வள்ளுவரின் வளர்ப்புகள்

This entry is part 3 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

செந்நாப்போதார் திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் பலவிதமான உயிரினங்களைப் பல்வேறு இடங்களில் உவமையாகக் காட்டி உள்ளார். எந்தெந்த இடங்களில் எவ்வெவற்றை எவ்வெவ்வாறு பயன்படுத்துகிறார் என்று சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

யானை: வள்ளூவர் முதலில் யானையை எவ்வாறு காட்டுகிறார் என்று பார்ப்போம். திருவள்ளுவர் யானையைக் குறிக்குமிடத்து, ‘களிறு’ ’யானை’ என்றே குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் ‘பிடி’ என்று பெண் யானையைக் கூறவே இல்லை.

வள்ளுவர் முதலில் காட்டும் யானை மிக மிகக் கொடியது. பாகனுக்கும் எளிதில் அடங்காதது. பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றம் உடையது. அதன் முகத்திலே வேல்கள் தைத்திருக்கின்றன. அந்தக் காரணத்தால் அதன் சினம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த வலிமையான சினமுடைய யானையும் தோற்று விடுகிறது. அதுவும் ஒரு நரியிடத்தில்; ஆமாம்; அந்த யானை இருக்கும் சூழல் அது தோற்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த யானையின் கால் ஆழ்ந்து பதியக் கூடிய சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. அதனால் நகர முடியவில்லை. இச்சூழலைப் பார்த்துக் கொண்டிருந்த நரி அருகில் வந்து யானையைத் தாக்கிக் கொன்று விடுகிறது. வலிமையுள்ளவரும் அவர் இருக்குமிடம் சரியாக இல்லாமல் போனால் தோற்று விடுவார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

இதோ குறள்:

“காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு”               [500]

அடுத்து நாம் பார்க்கும் யானை போர்க்களத்தில் இருக்கிறது. இது தளராமல் ஊக்கத்துடன் போரில் ஈடுபட்டது. அதனால் அதன் உடலெங்கும் அம்புகள் தைத்துள்ளன. அந்த அம்புகள் பட்ட போதும் அது சோர்வடையவில்லை. இத்தனைக்கும் அதன் உடலையே மறைக்கும் அளவிற்கு அம்புகள் அதன் மீது புதைந்துள்ளன. இருந்தாலும் அது ஊக்கத்துடன் மனந்தளராமல் போரிட்டுத் தன் பெருமையை நிலை நாட்டுகிறது. இதன் மூலம்,

’ஊக்கம் உடையவர்கள் வாழ்வு சிதைந்தபோதும் உடலும் உள்ளமும் சோர்வு கொள்ளாமல் தங்கள் நிலையிலிருந்து மாறாமல் தம் பெருமையை நிலை நாட்டுவர்’ என்பது புலனாகிறது.

அந்தக் குறள் இதுதான்:

”சிதைவிடத்[து] ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றும் களிறு”                 [597]

இன்னும் மேலே சென்றால் அடுத்து வள்ளுவர் யானயைக் காட்டும் குறள்:

”பரியது கூர்ங்கோட்ட[து] ஆயினும் யானை

வெரூம் புலி தாக்குறின்”                 [599]

இதன் கருத்து நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

முன்பு நரியால் தாக்கப்பட்ட யானை இப்போது ஒரு புலியால் தாக்கப்படுகிறது. அங்கு நரிக்கு இடம் வாய்ப்பாக இருந்தது. ஆனால் இங்கு புலியோ மிகவும் ஊக்கம் உடையதாக இருக்கிறது. எனவேதான் உடலால் பருத்திருந்தாலும் கூர்மையான தந்தங்களைக் கொண்டிருந்தாலும் ஊக்கமுடைய புலியால் தாக்கப்பட்ட யானை அஞ்சுகிறது. எவ்வளவுதான் வலிமை பெற்றிருந்தாலும் மனத்தில் கொள்ளும் ஊக்கமே வெற்றிக்கு அடிப்படை என்கிறார் வள்ளுவர்.

அடுத்து ஒரே குறளில் இரண்டு யானைகள் தெரிகின்றன. வனங்களில் யானைகளைப் பிடிப்பவரும், பிடித்த யானைகளைப் பழக்குபவரும் முன்பே பிடிக்கப்பட்டு நன்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகளைப் பயன்படுத்துவார்கள். அவற்றைக் காட்டி புதிய யானைகளைப் பிடித்தல் ஒரு முறையாகும். இம்முறையால் வள்ளுவர் ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார். அதாவது யானைக் காட்டி வேறொரு யானையைப் பிடிப்பது போல ஒரு செயலைச் செய்யும் போதே அதன் வழியாய் வேறொரு செயலையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். இதுதான் அந்தக்குறள்:

”வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானை யாத்தற்று”             [678]

இதோ இரண்டு யானைகள் போரிடுகின்றன். இக்காட்சி பார்ப்பதற்கு அரியது மட்டுமன்று; அச்சந்தரக் கூடியதும் கூட. அதைப் பார்ப்பவர்களை அவை கண்டு விட்டால் அவர்கள் பிழைப்பது கடினம். எனவேதான் யானைகள் போரைப்பார்க்கும் ஒருவன் என்ன செய்கிறான் எனில் மலை மேல் எறி நின்று அப்போரைப் பார்க்கிறான். ஏனெனில் யானைகள் மலை மேல் விரைவாய் ஏறமாட்டா. அவை அவனைப் பார்க்கவும் முடியாது என்பதால் அவன் அவ்வாறு பார்க்கிறான்.

இதைக் காட்டி வள்ளுவர் விளக்கும் கருத்து யாதெனில் ”ஒரு செயலைச் செய்யும் போது மிகவும் பாதுகாப்பாகச் செய்ய வேண்டும். கையிலே செயலுக்கு வேண்டிய பொருளை வைத்துக் கொண்டு அச் செயலைத் தொடங்கியவனது செயல் மலை மேலிருந்து யானைப் போர் பார்ப்பதற்கு ஒப்பாகும்’ என்பதுதான்.

”குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்[று]

உண்டாகச் செய்வான் வினை”                     [758]

அடுத்து வள்ளுவர் காட்டும் யானை நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாகும்.

”கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்த வேலேந்தல் இனிது”                       [772]

இந்த இடத்தில் வள்ளுவர் யானையை மிகவும் உயர்வாகக் கூறுகிறார். முயலை விட யானையை உயர்த்திக் கூறி யானை மேல் எறிந்த வேல் குறி தவறினாலும் சிறந்ததே என்கிறார். மிகவும் எளிய செயல்செய்து வெற்றி பெறுவதை விட செய்வதற்கு அரிதான செயலில் முயன்று வெற்றி பெறா விடினும் சிறந்ததே என்பது அவர் கருத்து.

வேறொரு குறளில் அவர் ஒரு வீரனின் வீரத்தைக் காட்டுவதற்கு யானையைப் பயன்படுத்துகிறார். ஒரு மறவன் தன்னுடைய எதிரியின் யானையை       விரட்டுவதற்குத் தன் கையிலிருந்த வேலை எறிகிறான். வேல் யானையின் மேல் தைக்கிறது. யானையும் ஓடி விடுகிறது. அம்மறவனின் வேல் யானையுடன் போய் விடுகிறது. மீண்டு வரும்போது வழியில் ஓர் எதிர்ப்பு வருகிறது. இப்போது அவனிடம் வேல் இல்லை. ஆனால் எதிரியால் எறியப்பட்டு தன் உடலில் தைத்திருந்த வேலைக் கண்டு அதைப் பறித்தெடுத்து மகிழ்கின்றானாம். படைச் செருக்கு அதிகாரத்தில் வரும் இக்குறள் அவன் வீரத்தைப் பறை சாற்றுகிறது.

”கைவேல் களிற்றொடு போகி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.”             [774]

திருவள்ளுவர் காமத்துப்பாலிலும் ஒரு யானையைக் காட்டுகிறார். இது தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் வருகிறது.

அழகான காதலியைக் காண்கின்ற அந்தக் காதலனுக்கு முதலில் தெரிவது அவளின் குத்திட்டு நிற்கும் மார்புகளாகும். அவன் மறவர் குலத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு அவளது கூர்மையான மார்புகளைப் பார்த்தவுடன் அவனது யானைதான் நினைவுக்கு வருகிறது. அவளது சாயாத முலைகளின் மேல் இடப்பட்டுள்ள அந்தப் பட்டுத்துணி ஆண்யானையின் முன்பக்கம் இடப்பட்டுள்ள முகபடாம் போல காட்சி அளிக்கிறதாம். பெண்ணின் அழகு கூறப்படும்போது யானையை உவமையாகக் காட்டும் புரட்சியையும் புதுமையும் வள்ளுவர்தம் குறளில் கையாண்டுள்ளார்.

”கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்”               [1087]                  இத்துடன் யானைகள் முடிந்து விட்டன. இனி வள்ளுவர் வளர்க்கின்ற எருதைப் பார்ப்போம். இந்த எருது இருக்கிறதே; இது நாள்தோறும் படும் துன்பத்தை நாம் கண்முன்னாலேயே கண்டு வருகிறோம். ஆனால் இந்த எருது மிகவும் ஊக்கமுடையது; எந்தத் துன்பத்தைக் கண்டும் கலங்காதது. அது வண்டியை இழுத்துச் செல்லும் போது இடையிலே எந்தத் தடை வந்தாலும் கலங்காமல் தாக்குப் பிடித்து வண்டியை இழுத்துத் தடையைத் தாண்டும். இதை வள்ளுவர் எதற்காகக் காட்டுகிறார் என்றால் எருதைப் போல எந்தத் துன்பம் வந்தாலும் நாம் துணிவுடன் நின்று தாக்குப் பிடித்து அதை எதிர் கொண்டால், தக்கபடி முயன்றால் அத்துன்பமே துன்பமடைந்து போய் விடும் என்பதை உணர்த்தவே ஆகும். இதோ குறள்;

”மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பா[டு] டைத்து”       [624]

எருதைப் பார்த்த நாம் அடுத்த்தாகக் கண்பது பசுவாகும். அதிலும் முதலில் நாம் பார்ப்பது அனைவர்க்கும் நன்கு தெரிந்த ஒன்றாகும். புலித்தோல் போர்த்திய பசு எனும் உவமையை நாம் அடிக்கடிப் படித்திருக்கிறோம். அதையே வள்ளுவரும் பயன்படுத்துகிறார்.

”வலியில் நிலமையான் வல்லுருவம் பெற்றம்

புலிந்தோல் போர்த்துமேய்ந் தற்று’     [273]

உலகில் இந்நாளில் பல போலிச் சாமியார்களைப் பார்க்கிறோம். வள்ளுவர் காலத்திலேயே இவர்களைப் போல இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவர்கள். ஆனால் தவம் செய்பவர்களைப் போல வேஷமிடுவார்கள். தவ வாழ்க்கை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டிருப்பதால் அவரை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. புலித்தோலைப் போர்த்திக் கொண்ட பசு தன்னை அச்சத்தால் யாரும் நெருங்க மாட்டார்கள் என்பதால் பயிரை நன்றாக மேயும். அதுபோல இப்போலிகளும் சன்யாஸிகள் என்ற போர்வையில் உலவுவார்கள். எனவே மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக் கோலம், பசு புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றதாகும் என்பதை இக்குறள் மூலம் வள்ளுவர் காட்டுகிறார்.

இனி வேறொரு பசுவைப் பார்ப்போம். வள்ளுவர் காட்டும் இந்தப் பசு பார்ப்பதற்கு எதையோ விரும்புவது போல் இருக்கிறது. ஆம்; அதற்கு நீர் வேட்கையாக உள்ளது. அதற்கு உடனடியாகத் தண்ணீர் தேவை ஆனால் அதன் உரிமையாளனிடம் தண்ணீர் இல்லை. மேலும் அவன் எப்படிப் பட்டவன் என்றால் பிறரிடம் எதற்காகவும் இரத்தலை விரும்பாதவன். நீர்வேட்கை மிகுந்திருக்கும் தனது பசுவிற்காக்க் கூட அவன் பிறரிடம் சென்று இரக்க மாட்டான். இரத்தலின் இழிவைக் காட்டும் இரவச்சம் அதிகாரத்தில் வரும் குறள் இது:

 

”ஆவிற்கு நீரென்[று] இரப்பினும் நாவிற்[கு]

இரவின் இளிவந்த[து] இல்”       [1066]

அடுத்து ஓர் ஆட்டுக்கடா. அது மற்றொரு ஆட்டுக்கடாவுடன் போர் செய்து கொண்டிருக்கிறது. அக்கடுமையான போரில் அது பாய்ந்து முன்னால் தாக்குவதற்காக சற்றுப் பின்னால் நகர்ந்து கொள்கிறது. இதைப் போலவே ஊக்கம் உடையவன் தக்க காலம் வரும்வரை ஒதுங்கிப் பின்னால் இருப்பான். காலம் வந்தால் திடீரென்று பாய்ந்து முன்னால் தாக்குவான் என்பது தெரிகிறது.

“ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து”       [486]

இனி வேறோரு விலங்கைப் பார்ப்போம். இவ்விலங்கு மானத்தைப் பெரிதாக மதிக்கும் விலங்காகும். அதுவும் தனது உடலின் ஒரு மயிர் கீழே விழுந்தாலும் அது உடனே தன் உயிரை விட்டுவிடுமாம். இவ்விலங்கு கவரி மான் என்பது இப்போது புரிந்திருக்கும். இது மானம் எனும் அதிகாரத்தில் காட்டப் படுகிறது பெரியோர்கள் தாங்கள் மானம் அழிய நேர்ந்தால் உடனே உயிரை விட்டு விடுவர் என்பதைக் காட்ட வள்ளுவர் கவரி மானைச் சொல்கிறார். சேரமான் கணைக்கால் இரும்பொறை எனும் சேர மன்னனை இக்குறளுக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வார்கள்.

”மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார

உயிர்நீப்பர் மானம் வரின்”       [969]

மானத்திற்காக மானைக் காட்டிய வள்ளுவர் அடுத்து காமத்துப் பாலில் இரு மான்களைக் காட்டுகிறார். இரு மான்களும் பெண் மான்கள். இவை இரண்டும் பெண்ணின் அழகைக் காட்டுவதற்காக வந்தவை. முதல் மான் பெண்ணின் கண்பார்வையைக் காட்டப் பயன்படுகிறது. அப்பெண்ணின் பார்வையைக் கண்டவுடன்,

”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து”     [1085]

“இந்தப் பார்வை என் உயிரை மாய்க்கும் போலிருக்கிறதே? எமனோ? கண்ணோ? பெண் மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறதே’

என்று தலைவன் தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் மயங்குவதாக வருகிறது.

அதே அதிகாரத்தில் வேறொரு மான் காட்டப்படுகிறது. ஒரு பெண் வருகிறாள்.

”பெண்மானைப் போன்ற பார்வையையும் நாணமும் அணிகலன்களாக உடைய இவளுக்கு ஒரு தொடர்பும் இல்லாத வேறு அணிகலன்களைச் செய்வது ஏனோ?’ என்று தலைவன் கேட்கிறான்.

”பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்[கு]

அணிஎவனோ ஏதில தந்து”           [1089]

இனி ஊர்வனற்றுள் ஒன்றான பாம்பு பற்றிக் காண்போம். முதலில் நாம் பார்ப்பது ஒரு நாகம். அந்நாகத்தின் முன் எலிக்கூட்டம் படை திரண்டு வந்துள்ளது. அவை நாகத்தைப் பார்த்துக் கூச்சலிகின்றன. நாகம் தன்மீது படையெடுத்து வந்திருக்கும் எலிக் கூட்டத்தைப் பார்க்கிறது. பின் அது தன் மூச்சை உள்ளிழுத்து ஒருமுறை வெளியிடுகிறது. உடனே அந்த எலிக்கூட்டம் முழுவதும் அதைக் கண்டு அஞ்சி அழிந்து விடுகின்றன. இவ்வாறு படைமாட்சியில் பாம்பைக் காட்டுகிறார்.

’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்”         [763]

அடுத்த பாம்பு புற்றினுள் வாழவில்லை. ஒரு குடிசைக்குள் வாழ்கிறது. அப்பாம்புடன் ஒருவன் வாழ்ந்து வருகின்றான். இருவரும் எப்போது ஒருவரை ஒருவர் விரட்டலாம் என்று காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதைக் கண்ட வள்ளுவர் ஒரு குறள் எழுதுகிறார்.

”உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போ[டு] உடனுறைந் தற்று”       [890]

இவ்வாறு வாழ்தலை உளப்பொருத்தம் இல்லாதவருடன் ஒன்றாகக் கூடி வாழ்வதற்கு ஒப்பாக வள்ளூவர் கூறுகிறார்.

அடுத்த பாம்பும் காமத்துப் பாலில்தான் காணப்படுகிறது. உலகில் சந்திர கிரகணம் தோன்றுவதைத் திங்களைப் பாம்பு பிடிக்கிறது என்று கூறுவர். கிரகணத்தை அனைவரும் காண்பர். எல்லாருக்கும் அது தெரியும்.

”காதலரை நான் கண்டது ஒரு நாள்தான்; ஆனால் அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல ஊர் எங்கும் பரவி விட்டது.” என்று ஒரு தலைவி அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் கூறுகிறாள்.

”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்பு கொண்டற்று”       [1146]

அடுத்துப் பறவையினங்களில் சிறப்பானதான மயிலைப் பார்க்கலாம். மயில் மிகவும் அழகானது. அதைப் பெரும்பாலும் பெண்களுக்கு உவமையாகக் கூறுவர். வள்ளுவரும் அவ்வாறே காட்டுகிறார்.

தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் ஒரு தலைவன் தலைவியைப் பார்க்கிறான். அவள் அழகு அவனுக்கு மயக்கமூட்டுகிறது. வியப்பேற்படுத்துகிறது.

”யார் இவள்? தெய்வப் பெண்ணோ? அல்லது அழகிய சாயலை உடைய மயிலோ? கனமான குழையை அணிந்த மனிதப் பெண்ணோ? என என் நெஞ்சு மயங்குகின்றதே” என்று ஒரு தலைவன் மயங்குகிறான்.

”அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனக்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”         [1081]

அழகிய மயிலைக் காட்டிய வள்ளுவர் அறிவற்ற ஒரு குதிரையைக் காட்டுவதைப் பார்ப்போம். அவரே அதைக் ’கல்லாமா’ என்கிறார். அக்குதிரை அதை வைத்திருக்கும் வீரனைப் பழி வாங்க நேரத்தை எதிர்பார்த்திருக்கிறது. ஆனல் அது அவ்வீரனுக்குத் தெரியாது. அவன் அதனிடத்துப் பாசமுடன் அன்பாய் இருக்கிறான். இப்படி இருக்கும்போது போர் மூளூகிறது. வீரன் அக்குதிரை மேல் ஏறி களம் சென்று போரில் ஈடுபடுகிறான். அங்கே போர்க்களத்தில் அறிவற்ற அக்குதிரை அவனைத் தாங்க மாட்டாது அவனைக் கீழே தள்ளிவிட்டு ஓடுகிறது. இதனைக் கூறிய வள்ளுவப் பெருமான் இக்காட்சியைக் காட்டி இக்குதிரை போன்றவர்களிடம் நட்பைக் கொள்வதை விட தனியாயிருத்தல் சிறந்தது. என்கிறார்.

”அமரகத்[து] ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை”                   [814]

அடுத்தது காக்கை; இந்தக் காக்கையானது தனக்கு உணவு கிடைத்தால், தான் மட்டும் உண்ணாது தன் இனத்தைக் கரந்தழைத்து அவற்றுடன் சேர்ந்தே உண்ணும். ஆனால் உணவுப் பற்றாக்குறையோ என்னவோ இன்றைய காக்கைகள் பெரும்பாலும் தாம் மட்டும் தனியேதான் உண்கின்றன. வள்ளுவர் காட்டும் காக்கையைப் போன்று சுற்றத்தைப் பேணும் குணம் உடையவரிடத்தில்தான் செல்வம் நிலைக்குமாம்.

”காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள”               [527]

அடுத்து நாம் காணுகின்ற காக்கை மிகவும் தந்திரம் உடையது. காலமறிந்து நடக்கும் தன்மை உடையது. அது தன்னைவிட வலிமையான கோட்டானை எப்போது வெல்லலாம் என்று தக்க காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. கோட்டானுக்குப் பகலில் பார்வை சரியாகத் தெரியாது. எனவே அக்காக்கையானது பகலில் சென்று கோட்டானை வென்று விடுகிறது. அதுபோலத் தன் பகையை வெல்ல விரும்புவர் தக்க காலத்தில் செயல்படவேண்டும் இக்குறள் கூறுகிறது.

 

”பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது”            [481]

இதேபோல தக்க காலத்தை எதிபார்த்திருக்கும் ஒரு கொக்கைப் பார்க்கலாம். அது கரையோரம் அமைதியாக அசையாமல் உட்கார்ந்து இருக்கிறது. தனது இரையானது வரும்போது அதை ஒரே குத்தில் குத்தி செயலை முடித்து விடுகிறது. இதுவும் காலமறிதல் அதிகாரத்தில் வரும் குறள்தான்:

”கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து”                 [490]

அடுத்து நீர்வாழின்ங்களில் சிலவற்றைப் பார்ப்போம். முதலில் முதலைகளையைப் பற்றிய முக்கியமான செய்தி ஒன்று. அனைவர்க்கும் இது தெரிந்த்தாம். அதாவது முதலையின் வலிமை நீரில்தான். நீரைவிட்டு முதலை வெளியில் வந்தால் மற்றவை அதை எளிதில் வென்றுவிடும். ஆனால் முதலையைத் தண்ணீரில் எந்த விலங்கும் வெல்ல முடியாது. ஒரு செயல் வெற்றிகரமாக முடிய இடம் மிகவும் முக்கியம் என்று இதனால் விளக்கப் படுகிறது. இடனறிதல் அதிகாரத்தில் இக்குறள் வருகிறது.

 

”நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற”                 [495]

அடுத்து அடக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உரைக்கப்படும் ஆமை. ஆமையானது எவ்வாறு தன் கால்கள் மற்றும் தலையோடு ஐம்பொறிகளையும் தன் ஓட்டுக்குள் இழுத்து அடக்கிக் கொள்கிறதோ அதுபோல மனிதன் ஒரு பிறப்பில் அடக்கமாக இருந்தால் அது அவனுக்கு வருகின்ற பிறப்பிலும் பாதுகாப்பான தன்மை உடையதாகும். அடக்கமுடைமை அதிகாரத்தின் ஆறம் குறள் இது:

”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து”           [126]

இப்படிப் பல்வேறு அதிகாரங்களில் தன் கருத்தை வலியுறுத்த வரும் வள்ளுவர் எல்லா உயிரினங்களையும் உவமைகளாகப் பயன்படுத்தி உள்ளார். அந்த உயிரினங்களை வள்ளுவரின் வளர்ப்புகள் என்று கூறலாமன்றோ?

————————————————————————————————————————————

 

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *