பெண் இலக்கியம் என்றால் என்ன?
பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி.
இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா?
பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை ஆண்களும் சொல்லமுடியும். பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான்.
ஆனால் படைக்கப்பட்ட இலக்கியமே பெண்மைக்கு மட்டும் உரியதாகவும்,அதை ஆணால் நினைத்தும் பார்க்கமுடியாததாக இருக்கும்போது மட்டுமே அது பெண்ணிலக்கியமாகிறது. அங்கே உடலில் -அதனது உணர்வுகள் எனும்போது பெண்கள் மீதான பிரத்தியேகமான காம உணர்வுப்பார்வை – தாய்மை என்பன இலக்கியமாகிறது.
இப்படியான பெண்ணிய இலக்கியமாக நான் இனம்கண்டுகொண்ட டோனி மொரிசனின் பிலவ்ட் என்ற நாவலை புரிந்துகொள்வதற்கு அதனை மூன்று முறை படிக்க நேர்ந்தது. அதன் கதைப்பொருள் கறுப்பு இன அடிமைகளைப் பற்றியது. பலர் இந்தக் கருவை வைத்து எழுதி இருந்தாலும் கதை நகரும் விதம் கதா பாத்திரங்களின் உணர்வுகள் வெவ்வேறுதிசையில் நகர்ந்தவிதம் வெளிப்பட்ட முரண்ணகைகள் படிமம் என்பன நான் ஏற்கனவே படித்த சில நாவல்களிலிருந்து வேறுபட்டு மிக முக்கியமான நாவலாகியது. அசாதாரணமான கதைக்கருவோடு பதிவான வார்த்தைகள் இந்த நாவலை மனதில் செதுக்கிவிடுகிறது.
ஆரம்ப வசனமே ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்டதாக டோனி மொரிசனால் சொல்லப்படுகிறது
124 were spiteful. Full of a baby’s venom.
அன்னா கரினாவில் டோல்ஸ்ரோயின் ஆரம்ப வசனம் இப்படி ஆரம்பிக்கிறது – “சந்தோசமான அனைத்துக் குடும்பங்களில் மகிழ்ச்சி ஒரே மாதிரியானது. மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் துன்பம் வௌ;வேறானது” இந்த வாசகம் அன்னாகரினாவின் முழுநாவலிலும் பக்கத்திற்கு பக்கம் எதிரொலிப்பது போல டோனி மொரிசனின் முதல் வசனம் கதையை தொடர்ந்து நகர்த்துகிறது.
124 வீட்டிலக்கம் கொண்ட அந்த வீடு வெஞ்சினம் கொண்டது. அந்த வீட்டில் குழந்தையின் விஷம் நிறைந்துள்ளது.
நாவலின் மொத்த 273 பக்கங்கள் இந்த இரண்டு வசனங்களில் அடக்கப்படுகிறது. ஆனால் முற்றாக நாவலைப் படித்த பின்பே அதைப் புரிந்து கொள்ள முடியும்
இந்த நாவல் அமரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னால் (1865) தொடங்குகிறது. ஆரம்பத்திலே நாவல் அமெரிக்க கண்டத்திற்கு கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் கறுப்பு அடிமைகளுக்கு அர்ப்பணமாகிறது.
கறுப்பு அடிமைகளின் வாழ்வு ஒரு அடிமையான பெண்ணின் வாழ்வால் மீண்டும் திரும்பிப் பார்க்கப்படுகிறது. வரலாறு என்பது தனிமனிதர்களால் கால்த்தடம்போல் விட்டுச் செல்ல முடியாது. நிழல்போல் வாழ்க்கையெங்கும் ஏன் இறந்தபின்பும் தொடரும் ஏன்பது இந்த நாவலில் நிரூபணமாகிறது.
கதையின் நாயகி சேத் மற்றைய அடிமைகளோடு இருந்த இடம் சுவீட் ஹோம் என்று முரண்நகையாக விபரிக்கப்படுகிறது.
அங்கிருந்து நிறைமாத கர்ப்பிணியாக தப்பி வரும்போது கால்கள் வீங்கி இறக்கும் தறுவாயில் ஏமி டென்வர் என்ற வெள்ளைக்கார சிறுமியால் அவளுக்கு பிரசவம் பார்க்கும்போது அந்த இரண்டு பெண்களுக்கும் இடையில நடக்கும் உரையாடல் மிகவும் அழகானது. ஆழமானஅர்த்தமுள்ளது.
‘இறந்தவை உயிர் பிழைக்கும்போது துன்பம் உருவாகும்’ என ஏமி டென்வரின் வாக்கியம் நாவல் முழுவதும் எதிரொலிக்கும்.
இதேபோல் சுவீட் ஹோமில் இருந்து தப்பி வந்த போல்டீக்கும் சேத்துக்கும் இடையில் நடக்கும் உரையாடல் மிகவும சிறிய வசனங்களில் இடம்பெறுகிறது.
‘இருபது வயதான டென்வர் வளர்ந்துவிட்டாள். தனது செயல்களுக்கு அவளே பொறுப்பேற்க வேண்டும்” என்று போல்டி பேசும்போது, தாயான சேத் –
‘பிள்ளைகள் பிள்ளைகள்தான். அவர்கள் பெரியவர்களானாலும் பிள்ளைகளே’
‘சரி நீ இறந்தால் என்ன நடக்கும்?’
மற்றொரு இடத்தில்:
‘உனது மனதில் இருப்பதை சொல்லலாம்” என்றான் போல்டி.
‘உள்ளே போகமுடியாது’
‘நான் இருக்கும் வரையும் உன்னை பாதுகாப்பேன். நீ உள்ளே விழாமல் உனது கால்களை பிடிப்பேன் ” போல்டீ.
சேத்தின் பழைய நினைவுகள் இறந்தகால சம்பவங்களை பேசித்தீர்க்கும்படி போல் டி சொன்னபோது – சேத் அது பாரிய இருண்ட குகை, அதற்குள் செல்வது மரணத்தை நோக்கி செல்வது போன்றது என்கிறாள்.
ஆனால் அந்த பழைய நினைவுகளே நாவலாக தொடர்ந்து பாஞ்சாலியின் துகிலாக அவிழ்கின்றது..
சேத் அடிமைப்பெண்ணாக இருக்கும்போது பிறந்த குழந்தைகள் தாயிடம் இருந்து சில குழந்தைகள் பறிக்துக் கொள்ளப்படுகிறது. இரு ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தையும் பாதுகாப்பாக மாமியாரிடம் அனுப்பிவிட்டு ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும்போது தப்பிவருகிறாள். ஏற்கனவே அனுப்பிய பெண் குழந்தை இரண்டு வயதாக இருக்கும்போது மீண்டும் சேத்தை அடிமையாக்க வரும்போது அந்த இரண்டு வயதுக்குழந்தை தன்னைப்போல் அடிமையாகக்கூடாது என்பதற்காக அந்தக்குழந்தை தாயால் கொலை செய்யப்படுகிறது.
அந்தக் குழந்தையை புதைத்து அதில் நடுகல்லை வைப்பற்கு Dear Beloved போதகர் சொல்லி கேள்வியுற்ற வார்த்தையை நடுகல்லில் பொறிப்பதற்கு கற்தச்சனுக்கு பணம் கொடுக்க வேண்டும். அந்த மயானத்தில் பணத்திற்குப் பதிலாக அவளுடன் உடலுறவு கொண்டு Beloved என்ற ஒரு வார்தையை மட்டும் கல்தச்சன் பொறிக்கிறான். அவளுடன் உறவு கொண்டவன் Dear Bஎன்ற வார்த்தையை விட்டு விடுகிறான். சேத் உறவில் ஈடுபடும்பொழுது அவளது கைகளில் குழந்தையின் இரத்தம் பிசுபிசுத்தபடி காயாமல் இருக்கிறது.
இறந்த குழந்தை பல வருடங்களாக ஆவியாக அந்த வீட்டில் உலாவுவதால் ஏற்படும் பிரமையினால் உருவாகும் அசம்பாவிதம் அவளது இரண்டு ஆண் குழந்தைகளையும் வீட்டைவிட்டு ஓடவைக்கிறது. எந்த அயலவர்களும் அந்த வீட்டிற்கு வருவதில்லை. வீட்டை விட்டு போகலாமென்றால் சேத்தின் மாமியார் கிழவி ‘இந்த ஊரில் எல்லாவீட்டிலும் இறந்த நீக்ரோவின் ஆவியலைகிறது. குறைந்த பட்சம் இது குழந்தையின் ஆவி. நிட்சயமாக வன்மமும் நஞ்சும் குறைவாக இருக்கும்.’ என பதிலிறுக்கிறாள்.
வெள்ளை அடிமை முதலாளிகள் இரவில் அன்பே என்பார்கள்.பகலில் பெட்டைநாயே என்பார்கள் என சேத் கூறியதுடன் வெள்ளையர்கள் தோலற்றவர்கள் என்கிறார். ஆளமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் பல அர்த்தங்களைத் தொனிப்பதாக இருக்கிறது
இறந்த குழந்தை இருபது வருடங்களின் பின்பு தாயை பழிவாங்குவதற்காக பெண்ணாக வருகிறாள். எப்படி தாயை தனதாக்குகிறாள் என்பதே இந்த நாவல்.
பெண் உடலில் வெளியேறும் உதிரம் சிறுநீர் முலைப்பால் என்பன இதற்கு முன்னர் எந்தவொரு இலக்கியத்திலும் இதுபோன்று முக்கியத்துவப்படுத்தபடவில்லை என்றும் கருதுகின்றேன்.
ஆபிரிக்கர்கள் பேசும் மொழியில் உரையாடல் எழுதப்பட்டிருக்கிறது. அதனால் படிப்பதை கடினமாக்குகிறது. எனினும் அந்தமொழிவழக்கும் நாவலுக்கு யாதார்த்தத்தை அளிக்கிறது.
நாவலைப் படித்த ஆர்வத்தில் ஓப்பரா வின்பிறியும் (Oprah Winfrey) டானி குலோவர் (Danny Glover) படத்தைப் பார்த்தபோது மெய்மறந்தேன். நாவலைப் திரைபடமாக்கும்போது பல விடயங்கள் இல்லாமல் போகின்றன.வாசிப்பர்களின் சிந்தனைக்கு விடப்படும் விடயங்கள் படத்தில் விடப்பட்டாலும் இதைவிட திறமாக எடுக்க முடியாது என்ற அளவிற்கு இருக்கிறது. ரோனி மொரிசனின் வசனங்கள் பல அப்படியே வருகின்றன.இந்த திரைபடம் நாவலை படித்தவர்களுக்கு அற்புதமாக இருக்கும் வேளையில் தனியே திரைப்படத்தை பார்ப்பவர்கள் திணறவைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
- கூடை
- வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]
- சாவடி – காட்சிகள் 10-12
- நகை முரண்
- “சாலிடரி ரீப்பர்”…வில்லியம் வோர்ட்ஸ்வர்த்
- மரச்சுத்தியல்கள்
- இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்
- பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்
- நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு
- தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!
- களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015
- சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு
- ஆத்ம கீதங்கள் – 8 எத்தனை நாள் தாங்குவீர் ? [கவிதை -6]
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி
- அழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்
- இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி
- செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா
- ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16
- டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்
- திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை
- வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்
- தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2
- உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி