முத்தொள்ளாயிரத்தில் மறம்

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் து​றைத்த​லைவர்,  மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

  1. Mail:Malar.sethu@gmail.com

சங்க இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் தகுதி வாய்ந்தது முத்தொள்ளாயிரம்;. வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட முத்தொள்ளாயிரம்; சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலாசிரியர் இந்நூலை யாத்துள்ளார்.

அகம் புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் கால ​வெள்;ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின் வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எண் செய்யுள் சிற்றிலக்கியம்

முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயரில் உள்ள தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் தமிழில் பல இருந்தன என்று அறிகிறோம். ‘வச்சத் தொள்ளாயிரம்’‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்கள் பற்றிய குறிப்பினை இலக்கண உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது. தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.

“ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே

சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்” (இ.வி.பாட்டியல், நூ.88)

 

“ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை

யிசைத்து மெண்ணாற் பெயர் பெற

ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்

எண்செய்யு ளாகு மன்றே”(பிரபந்த தீபிகை, நூ.14)

 

இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில் “பாட்டுடைத்தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் காட்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79)

 

பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபு உண்டென்பதும் அத்தகு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.

மரபாகப் பாடப்படும் இலக்கியவகை அல்லாது புதிதாகப் புனைந்து பாடப்படும் இலக்கிய வகையைத் தொல்காப்பியர் விருந்து என்று குறிப்பிடுவார்.

“விருந்தே தானும்

புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” (தொல். செய்யுளியல் நூ. 551)

 

பேராசிரியர் இந்நூற்பா உரையில் விருந்து இலக்கியவகை குறித்து விளக்கமளிக்கையில், “புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க” என்று எழுதியுள்ளதனால் முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.

 

கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை

முத்தொள்ளாயிரம் கால வௌ;ளத்தில் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று என்றாலும், புறத்திரட்டு என்ற நூலின் வழியாகவும் (108 பாடல்கள்) உரையாசிரியர்களின் இலக்கண உரைகளின் வழியாகவும் நூலின் ஒரு சிறு பகுதியேனும் நமக்குக் கிடைத்திருப்பது உண்மையில் ஓர் அருமைப்பாடுடைய நிகழ்வே. இப்பொழுது முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று நமக்குக் கிடைப்பன நூற்று முப்பது பாடல்களேயாகும். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெடுக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என்ற யூகத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும்.

முத்தொள்ளாயிரத்தை முதன் முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவர் இரா.இராகவய்யங்கார். 1905-ஆம் ஆண்டில் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். ரசிகமணி டி.கே.சி.அவர்கள் தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே பதிப்பித்தார். 1946 – ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவர் பதிப்பித்தப் பாடல்கள் குறித்து முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னர்ப் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்தசான்றோர் அந்நூலின்கண் இடையிடையே மிளிர வைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று அவற்றைப் பயின்று இன்பந் துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும்பேறும் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து செல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பினவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சேர்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின. (சேதுரகுநாதன், முன்னுரை, ப.6)

என்கிறார் முத்தொள்ளாயிர உரையாசிரியர் சேதுரகுநாதன் அவர்கள். அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல் – 1 பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46 சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

தொள்ளாயிரமா? மூன்று தொள்ளாயிரமா?

இன்றைக்கு முத்தொள்ளாயிரம் நூல் என்றவகையில் நமக்குக் கிடைப்பன 130 பாடல்கள் என்றாலும் முழுநூல் பாடல்களின் எண்ணிக்கை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயர் மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும் என்பார் சிலர். அதாவது சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் என்பது அவர்கள் கருத்து. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களும் தொடக்கத்தில் இக்கருத்தினராயிருந்து பின்னர் இக்கருத்தினை மறுத்துரைக்கின்றார்.

எண் செய்யுள் என்ற இலக்கிய வகையை விளக்கும் பாட்டியல் உரையாசிரியரும் பிரபந்ததீபிகையும் ‘ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல் எண்செய்யுளாகும்’ என்று பேரெல்லையை வரையறுத்துச் சொல்லியிருப்பதனால் முத்தொள்ளாயிரம் என்ற எண் செய்யுள் ஆயிரம் என்ற பேரெல்லையைக் கடந்து 2700 பாடல்களால் பாடப்பட்டது என்பது பொருந்தாது என்றும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மொத்தம் தொள்ளாயிரமே என்றும் மூன்று வகைப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள் கொள்ளலே பொருந்துமென்றும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு செய்யுட்களாக முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் வையாபுரிப்பிள்ளை கருதுகின்றார். (இலக்கிய தீபம், ப.179)

இக்கருத்தே வலிமையுடையது. ஏனெனில் 2700 பாடல்களால் ஒரு சிற்றிலக்கியம் பாடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதோடு வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலான நூல்களும் தொள்ளாயிரம் என்ற எண்ணால் பெயர் பெற்றிருத்தலை நோக்க முத்தொள்ளாயிரம் மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியமே என்பது வெளிப்படை.

முத்தொள்ளாயிரத்தின் காலம்

முத்தொள்ளாயிரத்தை முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இரா. இராகவய்யங்கார் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பழந்தமிழ் நூல் என்ற கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள். தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தைப் பல இடங்களில் சான்று காட்டி உரை வரைந்துள்ளமையை நோக்க இடைக்காலத்தில் முத்தொள்ளாயிரம் தமிழறிஞர்களிடையே பெரு வழக்காகப் பயின்று வந்துள்ளமையை உணர முடிகின்றது.

முத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அல்லது அதன் பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.

‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வு செய்யும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம் பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. இதற்குரிய காரணங்கள் ஆராயப்பட வேண்டியவையாகும்.

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்

முழுநூல் நமக்குக் கிடைக்காத காரணத்தால் முத்தொள்ளாயிர நூலின் ஆசிரியர் பற்றி ஏதும் அறிய முடியவில்லை. உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தை மேற்கோள் காட்டும் சமயங்களில் கூட நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல். நூற்பெயரை மட்டுமே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நோக்கும்பொழுது நூல் கிடைத்த காலத்திலேயே கூட நூலாசிரியர் பெயர் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போயிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சைவ சித்தாந்தநூற் பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த சேதுரகுநாதன் அவர்கள் தம் உரைநூலின் முன்னுரையில் முத்தொள்ளாயிரத்தின் நூலாசிரியர் யாராயிருக்கக் கூடும் என்று ஓர் ஒப்பியல் ஆய்வினை நிகழ்த்தி, முத்தொள்ளாயிர நூலுக்கும் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது ஆகிய இரு நூல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள் பலவற்றையும் எடுத்துக்காட்டி மேற்குறிப்பிட்ட இரு நூல்களின் ஆசிரியராகிய நக்கீரதேவநாயனாரே முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதுகின்றார். சேதுரகுநாதன் காட்டிய ஒப்புமைப் பகுதிகள் உண்மையில் மிகுந்த வியப்பளிக்கக் கூடிய விதத்தில் ஒத்து அமைகின்றன என்றாலும் இக்கருத்தினை முடிந்த முடிபாக ஏற்றுக்கொள்ளுதல் எளிதன்று.

தமிழகத்தில் மூவேந்தர்களும் எந்தக் காலத்திலும் இணைந்து செயல்படாத ஒரு வரலாற்றுச் சூழலில் மூவேந்தர்களையும் ஒத்த நிலையில் இணைத்துப் பாட்டுடைத் தலைவர்களாக்கி ஓர் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற முத்தொள்ளாயிர ஆசிரியரின் பெருவிருப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் உருவாக்கிக் காட்டிய ஒன்றுபட்ட தமிழகம் என்ற பாதையில் புதுநடை போட்ட பெருமை இந்நூலாசிரியருக்கு உண்டு. மூவேந்தர்களைக் குறிப்பிடும் போதும் அவர்களின் வெற்றியைக் குறிப்பிடும் போதும் பகைவர்கள் மற்றும் சிற்றரசர்களைக் குறிப்பிடும் போதும் வரலாற்று அடையாளங்கள் தோன்றாமல் பொதுப் பெயர்களையே கையாண்டு நூலை அமைத்துள்ள நூலாசிரியரின் திறம் அவரின் தமிழ்நிலப் பொதுநோக்கைப் புலப்படுத்துகின்றது.

மூவேந்தர்களும் வலிமையிழந்து அந்நியர் ஆட்சியில் கீழ்நிலை உற்ற காலத்தில் தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது. முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள. “மாறனை இன்தமிழால் யாம்பாடும் பாட்டு” (முத். பா.2) “பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்” (முத். பா.5) “தண்படா யானை தமிழ்நர்பெருமாற்கென்” (முத். பா.32) முதலான பகுதிகள் இக்கருத்திற்கு அரண் சேர்ப்பனவாக அமைந்துமை கண்கூடு.

நூலாசிரியர் சமயம்

முத்தொள்ளாயிர நூலாசிரியர் யார்? என்பது தெரியவில்லை என்றாலும் அவரின் சமயம் இன்னது என்று அறிவதற்கான சான்று நூலில் வெளிப்படையாகவே அமைந்துள்ளது.

“மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனைப் -பின்னரும்

ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்

ஊர்திரைநீர் வேலி யுலகு” (முத். பா.1)

 

என்ற பாடல் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானை வாழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இக்கடவுள் வாழ்த்துப்பாடலை நூலின் காப்புச் செய்யுளாகப் பாடிய முத்தொள்ளாயிர நூலாசிரியர் சைவ சமயத்தினர் என்பது வெளிப்படையாகிறது.

முத்தொள்ளாயிரத்தின் பாடுபொருள்

சங்கத் தமிழ் மரபு பாடுபொருளை அகம் புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. முத்தொள்ளாயிரமும் சங்கத் தமிழ் மரபைப் பின்பற்றி அகம் புறம் என்ற இரண்டு பொருண்மையிலேயே அமைந்து சிறக்கின்றது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன.

புறம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரிதும் பழைய புறப்பொருள் மரபினைச் சார்ந்தே அமைகின்றன. பாடல்களின் வெளிப்பாட்டுப்பாங்கு முத்தொள்ளாயிரத்திற்கே உரிய தனிச்சிறப்போடு வெளிப்படுகின்றது. திணை துறை முதலான பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்தித் திருவள்ளுவர் அகப்பாடல்களை அமைத்தநெறி போன்று முத்தொள்ளாயிர ஆசிரியர் திணை துறைப் பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்திப் புறப்பாடல்களை அமைத்துக் காட்டுகின்றார். இப்புதிய மரபு முத்தொள்ளாயிரப் புறப்பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றது.

முத்தொள்ளாயிரத்தில் மறம்

மறம் என்பது வீரம் என்று பொருள்படும். மூவேந்தர;களின் வீரம் அவர;களது படைகளது வீரம் குதிரை யானைகளின் வீரம் எனும் நிலையில் இம்மறம் பற்றிய பாடல்கள் முத்தொள்ளாயிரத்திலிடம் பெற்றுள்ளன. மூவேந்தர;களின் வீரம் குறித்த செய்திகள் 38 பாடல்களில்  இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேர மன்னனின் வீரம் 7 பாடல்களிலும் சோழ மன்னனின் வீரம் 15 பாடல்களிலும் பாண்டிய மன்னனின் வீரம் 16 பாடல்களிலும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

சேர மன்னனின் வீரம்

சேர மன்னனைச் சிறப்பித்துப் பாடும் பாக்களில், ‘கொல்லியர்; கோன் சேரன் கோதை(1) பூழியர்; கோன்(7) முசிறியார்; கோமான்(9) மாந்தைக் கோ(11) குடநாடன் வஞ்சிக்கோமான்(18) சேரலர்; கோன்(9) வயமான் தேர்;க் கோதை, பூழியன் கடல்தானைக் கோதை, அலங்குதார;க் கோதை, வெஞ்சின வேல்க் கோதை, வஞ்சிக் கோமான், என்னும் பெயர்;கள் சேரனைக் குறித்து வழங்கப்படுகின்றன. சேர மன்னர;கள் ஆண்ட பகுதிகளில் இடம்பெற்றிருந்த கொல்லிமலை(1) வஞ்சி நாடு(4) மாந்தை நகர்;(15) குடநாடு(15) ஆகிய நகரங்களும் நாடுகளும் சிறப்பிக்கப்படுகின்றன.

சேரனின் வீரத்தைப் பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் சேரனை கொல்லியர்; கோன்(2) நச்சிலைவேற் கோதை(3) முசிறியார்; கோமான்(9) வானவன்(5) பகையடு தோட்கோதை(8) என அடைமொழியுடன் குறிப்பிடுகிறார்;. இவ்வடை மொழித் தொடர்;கள் சேரனின் வலிமையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

சேரனின் படைவலிமை

சேரன் மிகுந்த படைவலிமை உடையவன். தம்மை எதிர;த்துப் படை நடத்திப் போர;புரிய வந்தோரை வெற்றிகள் கண்டு வாகை சூடியவன். சேரனை எதிர;த்து நின்று போர்;புரிய இயலாமல் பல நாட்டு மன்னர்;களும் சேரனுக்குத் திறை செலுத்திப் பணிந்து வணங்கினர்;. சேரனைப் பணிந்து நின்ற பகை நாட்டு மன்னர்;களைக் கண்ட புலவர்; சேரனை நிலவாகவும், அவனை வந்தடைந்த மன்னர்;களை நட்சத்திரங்களாகவும் உவமித்து வானுலக்கிற்கு மண்ணுலகம் ஒப்புமையாகிறது என்று கூறுகிறார;. இதனை,

‘‘வானிற்கு வையகம் வென்றது வானத்து

மீனிற்கு அனையார்; மறமன்னர்; – வானத்து

மீன்சேர்; மதியனையான் விண்ணுயர்; கொல்லியர்;

கோன்சேரன் கோதையென் பான்’(1)

 

என்ற பாடலால் அறியலாம்.

 

மாமிச மணமும் சந்தன மணமும்

 

அரும்புகள் மலர;ந்திருக்கும் மாலையை அணிந்தவனும் கோதை என்று அழைக்கப்படும் சேரமன்னன் பகைவர;களின் மேல் எறிந்த வேலின் கைப் பிடியில் சந்தன மணமும் அதன் நுனிப் பகுதி மாமிசத்தின் மணமும் கலந்து வீசும் அதனால் ஒரு புறம் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கும். மறு புறத்தில் நரியானது மாமிசத்தைத் தின்று மகிழ்ந்திருக்கும் என்பதை,

 

‘‘அரும்பவிழ்தார்;க் கோதை யரசெறிந்த வௌ;வேல்

பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் – சுரும்பொடு

வண்டாடும் பக்கமும் உண்டு குறுநரி

கொண்டாடும் பக்கமும் உண்டு”(2)

 

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.

 

வான வில்லும் சேரன் வில்லும்

 

சேரனுக்கு அடிபணிந்து திறை செலுத்தினால்தான் சிற்றரசர்;களும் மற்ற அரசர்;களும் அமைதியாக அரசாட்சி செய்ய முடியும் என்பதை,

 

‘‘பல்யானை மன்னர்; படுதிறை தந்துய்ம்மின்

மல்லல் நெடுமதில் வாங்குவசிற் பூட்டுமின்

வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்

வில்லெழுதி வாழ்வர்; விசும்பு”(5)

 

என ஆசிரியர்; கூறுகிறார்;.

 

பகை மன்னர்;களே! சேரனுக்குக் கொடுக்க வேண்டிய திறைப் பொருளைக் கொடுத்துவிட்டுச் சேரனின் வில்க்கொடியை உங்கள் கோட்டை மதிலில் பறக்க விடுங்கள். அதனால் உயிர்; பிழைப்பீர்;கள். வானுலகில் வாழும் தேவர்;கள் கூட சேரனிடம் அச்சம் கொண்டு அவனுடைய வில்லை வானத்தில் தோன்ற வைத்து வாழ்கின்றனர்;. வானவில் வானில் தோன்றுவது இயற்கை. அவ்வியற்கையை கற்பனை கலந்து எடுத்துரைத்து சேரனின் வீரத்தை எடுத்துரைப்பதற்கு ஆசிரியர்; பயன்படுத்தியிருப்பது போற்றுதற்குரியது.

 

யானையின் வீரம்

 

சேரனின் யானைப் படை வலிமையானது. அதுதான் கொண்ட சினத்தால் மன்னர்;களின் வெண்கொற்றக் குடையைச் சிதைத்து அழித்தது. பின்னர்; அதன் சினம் அடங்கவில்லை. வானத்தைப் பார்;க்கிறது. அங்கு காணப்படும் நிலவையும் வெண்கொற்றக் குடை என்று நினைத்துத் தன்னுடைய கையை நிலவை நோக்கி நீட்டுகிறது. இத்தகைய இயைபுக் கற்பனையை

 

“வீறுசால் மன்னர்; விரிதாம வெண்குடையைப்

பாற வெறிந்த வரிசயத்தால் – தேறாது

செங்கண்மாக் கோதை சினவெங் களியானை

திங்கள்மேல் நீட்டுந்தன் கை”(6)

 

என்று முத்தொள்ளாயிரம் எடுத்தியம்புகிறது. யானை சினத்தால் வானை நோக்கித் துதிக்கையை உயர்;த்திப் பிளிறும். அதனை நிலவைப் பிடித்து அழிப்பதற்காக நீட்டுவதாகக் கற்பனையை இயைத்துப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது.

 

போர்;க்களக் காட்சி

 

சேரன் போர்; செய்த போர;க்களத்தில் பல மன்னர;களின் உடல்கள் சிதைந்து கிடக்கின்றது. மரகதக் கல் பதித்துச் செய்த பூண் எனும் அணிகலன் அணிந்த மன்னர்;களின் கையை அணிகலனோடு நரி உண்ணுவதால் அவற்றின் வாயிலிருந்து குருதி பெருக வலி தாளாது சிறு நரிகள் தங்களுடைய தாய் நரிகளை ஊளையிட்டு அழைக்கும் என்று சேரனின் போர்;க்களக் காட்சியினை முத்தொள்ளாயிரம் எடுத்தியம்புகின்றது. இப்பாடலில்,

 

‘‘துயருழந்து

புண்ணுற்று  அழைக்கும் குறுநரித்தே பூழியனைக்

கண்ணுற்று வீழ்ந்தார்; களம்’ (7)

 

என எதுகைத் தொடை நயம் அமைந்து பாடலைச் சிறப்பிக்கின்றது.

 

பகைவர்;களின் நிலை

 

சேரனின் கண்களைக் கோபத்தினால் சிவக்கச் செய்த பகைவர்;களின் நாடுகள் தாவரங்கள் கருகி முள்ளிச் செடிகள் முளைக்கும் நரிகள் டிங்கும் சுற்றித் திரியும். பின்னர்; அந்த முள்ளிச் செடிகள் கூடக் கருகிக் காணாமல் போயின.

 

“கரிபரந் தெங்கும் கடுமுள்ளி பம்பி

நரிபரந்து நாற்றிசையுங் கூற” (8)

 

என்று முத்தொள்ளாயிர ஆசிரியர்; குறிப்பிடுகின்றார்;.

 

சேரன் போர்; செய்வதற்கு முன்னால் வளமாக இருந்த நாடுகள் எல்லாம் போரின் பின்னால் அறுகம்புற்கள் சுரைக் கொடி வேளைச் செடிகள் முதலியவை எங்கும் முளைத்துக் கொடியோடிக் கிடந்ததால் எது ஊர், எது நாடு என்று பிரித்துப் பார்;க்க இயலாதவாறு விளங்கின என்று சேர மன்னனின் சிறப்பினை எடுத்துக் கூறுகிறார்;.

 

சோழனின் வீரம்

 

காவிரி பாய்ந்து வளம் செய்யும் சோழ நாட்டை உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழர்;கள் ஆண்டனர்;. வளமிகு நாட்டை ஆண்ட சோழ மன்னனை, புனல் நீர்;நாடன்(25) புனல் நாடன்(26) கோக்கிள்ளி(27) உறந்தையர்; கோன்(29) மானவேல் கிள்ளி(32) காய்சின வேல் கிள்ளி(33) கல்லார்; தோட்கிள்ளி(34) சோழியர்; கோன்(35) இலங்கிளை வேல் கிள்ளி(36) கொற்ற போர்;க்கிள்ளி(37) செம்பன் சேய்(38) செம்பியன்(39) பொன்னி வளநாடன்(40) நீர்; நாடன்(41) பூங்காவிரி நாடன்(42) தென் உறந்தையர்; பெருமான்(43) சோழன்(49) தண்தார்;க்கிள்ளி(53) சென்னி இளவளவன்(54) அலங்குதார்;க்கிள்ளி(56) செங்கோல் வளவன்(57) காவிரி நீர்;நாடன்(58) அலங்குதார்;ச் செம்பியன்(60) காமரு தோள் கிள்ளி(62) வண்புனல் நீர்; நாடன்(63) கடுமான் தேர்;க் கிள்ளி(64) நெடுவேல் நலங்கிள்ளி(65) புனைகழல் கால் கிள்ளி(66) கோழி உடையான் மகன்(67) கல்லுயர்; தோட் கிள்ளி(69) ஆகிய பெயர்;களால் முத்தொள்ளாயிரம் சுட்டுகிறது.

 

சோழனின் வீரத்தை முத்தொள்ளாயிரம் 15(26 27 29 30 31 32 33 34 35 36 38 39 40 41 42)  பாடல்களில் தெளிவுறுத்துகிறது.

 

சோழ மன்னன் தன்னுடைய நல்லாட்சியினால் உலகம் முழுமைக்கும் பாதுகாவலனாக விளங்கியவன். அவன் தன் மீது பகைவர்;கள் எறிந்த வேலினைத் தன்னுடைய மார;பில் தாங்கியும் பகைவர்;கள் மேல் தன் வேலினை எய்தும் போர்;புரிந்து இப்பூமியை வெற்றி கொண்டான். ஆனால் திருமாலோ மாவலியிடம் சென்று இரந்து மூன்றடி மண் பெற்றான். சோழன் போர்; புரிந்து பெற்றான். திருமால் இரந்து பெற்றான் எனத் திருமாலோடு சோழனை

 

‘‘புனல் நாடர்; கோமானும் பூந்துழாய் மாலும்

வினைவகையில் வேறுபடுவர; – புனல் நாடன்

ஏற்றெறிந்து மாற்றலர;பால் எய்திய பார்; மாயவன்

ஏற்றிரந்து கொண்டமையி னால்” (26)

 

என்று இப்பாடல் ஒப்பிட்டுக் கூறுகிறது. இப்பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள,

 

‘‘பாரி பாரி என்று பலவேத்தி

ஒருவர; புகழ்வர; செந்நாப்புலவர;

பாரி ஒருவனும் அல்லன் மாரியும்

உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே”

 

என்ற பாடலுடன் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது. பாரியை மழையோடு ஒப்பிடுவது போன்று சோழனைத் திருமாலோடு ஆசிரியர்; ஒப்பிட்டுப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சோழனின் படைப்பெருக்கம்

 

சோழநாடு நெல்வளம் மட்டுமல்லாது படை வளமும் மிக்கது. நீர் வளம் மிக்க சோழனுடைய நாட்டில் அவனின் வெற்றி ஒலியான போர்;க்கள ஒலிக்கும் நெல்போர்; அமைப்போர்; எழுப்பும் நெற்போர்;க் கள ஒலிக்கும் குறைவில்லை என்பதை,

 

‘‘காவல் உழவர்; களத்தகத்துப் போரேறி

நாவலோஓ வென்றழைக்கும் நாளோதை – காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி நாடு’’ (27)

 

என உவமைச் சிறப்புடன் விளக்குகிறது.

 

நெற்களத்தைக் காக்கின்ற உழவர்;கள் தொழில் செய்யும்போது உழவர்;களை நாவலோ என்று அழைக்கும் ஒலியானது போர்;க்களத்தில் போர்; வீரர்;கள் போர்; வீரர்;;களை அழைக்கும் ஒலியைப் போன்று விளங்கியதாக இப்பாடலில் ஆசிரியர்; குறிப்பிடுகின்றார்;. போர்; வீரர்;கள் எழுப்பும் ஒலி இயமனின் ஒலியைப் போல் விளங்கியது என்பதன் மூலம் படைவீரர்;களின் வலிமையை இப்பாடல் தெளிவுறுத்துகின்றது.

 

சோழனின் வீரம்

 

சோழனின் அரண்மனை வாயிலில் திறை செலுத்தும் மன்னர்;கள் கூட்டம் கூட்டமாக வந்து நிறைந்திருந்தனர்;. அவர்;கள் சோழ மன்னனின் கால்களில் மணி முடியுடன் விழுந்து பணிவதால் அவனுடைய பாதங்கள் மணி முடிகள் அடுத்துப் புண்பட்டுவிட்டன. அதனால் நேற்றுத் திறை செலுத்த வேண்டியவர்;கள் இன்னும் திறை செலுத்தாமல் இருக்கிறார்;கள் அதனால் திறை செலுத்த வந்திருக்கும் மன்னர்;களே பொறுத்திருந்து திறை செலுத்துங்கள் என்று மன்னர்;களுக்கு அறிவுரை கூறுவது போல் (29) சோழனின் வீரத்தை முத்தொள்ளாயிரம் எடுத்துரைக்கின்றது.

 

போர்;க்களக் காட்சி

 

சோழன் போர்; செய்த போர்;க்களத்தில் உடைந்த மண்டை ஓடுகளையும் சிதறிய மூளையினையும் தசைகளையும் நிணத்தையும் எலும்புகளையும் பெருகி ஓடும் குருதி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு பேய்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்தன. சில பேய்கள் பகைநாட்டு மன்னர்;களின் மண்டை ஓடுகளில் மூளைகளை நெய்யாக இட்டுக் குடல்களைத் திரியாகக் கொண்டு விளக்கெரித்தன.

 

மேலும் சோழன் போர்; செய்ததால் கருவுற்ற பெண்கள் போர்; நடக்கும் பகுதியை விட்டுக் காடுகளில் தஞ்சம் புகுந்தனர்;. அங்கு குழந்தைகளைப் பெற்றுச் சருகில் படுக்கச் செய்து அதனைத் தூங்க வைத்தனர்;. அக்குழந்தைகளுக்குக் கூகை குழறியே தாலாட்டுப் பாடியது. அதனைக் கேட்டு அக்குழந்தை உறங்கியது என்பதை

 

‘‘முடித்தலை ​வெள்;ளோட்டு மூளை நெய்யாகத்

துடித்த குடர்; திரியா மாட்டி – எடுத்தடுத்துப்

பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்

சேஎய் பொருத களம்” (38).

 

‘‘வரியிளஞ் செங்காற் குழவி அரையிரவின்

ஊமன் பாராட்ட உறங்கிற்றே செம்பியன்றன்

நாமம் பாராட்டாதார்; நாடு’’ (39)

 

எனும் பாடல்கள் மொழிகின்றன. இக்காட்சிகள் நமக்கு ஜெயங்கொண்டார்; இயற்றிய கலிங்கத்துப் பாரணியிலிடம்பெறும் பேயின் செயல்களை நினைவுறுத்துவனவாக உள்ளன.

 

சோழனின் படைகளின் வீரம்

 

சோழனின் கையிலுள்ள வேலின் ஒளியையும் அவனது படைகள் செய்கின்ற போரினையும் கண்ட பகை மன்னர்;களின் கைகள் அச்சத்தினால் தாமாகவே குறியும். அவ்வாறு குவியும் கைகள் அளவுக்கதிகமான தாமரை மலர்;கள் குவிவதை நினைவுறுத்துவதாக உள்ளது. மன்னர்;களின் குவியும் கைகளுக்கு ‘‘அரவிந்த நூறாயிரம்(40)’’ என தாமரை மலர்;களை உவமையாகக் கூறியிருப்பது சிறப்புடையதாகும்.

 

போர்; செய்வதற்காகச் சோழனின் யானைகளின் கால்களில் வீரக் கழல்கள் அணியப் பெற்றபோதே பகைவர்;களின் பாதங்களிலும் விலங்கிடப்பட்டன(42). சோழன் பகை முடித்து வெற்றி பெற்றதும் பெருமைகளால் போர்;த்திக் கொள்வதும் தோள்களால் தாங்கிக் கொள்வதும் நாட்டைக் காப்பதும் திருமால் தன் காலடியினால் அளந்த ஓரடியிலான நிலவுலகையே ஆகும். திருமால் எந்த முயற்சியுமின்றி நிலத்தை அளந்தார்;. சோழனோ தன் முயற்சியின் திறத்தால் வெற்றி பெற்றான்(41) என சோழனின் வெற்றிச் சிறப்பு எடுத்தியம்பப்படுகிறது.

 

“போர்;வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்;த்ததூஉம்

தார்;மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம் – நீர்;நாடன்

தேரடிக்கூர்; வெம்படையால்க் காப்பதூஉம் செங்கண்மால்

ஓரடிக் கீழ்வைத்த உலகு”(41)

 

என்ற இப்பாடலில் திருமாலின் வாமன அவதாரத் தொன்மக் கதையைக் கொண்டு சோழனின் பெருமையை விளக்குவது சிறப்பிற்குரியது.

 

குதிரையின் வீரம்

 

சோழன் மிகச் சிறந்த குதிரைப் படைகளை உடையவன். அவனது குதிரைகள் போர;க்களத்தில் மிகுந்த வீரத்துடன் போரிட்டன. அவை காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மை கொண்டன. குதிரைகள் தங்களது கால்களால் பகை நாட்டு மன்னர்;களின் மார்;பில் உதைத்தன. அதனால் மணிமுடியுடன் மன்னர்;கள் தரையில் விழுந்தனர்;. கீழே விழுந்த மணிமுடிகளையும் அணிகலன்களையும் குதிரைகள் கால்களால் மிதித்தன. அதனால் அவற்றின் கால் குளம்புகள் பொன் உரைத்த கல்போல் விளங்கியது என்பதனை

 

‘‘காலியன் மா

மன்னர்; முடியுதைத்து மார்;பகத்துப் பூணுழக்கிப்

பொன்னுரைகற் போன்ற குளம்பு’’ (30)

 

என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.

 

யானையின் வீரம்   

 

சோழ மன்னனின் யானைப் படையின் வீரம் ஆறு பாடல்களில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. சோழனின் யானை மிகுந்த சினம் மிக்கது. சினம் கொண்ட அந்த யானை பகையரசர;களின் வெண்கொற்றக் குடையை அழித்தது. அப்போதும் அதன் கோபம் தணியவில்லை. அதன் கோபத்தை வானிருந்த கண்ட நிலவு எங்கே சோழனின் யானை தன் மீதும் பாய்ந்து தாக்கிவிடுமோ? என்று அஞ்சி நடுங்கித் தேய்ந்தது. இக்கருத்தமைந்த,

 

‘‘மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்;

வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்

பாயுங்கொல் என்று பனி மதியம் போல்வதூஉம்

தேயும் ​வெளிவிசும்பில் நின்று”(31)

 

என்ற பாடல் ஆசிரியரின் கற்பனைத் திறத்துக்குச் சான்று பகர்;வதாக அமைந்துள்ளது.

 

சோழனின் யானை போருக்காகத் தனது கால்களை எடுத்து வைத்தால் அதன் காலைப் பிணித்திருக்கும் சங்கிலிகள் மட்டுமல்ல பகைநாட்டு மன்னர்;களின் ம​னைவிpயருடைய மங்கல நாணும் அறுபட்டு விழும்(32) என்று கூறி யானையின் வீரத்தை முத்தொள்ளாயிரத்தின் ஒரு பாடல் எடுத்துரைக்கின்றது.

 

சோழனின் யானை பகைவர;களின் கோட்டைக் கதவினை மோதி நிலைகுலையச் செய்தது. தனது தந்தத்ததால் கதவினைக் குத்தி எடுத்தது. அந்தக் காட்சியானது கடலில் தோன்றும் பாய்மரக் கப்பலைப் போன்று இருந்தது(33).

 

யானையின் போர்;ச்செயல்

கிள்ளிவளவனின் யானை போர்;க்களத்தில் நடந்து வரும்போது அதன் பின்னால் பிணந்திண்ணிக் கழுகுகளும் பருந்துகளும் பின்னால் தொடர்;ந்து வரும். நரிகள் மகிழ்ச்சியினால் குதிக்கும். பேய்மகளிர்;கள் இறந்தவர்;களின் குடலை எடுத்து மாலையாக அணிந்து கொண்டு நடனமாடுவார்;கள் அந்தளவிற்கு சோழனின் யானையானது பகைவர்;களைப் போர்;க் களத்தைத் தாக்கி அழிக்கும்(36).

 

யானைகள் போர்;க்களத்தில் வேகமாக விரைந்து ஓடுகிறது. அதனுடைய போர்;ச் செயலை,

 

‘‘கச்சி யொருகால் மிதியா வொருகாலால்

தத்துநீர;த் தண்ணுஞ்சை தான் மிதியால்

ஈழம் ஒருகால் மிதியாபிற்றையும் வருமேநங்

கோழியர்; கோக்கிள்ளி களிறு” (35)

 

என்ற பாடல் தெளிவுறுத்துகிறது.

 

வளவனின் யானை ஒரு காலால் காஞ்சிபுரத்தை மிதித்தது மற்றொரு காலால் உச்சையினி நகரத்தையும் எஞ்சிய மற்றொரு காலால் ஈழநாட்டையும் மிதித்து வெற்றி பெற்று மீண்டும் உறையூருக்கே வந்து சேரும் எனக் கருத்து விளக்கக் கற்பனையுடன் இப்பாடல் அமைந்திருப்பது படித்து இன்புறத்தக்கது.

 

யானையின் நாணம்

 

மனிதர்;கள் நாணப்படுவர்;. அது இயற்கை. ஆனால் இங்கு சோழமன்னனின் யானை நாணப்படுகின்றது. எதற்கு? முத்தொள்ளாயிரம் அதனை,

 

‘‘கொடிமதிற் பாய்ந்திற்ற கொடும் அரசர்;

முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு

பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே

கல்லார்; தோட் கிள்ளி களிறு”(34)

 

என்று காட்சிப் படுத்துகிறது.

 

பகைவர்;களின் கோட்டைச்சுவர்;களை தன் தந்தத்தால் மோதிச் சிதைத்தது. அதனால் அதன் கொம்புகள் உடைந்தன. பகை அரசர்;களின் மணிமுடிகளைக் காலால் உதைத்துத் தேய்த்ததால் அதன் நகங்கள் தேய்ந்தன. உடைந்த தந்தத்துடனும் தேய்ந்த நகங்களுடனும் நின்ற யானை வெட்கப்பட்டுக் கொண்டு தன் பெண்யானை இருக்கும் இடத்திற்குச் செல்லாமல் அரண்மனையின் வெளிப்புறத்திலேயே நின்று விட்டதாம். புறத்திலே அகத்தை அழகுறப் படைத்துக் காட்டும் முத்தொள்ளாயிர ஆசிரியரின் பாங்கு சிறப்பிற்குரியதாக உள்ளது.

 

பாண்டியன்

 

பாண்டிய மன்னனைக் குறித்த பாடல்களில், நிரைகதிர; வேல் மாறன்(70) மொய்ம் மலர்;த்தார;மாறன்(71) கூடலார்; மன்னவன்(72) வயமாறன்(73) செங்கண்மா மாறன்(74) தென்னன்(76) நீலத்தார; மாறன்(79) சினவெம்போர்; மாறன்(80) நிரை கதிர்;வேல் மாறன்(81) மொய்யிலைவேல் மாறன்(82) எறிகதிர;வேல் மாறன்(84) தென்னர்; கோமான்(85) வயங்குதார்; மாமாறன்(91) களியானைத் தென்னன்(92) மதுரையார்; கோமான்(94) வேல் மாறன்(95) வயமான் வழுதி(96) கொல்யானை மாறன்(98) தமிழ்நர்; பெருமான்(100) தென்கொற்கைக் கோமான்(108) அம்பொதியில் கோமான்(109) குருதி வேல் மாறன்(114) மாக்கடுங்கோன்(117) சேலேக வண்ணன்(118) கொற்கையார்; காவலன்(123) முதலிய பெயர்;கள் வழங்கப்படுகின்றன.

 

பாண்டியனின் வேற்படை

மாறனின் கூர்;மையான வேல் மாலை அணிந்த பகைநாட்டு மன்னர்;களின் மார்;பில்பட்டு பகை முடிக்கும்(73). பாம்பானது இடிக்கு அச்சம் கொண்டு புற்றுக்குள் ஒளிந்து கொள்ளும். அதுபோல போரில் மாறனின் கோபமுடைய வேலுக்கு அச்சம் கொண்டு பகை நாட்டு மன்னர்;கள் கனவிலும் காண்பதற்கு அஞ்சுவார்;கள்(74). என்பதை

 

‘‘அருமணி ஐந்தலை யாடரவம் வானத்

துருமேற்றை யஞ்சி யொளிக்கம் – செருமிகுதோட்

செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே

அங்கண்மா ஞாலத் தரசு”(74)

 

என்று முத்தொள்ளாயிரம் குறிப்பிடுகிறது.

 

பாண்டியன் வீரம்

 

பாண்டியன் வலிமை மிக்கவன். அவன் வீரத்தால் சிறந்தவன். அதனால் பகைவர்;கள் பாண்டிய நாட்டில் கால் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் பாண்டியனுக்குத் திறை செலுத்த வேண்டும். அதனால்தான் தேவர;கள் தங்கள் கால்களைப் பூமியல் வைக்காமல் திரிவாதாக ஒரு பாடல் சுட்டிக் காட்டுகிறது(78). பாண்டியன் போர்; செய்யும் பொருட்டாக நல்ல நாள் பார;த்துக் குடைநாட்கோள் செய்த நாளில் பகைநாட்டு மன்னர்;கள் அச்சம் கொண்டு பாண்டியனுக்குத் திறை செலுத்தக் கூட்டமாகக் குழுமியிருந்தனர்;. இதனை

 

‘‘நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார்; மாறன்

குடை தோன்ற ஞாலத் தரசர்; திறைகொன்

இறையோ வெனவந் திடம்பெறுதலின்றி

முறையோ வெனநின்றார்; மொய்த்து”(79)

 

என்ற பாடல் எடுத்தியம்புகிறது.

 

பாண்டியன் மாறனின் போர்;முரசின் ஒலியைக் கேட்ட பகைமன்னர்;கள் இடியோசை கேட்ட பாம்புபோல் நடுங்கி மலையின் பின்புறம் சென்று ஒளிந்து கொள்வார்;கள் என்பதனை

 

‘‘செருவெங் கதிர்;வேற் சினவெம்போர்; மாறன்

உருமின் இடிமுரசம் ஆர்;ப்ப – அரவுறழ்ந்த

தாமா உகளும் மணிவரையினப் புறம்போய்

வேமால் வயிறெரிய வேந்து”(80)

 

என்ற பாடல் தெளிவுறுத்துகின்றது.

 

குதிரை மறம்

யானையை வென்ற குதிரை

 

பாண்டியனின் குதிரைப் படை வீரம் மிக்கது. பகைநாட்டு மன்னர;களின் யானைப் படை போர்;க்களத்தில் போர்;புரிந்தபோது பாண்டியனின் குதிரைகள் பகைநாட்டு மன்னர்;களின் யானைகளைத் தாக்கின. இதனால் வெகுண்ட யானைகள் அங்கும் இங்குமாக ஓடின. அதனால் யானைகளின் மேல் இருந்த மன்னர்;கள் கீழே விழுந்தனர்;. அதனால் அவர்;களின் மணிமுடிகளும் கீழே விழுந்தன. அவற்றைக் குதிரைகள் காலால் இடறியதால் அவற்றின் குளம்புகள் பொன்னை உரைத்த கல்போல விளங்கின என்று

 

‘‘நிரைகதிர்; வேல் மாறனை நேர்;நின்றார்; யானைப்

புரைசை யறநிமிர்;ந்து பொங்கா – அரசர்;தம்

முன்முன்னா வீழ்ந்த முடிகள் உதைத்தமாப்

​​பொன்னுரைகற் போன்ற குளம்பு’’(81)

 

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. இதுபோன்றே சோழமன்னனின் குதிரை வீரமும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

 

யானை மறம்

யானை செய்த போர்;

 

பாண்டியனுடைய யானைப் படையின் வீரம் அதிக அளவில் முத்தொள்ளாயிரத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் யானை தன்னுடைய தந்தத்தை எழுத்தாணியாகவும் பகைநாட்டு மன்னர்;களின் பரந்த மார்;பினை ஓலையாகவும் கொண்டு மண்ணுலகம் எல்லாம் பாண்டியனுடையது என்று எழுதும்(82). பாண்டியனின் யானை போர்; செய்கின்ற தொழில்கள் அளப்பரியது. அதன் தந்தங்களில் ஒன்று பகைநாட்டு மதில் சுவரையும் மற்றொன்று பகைநாட்டு மன்னரின் மார்;பையும் குத்தும்(83).

 

பாண்டியனின் யானையின் தோற்றம் மலையினை ஒத்தது. எழுப்புகின்ற ஒலியால் கடலை ஒத்தது. மதநீர்; பொழிவதால் மேகம் மழை பொழிவதை ஒத்தது. காற்றைவிட வேகமாகப் பயணிப்பது. போர்;க்களத்தில் தான் செய்கின்ற கொலைத்தொழிலால் எமனையும் தன்னிடம் கடன் வாங்கச் செய்யும் தன்மையினை உடையது(84) என்னும் செய்திகள் எடுத்துக் கூறப்படுகின்றன. பாண்டியனின் யானை தான் செய்த கடுமையான போரினால் தன்னுடைய நக அழகினையும் தந்தத்தின் அழகினையும் இழந்தது. அதனால் பெண் யானையிடம் செல்ல நாணம் கொண்டு பகைநாட்டு மன்னர்;களின் குடலால் தனது தந்தத்தை மறைத்துக் கொள்ளும் என்பதை,

 

‘‘அடுமதில் பாய அழிந்தன கோட்டைப்

பிடிமுன்பு அழகழிதல் நாணி – முடியுடை

மன்னர்; குடரால் மறைக்குமே செங்கனல்வேற்

தென்னவர்; கோமான் களிறு”(85).

 

என்பதை இப்பாடல் உணர்;;த்துகிறது. இப்பாடல் தற்குறிப்பேற்ற அணியாக அமைந்துள்ளது.

 

போர்;க்களக் காட்சி

 

பாண்டிய மன்னன் போரில் சிறந்தவன் ஆகையினால் அவன் போர்; செய்த போர்;க்களத்தில் போர்; செய்து வீழ்ந்தவர்;களின் புருவ வளைவினையும் சிவந்த கண்களையும் கண்ட நரிகள் அவர;களின் அருகில் செல்லாமல் தொலைவிலேயே நின்று அச்சம் நிறைந்த மனத்துடன் தொலைவில் நிற்கும் தன்னுடைய இனமான இன்னொரு நரியைத் துணைக்கு அழைத்து ஒலி எழுப்பும். அத்தகைய அச்சம் தரத்தக்க வகையில் பாண்டியனின் வாளுக்கு இரையாகிப் பகைமன்னர்;கள் போர்;க்களத்தில் வீழ்ந்து கிடந்தனர்;.

 

பாண்டிய மன்னன் போர்; செய்த போர்;க்களத்தில் இறந்து கிடந்த பகைநாட்டு மன்னர;களைக் கண்டு அவர்;களின் மனைவியர்;கள் தீயில் மூழ்கினர்;. அதனைக் கண்ட பாண்டியன் தன்னுடைய ஆடையினால் தனது கண்களை மூடிக் கொண்டான். பகைவரின் யானைகள் இறந்து கிடந்ததைக் கண்டு அவ்யானைகளின் துணையான பெண்யானைகள் கண்கலங்கி நின்றன. இதனைப் பார்;த்த பாண்டியனின் யானைகள் துன்பம் தாங்க இயலாமல் கண்களை மூடிக் கொண்டன என்பதை,

 

‘‘ஏனைய பெண்டிர்; எரிமூழ்கக் கண்டுதன்

தானையாற் கண்புதைத்தான் தார்; வழுதி – யானையெலாம்

புல்லார்; பிடிபுலம்பத் தாங்கண் புதைத்தவே

பல்யானை யட்ட களத்து”(87)

 

என்று முத்தொள்ளாயிர ஆசிரியர்; எடுத்துரைக்கின்றார்;.

 

பகைமன்னர்;களின் பெண்களின் துயரம் பாண்டியனை வருத்தியது போல பகைமன்னர்;களின் யானைகளின் இறப்பு பாண்டியனின் ஆண் யானைகளை வருத்தமடையச் செய்தது.

 

பகைவர்; நாட்டின் அழிவு

 

பாண்டியனின் சொல்லை ஏற்றுக் கொள்ளாது அவனுடன் பகைத்துக் கொண்டவர;களின் நாடு கூகை தாலாட்டு இசைக்கப் பேய் தூங்கும் தன்மை உடையதாக மாறும்(88). பாண்டியனுக்குத் திறை செலுத்தாதவர்;களின் நாடு பசுக் கூட்டங்களும் பெண்களும் போர்; செய்ய இயலாத ஆடவர்;களும் நாட்டை விட்டுச் சென்றுவிட அந்நாட்டில் தாய்ப் போய்கள் பெற்றெடுத்த இளம் பேய்கள் தூங்கும்(89).

 

வெற்றி பெற்ற பாண்டியனின் நிலை

 

பாண்டியன் போர்;க்களத்தில் வெற்றி பெற்றான் என்றாலும் போர்;க்களத்தில் நிலவிய அவல நிலையினைப் பார்;த்து தோற்றவன் போல மகிழ்ச்சி இன்றித் தலை கவிழ்ந்து நின்றான். வீரத்திலும் பாண்டியனுக்கு ஈரம்(கருணை) இருந்தது. இதனை,

 

‘‘கொடித்தலைத் தார;;த்தென்னன் தோற்றான்போல் நின்றான்

முடித்தவாய் கட்டிய கையாற்; – பிடித்தவேற்

கண்ணேரா வோச்சிக் களிறணையாக் கண்படுத்த

மண்ணேரா மன்னரைக் கண்டு”(90)

 

என்னும் பாடலால் அறியலாம்.

 

பாண்டியன் மன்னன் மிகுந்த வலிமை உடையவன் என்பதால் அவனோடு போர்; செய்து வெற்றி பெறுதல் இயலாது என்பதை உணர்;ந்து தங்கள் மனைவியரையும் புதல்வர்;களையும் பாண்டியன் முன்னிறுத்தித் தங்கள் நாட்டை இரந்து பெற்றுச் கொள்வதே அவனுடைய கோபத்தைத் தீர்;ப்பதற்கான வழி. மேலும் அதுவே பாண்டியனின் கோபத்தைத் தணிக்கும் மருந்தாகும். இதனை

 

‘‘தொழில்தேற்றாப் பாலகனை முன்னிறீஇப் பின்னின்

அழலிலைவேல் காய்த்தினார்; பெண்டிர்; – கழலடைந்து

மண்ணிரத்தல் என்ப வயங்குதார்; மாமாறன்

கண்ணிரத்தந் தீர்;க்கும் மருந்து’’(91)

 

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.

 

முத்தொள்ளாயிரத்தில் இடம்பெறும் மூவேந்தர்;களின் மறம் குறித்த பாடல்கள் அவர்;களின் வீரம் கொடை போர்;த்திறம் கருணையுள்ளம் ஆகியவற்றை எடுத்துரைப்பனவாக உள்ளன. தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும். முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். பழந்தமிழ் மரபினை ஒட்டி அகம் புறம் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ள நூலாக முத்தொள்ளாயிரம் திகழ்கிறது.

 

 

 

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *