தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!

This entry is part 10 of 23 in the series 7 டிசம்பர் 2014

Stamp

          கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.
        செயின்ட் தாமஸ் என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர். அவருடன் வாழ்ந்தவர். அவர்தான் இந்தியாவுக்கு கிறிஸ்துவ மதத்தைக் கொண்டுவந்தவர். செயின்ட் தாமஸ் மவுண்ட் என்று அவர் பெயரில் ஒரு பகுதி சென்னையில் உள்ளது. சாந்தோம் தேவாலயமும் கடத்கரையும்கூட உள்ளது. அவருடைய பெயரில்தான் அந்த விடுதி அழைக்கப்பட்டதூ. அது 1937ல் கட்டப்பட்டது.
          சுமார் நூறு மாணவர்கள் தங்கும் விடுதி அது. அது போன்று சேலையூர் விடுதி, பிஷப் ஹீபர் விடுதி என்று இன்னும் இரண்டு விடுதிகள் உள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர். சில வெளிநாட்டு மாணவர்களும் இருந்தனர். மத வேறுபாடின்றி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளேவே இல்லை.மனதில் இனம் தெரியாத பெருமிதமும் நம்பிக்கையும் குடிகொண்டிருந்தது.
          சதுரமான வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்த விடுதிக்குள் நுழைந்ததுமே பெரிய அரங்கம் இருந்தது. பொதுக்கூட்டங்களும், சொற்பொழிவுகளும், பட்டிமன்றங்களும், கலை நிகழ்சிகளும் நாடகங்களும் நடத்தும் வகையில் அமைந்திருந்தது.அதைத் தாண்டி விடுதிக்குள் சென்றதும் ஒரு பெரிய கூடத்தின் சுவர்களில் வரிசை வரிசையாக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் புகைப்படங்கள் அந்தந்த வருடத்தின் வாரியாக அலங்கரித்தன.அவற்றில் ஒரு படத்தில் பிரபல திரைப்பட கதாநாயகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் இருந்தார். அவரும் இந்த விடுதியில் தங்கி படித்தவர்தான்.
GJ
          சென்னை கிறிஸ்துவக் கல்லூரி அப்போது தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகப் புகழ்மிக்கதாக விளங்கியது. இந்திய ஜனாதிபதியாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன்கூட இங்குதான் பயின்றவர். சிறந்த கல்விமானான அவர் தலை சிறந்த இந்து மத  விற்பன்னராகத் திகழ்ந்தவர் என்பதை உலகறியும். 1835 ஆம் வருடம் சென்னை எழும்பூரில் ஆண்கள் பள்ளியாக இயங்கி 100 ஆண்டுகளுக்குப் பின்பு 1937 ல் தாம்பரத்தில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியாக இயங்கத் தொடங்கியது.
          இத்தகைய தலைசிறந்த கல்லூரியில் நானும் ஒரு மாணவனாகச் சேர்ந்துள்ளது எனக்கு எலையில்லா இன்பத்தைத் தந்தது.பெருமிதத்துடந்தான் என்னுடைய அறைக்குள் முதன்முதலாக நுழைந்தேன்.அறைக்குள் ஒரு கட்டில், மேசை நாற்காலி, அலமாரி ஆகியவை இருந்தன. மேசை விசிறி நாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும்.கொண்டு வந்த சாமான்களை அடுக்கி வைத்தேன். மேசையில் முதலில் அறிஞர் அண்ணாவின் படத்தைதான் வைத்தேன்.அவர் என்னைப் பார்த்து வாழ்த்துவது போலிருந்தது. அவர்தானே என்னுடைய வாழ்க்கையின் வழிகாட்டி! என்னுடைய தமிழ்ப் பற்றுக்கெல்லாம் காரணமானவர் அண்ணாதானே! திருக்குறளையும் மேசைமீது வைத்துக்கொண்டேன். தினமும் ஒரு குறள் படிக்க வேண்டும் அல்லவா?
          இனிமேல் நான் கல்லூரி மாணவன்! ” கண்ணான காதலர். காலேஜு மாணவர் . ” என்ற பழைய திரைப்படப் பாடல் கூட அப்போது காதில் ஒலித்தது! இனி நான் சுதந்திரப் பறவை! அப்பாவின் அடக்குமுறை இனி இல்லை! லதாவின் நினைவு வந்த போதிலும் இந்த புதிய சூழலில் அது பெரிதாக பாதிக்கவில்லை. அவள் எங்கு போய்விடப் போகிறாள்.அவள்தான் நான் படித்து முடித்து திரும்பும்வரை காத்திருப்பதாகச் சொல்லியுள்ளாளே!
          சிறப்பாகப் படித்து நல்ல  மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவேண்டும். அதன் பின்பு எந்த படிப்பு பிடிக்கிறதோ அதில் சேர்ந்து படித்து பட்டதாரியாகி விடலாம்!
          நன் தமிழகத்தில் உள்ளேன்.என்னுடைய தமிழ் ஆர்வத்தையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம்.எனக்குப் பிடித்தமான திராவிடர் இயக்கத்தில் நிறைய பங்காற்றலாம். சிங்கப்பூரிளிருந்தபோது பத்திரிகை வாயிலாகவும்,நூல்கள் வாயிலாகவும் இயக்கத் தலைவர்கள் பற்றி அறிந்திருந்தேன். இப்போதோ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், மதியழகன், நாஞ்சில் மனோகரன், சிற்றரசு, கவிஞர் கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., போன்ற கழகத்தின் தலைவர்களை நேரில் பார்க்கலாம். அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழலாம்!
          மதியம் உணவு உண்ணும் ஹாலில்தான் மற்ற மாணவர்களின் அறிமுகம் கிடைத்தது. பார்த்த அனைவரும் கைகுலுக்கி எந்த ஊர் என்று கேட்பதில் அதிக ஆர்வம் காட்டினர். அதன்பின்பு எந்த வகுப்பில் சேர்ந்துள்ளதை தெரிந்துகொண்டோம்.. உணவு உண்ணும் நேரத்தில் அவ்வாறு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஏராளமான தமிழ் மாணவர்கள் இருந்தனர் அவர்கள் தமிழில்தான் பேசினர். வெளி மாநிலத்து மானவர்கள ஆங்கிலத்தில் உரையாடினர்.வெளி நாட்டு மாணவர்களும் ஒருசிலர் காணப்பட்டனர்.
          மாலையில் குளியல் அறைக்குச் சென்றேன். அது பொதுவானது.அங்கும் சில மாணவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. இரவு உணவின்போதும் பல புதிய மாணவர்களைச் சந்தித்தேன். அந்த உணவுக்கூடமே கலகலப்பாக காணப்பட்டது. அவ்வளவு உற்சாகம் அங்கு!
        இரவில் நிம்மதியாக தூங்கி அதிகாலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் எழுந்தேன்.சுறுசுறுப்புடன் இயங்கினேன். குளித்து முடித்து புத்தாடைகள் அணிந்துகொண்டேன்.
          திருக்குறளில் ஒரு குறளை மனப்பாடம் செய்தேன்.அதை ஒரு தாளில் எழுதி சட்டைப்பையில் பத்திரப்படுத்தினேன்.மறந்து விடாமல் இருக்க அவ்வப்போது எடுத்து பார்த்துக்கொள்ளலாம்..
          உணவு உண்ணும் ஹாலில் சூடாக இட்டிலி, தோசை இருந்தன. அவை வழக்கமாக வழங்கப்படும். முட்டை வேண்டுமானால் தனியாக கட்டணம் செலுத்தவேண்டும். அதை கணக்கு நோட்டில் குறித்துக் கொள்வார்கள். மாத இறுதியில் பணம்  செலுத்தி விடலாம். அதுபோன்றுதான் துணிகள் துவைத்துத் தர சலவைக்காரர் வருவார்.அவருக்கும் மாத இறுதியில் பணம் தந்துவிட வேண்டும்.
          பசியாறிவிட்டு மாணவர்கள் கும்பல் கும்பலாக விடுதியைவிட்டு வெளியேறினோம்.நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.வகுப்பு எங்கே உள்ளது என்பது எனக்குத் தெரியாது.
          நான் அறிவியல் பகுதியில் சேர்ந்திருந்தேன்.கல்லூரி வளாகத்தினுள் கட்டிடங்கள் தனித்தனியாக இருந்தன. அவற்றை செம்மண் சாலைகள் இணைத்தன.அது அடர்ந்த காட்டினுள் இயற்கைச் சூழலில் அமைந்திருந்தது.
          அந்த செம்மண் சாலைகளின் இரு மருங்கிலும் வரிசைவரிசையாக பூ மரங்கள் வளர்ந்திருந்தன. அவற்றிலிருந்து சிவப்பு, மஞ்சள், ஊதா நிறங்களில் பூக்கள் உதிர்ந்து சாலையை அலங்கரித்தன.அவற்றின் நறுமணம் மனதுக்கு மயக்கத்தை உண்டுபண்ணியது. மரங்களில் இருந்த குருவிகள்கூட எங்களைப் பார்த்து ஏதேதோ பேசிக்கொண்டன!
          காலையிலேயே வீசிய குளிர் தென்றல் ஒருவித கிளுகிளுப்பை உண்டுபண்ணியது.
          ஒருவாறாக அலுவலகக் கட்டிடத்தை அடைந்தோம்.அங்குதான் கல்லூரி முதல்வரின் அறை இருந்தது. மேல்மாடியில் பெரிய நூல் நிலையமும் இருந்தது. கூடத்தில் கல்லூரியின் வரைபடம் வைக்கப்பட்டிருந்தது. அதில் எங்கெங்கே எந்தெந்த பிரிவுகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டேன்.ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு பகுதிக்கு செல்ல வேண்டும்.
          அங்கு நிறைய பெண்களையும் கண்டேன்.அவர்களில் பெரும்பாலோர் வண்ண வண்ண சேலைகள் அணிந்திருந்தனர்.கூந்தலில் மல்லிகைச் சரம் சூடியிருந்தனர். அவர்களில் பல அழகு தேவதைகளும் இருந்தனர்! அவர்கள்  பட்டப் படிப்பு மாணவிகள்.

பி.ஏ., எம். ஏ., பி.எஸ்.சி., எம். எஸ்.சி.போன்ற பட்டப் படிப்புகளில் பெண்களும் இருந்தனர். புகுமுக வகுப்பில் பெண்கள் இல்லை.
            ( தொடுவானம் தொடரும் )
Series Navigationநான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறுகளரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *