திறவுகோல்

0 minutes, 1 second Read
This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

துர்கேஸ்வரி தன் சீனக் கணவனைக் காதலித்துக் கொண்டிருந்த போது மிகவும் தான் சந்தோஷமாய் இருந்தாள். மென்மையான அவனின் குணமும், பிறரை, முக்கியமாய் பெண்களை மதிக்கும் அவனது தன்மையும் அவளை மிகவும் கவர்ந்தன. அம்மாவை அலட்சியமாய் நடத்திய அப்பாவைப் பார்த்தே வளர்ந்தவளை, அவனது சுபாவம் வீழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை.

அவனுடன் சாங்கி பீச், கேத்தே திரையரங்கம், கோப்பிக் கடை என்று சுற்றிய போது, பல தலைகள் இவர்களை நோக்கி திரும்பின. பொதுவில் இந்திய ஆண்களுடன் மற்ற இனப் பெண்களை ஓரளவிற்கு காண முடிந்த நாட்களில், சீன ஆணும் இந்திய பெண்ணுமாய் இவர்கள் வலம் வந்தது தனித்து தெரிந்திருக்கக் கூடும்.

வின்சென்ட்டை முதன்முதலாக அவள் சந்தித்தது ஒரு வாடிக்கையாளராக. இவள் காசாளராக பணி புரியும் பிரபல பேரங்காடிக்கு அடிக்கடி தன் தாயுடன் வந்து பொருட்கள் வாங்குபவனாக இருந்தான் அவன். ஒரு முறை இவள் பணி நேரம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்த போது அவன் தன் பணப்பையைத் தொலைத்துவிட்டு தேடியபடி இருந்தான். இங்கும் அங்கும் பதற்றத்தோடு அலைந்துக் கொண்டிருந்த அவனை விசாரித்து, வாடிக்கையாளர் சேவையில் புகார் செய்ய அழைத்துச் சென்றாள் துர்கேஸ்வரி. அன்றே அவனுடைய பணப்பை கிடைத்திருக்கிறது.

மறுநாள் அவளின் கவுண்டருக்கு வந்து நன்றி சொன்னான். அதன் பிறகு வரும்போதெல்லாம் அவளிடம் வந்தே பில் போடுபவனாக ஆனான். அவனுக்கு பில் போடும் ஓரிரு நிமிடங்கள் பேசுவது தான், அப்போது கூட அவனை காதலிப்போம் என்றெல்லாம் அவள் யோசித்துப் பார்த்ததில்லை. துர்கேஸ்வரி அழகி என்று சொல்லக் கூடிய ரகத்தில் சேர்த்தியில்லை என்றாலும் அசிங்கம் என்று கூறி ஒதுக்கிவிட முடியாதவளாகவும் இருந்தாள். ஒரு சாதாரண பெண்ணைப் போல தனக்கு வரப் போகும் கணவனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இருந்ததே தவிர அதை வின்சென்டோடு அவள் தொடர்பு படுத்திப் பார்த்ததில்லை.

சில மாதங்களுக்குப் பின், ஒரு முறை அவர்கள் ‘நார்த் பொய்ண்ட்’டில் எதிர்பாராமல் சந்தித்த போது ‘மெக் டொனால்ட்’ஸில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள். அவனுடன் பேசும் நிமிடங்கள் இவளுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாய் இருந்தது. அவனுக்கும் அப்படியே தோன்றியிருக்க வேண்டும். அதன் பிறகு ஓரிரண்டு முறை எதேச்சையாகவும் பிறகு திட்டமிட்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த வருடம் கிருஸ்துமஸ்ஸீற்கு இரண்டு நாட்களுக்கு முன், பேருந்து நிறுத்தத்தில் தன் காதலை, பூக்களோ பரிசுகளோ ஏதுமின்றி மிகச் சாதாரணமாக தெரிவித்தான் வின்சென்ட். அதைக் கேட்ட அந்த நொடி துர்கேஸீக்கு எதுவும் புரியவில்லை. ஆனந்த அதிர்ச்சியில் மனம் உறைந்து போயிருக்க வேண்டும். சட்டென்று யாரோ உடலிலிருந்த கனத்தையெல்லாம் உருவி விட்டது போல மிக லேசாக உணர்ந்தாள். தெரிந்திருந்த வார்த்தைகள் அனைத்தும் மறந்து போயிருந்தன. மூளை தனக்கு சம்பந்தமில்லாமல் வேறு ஒரு அலைவரிசையில் இயங்குவதை உணர்ந்தாள். அவனைப் பிறகு பார்ப்பதாக மட்டும் சொல்லி விட்டு வீடு திரும்பினாள்.

மனதில் அப்போது ஏற்பட்ட பரபரப்பு இந்த நிமிடமும் துர்கேஸீக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அன்று இரவு, மாலை இருவரும் சந்தித்ததை, ‘ஓல்ட் சாங் கீ’ யில் பொறித்த கோழி சாப்பிட்டதை, பின் ஒன்றாய் நடந்து வந்ததை, பேருந்து நிலையத்தில் நின்றதை, அவன் சில நிமிடங்கள் தயங்கியதை, பின் தன் காதலைச் சொன்னதை, அந்த நிமிடம் மனதில் பூத்த குதூகலத்தை, பலமுறை மனதிற்குள் முன்னும் பின்னுமாக ஓட்டிப் பார்த்தபடி இருந்தாள். உலகில் இதுவரை கிடைத்திராத அங்கீகாரம் அன்று அவளுக்கு கிட்டியிருந்தது. சிங்கப்பூரே அவளுக்காக படைக்கப் பட்டதாகவும், சுத்தமான சாலைகளும் உயர்ந்த கட்டிடங்களும் தனக்கே சொந்தம் என்றும் தோன்றியது. சாலைகளில் பாடி ஆடித் திரியும் தமிழின் முன்னணி கதாநாயகியாக தன்னை கற்பனை செய்துக் கொண்டாள். அது சுகமாயிருந்தது.

பிறகு தொடர்ந்த சந்திப்புகளும், திருமணமும் மிக மிக இன்பம் அளிக்கக் கூடிய நினைவுகளாய் மனதில் தங்கிப் போனது. அவன் தாயிடமிருந்தும் இவளுடைய பெற்றோரிடமுமிருந்தும் கிளம்பிய எதிர்ப்பு இவர்களைச் சலனப்படுத்தவில்லை.

திருமணத்திற்குப் பின் இருவரும் தனி வீட்டை வாடக்கைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். ஒருவர் மற்றவருக்காகவே வாழ்ந்த நாட்கள் அவை. வின்சென்ட்டின் சுவை அறிந்து சில்லி ப்ரானையும், சிக்கன் ரைஸையும் தானே செய்யக் கற்றுக் கொண்டாள் துர்கேஸ்வரி. அவனுக்காக சீன மொழி பயிலத் துவங்கினாள். அவன் இவளுக்காக லிட்டில் இந்தியாவில் மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தான். புடவையில் அவளைப் பார்த்து ரசித்தான். இவள் அவனோடு தேவாலயங்களுக்கு செல்லத் தொடங்கினாள். அவனும் இவளோடு கோயில்களுக்கு வந்தான். அவர்கள் சீனப்புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ் என்று அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுபவர்களாக இருந்தார்கள். மிக கவனமாக ஒருவரின் உணவுப் பழக்கம் அடுத்தவரின் உணர்வை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.

கருவுற்ற போது வின்சென்ட் அவளை மிக நன்றாக தாங்கினான். வீட்டிலிருந்த அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்தான். சமையலையும் விட்டுவைக்கவில்லை. மின்தூக்கியை அடைய அவள் ஒரு மாடி ஏற வேண்டி இருப்பதை எண்ணி மிகவும் கவலைப் பட்டான். துர்கேஸீக்கு அது மிகப் பெருமையாக இருந்தது. அதைத் தன் அம்மாவிடம் தொலைபேசியில் பூரிப்போடு பகிர்ந்துக் கொண்டாள். குழந்தை ஜாய் பிறந்த போது, இவளது பெற்றோர் மருத்துவமனையில் குழந்தையை பார்த்துவிட்டு சென்றார்கள். தொலைபேசியில் பாசத்தோடு பேசினாலும் ஏனோ இவளது வீட்டிற்கு வர அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

குழந்தை பிறந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக துர்கேஸ்வரியின் வாழ்க்கை மாறத் துவங்கியது. தாய் தந்தையராக வின்சென்ட் தம்பதியினரின் பொறுப்புகள் கூடிப் போயின. அப்போது ஏற்பட்ட அதிகப்படி செலவுகளுக்காக வின்சென்ட் கூடுதல் நேரம் பணிக்கு செல்லத் தொடங்கினான். இவர்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பின் ஜாயைப் பார்த்துக் கொள்வதற்காக அவளின் மாமியார் இவர்களின் வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் குழந்தைக்கு தானியக் கஞ்சி செய்து கொடுப்பதிலிருந்து இண்டு இடுக்கு விடாமல் பளபளவென்று வீட்டை சுத்தப் படுத்துவது வரை அனைத்தையும் பார்த்துக் கொண்டார். பொதுவாய் துர்கேஸ்வரி பணி முடிந்து வீடு திரும்பும் போது மாமியார் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சேனல் எட்டில் போடும் நாடகத்தில் ஆழ்ந்திருப்பார். சாப்பாட்டு மேசையில் இரவு உணவு மூடி வைக்கப்பட்டிருக்கும். தன் பங்கிற்கு வேலை எதுவும் செய்யாமல், மாமியார் செய்து வைத்த உணவைச் சாப்பிடுவது துர்கேஸ்வரிக்குள் ஒரு குற்றவுணர்ச்சியைத் தோற்றுவிக்கத் துவங்கியது.

குழந்தை ஜாய் சீனத்தில் சின்னச் சின்ன வார்த்தைகளைப் பேச மிக விரைவாய் கற்றுக் கொண்டாள். மழலையில் அவள் ‘ய்யே- ய்யே’ என்றும் ‘பு யாவ்’ என்றும் சொல்வதை இவள் ரசித்தாலும் மனதில் ஒரு சின்ன வலி எழத் தான் செய்தது. வீட்டில் தமிழ் பேச முடியாத ஆதங்கம் திருமணம் தொட்டே இவளின் அடிமனதில், சிலநாட்கள் தொடர்ந்து சோறு சாப்பிடாமல் இருந்தால் மனதில் தோன்றுமே ஓர் அரிப்பு, அது போல நெஞ்சின் ஓரத்தில் நமநமத்த படி ஒதுங்கியிருந்தது. இப்போது அது வெளியே தலைகாட்டத் தொடங்கியது. அந்த குறுகுறுப்பை அடக்க ஜாய்க்கு தமிழைச் சொல்லிக் கொடுக்க முயற்சித்தாள் துர்கேஸ்வரி.

பணிச்சுமைக் காரணமாக, குழந்தையுடன் செலவழிக்கும் கொஞ்சம் நேரத்தில் அவளுக்கு தமிழைப் புகட்டுவது எளிதானதாயில்லை. அம்மா, அப்பா போன்ற எளிய வார்த்தைகளை மட்டுமே ஜாய்க்கு கற்றுக்கொடுக்க முடிந்தது. பின் அந்த முயற்சியையும் கைவிட்டு ஆங்கிலத்திலேயே உரையாடத் தொடங்கினாள் அவள்.

பல்வேறு விஷயங்களில் துர்கேஸ்வரியால் மாமியாருடன் ஒத்துப்போக முடியவில்லை. அவளது மாமியார், சாப்பிடுவதற்கு முள்கத்தியைப் பயன்படுத்துவதை விட, சீன முறைப்படி இரு குச்சிகளால் உணவை எடுத்து உண்பதே சிறந்தது என்று நினைத்தார். துர்கேஸ்வரிக்கோ குச்சியால் உணவை உண்ணும் வித்தை அவ்வளவாய் பிடிபடவில்லை. இது போன்ற மேலும் சில விஷயங்களில் தன் மாமியார் பிடிவாதம் பிடிப்பதாய் அவளுக்கு தோன்றியது. வின்சென்டின் திருப்திக்காக மாமியாரின் மனம் கோணாமல் நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், அவரோடு மனப்பூர்வமாக ஒட்டமுடியாமல் தவித்தாள்.

அந்த முறை தீபாவளியின் போது குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்று வின்சென்ட் வீட்டில் தங்கிவிட, துர்கேஸ்வரி மட்டும் கோயிலுக்குச் சென்று வந்தாள். பட்டாசின் புகை தனக்கு ஒத்துக் கொள்ளாது என்று மாமியார் சொன்னதில் வழக்கமாய் கொளுத்தும் ஓரிரு மத்தாப்புகளையும் அந்த முறை கொளுத்தமுடியாமல் போனது. இவளுக்கு வின்சென்ட் மீது கோபம் வந்தது. தன் தாயுடன் சேர்ந்துக் கொண்டு அவன் தன்னை ஒதுக்குவதாக எண்ணத் தொடங்கினாள். அதன் எதிரொலியாக விடுமுறையின் போது வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்குமென்று, அந்த வருட கிருஸ்துமஸ்ஸின் போது வேலைக்குச் சென்று விட்டாள் அவள்.

அதன் பின் வின்சென்ட்டும் அவளும் பேசுவது வெகுவாய் குறைந்து போனது. வின்சென்ட்டின் தாய் தன் மகனுடன் பேசும் வேகமான சீனம் இவளுக்கு அரையும் குறையுமாகத் தான் புரிந்தது. சரளமாய் சீனம் பேச முடியாத தனக்கு முன் அவர்கள் இருவரும் அப்படி பேசுவது அவர்களது இங்கிதமற்ற தன்மையைக் காட்டுவதாக நினைத்தாள் துர்கேஸ்வரி. தான் சரியான கணவனைத் தேர்ந்தெடுக்கவில்லையோ என்ற சந்தேகம் அவளுக்கு அப்போது தான் முதன்முதலாக தோன்றியது.

அவளுக்கு தன் வீடே தன்னிடமிருந்து அன்னியப்பட்டு நிற்பது போல இருந்தது. வீடு திரும்பல் என்பதே அவளின் மனதிற்கு பிடிக்காத செயலாய் மாறிப்போனது. வின்சென்டும் அவளோடு இப்போதெல்லாம் முன் போல பேசுவதில்லை. வெகு நேரம் தொலைக்காட்சியில் சேனல் நியூஸ் ஏசியாவோ அல்லது எதையோ பார்த்துவிட்டு அவன் வரும் நேரம் இவள் உறங்கிவிடுபவளாகவோ அல்லது பேச்சைத் தவிர்பதற்காக கண்களை இறுக்க மூடி கிடப்பவளாகவோ மாறிப் போனாள். அவர்கள் அவசியமான சில வாக்கியங்களை, குறைந்த வார்த்தைகளில் பேசிக் கொள்பவர்களாக ஆகியிருந்தார்கள்.

இவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை குறைக்க அவன் எந்த முயற்சியையும் எடுக்காதது இவளுக்கு ஆதங்கமாய் இருந்தது. அவள் வரவை எதிர் நோக்கி தாவி வரும் ஜாய் மாட்டுமே வீட்டை நோக்கி அவளை இழுப்பவளாய் இருந்தாள். தன் தாய் திருமணத்திற்கு முன் தன்னிடம் சொன்னது போல, தன் மண வாழ்கை நிலைத்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவோ என்று வருந்தத் தொடங்கினாள் துர்கேஸ்வரி. விவாகரத்திற்காக தன் மனதைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் அவள்.

அடுத்து வந்த சீனப் பெருநாளின் நெருக்கத்தில் வீடு சிவப்பு நிறத்தில் களை கட்ட துவங்கியது. கடையிலிருந்து பொருட்கள் வாங்கி வருவதும் சமைப்பதுமாய் வீடு அமர்க்களப்பட்டது. மாமியார் தொலைப்பேசியில் தன் தோழியரோடு சத்தமாய் விவாதிப்பதும், தாயும் பிள்ளையும் தாழ்ந்த தொனியில் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் இவளுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. தன் உறவினர்களை அழைத்து கொண்டாட திட்டம் போடுவார்களாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.     தன் பணிக்கு செல்லும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தன் அறைக்குள் அடைந்து கிடக்கத் துவங்கினாள். திருமணத்திற்கு பிறகு விட்டுப் போன தன் உறவுகளை எண்ணி தனிமையில் வருந்துபவளாய் மாறினாள். மரியாதைக் குறைந்து விடும் என்று எண்ணியே தன் தாய் தந்தையர் ஒதுங்கியிருக்கக் கூடும் என்று அவளுக்கு தோன்றியது.

அந்த சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது வேலைக்கு வருவதாக பணியிடத்தில் ஒப்புக் கொண்டாள். வீட்டிலிருந்துக் கொண்டு மனதை அலைபாய விடுவதை விட வேலைக்கு செல்வது மேல் என்று அவளுக்கு தோன்றியது. பணிச்சுமையில் கவலைகளையேனும் சற்று நேரம் மறக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று கணக்கை சரி பார்த்து பணத்தை ஒப்படைத்து விட்டு வெளியே வந்த போது வின்சென்ட் வெளியே நின்றுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் இவள் சற்று திகைத்தாலும், ஆத்திரம் வந்தது. ஏன் அம்மாவின் பின்னே அலையாமல் இங்கே வந்தான் என்று கேட்டு சண்டையிடத் தோன்றியது. எதுவும் சொல்லாமல் அவனோடு நடந்தாள். சாலையைக் கடந்து எதிரே இருந்த கோப்பிக் கடையை அடையும் போது வானம் மிக வேகமாய் கருக்கத் தொடங்கியிருந்தது.

கோப்பி கடையில் அவனுடைய இருப்பை அலட்சியப்படுத்தி, கைதொலைபேசியை ஆராய்ந்தபடியிருந்தாள் துர்கேஸ்வரி. வின்சென்ட் விவாகரத்தைப் பற்றி பேச தான் இங்கே வந்திருக்க வேண்டும் என்று அவளுக்கு நிச்சயமாய் தோன்றியது. தீவிரமாய் யோசித்தபடியும், விரல்களில் சொடக்கு எடுத்த படியும் இருந்த அவனது உடல்மொழி அதை உறுதிபடுத்துவதாய் இருந்தது. சற்று தயக்கத்தோடு இவளைப் பார்த்த படியிருந்த வின்செண்ட் எழுந்துச் சென்று இந்தியன் முஸ்லிம் கடையிலிருந்து இவளுக்குப் பிடித்த, மிளகாய் சேர்த்த ‘நாஸி கோரீங்’கை வாங்கி, வந்து மேசையில் இவளுக்கு முன்னால் வைத்தான். அதை நிராகரிப்பதா அல்லது சாப்பிடுவதா என்று சில நொடிகள் யோசித்துவிட்டு ஸ்பூனை எடுக்க இவள் கையை நீட்டிய போது இவளின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

‘வாட் ஹேப்பண்ட் துர்கேஸ்?’ என்றான்.

அந்த எதிர்பாரா நிகழ்வில் சட்டென்று திடுக்கிட்டாள் துர்கேஸ்வரி. அவளது கண்கள் கலங்கிப் போயின. அந்த நொடி அவன் மீதிருந்த கோபங்கள் அனைத்தும் கரைந்து போனது. தான் முதலில் அவனோடு பேச முயற்சிக்காமல் மனதைப் பூட்டிக் கொண்டு, விவாகரத்து வரை கற்பனை செய்து கொண்டது, அவளுள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. அவள் கண்களில் அனிச்சையாய் நீர் வழிந்தது.

அந்த சீனப் புத்தாண்டின் போது துர்கேஸ்வரியின் தாயும் தந்தையும், மாமியாரின் பிரத்யேக அழைப்பின் பேரில் விருந்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கென்று தனியாக முள்கத்தியும் கரண்டியும் வைத்து, உணவை அவர்களுக்கு பறிமாறினார் மாமியார். உணவிற்குப் பின் ஜாயுடன் தமிழில் பேசி விளையாடிக் கொண்டிருந்த தன் பெற்றோர்களைப் பார்த்துக் கொண்டிருந்த துர்கேஸ்வரிக்கு மாமியார் மற்றும் கணவன் மீது மரியாதையும், தன் திருமணத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படத் துவங்கியது.

‘ய்யே –ய்யே’ – தாத்தா

‘பு யாவ்’ – வேண்டாம்

 

 

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

ஹேமா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *