அழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்

author
4
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 21 in the series 23 நவம்பர் 2014

வைகை அனிஷ்

pongalதமிழகத்தில் அந்நிய நாட்டு கலாச்சாரம் நுழைந்தாலும் இன்றும் பாரம்பரியமிக்க சுவடுகளாக பல கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாறிவரும் கலாச்சாரத்தால் மண்பாண்டத்தொழில் மண்ணோடு மண்ணாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் புல்லக்காபட்டி, கள்ளிப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி உள்பட பல இடங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இந்தத்தொழிலை செய்து வந்தனர். மண்பானை, மண்ணால் ஆன குதிர், மண்சட்டி, மண்அடுப்பு, மண் கலயம், கார்த்திகை சுட்டி, கோயில்களில் மண்சுட்டிகளில் திரிஏற்றுதல் என மண்ணால் செய்யப்பட்ட பொருள்களையே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். தற்பொழுது மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், சைனா களிமண்ணால் உருவாக்கப்பட்ட பொருட்கள், பிளாஸ் ஆப் பாரீஸ், செயற்கை மண்கள் வருகையால் பாரம்பரிய மண்பாண்டத்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் உபயோகப்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் தங்களது வயிற்றுப்பிழைப்பிற்காக மாற்றுத்தொழிலுக்கு மாறிவிட்டனர். ஒரு சிலர் மட்டும் தங்களது பாரம்பரிய தொழிலை செய்துவருகின்றனர். இத்தொழில் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கவோ அல்லது அதனைப்பற்றி தெரிந்து கொள்ளவோ தற்கால இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை. மண்பொருட்களை கையாளுவதில் பொறுமை மிகவும் அவசியம். தற்பொழுது விஞ்ஞான யுகத்தில் பொறுமை இல்லை. இதனால் மண்பானைக்கு வேலை இல்லை.
குளங்களில் உள்ள மண்களை எடுத்து வந்து அதனைப் பக்குவதாக பிசைந்து இத்தொழிலை செய்கின்றனர். ஒரு சக்கரத்தை மட்டும் மூலதனமாக்கி தங்களுடைய நுண்ணிய பார்வையால் மண்பாண்டங்களை செய்கின்றனர். சக்கரம் சுற்றச் சுற்ற களிமண்ணைத் தடவிக்கொடுத்தபடியே அதே வேளையில் களிமண்ணின் மேல்பக்கம் லேசாக அழுத்தம் கொடுக்க, குழி விழுகிறது. அதை அப்படியே இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி அதனுள்ளேயே விரல்களால் தடவியபடியெ மண்பாண்டங்களை செய்கிறார்கள். இடையிடையே விரல்களில் சிறிது தண்ணீர் தொட்டுக்கொண்டு சிறிதும் கவனம்; மாறாமல் ஒரே சிந்தனையுடன் பானையை செய்கிறார்கள். அதன் பின்னர் கட்டை விரலால் அழுத்தம் கொடுத்து கழுத்துப்பகுதியை உருவாக்குகிறார்கள். விரல் நுனியால் லேசாகக் கீறி கழுத்துப்பகுதியின் கீழே கோடு வரைந்து பானையின் வாய்ப்பகுதியை உருவாக்குகிறார்கள். சாதாரண களிமண் நொடி நேரத்தில் சக்கரம் சுற்றி பானையாக எடுக்கிறார்கள். அதன் பின்பு அதனை வெயிலில் காயவைத்து எடுக்கிறார்கள். அதன் பின்னர் செம்மண் கரைத்துப் ப+சி மீண்டும் காயவைக்கிறார்கள். பானைகளின் மீது சொரசொரப்பான அட்டையால் தேய்த்து மிருதுத்தன்மையை உருவாக்கி அதன் பின்னர் ச+ளையில் சுட்டெடுக்கிறார்கள். இவ்வாறு கஷ்டப்பட்டு திருமணச்சடங்குகளுக்கும், கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தயார் செய்யப்பட்ட மண்பாண்டங்களை கூட்டுவண்டியில் கட்டி சந்தை சந்தையாக எடுத்துச்சென்று விற்பனை செய்துவந்தனர். தற்பொழுது கூட்டுவண்டியும் இல்லை. சந்தையும் இல்லை. அதன் பின்னர் கால ஓட்டத்தில் மண்பானையை பித்தளை, எவர்சில்வர் அதன் பின்னர் குக்கர் என பரிணாம வளர்ச்சி அடைந்த பின்னர் பொங்கலுக்கு மட்டுமே மண்பானையை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவிழாவும் மண்பாண்டத்தொழிலும்
வயல்கள், ஓடைகள், சலசலக்கும் அருவிகள், பறவைகளின் ஒலிகள், வண்டுகளின் ரிங்காரங்கள், மண்சட்டிகள், மண்பானைகள் மட்டுமே சிற்றூர்களின் அடையாளப்பொருளாகிவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை உறவினர்களுடன் கூடுதல், ஆடல், பாடல், கூடி உண்ணுதல் என்ற சமூக அசைவுகளில் ஒன்றான திருவிழா இன்றும் மறக்கடிக்கப்படாமல் வாழ்ந்து வருகிறது.
விவசாயிகளின் ஆடிபட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப ஆடிமாதத்தில் ஆரம்பிக்கப்படும் விவசாயப் பணிகள் தை மாதம் வரை தொடர்வதால் கிராமப்புறங்களில் பெரும் விழாக்கள் தவிர்க்கப்படுகின்றன. சிறிய கிராமங்களில் எத்தனையோ விழாக்கள் எடுத்தாலும் குறிப்பாக புரவி எடுக்கும் விழா இன்றும் பின்பற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைப் பிரித்துக்கொண்ட மனிதன் விவசாயத்தை கருத்தில்கொண்டு ஏரி,குளம், கண்மாய்கள் போன்றவற்றில் நீர்களைத்தேக்கி வைக்கும் முறையைக் கற்றுக்கொண்டான். இந்த நீர் நிலைகளுக்கு அருகாமையில் குளம், ஏரிக்கண்மாயில் சிறிய அளவில் கோவில் கட்டி வழிபடுகின்ற தெய்வமே அய்யனார். சில ஊர்களின் நுழைவு வாயிலிலும் அய்யனார் கோயில் இருக்கும்.
அய்யனார் பவுத்த தெய்வம் என்றும், ஆசிவக மதத்தின் தெய்வமென்றும் ஐயப்பனே அய்யனார் என்றும் ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. அய்யன்; என்ற சொல் தலைவனையும் குறிக்கும். ஒரு இனக்குழு அல்லது ஊரின் தலைவனுக்காக எடுக்கப்பட்ட கோயிலாகவும், மூதாதையர் வழிபாட்டு தலமாகவும் கருத வாய்ப்புண்டு. யானை மற்றும் குதிரைகளைக் களிமண்ணில் வடிவமைத்து ச+ளையில் சுட்டு அய்யனாருக்கு நேர்த்திக்கடனாக வழங்கும் விழாவே புரவி எடுப்பு என்கிறார்கள்.
அய்யனாருக்கு மற்ற கால்நடைகளான ஆடு, மாடு, குதிரை என விலங்குகளின் வடிவங்களை நேர்ச்சையாக வழங்கினாலும் பெரும்பாலான ஊர்களில் குதிரைகளையே வடிவமைக்கப்படுவதால் புரவி எடுப்பு விழா என்ற பெயர் நிலைத்துவிட்டது. இப்பொழுது பிளாஸ் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கையான பொருட்கள் வந்ததால் மண்ணினால் செய்யப்பட்ட குதிரைகளும் தங்களது வாழ்வை முடித்துக்கொண்டன. பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று மண்ணால் ஆன பிள்ளையாரைப்பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது பிளாஸ்ஆப் பாரீஸ் வருகையால் களிமண் பிள்ளையாருக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அதே வேளையில் மண்பாண்டத்தில் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஐந்து நட்சத்திர உணவகங்களில் பல மடங்கு விலை கொடுத்து வாங்கி உண்பது சற்று ஆறுதலான விடயமே. அரசு மண்பாண்டத்தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் இல்லையெனில் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய பழமொழி உண்மையாகும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

வைகை அனிஷ்

Series Navigationஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. !ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    ஷாலி says:

    // தற்பொழுது பிளாஸ்ஆப் பாரீஸ் வருகையால் களிமண் பிள்ளையாருக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அதே வேளையில் மண்பாண்டத்தில் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஐந்து நட்சத்திர உணவகங்களில் பல மடங்கு விலை கொடுத்து வாங்கி உண்பது சற்று ஆறுதலான விடயமே…//

    மண்பாண்டத்தின் மதிப்பைக்கூட ஆங்கிலேயர்களின் ஐந்து நட்சத்திர உணவகங்கள் மூலமே தமிழர்கள் அறிந்துகொள்வது ஓர் அவல நகைச்சுவை. வெள்ளையர் ஆட்சியில் மக்கள் பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    ஊரான் ஊரான் தோட்டத்திலே வெளஞ்சு நிக்கிது வெள்ளரிக்காய்…
    காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்.

    வெள்ளையர்கள் இன்றும் வாழ்கிறார்கள்..ஆள்கிறார்கள்.

  2. Avatar
    ஷாலி says:

    // இல்லையெனில் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய பழமொழி உண்மையாகும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.//

    மண் குதிரையை அய்யனார் கோவிலிலே மட்டும் பார்க்க முடியும் ஆற்றில் அல்ல… “ மண் குதிரை (மணல் திட்டு) நம்பி ஆற்றில் இறங்கிய…..

  3. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //மண்பாண்டத்தின் மதிப்பைக்கூட ஆங்கிலேயர்களின் ஐந்து நட்சத்திர உணவகங்கள் மூலமே தமிழர்கள் அறிந்துகொள்வது ஓர் அவல நகைச்சுவை. வெள்ளையர் ஆட்சியில் மக்கள் பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
    ஊரான் ஊரான் தோட்டத்திலே வெளஞ்சு நிக்கிது வெள்ளரிக்காய்…
    காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்.
    வெள்ளையர்கள் இன்றும் வாழ்கிறார்கள்..ஆள்கிறார்கள்.//

    உண்மை, உயர்திரு ஷாலி அவர்களே, உண்மை. பாரதி பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது:

    “என்று தணியுமிந்த அடிமையின் மோகம்?”

    இபோழுது தமிழையும் விட்டுவிட்டோம், தமிழ் உணர்வையும் விட்டுவிட்டோம்!

    “மெல்லத் தமிழினிச் சாகும், அந்த மேலை மொழிகள் இப்புவிதனில் மேவும்…” என்ற வாக்கும் பலித்துவிடும் போலிருக்கிறது.

  4. Avatar
    paandiyan says:

    எதற்கெல்லாமோ பாரட்டும் காமராஜரை இந்த விசயத்தில் தைரியமாக குறை சொல்லலாம். அணையை கட்டினார்கள் அடி வயிர்றில் அடித்தார்கள் என்று இங்கு ஒரு கட்டுரை முன் வந்தது. ஃப்ரீ ஃப்லோ தண்ணீர் எல்லாம் இல்லை என்ற பிறகு எப்படி வன்டல் , களிமண் என்று வருவது — அதுதான் நம் தமிழர்கள் மண்டையில் இருக்கின்றதே பிறகு என்ன ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *