முனைவர் எச். முஹம்மது சலீம்
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் தர்காக்கள் எனப்படும் முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்கள் சிங்கப்பூர் நாடு உருவாவதன் முன்பே (1819) இங்கு .இருந்துள்ளன.. சூசன் உல்ட்மன் , ஷேரன் சித்தீக் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகளில் (1993/94: 81-3) இங்கு எழுபதுக்கும் மேற்பட்ட தர்காக்கள் இருந்துவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு முக்கியத்துவம் வாய்ந்த தர்காவாக விளங்கும் பால்மர் சாலையில் அமைந்துள்ள ஹபீப் நூஹ் தர்கா இவற்றுள் ஓன்று. .முயிஸ் எனப்படும் சிங்கப்பூரின் இஸ்லாமிய சமய மன்றம் கபருகளைச் சுற்றி நிரந்தரமான கட்டமைப்புகளை புதிதாகக் கட்டியெழுப்புவதைத் தடைசெய்துள்ளது. (அப்துல் வஹாப்: 1999-2000/43).
தமிழகத்திலிருந்து மலாயா தீபகற்பம் நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம்களின் வருகை பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களிலேயே தொடங்கிவிட்டது. (அரசரத்தினம் : 1987) . இக்காலகட்டத்தில் தமிழகத்தில் நெசவு உள்ளிட்ட கைத்தொழில்கள் நலிவுற்றதாலும் , வேறு தொழில்கள் மற்றும் வணிக வாய்ப்புக்கள் அதிகமாக் வளர்ந்திராததாலும் , வேளாண்மைசார் தொழில்களும் வாழ்வாதாரத்துக்கு பயன்படாச்சூழலில் பிழைப்புதேடி இங்கு வருவோரின் எண்ணிக்கை பெருகியது. சிங்கப்பூரில் குடியேறிய தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகப் பின்புலம் அவர்கள் பெரும்பாலும் அன்றைய மதராஸ் ராஜதானியின் திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர், வட ஆற்காடு, தென்னாற்காடு, திருநெல்வேலி , இராமநாதபுரம் , பாண்டிச்சேரி, அருகாமையிலுள்ள கோட்டைகுப்பம் தொடங்கி முத்துப்பேட்டை வரையிலுள்ள பகுதிகளிலிருந்தும் , திருநெல்வேலி அருகாமையிலுள்ள தென்காசி, கடையநல்லூர், காயல்பட்டினம், இராமநாதபுரம் , கன்னியாகுமரியின் தக்கலை திருவிதாம்கோடு , கோட்டாறு, சூரங்குடி, திட்டுவிளை , திங்கள் சந்தை, மணலிக்கரை, தொடுவட்டி, ஆகிய ஊர்களிலிருந்தும் இன்னபிற பகுதிகளிலிருந்தும் வந்து நிரந்தரமாகக் குடியேறி வந்துள்ளமை அறியமுடிகிறது.
இக்காலகட்டத்தில் தமிழகம் நெடுகிலும் எல்லா ஊர்களிலும் புனிதர்கள் எனப்படும் ஒலியுல்லாக்களின் தர்காக்களும் அவைசார்ந்த நிகழ்வுகளும் , தொடர்புகளும் தமிழ் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்வியல் பண்பாட்டின் கூறாக அமைந்திருந்தன. தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்பு குறித்து சூசன் பெய்லி என்ற ஆய்வறிஞர் மிக விரிவாகவே எழுதியுள்ளார். (1989: 104-50) ஆயினும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்பு பண்பாடு குறித்த விரிவான ஆய்வு இன்னமும் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்றே கூறலாம் (டார்ஸ்டன் சாச்சர்: 2006).
புலம்பெயர்ந்த சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியத்தினைத் தெரிந்து கொள்ள அவர்களின் வாழ்க்கைச் சூழல் தொடர்பான இருவகை வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. முதலாவதாக , தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்துவந்து அங்கு அணுக்கத்தொடர்பினை தொடர்ந்துவந்துகொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம்கள். இரண்டாவது, முன்னோர் புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம்களாக இருந்தும் சிங்கப்பூர் வாழ்வியல் சூழலில் திருமணம் , குடும்பம் என தமது பூர்விக ஊர்களுக்கு வெளியேயும் மற்றும் மலாய் , சீன முஸ்லிம் குடும்ப பிணைப்புக்களை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் பண்பாட்டு பழக்கவழக்கங்களை தமதாக்கிகொண்டும் வாழ்ந்துவருகின்ற பூர்வீக தமிழ் முஸ்லிம்கள் என இருவகை உட்குழுக்களை தமிழ் முஸ்லிம்களிடையே காண்கிறோம்.
ஒலியுல்லாக்களின் தர்காக்கள் தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமே இருந்தபோதும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் பலரின் தர்கா பாரம்பரியத் தொர்டர்பில் தொலைதூரங்கள் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. .
முஹியித்தீன் அப்துல் கதிர் ஜீலானி, காஜா முயீனுதீன் சிஷ்தி, நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை, தக்கலை ஷெய்கு பீர் முஹம்மது ஒலியுல்லா ஆகிய புனிதர்கள் இங்கு தமிழ் முஸ்லிம்களால் போற்றப்பட்டு அவர்களின் பெயரால் நினைவு நாட்களில் புகழ் மாலைகள், தோத்திரப்பாக்கள் இன்னும் பிற நிகழ்வுகள் தொடர்ந்து இன்றளவும் பல்வேறு அமைப்பினரால் சிங்கப்பூரில் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகு பாரம்பரியம் தலைமுறைகள் கடந்து கரிசனத்துடன் தமிழ் முஸ்லிம்களால் பேணப்பட்டு வருகின்றது.
சிங்கப்பூரில் இன்று நாகூர் தர்கா மற்றும் இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் என்று இலங்கிக்கொண்டிருக்கும் ‘நாகூர் தர்கா’ தெலோக் ஆயர் வீதியில் 1828-30 களில் கட்டப்பட்ட நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை நினைவிடமாகும். 1974-ல் தேசிய மரபுடைமை நிலையமாக சிங்கப்பூர் அரசால் .அரசிதழில் பதிவுசெய்யப்பட்ட இந்த நினைவிடம் மறுசீரமைப்புக்குப் பின் 2011-ம் ஆண்டு நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையமாக சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஞானமாமேதை ஷெய்கு பீர் முஹம்மது அப்பா ஒலியுல்லாவின் தர்கா தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் கன்னியாகுமரியின் தக்கலையில் அமைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்பும் இயற்கை எழிலும் ஏற்றமும் கொண்டு திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தின் நடுநகர் நாகர்கோவிலிலிருந்து 10 கல் தொலைவில் அமைந்துள்ளது தக்கலை. தென் திருவாங்கூர் அரசின் தலைநகராய் விளங்கிய பத்மனாபபுரம் அருகே அமைந்துள்ள இச்சிற்றூரில் இசுலாமியத் தமிழ் இலக்கிய வானில் மின்னித் திகழும் மெஞ்ஞான அறிவுச்சுடர் பீர்முஹம்மது சாஹிப் அப்பா அவர்களின் மாண்பார் மறைவிடம் அமைந்துள்ளது. தமிழிலக்கிய உலகினை, குறிப்பாக ஆன்மீக மெஞ்ஞான அறிவொளி பெற்ற ஆன்றோரை உற்று நோக்கச் செய்யும் உயர் தலம் தக்கலை. பீர்முஹம்மது அப்பாவின் பெருமை பெற்ற நிலம்.
1939-ல் தோற்றம்கண்ட சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் அசோசியேஷன் உறுப்பினர்களால் கடந்த 75 ஆண்டுகளாக ஞானமேதை பீர் முஹம்மது அப்பாவின் நினைவு நாளான இஸ்லாமிய மாதம் ராஜபு 14- இரவு அப்பாவின் ஞானப்புகழ்ச்சி நன்னூலின் பகுதிகள் பாரம்பரிய இசையில் பயிலப்படும் வழமை இன்று வரை தொடரக் காண்கிறோம். முந்தைய வருடங்களில் ஞானப்புகழ்ச்சி முற்றோதல் இரவு தொடங்கி சுபுஹு வரை நடைபெற்று வந்துள்ளது. . இது தவிர பீர் முஹம்மது அப்பாவின் நூல்களின் சிறப்பு பற்றிய உரை நிகழ்ச்சிகள் அவ்வப்போது சங்கத்தினரால் உள்ளூர் மற்றும் வெளியூர் மார்க்க அறிஞர்கள், மற்றும் பேராசிரியர்களை அழைத்து நிகழ்த்தப்படுவதுண்டு.
தமிழ் முஸ்லிம்களிடையே ஹாஜா முயீனுதீன் சிஷ்தி ஆண்டகை புகழ்மாலை பாராயண மஜ்லீசுகள் மற்றும் சிஷ்தீயா தரீகா சார்ந்தவர்களின் இறை தோத்திர பாராயணக் கூடல்கள் தொடர்ந்து இன்று வரை இங்கு நடைபெறும் பாரம்பரியமும் காணப்படுகிறது. இவைதவிர காதிரியா தரீகா முஹிப்பீன்கள், நக்ஷபந்தி தரீகாவினர், ரிபாயீ தரீகாவினர் என பல்வேறு தரீகா சார்ந்த தமிழ் முஸ்லிம் மற்றும் மலாய் முஸ்லிம்களும் ஒலியுல்லாக்களென்னும் சமயப் புனிதர்கள்பால் தனித்த ஈடுபாடும் அவர்களுடனான ஆன்மீகத் தொடர்பினை தமது இஸ்லாமிய பண்பாட்டு நடைமுறை ஒழுங்கின் பகுதியாக இன்றுவரை பேணிவரக் காண்கிறோம்.
மேற்கூறிய ஒலியுல்லாக்கள் தவிர சிங்கப்பூரின் பால்மர் சாலையில் அமைந்துள்ள ஹபீப் நூஹ் ஒலி தர்காவும் தமிழ் முஸ்லிம்கள் பலர் வருகைதரும் இடமாகும். இவைதவிர சிங்கப்பூரில் பிஸ்மில்லா ஒலி தர்கா ( சாங்கி மேற்புறச் சாலை) , முஹம்மது சாலிஹ் ஒலி தர்கா ( ஜாமியா சூலியா பள்ளிவாசலின் உட்புறம் அமைந்துள்ளது) போன்ற தர்காக்களும் சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் தொடர்புடைய முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்களாகும்.
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா பண்பாட்டுத் தொர்டர்பு இன நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் தளமாகவும் அமையக் காண்கிறோம்.. ஒலியுல்லாக்களில் அரபுகள், இந்தியர்கள், தமிழர்கள், மலையாள மொழிபேசுவோர், உர்து மற்றும் பார்சி மொழி சார்ந்த புனிதர்கள் என்று அவர்களின் தோற்றம், வாழ்விடம் மற்றும் வரலாற்றுப் பின்புலம் வெவ்வேறாக இருப்பினும் அவர்கள் பால் மாறாத அன்பும், மதிப்பும் , ஈடுபாடும் கொண்டு தமது இஸ்லாமிய சமய வாழ்வியல் நெறியில் பண்பாடு சார்ந்த நெறியாக இத்தகு தர்கா பாரம்பரிய தொடர்பினை சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் பலர் இன்றுவரை பேணி வரக் காண்கிறோம்.
எனவே சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் அவர்களிடையே குழு ஒற்றுமையை ஓங்கச் செய்யவும் , மார்க்க நெறிமுறை பேணுதலில் கட்டொழுங்கைக் கடைபிடிக்கவும், குடும்பம் மற்றும் பாரம்பரியப் பண்பாட்டு மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்லவும், சமுதாயத்திலும்,நாட்டிலும் முஸ்லிம் மற்றும் பிற சமயத்தார் மற்றும் இனத்தாருடன் நல்லிணக்கம், ஒற்றுமை, மற்றும் நல்லெண்ணம் வளரவும் அமைதி ஓங்கவும் வழிவகுக்கக் காண்கிறோம்.
துணை நூல்:
Torsten Tschacher : From Local Practice to Transnational Network-Saints, Shrines and Sufis among Tamil Muslims in Singapore :: Asian Journal of Social ScienceL Vol 34: Issue:2 : 2006
Dr. H.M.Saleem M.A., Ph.D
Vice President-I,
Jamiyah Singapore
31.Lorong 12, Geylang, Singapore 399006
- சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்
- முரண்களால் நிறைந்த வாழ்க்கை
- இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்
- திறவுகோல்
- கோணங்கிக்கு வாழ்த்துகள்
- கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
- தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு
- தந்தையானவள் அத்தியாயம்-3
- தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்
- பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…
- தேவதாசியும் மகானும் (2)
- அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்
- குளத்தங்கரை வாகைமரம்
- முத்தொள்ளாயிரத்தில் மறம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95
- பாவண்ணன் கவிதைகள்
- சுத்த ஜாதகங்கள்
- அழியாச் சித்திரங்கள்
- வள்ளுவரின் வளர்ப்புகள்
- வெண்சங்கு ..!
- பாரதியின் காதலி ?
- காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
- வாழ்க்கை ஒரு வானவில் – 23
- பொன்வண்டுகள்
- ஆங்கில மகாபாரதம்