வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 23 in the series 7 டிசம்பர் 2014

முனைவர் க. நாகராசன்

”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி அளித்தது.

விழுப்புரத்தை அடுத்த பிரௌட தேச மகரஜபுரம் என்னும் வளவனூரில் பல கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. ஜகன்னாத ஈஸ்வரர் கோயிலையும், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலையும் ஆய்வுப் பொருள்களாக இந்நூல் எடுத்துக் கொள்கிறது.

இவ்விரு கோயில்களும் சோழர் காலம் முதலே மன்னர்களால் போற்றப்பட்டு வந்துள்ளன. இராசேந்திர சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் முதலானோர் இக்கோயில்களுக்குப் பல தர்ம சாசனங்களைத் தந்துள்ளனர்.

கி.பி. 11—12—ஆம் நூற்றாண்டுகளிலிருந்து 16-ஆம் நூற்றாண்டு வரை வேறு இடங்களில் இக்கோயில்கள் இருந்திருக்கின்றன. இஸ்லாமியரின் படைபெடுப்புகளால் கோயில்கள் பாதிக்கப்பட்டன. செஞ்சி நாயக்கரின் கீழ் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரத் தலைவனால் இப்பொழுது உள்ள இடத்தில் இக்கோயில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளன. பழைய கோயில்களில் இடம் பெற்றிருந்த கட்டடப் பொருள்களையும், கல்வெட்டுகளையும் இப்புதிய கோயில்களில் ஆங்காங்கே அமைத்துக் கட்டியுள்ளனர். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இக்கோயில்களுக்கு உரிய நிலங்களை வரையறுத்து வைத்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட வரலாற்றை ஆவணங்களின் மூலம் அழுத்தம் திருத்தமாக நூல் நிறுவுகிறது. நூலாசிரியரின் வரலாற்று அறிவையும், சிரத்தையையும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது.

ஜகன்னாத ஈஸ்வரர் கோயில் மகா மண்டபத்தில் காணப்படும் நுணுக்கமான சிற்பங்கள் ஒவ்வொன்றின் மேன்மையையும் நூலாசிரியர் நன்றாக விளக்குகிறார். 23 செப்புத் திருமேனிகளையும் படங்களுடன் விளக்குவது வாசகருக்கு பரவசத்தைத் தருகிறது.

ஒவ்வொரு சித்திரை மாதப் பிறப்பின்போதும் வருடத்தில் முதல் வாரத்தில் அதிகாலை சூரிய ஒளி ஜகன்னாத ஈஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் மூலவர் சிலைகளில் படும்படியாகக் கோயில் கட்டப் பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு நூலில் பதியப்படவில்லை. அதைப்போல தமிழகத்திலிருந்து மணிலாப் பயிரையும், மணிலா எண்ணெயையும் 19- ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்து எண்ணெய்ப் புரட்சிக்கு வித்திட்டவர் கோவிந்தையர். அந்தத் தகவலும் இந்நூலில் இல்லை. கோவிந்தையர் ஜகன்னாத ஈஸ்வரர் கோயிலின் அறங்காவலர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அந்த கோவிந்தையரைப் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

16-7-14 ஜூனியர் விகடன் இதழில் “வேர்க்கடலை பெருகிய கதை” எனும் தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவு செய்திருப்பதை அப்படியே தருகிறேன்.

”இன்று நாம் விரும்பிச் சாப்பிடும் கடலை உருண்டையைப் பிரபலமாக்கியதில் கோவிந்தையருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள சிறிய ஊர் வளவனூர். 1870-இல் அங்கே கோவிந்தையர் என்ற இளைஞர் செக்கு நடத்தி இருக்கிறார். இவரிடம் எண்ணெய் ஆட்டுவதற்காக பல ஊர்களிலிருந்தும் ஆட்கள் வண்டி போட்டு வந்து காத்திருப்பார்களாம்.

தோற்றத்தில் மிகவும் எளியவர் கோவிந்த அய்யர். முழங்கால்வரை தொங்கும் நாலுமுழ வேட்டி. தோளில் ஒரு துண்டு. செருப்பு அணியாதவர். சிறு வயதில் கொத்தவால் சாவடியில் வேலை செய்த அனுபவம் காரணமாக வேர்க்கடலையை வாங்கி எண்ணெய் ஆட்டி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவருக்குக் கல்கத்தாவைச் சேர்ந்த சுலைமான் சாவாஜி என்ற வணிகரின் தொடர்பு உருவானது. அந்த நாட்களில் பர்மாவில் கடலை எண்ணெயை பிரதானமாக சமையலுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். ஆகவே பர்மாவுக்கு ஏற்றுமதி செய்ய உதவியாக சில பீப்பாய்கள் கடலை எண்ணெயைத் தனக்கு அனுப்புமாறு சாவாஜி கோவிந்த அய்யரிடம் கேட்டிருந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் வேர்க்கடலை விளைச்சல் மிகக் குறைவு. அத்துடன் பெரும்பாலும் கடலை எண்ணெயை விளக்கெரிக்கத்தான் பயன்படுத்தினார்கள். அதைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதைக் கோவிந்த அய்யர் தெரிந்துகொண்டு ஊர் ஊராகத் தேடிப்போய் சேகரித்து நான்கு பீப்பாய் கடலை எண்ணெயைத்தான் வாங்கி அனுப்ப முடிந்தது.

ஆனால் பர்மா சந்தையில் கடலை எண்ணெய்க்குப் பெரிய கிராக்கி உள்ளது எனச் சொன்ன சாவாஜி, மேலும் நூறு பீப்பாய்கள் எண்ணெய் வேண்டி, முன்பணம் கொடுத்தார். எப்படியாவது இதைச் சாதித்துக் காட்ட வேண்டுமென நினத்த கோவிந்த அய்யர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து வேர்க்கடலையைச் சேகரித்தார். தானே மரச் செக்குகளில் ஆட்டி பீப்பாய்களில் எண்ணெயை நிரப்பினார்.

எண்ணெய் சேகரித்து அனுப்ப மரப்பீப்பாய் தேவைப்பட்டது. அந்த நாட்களில் மரப்பீப்பாய் செய்பவர்கள் கொச்சியில்தான் இருந்தார்கள். அவர்களை நேரில் சென்று சந்தித்து மரப்பீப்பாய்களைத் தயார் செய்தார். வேர்க்கடலைக்கு நல்ல லாபம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு விவசாயிகளை வேர்க்கடலையப் பயிரும்படி ஊக்குவித்தார். 1850 முதல் 1870வரை அன்றைய சென்னை மாகாணத்தில், வேர்க்கடலை குறைந்த அளவிலேயே பயிரிடப்பட்டது. ஆனால் கோவிந்த அய்யரின் இடைவிடாத முயற்சியால் கடலை உற்பத்தி அதிகமாகத் தொடங்கியது.

அவர் வெறும் வணிகராக மட்டுமன்றி விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். இதன் காரணமாக அவர், ஆப்பிரிக்காவின் மொஸாம்பிக் பகுதிகளில் பயிரிடப்படும் வேர்க்கடலை ரகம் ஒன்று, அதிக விளைச்சலைத் தரக் கூடியது என்பதை அறிந்து, தனது ஆட்களின் மூலம் மொஸாம்பீக்கில் இருந்து 300 மூட்டைகள் வேர்க்கடலையைத் தருவித்து விவசாயிகளுக்கு வழங்கினார். அதன் காரணமாக வேர்க்கடலை உற்பத்தி வேகமாக வளர்ச்சி அடைந்தது. மூன்றே ஆண்டுகளுக்குள் இந்தக் கடலை ரகம் தென்னாற்காடு மாவட்டத்தில் முற்றிலுமாக நிலைபெற்று விட்டது.

தாது வருஷ பஞ்சகாலம் தென்னாற்காடு மாவட்டத்தை உலுக்கியது. அப்போது பல இடங்களில் உணவு வழங்கும் மையங்களை நிறுவிய கோவிந்த அய்யர், ஒவ்வொரு மையத்திலும் பசியுடன் வந்தவர்களுக்குக் கஞ்சியும், வெல்லப் பாகு வைத்துப் பிடித்த கடலை உருண்டையும் வழங்க ஏற்பாடு செய்தார். இவரது முயற்சியின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்றப்பட்டனர். விளக்கெரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வேர்க்கடலையை, உணவுப் பொருளாக மாற்றிய பெருமை கோவிந்த அய்யரையே சாரும் என்கிறார்கள்.

 

 

இன்றைய வளவனூர் பாடலேசுவரர் மற்றும் ஜகன்னாத ஈஸ்வரர், வரதாராஜப் பெருமாள் மற்றும் லட்சுமி நாராயணப்பெருமாள் என நான்கு கோயில்களையும் உள்ளடக்கியது. இவை நான்கும் பழமை வாய்ந்தவை. கல்வெட்டுகளைக் கொண்டவை. மன்னர்களால் பேணப்பட்டவை. ஆனால் குமார குப்பம் மற்றும் வளவனூர் என்கிற பிரிவினையை உண்டாக்கி, அக்ரஹாரத்தைச் செர்ந்த இரு கோயில்களையும் மட்டு ஆராய்ந்ததற்குப் பதிலாக நான்கு கோயில்களையும் உள்ளடக்கி இருந்தால் நூல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

காலக்கண்ணாடியாகத் திகழும் இந்த நூல் நடுநாட்டு வரலாற்றில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. வளவனூரில் பிறந்தவன், வளர்ந்தவன் என்கிற முறையில் இந்த நூலின் மேன்மையை என்னால் நன்கு உணர முடிகிறது. எடுத்துக் கொண்ட காரியத்தை மிகுந்த ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் சீரும் சிறப்புமாக செய்து முடித்துள்ள நூலின் ஆசிரியர் வரலாற்றறிஞர் திருமதி லட்சுமி மூர்த்தி அவர்களுக்கு மக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள்.

[வரலாற்றில் வளவனூர்—லட்சுமி மூர்த்தி—வெளியீடு: சேகர் பதிப்பகம்—66/1 பெரியார் தெரு; எம்.,ஜி.ஆர். நகர்; சென்னை- 600 078—பக்கம்: 132;–விலை: ரூ: 24—மறு பதிப்பு: 1994]

Series Navigationகூடைசாவடி – காட்சிகள் 10-12
author

Similar Posts

Comments

  1. Avatar
    தமிழ் நேசன் says:

    ஐயா வணக்கம் வரலாற்றில் வளவனூர் என்னும் புத்தகம் எங்கு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *