வாழ்க்கை ஒரு வானவில் – 24

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

 

கணேசனின் மல்லாந்து கிடந்த நிலையினின்று அவர் மயக்கமுற்று விழுந்திருந்திருக்க வேண்டும் என்று வேலுமணி நினைத்தார்.

“ரமணி, ரமணி!” என்று கூவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.                                                                                                             “என்ன, அண்ணா! என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு ரமணி தன்னறையினின்று வெளிப்பட்டான்.

“உங்கப்பா மயக்கமாயிட்டாருன்னு தோணுது. மல்லாந்து கிடக்கார்….”

“தண்ணி எடுத்துண்டு வாங்கண்ணா!” என்று சொல்லிவிட்டு ரமணி பதற்றத்துடன் ஓடினான். அவன் போன போது அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வேலுமணி சொன்னது போல் மல்லாந்து கிடக்கவில்லை. அவன் அப்படியே நின்றான். கண்களை இலேசாய்த் திறந்து விட்டு அவர் மூடிக்கொண்டது அவனுக்குத் தெரிந்தது. கால்களும் சற்றே அசைந்தது அந்த ஒருக்களித்தலால் என்பது புரிந்தது. அவன் அவருக்கு அருகே போகாமல் அப்படியே நின்றான். ஓர் ஏனத்தில் குளிர்நீருடன் அங்கு விரைந்து வந்த வேலுமணியும் அவர் மல்லாந்து கிடக்காதது கண்டு சற்றே வியந்தார்.

இருப்பினும், “என்ன ரமணி! இந்தா தண்ணீர். அப்பா முகத்துலே தெளி….”

“தேவையில்லை, அண்ணா… வேணும்னா நீங்களே தெளியுங்க. …”, என்றவன் அவர் காதருகே, “இது ஒண்ணும் நிஜமான மயக்கம் இல்லே, அண்ணா. என்னை பயமுறுத்துறதுக்காகப் போடுற வேஷமாக்கும்!” என்றான். பிறகு எதுவும் பேசாது தனது அறைக்குப் போய் உட்கார்ந்தான்.

ரமணி தம் காதருகே சொன்னது கணேசனின் காதில் விழுந்திருக்குமா என்பது பற்றி வேலுமணியால் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், முதலில், சொன்ன, `இது ஒண்ணும் நிஜமான மயக்கம் இல்லே, அண்ணா. என்னை பயமுறுத்துறதுக்காகப் போடுற வேஷமாக்கும்’ என்று குரலைத் தணிக்காமல் அதன் வழக்கமான சுருதியில் சொன்னது கண்டிப்பாக அவரது காதில் விழுந்தே இருக்கும் என்று வேலுமணி நினைத்தார். அவரும் ஏற்கெனவே அப்ப்டித்தான் ஊகித்திருந்தார். மல்லாந்து கிடந்தவர் ஒருகளித்த நிலைக்குத் திரும்பியது எவ்வாறு எனும் கேள்வி அவரையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ’முழு மயக்கமென்றால், அப்படியேதானே கிடப்பார்கள்? விழுந்து கிடக்கும் நிலை மாறுமா?’ என்றுதான் அவரும் எண்ணினார். ரமணியும் தன்னைப் போன்றே ஊகித்தது கண்டு அவர் வியப்புறவில்லை.

தன்னறைக்குப் போய் உட்கார்ந்த ரமணியுள் எரிச்சல், கசப்பு, சிரிப்பு எல்லாம் ஒருசேர உற்பத்தியாயின. எப்படியாவது தன்னைப் பணிய வைக்கும் முயற்சியில் அவர் முனைப்பாக ஈடுபட்டிருந்தது கண்டு அவனுள் தாங்க முடியாத சினமும் வெறுப்பும் கூடக் கிளர்ந்தன. ‘என்ன பெற்றோர்கள்! குழந்தைகள் என்ன அடிமைகளா! பெற்று வளர்த்துக் கல்வி கற்பித்த செயல்களுக்காக ஒரு மகன் தன் திருமண விஷயத்தில் கூட அவர்கள்சொற்படிதான் நடக்க வேண்டுமா! குழந்தைகள் என்ன கொத்தடிமைகளா! … ‘          அவன் மெதுவாக வெளியே வந்தான். தன் அப்பாவின் அறை நோக்கிச் சென்றான். எட்டிப்பார்த்தான். கணேசன் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வேலுமணி அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்தார்.

“என்ன இப்படி திடீர்னு விழுதுட்டீங்க?” என்று வினவிய வேலுமணிக்கு, “தாங்க முடியாத அதிர்ச்சிதான். நெஞ்சு திடீர்னு வலிச்சுது. அதான்! நீதான் கேட்டுண்டு இருந்தியே, வேலுமணி? உனக்குத் தெரியாத – இல்லே, தெரியக் கூடாத – என்ன ரகசியம் இருக்கு இந்தக் குடும்பத்துலே? ரமணி அந்த அவனோட ஃப்ரண்ட் இருக்கானே, ராஜான்னு ஒருத்தன், அவனோட தங்கையைக் கல்யாணம் பண்ணிக்க்ணுமாம். சோத்துக்கே லாட்டிரி அடிக்கிற குடும்பம் அது. அவங்களோட நான் சம்பந்தம் பண்ணிக்கிறதுக்கு என்னை மாதிரி அந்தஸ்துல இருக்கிறவன் எவனாவது சம்மதிப்பானா? நீயே சொல்லு…”   தான் அறை வாசலில் நிற்பதைப் பார்த்த பிறகே அவர் அப்படி அங்கலாய்த்திருந்திருக்க வேண்டும் என்பதாய் ரமணி ஊகித்தான்.

வேலுமணி பதில் சொல்லாமல் இருந்தானர்.

“என்ன, பேசாம இருக்கே? நீயும் அவனோட கட்சியா?”

“நான் சொல்றேனேன்னு நீங்க கோவிச்சுக்கக்கூடாது… ரமணி இந்தக் காலத்துப் பிள்ளை. எத்தனையோ குடும்பங்கள்லே இப்பல்லாம் சின்னவங்க இஷ்டப்படிதான் அவங்க கல்யாணம் நடக்கிறது. இல்லேன்னா, அவங்க அம்மாவுமாச்சு, அப்பாவுமாச்சுன்னு விட்டுட்டுப் போயிடறாங்க. ரமணி அம்மா இல்லாம வளர்ந்த பிள்ளை. தன் அம்மா உயிரோட இருந்தா தனக்குப் பரிஞ்சு பேசுவாங்களேன்னு அவனுக்கு ஒரு நினைப்பு வரக்கூடும். உங்களுக்கும் அவனை விட்டா வேற யாருமே இல்லே. நீங்கதான் விட்டுக்குடுக்கணும், அய்யா!”

“ரொம்பப் பேசறே நீ, வேலுமணி!”

“மன்னிச்சுக்குங்க அய்யா. நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொன்னேன். உங்க நன்மையை மனசிலெ வெச்சுண்டுதான் என் மனசில இருக்கிறதை உங்களுக்குச் சொன்னேன்… நீங்க உங்க ரூம்ல் இருந்ததால கவனிக்கல்லே. வெளியே போடான்னு நீங்க கத்தினதும் ரமணி தன்னோட ரூமுக்கு வந்து ரெண்டு பெரிய பெட்டியில துணிமணிகளை யெல்லாம் திணிச்சுண்டு கிளம்பிட்டான். நான் தான் அவனுக்குப் புத்திமதி சொல்லித் தடுத்து நிறுத்தினேன்…கொஞ்சம் பொறுமயா இருப்பான்னு எடுத்துச் சொன்னேன்…”            “பெட்டிகளை எடுத்துண்டு அவன் கிளம்பின தெல்லாம் சும்மா ட்ராமா! என் காதுல பூச் சுத்துற வேலை. இந்தப் பாசங்குக்கெல்லாம் ஏமாறப் பட்டவன் நானில்லே.”

அதற்கு மேல் மவுனமாய் நின்றுகொண்டிருக்க ரமணியால் முடியவில்லை.

“யாருப்பா பாசாங்கு பண்றது? நீங்களா, நானா? மயக்கம் போட்டு விழுந்த மாதிரி பாசாங்கு பண்ணினா நான் பயந்து போய் மசிஞ்சுடுவேன்னு நீங்கதான் ட்ராமாப் போட்டீங்க! மல்லாந்து கிடந்த ஆளு திடீர்னு ஒருக்களிச்சுண்டு, அரைக் கண்ணைத் திறந்து யாரானும் வராங்களான்னு நோட்டம் விட்டதை நானும் பார்த்துண்டுதானே இருந்தேன்? நான் உள்ளே

நுழைஞ்சுண்டிருந்ததைப் பார்த்ததும் மறுபடியும் மல்லாந்துக்காம ஒருக்களிச்ச மேனிக்கே இருந்துட்டீங்க. நீங்கதான் என் காதுல பூச்சுத்தப் பார்க்கிறீங்க!” என்று தான் ஊகித்தது சரியாய்த்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையில் ரமணி ஒரு போடு போட்டான்.                                                                 அவனை எரிச்சலுடன் நோக்கியபடி அவன் பேசியதைச் செவிமடுத்துகொண்டிருந்த கணேசனின்      விழிகள் கணம் போல் தாழ்ந்து பின்னர் சமாளித்து நிமிர்ந்தன

“யார்ரா காதுல பூச்சுத்தப் பார்க்கிறது? என்னமோ பெரிசா வீட்டை விட்டே கிளம்பிப் போயிடப் போறவன் மாதிரி ட்ராமா போட்டது நீதாண்டா! கிளம்பினவன் வெளியேற வேண்டியதுதானேடா? என்னமோ வேலுமணி சொன்னானாம்! இவன் உடனே அவன் பேச்சைக் கேட்டுண்டு போகாம இருந்துட்டானாம்! …”

வேலுமணி பதறிப் போய், “அய்யா! அய்யா! வாயறியாம வார்த்தையை விடாதீங்க… கொஞ்சம் நிதானமாப் பேசுங்கையா!” என்று அவரை எச்சரிக்கும் தொனியில் குறுக்கிட்டார்.

முகம் கறுத்துப் போன ரமணி திரும்பித் தன்னறை நோக்கி நடந்தான். இரண்டு பெட்டிகளையும் தூக்கிக்கொண்டான். பின்னர் வெளியே வந்தான்.         வேலுமணி மீண்டும் பதற்றத்துடன் ரமணியை எதிர்கொண்டார்: “வேண்டாம், ரமணி! … உன்னோட அப்பாதானே பேசினார்? அதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு ரோசம்? போ உள்ளே…”

“இல்லேண்ணா. இதுக்கு மேல என்னால சகிச்சிக்க முடியாது. நான் கல்யாணம் பண்ணிக்க இருக்கிற நல்ல பொண்ணைத் தேவடியாள்னு வாய் கூசாம சொல்றார். உங்க காதுல விழுந்துதோ என்னமோ… உடனேயே நான் கிளம்பி யிருக்கணும்,. பொறுத்துண்டேன். ‘வெளியே போடா’ ன்னதும்தான் கிளம்பினேன். நீங்கதான் தடுத்துட்டீங்க…” என்றவன் கணேசனின் அறை வாசலுக்கு வந்து நின்றான்.

கணேசன் இதற்குள் எழுந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

“நீங்க எனக்காகப் பண்ணின எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ப்பா! நான் வறேன்…” என்ற அவனைக் கண்கள் கலங்கப் பார்த்த அவர், “வராதேடா. போ!” என்றார்.

“அய்யா! அய்யா! பெத்த பிள்ளையைப் பார்த்து உங்க வாயால அப்படிச் சொல்லாதீங்கய்யா!” என்று வேலுமணி அவரை நோக்கிக் கும்பிட்டார்.

கணேசன் முகத்தைத் திருப்பிக்கொண்டார். ரமணி மேற்கொண்டு எதுவும் பேசாது விரைவாக நகர்ந்தான். வேலுமணி அவனுக்கு முன்னால் போய் நின்று அவனை மறித்தார்: “வேணாம், ரமணி. சொன்னாக் கேளுப்பா!”

“வழி விடுங்கண்ணா! நான் வறேன். நீங்க வராதேன்னு சொல்ல மாட்டீங்கதானே?” என்று கசப்புடன் சிரித்துவிட்டு அவன் காலணிகளை அணிந்துகொண்டு படி இறங்கினான். பெட்டிகளை வெளியே நிறுத்தியிருந்த பைக்கின் முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றுமாக நிறுத்திக்கொண்டு அதில் ஏறிப் பறந்தான்.

வேலுமணி கண்ணீருடன், “கடவுளே!” என்று முனகிவிட்டு வீட்டினுள் நுழைந்தார்.

…. அழைப்புமணி ஒலித்ததும் சேதுரத்தினம் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான். வெளியே கையில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் நின்றுகொண்டிருந்த ரமணியைப் பார்த்ததும் வியப்பும் கேள்விக்குறியுமாய், “வாங்க, வாங்க!” என்று புன்சிரிப்புடன் வரவேற்றுவிட்டுக் கதவை முழுவதுமாய்த் திறந்தான்.

“திடீர் விருந்தாளியா முன் கூட்டிச் சொல்லாம கொள்ளாம வந்திருக்கேன்…” என்று கூறியபின் பெட்டிகளைத் தரையில் வைத்துவிட்டுக் காலணிகளைக் கழற்றிய ரமணி,”ஒண்ணும் புரியல்லேல்லே?” என்றான்.              “உள்ளே வாங்க. உக்காந்து விவரமாப் பேசுவோம்,” என்றவாறு ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்ட சேதுரத்தினம், மற்றதையும் எடுக்கக் குனிந்த போது தடுத்துவிட்டு அதைத் தான் எடுத்துக்கொண்ட ரமணி அவனைப் பின் தொடர்ந்து உள்ளே போனான். சேதுரத்தினத்துக்கு அவனது திடீர் வருகையின் பின்னணி ஓரளவுக்குப் புரியவே செய்தது.

இருவரும் பெட்டிகளைக் கூடத்துச் சுவரோரம் வைத்துவிட்டு சோபாவில் அருகருகே அமர்ந்தார்கள்.

“வீட்டை விட்டு வெளியே போடான்னாரு எங்கப்பா. கிளம்பி வந்துட்டேன்…முதல்ல வேற ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்குத்தான் போனேன். அவன் ஊர்ல இல்லே. வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும்னு அவனோட அண்ணன் சொன்னார். அவரோட அண்ணனோட எனக்கு அவ்வளவாப் பழக்கம் இல்லே. . அதான் இங்க வந்துட்டேன். உங்களோடவும் எனக்கு அவ்வளவாப் பழக்கம் இல்லேதான். இருந்தாலும் உரிமை எடுத்துண்டு வரலாம்னு தோணித்து. அதான் வந்துட்டேன் இன்னைக்கு ராத்திரி மட்டும் போதும். நாளைக்கே ஒரு லாட்ஜ்ல போய் இருந்துக்குவேன்…” என்று ரமணி விவரித்தான்.

“நீங்க பெர்மனண்டாவே என்னோட தங்கலாம், ரமணி நான் மட்டுந்தானே இருக்கேன் இங்கே? எனக்கும் கம்பெனியாச்சு. …ராமுவோட ஃப்ரண்ட் எனக்கும் ஃப்ரண்ட்தான். தவிர அவங்க வீட்டு வருங்கால மாப்பிள்ளையும் ஆச்சே நீங்க?”

“தேங்க்ஸ்… அப்பாவோட என்ன சண்டைன்னு கேக்கல்லையே நீங்க?…” என்ற பின் ரமணி நடந்ததை அவனுக்கு விவரித்தான்….                   “குழந்தைகளோட கல்யாண விஷயத்துல ஏந்தான் இந்தப் பெரியவங்க இப்படித் தலையிடறாங்களோ தெரியல்லே….அதுலேயும் நம்ம நாட்டிலே இந்தத் தலையீடு ரொம்ப ஜாஸ்தி….”

“நீங்க சொல்றது சரிதான், ரமணி! சில குடும்பங்கள்லே இளைஞர்களால பெரியவங்களை மீற முடியாம போயிட்றது. இதனால எத்தனை மனமுறிவுகள்! தற்கொலைகள்! தற்கொலை பண்ணிக்கிறது முட்டாள்தனம்தான். ஆனா அந்த அளவுக்கு அவங்க எண்ணம் தீவிரமா யிருக்குன்றதைப் புரிஞ்சுக்காம பெரியவங்க தங்களோட விருப்பத்தை அவங்க மேல திணிக்கிறதுனாலதானே இந்தக் கொடுமை ஏற்பட்றது? அப்புறம் லபோ திபோன்னு அடிச்சுண்டாப்ல ஆச்சா?”

“இத்தனைக்கும் என்னோட விஷயத்துல ஜாதி வித்தியாசமெல்லாம் இல்லே. அவங்க எழைங்கன்றதுதான் எங்கப்பாவை உறுத்துது… ஏந்தான் இப்படிப் பணம், பணம்னு அடிச்சுக்கிறாங்களோ மனுஷங்க! லட்சம் லட்சமாச்சேர்த்து வெச்சிருந்தாலும் மேல மேல எல்லாருக்கும் இன்னும் வேணும், இன்னும் வேணும்கிற ஆசைதான் ஏற்படுறதே ஒழிய, திருப்தின்றதே இல்லே. ஒரு ஏழைப் பொண்ணுக்கு வாழ்வு குடுத்தா புண்ணியம்தானேன்ற நல்ல எண்ணமும் பணக்காரங்களுக்கு வர்றதே இல்லே…ஹ்ம்….”                         “நீங்க சாப்பிடணுமில்லையா? வெளியே போலாமா? நான் ராமு வீட்டில சாப்பிட்டாச்சு…உங்களோட துணைக்கு வர்றேன்…”                            “இல்லே, மிஸ்டர் சேதுரத்தினம். நான் வர்ற வழியிலேயே ஓட்டல்ல சாப்பாட்டை முடிச்சுண்டாச்சு…”

“நீங்க என்னை மிஸ்டர் போட்டெல்லாம் பேச வேண்டாம். ராமு சொல்றாப்ல சேதுன்னு சொன்னாப் போதும்….அவனே என்னை சேது சார்னுதான் சொல்றான். அந்த சார் வேண்டாமேன்னு சொல்லணும்.”

“ராமுவை நாங்க எல்லாருமே அவனோட வீட்டுப் பேரை வெச்சு ராஜான்னுதான் கூப்பிட்றது….”                                                  “தெரியும்….”

இருவரிடையேயும் சில நொடிகளுக்கு மவுனம் கவிந்தது.

“அப்ப? உங்கப்பா தானா இறங்கி வந்து உங்களைக் கூப்பிட்டாலொழிய நீங்க திரும்பிப் போறதா இல்லே?”

“இல்லே. அவர்தான் வீட்டை விட்டு வெளியே போடான்னுட்டாரே! அப்புறம் எப்படி நானாப் போய் நிக்கிறது? எனக்கும் ரோசம், மானம்னு இருக்கில்லே?… ஆனா ஒண்ணு. அவர் சம்மதிக்கிற வரைக்கும் காத்துண்டு இருக்கணும்கிறது என்னோட எண்ணம். இருந்தாலும், ரெண்டு வருஷத்துக்கு மேலே யெல்லாம் ஆறப் போடக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?”

 

“உங்க முடிவு எனக்குப் பிடிச்சிருக்கு, ரமணி. கொஞ்ச நாள் கழிச்சு நான் வேணா அவரைச் சந்திச்சுப் பேசிப் பார்க்கிறேன்….”                         “ஒரு வருஷமாவது ஆன பிற்பாடு அது பத்தி யோசிக்கலாம்….ஆனா எங்க வீட்டிலே இருக்கிற சமையல்காரர் வேலுமணியோட நான் டெலிஃபோன்ல பேசுவேன். சின்ன வயசுலேர்ந்து எங்க குடும்பத்துல இருக்கிறவர். ஒரு சமையல்காரரா மட்டும் இல்லாம எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரிதான் அவர் இருந்துண்டிருக்கார்…என்னதான் இருந்தாலும் என்னோட அப்பாவாச்சே! அவர் எப்படி வேணும்னாலும் என் மேல வெறுப்பை உமிழட்டும். எப்படி இருக்காரு, என்னன்னெல்லாம் அப்பப்போ விசாரிக்கணும் இல்லையா? அதுக்குத்தான் டெலிஃபோன்ல தொடர்பு வெச்சுக்கலாம்னு!”

“நல்லதுதான். உங்க பாசமுள்ள மனசுக்கு எல்லாம் நல்லபடியாவே நடக்கும். ..”

“எங்கப்பாவுக்கு மட்டும் பாசமில்லையா என்ன! பணத்தாசையும் பிள்ளை மேல இருக்கிற பொசெஸ்ஸிவ்நெஸ்ஸும் அவரோட கண்ணை மறைக்குது!”

“சரியாச் சொன்னீங்க…”

கொஞ்ச நேரம் மேலும் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்த பின் இருவரும் படுத்துக்கொண்டார்கள்.

நள்ளிரவு வரையில் ரமணிக்ச்குத் தூக்கம் வரவே இல்லை.

 

தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *