ஆனந்த பவன் நாடகம் காட்சி-14

This entry is part 5 of 21 in the series 23 நவம்பர் 2014

வையவன்

இடம்: ஆனந்தராவ் வீடு.

உறுப்பினர்: ராஜாமணி, கங்காபாய், ஆனந்தராவ்.

நேரம்: மணி மூன்றரை

(சூழ்நிலை: ஆனந்தராவ் ஈஸிசேரில் படுத்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கிறார். நடுவில் இரண்டு மூன்று முறை தும்மி விடுகிறார். வெளியே மிளகாய் அரைக்க, முறத்தில் மிளகாயைக் கொட்டிக் காம்புகளை அகற்றி கொண்டிருக்கிறாள் கங்காபாய்)

கங்காபாய்: சின்னக் கொழந்தை மாதிரி பிடிவாதம் பிடிச்சேள்! மழை வர்றாப்பில மானம் மூடிண்டிருக்கு, வாண்டாம் வாண்டாம்னேன் கேட்டேளோ? பழையதிலே தயிர் போட்டு சாப்பிட்டுத்தான் ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சேள், சாயங்காலம் ஆகல்லே டக்னு காட்டிடுத்து.

ஆனந்தராவ்: என்ன ஆய்டுத்துண்ணு இப்போ லோலோங்கறே!

கங்காபாய்: மூணு தும்மல் போட்டாச்சு! ராத்திரி எட்டு மணி ஆறதுக்குள்ளே, ஸ்வெட்டரை மாட்டிண்டு போத்திண்டு குளிர்றது கங்காண்ணு படுத்துக்கப் போறேள்! மனுஷாளுக்கு வயசானா, நாக்கு அடங்கணும்.

ஆனந்தராவ்: எதுக்கு இப்படி எறயறே? ராஜா எங்கே?

கங்காபாய்: அந்தண்டே பாத்ரூம்ல ஷேவ் பண்ணிண்டிருக்கான். மூக்கை அடைக்கறதா என்ன?

ஆனந்தராவ்: மூக்கு அடைக்கலே, நாக்கும் அடைக்கலே இப்படி சித்தே உள்ளாறே வா.

கங்காபாய்: நோக்கு வேலை இருக்கு! விஷயம் என்ன, அதைச் சொல்லுங்கோ!

ஆனந்தராவ்: என்ன வேலை செய்யறே?

கங்காபாய்: மிளகாய்ப் பொடி அரைக்க மிளகாய்க்குக் காம்பு கிள்ளிண்டிருக்கேன்.

ஆனந்தராவ்: அதைச் சொல்லு! நீ மிளகாய்க்குக் காம்பு கிள்ளினா, நேக்கு தும்மல் வராம என்ன பண்ணும்?

கங்காபாய்: ஒடனே தப்பிச்சுண்டுடுங்கோ! காம்பு கிள்ற நேக்கே தும்மல் வர்லே. நடைதாண்டி ரூமுக்குள்ற நெடி எட்டிப் பார்த்து, தும்மல் வந்துடுமாக்கும்? ஏற்கெனவே ஈர ஒடம்பு! ஊசியும் மருந்தும் இப்பத்தான் போய்ட்டு வர்றேன்னு விடை வாங்கிண்டு கௌம்பியிருக்கு! இப்ப மறுபடியும் டாக்டர் சாமிநாதன் கிட்டே போயி, உட்கார்ந்துண்டு மணிக்கணக்கா அரட்டை அடிக்க வசதியாச்சு போங்கோ!

ஆனந்தராவ்: சும்மா வளர்த்தாதே! அவர்கிட்டே போனா பழைய சாதம் தயிர்தான் நானும் சாப்பிடறேன்; லைட்டா அதில ஈஸ்ட் பார்மேஷன் இருக்கும்; பெட்டர் தென் யுவர் ஆனந்தபவன் மசால் தோசைம்பாரு… நீ உள்ற வா ஒரு முக்கியமான விஷயம்.

கங்காபாய்: (எழுந்து வருகிறாள்) என்னது?

ஆனந்தராவ்: ஒரு நாலஞ்சு நாளா ராஜாமணி என்னமோ—

கங்காபாய்: பாத்தேன். அவனுக்கு மனசு நன்னால்லே போல இருக்கு.

ஆனந்தராவ்: என்னண்ணு விசாரிச்சியோ…?

கங்காபாய்: என்ன கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்கறான்! பித்துப் பிடிச்சவன் போல, கண்ணாடி முன்னாடி போய் அடிக்கடி நிக்கறான். தலையைத் தொங்கப் போட்டுண்டு நடக்கறான். பழைய கலகலப்பு இல்லே.

ஆனந்தராவ்: என்னமோ வயசுக் கோளாறு!

கங்காபாய்: நேத்திக்கு ராத்திரி ரூம்ல படுத்திண்டிருந்தவன், தூக்கத்திலே பெனாத்தினான். அவன் அப்படியெல்லாம் எப்பவும் பெனாத்தறவன் இல்லே. ராஜா ராஜாண்ணு கூப்டுண்டு போயி கதவண்டே நின்னேன். அவன் முழிக்கல்லே, எதுவோ சொல்றாப்ல இருந்தது.

ஆனந்தராவ்: என்ன சொன்னான்.

கங்காபாய்: ஜம்னா… ஜம்னான்னான்.

ஆனந்தராவ்: என்னது ஜம்னாவா? யாரது?

கங்காபாய்: ஒங்களை என்னண்ணு சொல்லறதுண்ணே வௌங்கலே… ஜம்னா தெரியாது ஒங்களுக்கு? ரங்கையர் பொண்ணு.

ஆனந்தராவ்: ரங்கன் பொண்ணு! அடடே, அதும் பேரும் ஜம்னால்லே? அதை மறந்துட்டேன். இவனுக்கும் அவளுக்கும் ஸ்நேகமோ!

கங்காபாய்: பட்டுணு தேங்கா ஒடைக்கறாப்பிலே ஏதாவது சொல்லிடுங்கோ! அவா ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சவா! நாம வீடு இங்கே மாத்தினாப்புறம், ஜம்னா கேர்ள்ஸ் ஸ்கூல் போய்ட்டா. நடுவிலே ரெண்டு பேரும் பார்க்கல்லே.

ஆனந்தராவ்: அவ பேரை ஏன் இவன் பெனாத்தறான்?

கங்காபாய்: அது கூட உங்களுக்குத் தெரியல்லே.

ஆனந்தராவ்: (மோவாயைச் சொறிந்து கொண்டே யோசிக்கிறார்) ரங்கன் பொண்ணா? சேப்பா, ரொம்ப நன்னா இருப்பாளே! ம்ஹூம்ம்.

கங்காபாய்: இருந்தா நம்ம பையனுக்குப் பண்ணிக்கலாம்ணு பார்க்கறேளா?

ஆனந்தராவ்: அவா ரெண்டு பேரும் இஷ்டப்பட்டு பண்ணினா என்ன ஆயிடும்?

கங்காபாய்: ஒங்களுக்கு அந்த துணிச்சல் வந்தா நேக்கு ஒரு ஆட்சேபணையு மில்லே.

ஆனந்தராவ்: நெஜம்மா சொல்றியா?

கங்காபாய்: இதுல நெஜம்வேற பொய் வேறயா? ரங்கையனுக்கு என்ன கொறைச்சல்? அவன் ஆசாரமும் சீலமும் பெரிய தவசி மாறிண்ணா இருக்கான். ஜம்னா மாதிரி ஒரு பொண்ணு ராஜாமணிக்குக் கெடைக்க, அவனுக்குக் கொடுத்து வச்சிருக்க வாண்டாமோ!

ஆனந்தராவ்: நேக்கென்னவோ நீ கிண்டல் பண்றேன்னு தோணறது.

கங்காபாய்: ஒங்களுக்குத்தான் எதுவுமே நேராத் தெரியாதே!

ஆனந்தராவ்: ரங்கன் சம்மதிப்பானோ? அவ்வளவு ஆசாரமா இருக்கற வனை ஜாதி விட்டு ஜாதி, சம்பிரதாயம் விட்டு சம்பிரதாயம் பொண் கொடுக்க மனசு வருமோ?

கங்காபாய்: மொதல்ல இவா ரெண்டு பேருக்கும் இஷ்டமாண்ணு நன்னா நோட்டம் பார்த்துக்கணம்… அப்பறமா ரங்கன்கிட்டே பேசலாம்.

ஆனந்தராவ்: அது வாஸ்தவம்!

(ராஜாமணி உள்ளேயிருந்து குரல் கொடுக்கிறான்)

ராஜாமணி: அம்மா… அம்மா…

கங்காபாய்: என்னடா?

ராஜாமணி: இங்க போட்டிருந்த டர்க்கி டவல் எங்கே போச்சு?

கங்காபாய்: நான்தான் தோய்ச்சுப் போட்டிருக்கேன். ஏன்?

ராஜாமணி: துடைக்க வேற துண்டு இல்லியா?

கங்காபாய்: இரு… இதோ கொண்டு வர்றேன்.

(துண்டை எடுத்துக் கொண்டு, உள்ளே போகிறாள். அடுத்து நிமிடம் ராஜாமணி துண்டுடன் வருகிறான்)

ஆனந்தராவ்: ஆறு மணிக்கு ஹர்த்தால் முடிஞ்சுடும். ஹோட்டலுக்குப் போகணும் ராஜா.

ராஜாமணி: போறேன்.

ஆனந்தராவ்: இப்பவே போனாத்தான், என்ன பலகாரம் போட்டிருக்காண்ணு பார்க்கணும்.

ராஜாமணி: ரங்கையர் இருப்பாரோல்லியோ?

ஆனந்தராவ்: இருப்பார். நீயும் போய் கவனி!

ராஜாமணி: போறேன்.

ஆனந்தராவ்: நீ போய்க் கடையைத் தொற. நான் பின்னாடியே வந்துடறேன். ராஜாமணி, என்னடா அது, ஒத்தை ஒத்தை பதமா பதில் சொல்றே?

ராஜாமணி: வேற என்ன சொல்லட்டும்?

ஆனந்தராவ்: ஒண்ணும் சொல்ல வாண்டாம். போய்ட்டு வா!

(ராஜாமணி துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு அறையினுள் நுழைகிறான்)

(திரை)

[தொடரும்]

Series Navigationபன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *