸ்ரவேல் தாத்தா வீட்டில் படுத்து தூங்குவேன். அவர் என்  பாட்டியின் தங்கையான நட்சத்திரம் பாட்டியின் கணவர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் என்னை அடிக்கடி அங்கேயே வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் நான் செல்லப் பிள்ளைதான்.
அவர்களின் வீடு ஆலயத்தின் எதிரிலேயே இருக்கும். ஒரு நாள் விடியுமுன் இருட்டில் பனம்பழம் பொறுக்க கல்லறைத் தோட்டத்திற்கு சென்றுவிட்டேன். அங்கு கிடைத்த ஒரு பனம்பழத்தை தாத்தாவின் கல்லறை மீது அமர்ந்து கடித்து சாப்பிட்டுள்ளேன்.
          ( தாத்தா உயிரோடு இருக்கும்போதே அவருக்கும் பாட்டிக்கும் ஒன்றாக சேர்த்து கல்லறை கட்டி வைத்துக்கொண்டார். அவருடைய இரு மகன்களும் மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இருந்ததால் அவர்கள் திரும்பி ஊர் வந்து கல்லறை கட்டுவார்களோ என்ற சந்தேகம் அவருக்கு! )
          காலையில் என்னை வீட்டில் காணவில்லை என்று அம்மா கூக்குரல் இட ஊரே ஒன்றுகூடி என்னைத் தேடியுள்ளது. கடைசியில் அங்கு மாடு ஒட்டி வந்த சிலர் என்னை வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். குழந்தைப் பருவத்தில் நான் செய்துள்ள இந்த வீரதீரச் செயலை என்னால் மறக்க முடியவில்லை.
          அதுபோல்தான் நான் பால் மறக்க பட்ட பாடும்! நான் மூன்று நான்கு வயது வரை அம்மாவிடம் பால் குடித்தேன். பள்ளிக்கு சென்று வந்தாலும் ” பால் குடுடி தரணியம்மா  ” என்று அடம் பிடிப்பேன். அம்மாவின் பெயர் தரணியம்மாள். அம்மாவும் என்னென்னெவோ வகையில் என்னை பால் மறக்க முயன்று பார்த்தார். வீட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு திறக்க மாட்டார். நான் விடாப்பிடியாக கதவைத் தட்டிக்கொண்டு கேவுவேன்.அக்கம் பக்கத்திலுள்ள பெண்கள ,” உன் அம்மாவுக்கு காயலாடா. ” என்று பொய் சொல்லி என்னை அழைத்துக்கொண்டு போய் இஸ்ரவேல் தாத்தா வீட்டில் விடுவார்கள். வேறு சில சமயங்களில் அம்மா எதையோ தடவிக் கொண்டு பால் தருவார். அது அதிகம் கசக்கும். தொடர்ந்து குடிக்க மாட்டேன். பால் மறக்கும் அந்த காலத்தில் நான் பெரும்பாலும் இஸ்ரவேல் தாத்தா வீட்டில்தான் தங்க வேண்டி வந்தது.
          அப்போது ஒரு சமயம் எங்கள் ஊரில் கழுதைப் பாலும் கிடைத்தது. அதைக் குடித்தால் நன்றாக படிப்பு வரும் என்று சொல்லி எனக்கு கழுதைப் பாலும் குடிக்கத் தந்தனர்! ( தாய்ப்பால், பசும்பால், கழுதைப்பால் என்று பாலுக்கு பஞ்சமில்லாத மழலைப் பருவம் அது! அதனால்தான் வள்ளுவரின் முப்பால் மீதும் பின்னாளில் ஆர்வம் கொண்டேனோ? )
          எனது ஆரம்பப் பள்ளி படிப்பு மிகவும் சுவையானது.
         காலையில் ஞானப்பாட்டு அல்லது கீர்த்தனை பாடுவோம். வேதாகமத்திலிருந்து ஒரு பகுதி வாசிப்போம். பின்பு ஜெபம் செய்வோம்.
          அதன் பின்பு ஆசிரியர் ஒவ்வொரு பிள்ளையையும் பார்த்து,பெயர் சொல்லி அழைத்து, ” உங்கள் வீட்டில் இரவு என்ன குழம்பு? ” என்று கேட்பார்.
அனேகமாக எல்லாருமே , ” கத்திரிக்காயும் கருவாடும் அய்யா. ” என்றுதான் பதில் சொல்வோம்!
வகுப்பு ஆசிரியரை நாங்கள்  ” தூங்கு மூஞ்சி வாத்தியார் ” என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அவர் வகுப்பு நேரத்தில்கூட பள்ளியில் படுத்து தூங்குவார். பள்ளி இன்ஸ்பெக்டர் வருவது தெரிந்தால் அவரை எழுப்பி விடுவோம். ஒரு சமயம் இன்ஸ்பெக்டர் மாறு வேடத்தில் வந்து விட்டார். அவர் நன்றாக மாட்டிக்கொண்டார்!
         ஆலயத்தின் முன்புறம் கிணறு தோண்டி நல்ல ஊற்று இருந்தது. எப்போதும் நீர் நிறைந்திருக்கும். நாங்கள் அதைச் சுற்றிலும் பாத்தி கட்டி தோட்டம் போட்டோம். அதில் பருத்தி செடிகள் வளர்த்தோம். அது பூ பூத்து பருத்தி காய்கள் காய்த்து அது நெற்றாகி வெடித்து பருத்தி துருத்தி வெளிவரும்போது நாங்கள் பறித்துக் கொள்வோம். பின்பு விதைகளை வெளியே எடுத்து விட்டு பஞ்சை தனியாக வைத்துக்கொள்வோம். நாங்கள் வைத்திருந்த சிறு நூல் நூற்கும் கைராட்டையால் நூல் நூற்போம். அதை நூல் கண்டில் சுற்றுவோம். நூலை ஆசிரியர் எடுத்துக்கொள்வார்.
          தோட்டம் போடுவதோடு மாலையில் ஆசிரியரின் வீட்டு வேலைகளும் செய்வோம். அவர் வளர்க்கும் கோழிகளின் கூடுகளை கூட்டி சுத்தம் செய்வோம். அவருடைய வீட்டின் அறைகளையும்பெருக்கி சுத்தம் செய்வோம். வீட்டு பத்திரங்களை ஆற்றுக்குக் கொண்டு சென்று சாம்பல் போட்டு துலக்கி கழுவி எடுத்து வருவோம். சிலவேளைகளில் பாத்திரம் தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விடும். அதறகு அடி வாங்குவோம்.
          அப்போது என்னோடு படித்தவர்களில் பால்பிள்ளை, சிவலிங்கம். கலியபெருமாள், அரசன், இராஜகிளி, கருணாகரம் ஆகியோர்தான் நினைவில் உள்ளனர்.
          நான் எட்டு வயதில் சிங்கப்பூர் செல்லும் வரை எனக்கு அப்பா யார் என்பதே தெரியாது. படத்தில் கூட அவரைப் பார்த்ததில்லை. எல்லாரும், ” உன் அப்பா மோரிசில் இருக்கார். ” என்பார்கள். மொரீசியஸ் நாட்டைதான் அவ்வாறு கூறியுள்ளனர்
          ஒரு நாள் பள்ளியின் எதிரே ஆலமரத்தடியில் ஒரு குதிரை வண்டி நின்றது. என்னிடம் கலியபெருமாள், ” டேய். உன் அப்பா வந்துவிட்டாரடா. ” என்று கூறினான். அவன் எப்போதும் ஏதாவது கிண்டல் பண்ணி பொய் சொல்லி அடி வாங்குவான். அதனால் அவனை நாங்கள் எல்லாரும்  ” மண்ணாங்கட்டி ” என்றுதான் கூபிடுவோம்.
          ” எங்கேடா என் அப்பா? வீட்டிலா? ” அவனிடம் கேட்டேன்.
          ” அந்த குதிரை வண்டியில் வந்திருக்கார். போய் பார். ” வண்டியைக் காட்டினான்.
          எனக்கு அப்பா நிறைய மிட்டாய் கொண்டு வந்திருப்பார் என்று ஆசையாக ஓடி  வண்டி அருகில்  நின்றேன்.  தலையில் முண்டாசு கட்டிய ஒரு முரட்டு மனிதர் வண்டிக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். குதிரையும் படுத்திருந்தது. அவர் விழிக்கும் வரை காத்திருந்தேன்
         விழித்தவர் என்னை முறைத்துப் பார்த்தார். கீழே இறங்கி முகத்தைக் கழுவி துண்டால் துடைத்துக்கொண்டார். குதிரையை வண்டியில் பூட்டினார். தட்டி விட்டதும் குதிரை கிளம்பிவிட்டது!
          எனக்கு வந்த அழுகையை அடக்க முடியவில்லை. மணாங்கட்டியும் மற்ற சிறுவர்களும் கைகொட்டிச் சிரித்தனர். அழுதுகொண்டே வீடு சென்று அம்மாவிடம்  சொன்னேன். அவர் உடனே மண்ணாங்கட்டியின் அம்மா கண்ணம்மாவிடம் முறையிட்டார். அன்று அவனுக்கு சரியான உதை விழுந்தது.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

  1. Avatar
    subrabharathimanian says:

    எல்லார் வாழ்க்கையும் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கின்றன. தொடருங்கள்

    சுப்ரபாரதிமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *