சாவடி – காட்சிகள் 13-15

This entry is part 23 of 23 in the series 14 டிசம்பர் 2014

காட்சி 13

 

காலம் : பகல் களம்: வெளியே / உள்ளே (திண்ணை)

 

பண்ணையார் வீடு. ரெட்டைத் திண்ணை. ஒரு திண்ணையில் பாய் விரித்து பண்ணையார். சுவரில் பிரிட்டீஷ் சக்கரவர்த்திகள் படங்கள். தரையில் பவானி ஜமுக்காளம். அதில் சிதறி இருந்த சீட்டுக்கட்டுகளை அடுக்கி வைக்கும் வேலைக்காரன். எச்சில் படிக்கம். பனை ஓலை விசிறிகள். மண்பானை. மேலே பித்தளை டம்ளர். ஓரமாக கிராமபோன் பெட்டி – குழாய் ஸ்பீக்கரோடு

 

நாயுடுவும் ஐயங்காரும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

பண்ணையார்: (திண்ணைக்குக் கீழே கை கட்டி நிற்கிற எடுபிடியிடம்) ஏண்டா.. பட்டணத்துலே இருந்து போலீஸ் வந்திருக்குன்னு சொன்னே.. அங்கே தட்டுச் சுத்து வேட்டியும் குடையுமா ரெண்டு கிழம் தான் வந்துட்டு இருக்கு.. எந்தப் பட்டணத்து போலீஸ்டா இதுங்க?

 

எடுபிடி: ஸ்டேஷன் ஐயாவும் வந்திருக்காப்பல

 

பண்ணையார்: சரி அந்தத் திண்ணையிலேயும் ஒரு பாயை விரிச்சு நாலு எளனி வெட்டிக் கொண்டாந்து கொடு. விரலை உள்ளே போட்டுடாதே..

 

நாயுடு: (திண்ணைப்படி ஏறியபடி) அதெப்படி விரலை மட்டும் எளனிக்குள்ளே போடறது ஐயா?

 

பண்ணையார்: வாங்க வாங்க.. சும்மா விகடம் பண்ணினேன்.. இவனை விட்டா கொப்பரையையே நகத்தாலே பேர்த்து தேங்கா எடுத்துடுவான்.. அர்ச்சுனனுக்குத் தம்பி முறை…

 

நாயுடு: அபிமன்யுவா?

 

அய்யங்கார்: கொஞ்சம் சும்மா இருக்கியா? இங்கே பண்ணையார்ங்கறது

 

பண்ணையார்: (நடந்து போகிற எடுபிடியைக் காட்டி) இவன் இல்லை. நீங்க இப்போத்தான் வந்தீங்க. அதுனாலே நீங்களும் இல்லே. மிஞ்சினது நான் தான்.

 

நாயுடு: ஐயா எப்பவுமே விகடம் தான் போல

 

பண்ணையார்: உக்காருங்க.. மனசுலே வருத்தத்தை வச்சுக்கிட்டு நான் பகடி பேசிட்டு கிடக்கேன் இன்ஸ்பெக்டர் ஐயா..

 

நாயுடு: ஐயோ அந்த பிரமோஷன்லாம் அடுத்த ஜன்மத்திலே தான் இனிமே… அதுவும் காக்கி சட்டை மாட்டினாத்தான்.. ஏட்டாவே ரிடையர் ஆகப்போறவன் இந்த நாயுடு

 

பண்ணையார்: (அய்யங்காரைப் பார்த்து) நீங்க வக்கீலய்யர் இல்லீங்களா? இல்லே ஐயங்காருங்களா?

 

அய்யங்கார்: கரெக்டா சொல்லிட்டீங்களே.. ஜோசியமா?

 

பண்ணையார்: அனுமானம் தான்..நாமம் போட்டவங்க எல்லாம் வக்கீல் மாரு இல்லாக்காட்டி பெருமா கோவில் மடப்பள்ளியிலே புளிசோறு கிண்டறவங்க..

 

அய்யங்கார் : பண்ணையாரே.. இங்கே செங்கல்வராய முதலியார்ங்கறது..

 

பண்ணையார்: அது என் பேரு .. என்ன வேணும் சாமிகளே?

 

அய்யங்கார் பண்ணைக்காடுங்கறது

 

பண்ணையார் நான் இல்லே. அது பக்கத்து குக்கிராமம்.

 

அய்யங்கார்.. பண்ணையாரே.. அது … பாரும் இதை

 

(கையில் கொண்டு வந்த பத்திரங்களை அய்யங்கார் காட்ட, நாயுடு எதிர்பாராதது நடந்த சுவாரசியத்தோடு பார்க்கிறார்.

 

அய்யங்கார் என் பூர்வீக நிலம் ரெண்டு ஏக்கர் வரும் .. பண்ணைக்காட்டுலே இருக்கு.. இதான் அதுக்கான தஸ்தாவேஜ்..

 

(எடுபிடி இளநீரோடு வந்து மூன்று பேருக்கும் தருகிறான்.)

 

அய்யங்கார் : சட்டு புட்டுனு விஷயத்துக்கு வந்துடறேன்.. ஆமா, அந்த நிலம் எல்லாத்தையும் வித்தா?

 

நாயுடு: பைத்தியமா ஓய் உமக்கு?

 

பண்ணையார் : அதானே.. எதுக்கு விக்கணும்

 

அய்யங்கார்: ஒரு காரியமாத்தான்.. பட்டணத்திலே செட்டில் ஆகிடலாம்னு தீர்மானிச்சிருக்கேன்

 

நாயுடு: உம்ம தீர்மானத்தை உடப்பிலே போடும்.. எல்லாப் பயலுகளும் பட்டணம் வேண்டாம்னு ஓடறான்.. நீர் அதான் சாஸ்வதம்னு கூடத்திலே ஊஞ்சல் கட்டி உக்காரறேன்கறீர்

 

அய்யங்கார்: இதெல்லாம் மொத்தமா கொடுத்தா..

 

பண்ணையார்: என்ன .. ஒரு ஆயிரம் கிடைக்கும்..

 

அய்யங்கார் : நீர் வாங்கிக்கறீரா?

 

பண்ணையார் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்

 

அய்யங்கார்: பிராமணன் கேட்கறேன்.. தானமா ஒரு இருநூறு மட்டும் கூடக் கொடுங்கோ சரியா? டாக்குமெண்ட் வெரிஃபை பண்ணிட்டே பத்திரம் பதிஞ்சுடலாம்.

 

பண்ணையார் : என்ன சொல்றதுன்னு தெரியலே.. வருத்தமும் சந்தோஷமும் சேர்ந்தில்லே வந்து தொலைக்குது எளவு

 

 

நாயுடு: என்ன வருத்தம்?

 

பண்ணையார்: .. கண்ணாலம் வச்சிருந்தேன்.. பொண்ணைக் காணோம் .. மாப்பிள்ளை வீட்டுலே காரித் துப்பறான்..

 

நாயுடு: நாங்க வந்திருக்கோம் இல்லே..

 

பண்ணையார்: தொடச்சு விடவா?

 

நாயுடு: லேதய்யா… கேசு பைசல் பண்ணி முடிச்சுடலாம் கவலைப்படாதீங்க .. எம்டன் குண்டு போட்டு பட்டணமே களேபரமா கிடக்குது…. சர்க்கார் அந்த போக்கு வரத்துலே மும்முரமா இருக்குதா.. அதான் சகலமும் டீலே ஆவுது

 

பண்ணையார்: அதுக்குள்ளே எம் பொண்ணே வயித்தைத் தள்ளிட்டு மேற்கு திசையிலேருந்து வந்து நிக்கப் போறா..

 

நாயுடு: அப்ப உங்களுக்கு உங்க மக போன இடம் தெரியும்.. அப்படித்தானே

 

பண்ணையார்: அட பொரு பேச்சுக்குச் சொன்னேன்யா

 

நாயுடு: போலீஸ்காரன் கிட்டே திரிச்சு மறிச்சு பேசறது குத்தம்

 

பண்ணையார்: இந்தப் பூச்சியெல்லாம் காட்டி என்னை மிரட்ட முடியாது.. டே குடும்பா.. பட்டணத்திலே இருந்து தாணாக்காரங்க வந்து பண்ணையாரை சள்ளைப் படுத்தறாங்கன்னு உங்க தெரு, எங்க தெரு எல்லாத்திலேயும் டாம் டாம் போட்டுட்டு வாடா

 

அய்யங்கார்: அடடா.. ஒரு புடலங்காயும் இல்லாத விஷயத்தை ரெண்டு பேரும் டாம் டாம் போடறேளே.. பண்ணையாரே.. உமக்கு பொண்ணு கிடைக்கணும்.. நாயுடு உமக்கு தேடி வந்த தகவல் கிடைக்கணும்.. எனக்கு வீடு விக்கணும்..உக்காந்து பேசினா முடிஞ்சு போறது.. (வேலைக்காரனிடம்) ஏம்ப்பா கல்கண்டு மாதிரி இருக்கு இளனி.. இன்னும் ரெண்டு வெட்ட முடியுமா பார்..நான் காசு கொடுத்துடறேன்

 

 

பண்ணையார்: சாமி உங்க கிட்டே இளனி வித்து சீவிக்கணும்னு சிவன் என் தலையிலே எழுதலே.. ரெண்டு என்ன, எங்க தோட்டத்திலே பறிச்சு ஒரு மாட்டு வண்டியிலே போட்டு பட்டணத்துக்கே அனுப்பி வைக்கறேன்.. விலாசம் கொடுங்க..

 

நாயுடு: உங்க தோட்டமா? எது, அந்த வெண்டிக்கா தோட்டம்?

 

பண்ணையார்: நாம நெல்லு, கரும்பு மட்டும் தான் பயிர் பண்றது.. வெண்டிக்கா, பூசணிக்கா, கத்தரிக்கா எல்லாம் கீழத் தெரு பயக்களுக்கு

 

நாயுடு: கீழத்தெருவிலே கட்டு மஸ்தா ஒரு ஊமையன் உண்டு இல்லே

 

பண்ணையார்: ஊமையனா? இந்தத் தெருவிலேயே உண்டு ஒரு காலத்திலே.. சிவலோகம் போயாச்சு.. எங்க தாத்தையா தான்..

 

இன்னொரு இளநீரை அய்யங்கார் குடிக்க, நாயுடு கொஞ்சம் பிகு செய்து கொள்கிறார்

 

பண்ணையார்: நமக்குள்ளே என்ன முன் விரோதமா பின் விரோதமா போலீசுக்காரரே.. . இளனி சாப்பிட இதெல்லாம் குறுக்கே வரக் கூடாது.. குடியுங்க சாமி..

 

நாயுடு இளநீர் குடிக்கிறார்

 

நாயுடு: (பண்ணையாரிடம்) பக்கத்து பட்டி தொட்டி மனுஷாளைப் பத்தி விசாரிக்கணும்னா யார் கிட்டே கேட்கலாம் பண்ணையார்வாள்?

 

பண்ணையார்: நானே சொல்வேன்.. ரொம்ப சின்னப் பயலுவன்னா தெரியாது.. ஒண்ணு செய்யுங்களேன்.. டேய் குடும்பா.. ஐயாமார்களை நம்ம சென்னகேசவன் வீட்டுக்கு இட்டுப் போடா. பட்டணத்து போலீஸுக்காரங்க…நமக்கு வேண்டப்பட்டவங்கன்னு சொல்லு..

 

நாயுடு: சென்னகேசவன் யார்னு தெரிஞ்சுக்கலாமா?

 

பண்ணையார்: தரகர்.. மனுசத் தரகு.. போய்ப் பாருங்க.. புரியும்.. ஜில்லாவிலே இருக்கப்பட்ட ஒருத்தர் விடாம அவன் கிட்டே தகவல் இருக்கும்.. உங்க தாணாக் கச்சேரியிலே கூட கிடைக்காது.

 

அய்யங்கார்: வேணாம்.. பூதம் திரும்ப கிளம்பிடும்.. ஆமா, எங்கே சௌசம் பண்றது?

 

பண்ணையார்: தெவசம் பண்ணனுமா? அய்யர் கிட்டே சொல்லி விட்டாகணுமே.. இப்போ எங்கே இருப்பாரோ

 

அய்யங்கார்: நாசமாப் போச்சு இளனி குடிச்சு முன்னாடியும் பின்னாடியும் முட்டிண்டு வரது..

 

பண்ணையார் தோ அம்புட்டு தானே..அந்தாண்ட எருக்கஞ்செடி மண்டிக் கெடக்குல்ல.. அங்கே போய்க் குத்த வைங்க.. குடும்பா.. பிரம்புத் தட்டி நிறுத்தி மறைப்பாப் பிடிச்சுக்கிட்டு அங்கேயே நில்லு.. பொண்ணுங்க யாரும் அந்தப்பக்கம் வராமப் பாத்துக்கடா.. மெரண்டுடும் (நாயுடுவிடம்) சார் நீங்க

 

நாயுடு: நோ தேங்க்ஸ்.. (மெல்ல ஒரு தடவை திரும்பச் சொல்லி தன் ஆங்கிலத்தை தானே ரசிக்கிறார்) நோ தேங்க்ஸ்

 

அய்யங்கார் ஓட்டமும் நடையுமாக போகிறார்.

 

.

 

காட்சி 14

 

காலம் : பகல் களம் : வெளியே / உள்ளே

 

புரோக்கர் சென்னகேசவன் வீடு. வீட்டில் சாவு நடந்திருக்கிறது. வாசலில் பெஞ்ச் போட்டு, சேகண்டி அடித்து சங்கு ஊதிக் கொண்டிருக்கிறார்கள். சென்னகேசவனின் தாயார் -வயது 90- பிணமாக ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு மாலை போட்டுக் கொண்டிருக்கிறாள்.

 

அவசரமாக அவர்களை நோக்கி வருகிறான்.

 

குடும்பன் : அண்ணே, பட்டணத்துலே தாணா துரைங்க..பெரிய பண்ணைக்கு வேண்டப்பட்டவங்களாம். ஐயா உன்னைப் பார்க்க சொல்லி அனுப்பியிருக்காரு.

 

புரோக்கர் (கும்பிட்டு): என் அம்மா காலமாயிட்டாங்க.. வாங்கன்னு சொல்ல சந்தர்ப்பம் சரியில்லை ஐயாவுங்க மன்னிச்சுக்கணும் (குடும்பனைப் பார்த்து) பண்ணையார் ஐயாவுக்கு இப்பத்தான் தகவல் சொல்லி விட்டேன்..திடுதிப்புன்னு ஆகிப் போச்சு..

 

நாயுடு: அட பாவமே.. ஒண்ட்லோ பாகலேகண்ட உண்டினாரா? (உடம்பு சரியில்லாம இருந்தாங்களா)

 

புரோக்கர்: உடம்புக்கெல்லாம் ஒண்ணும் இல்லேங்க தொண்ணூறு வயசிலும் திடகாத்திரமாத்தான் கம்பங்களி கிண்டிட்டு இருந்தாங்க .. வயித்துக்கோளாறு.. .

 

பிணம் (கண்ணை மூடியபடிக்கே) அடே கம்பங்களிக்கென்ன கேடு.. உன் பொண்டாட்டி கல் உப்பைப் போடாம வெடி உப்பைப் போட்டுட்டாடா.. வவுறு வெடிச்சு..

 

புரோக்கரை யாரோ வந்து கூப்பிடுகிறார்கள்

 

ஊர்க்காரர்: கெளவியம்மாவைக் குளிப்பாட்டின பிற்பாடு புதுப் புடவை உடுத்தணும்.

 

புரோக்கர்: (எடுபிடியிடம்) மாடசாமி.. வந்ததுக்கு ஒரு வேலை பாரேன்.. தறிக்காரர் கிட்டே .. சுங்குடி சேலை.. நான் கேட்டேன்னு.. வாங்கியாந்துடு.. காசு விவகாரம் பொறவு பார்த்துக்கலாம் ..

 

(எடுபிடி போகிறான்)

 

பிணம்: (வாய்த் துணி அவிழ) நல்ல கிளிப்பச்சையிலே எடுங்கடா..அரக்குச் செவப்பெல்லாம் வேணாம் பொணத்துக்கு உடுத்தற மாதிரி கண்றாவியா இருக்கும்

 

புரோக்கர்: (அவசரமாக) ஆத்தா வேணாம் சும்மா இரு…. (நாயுடுவிடம்) உட்காரலாமே ஐயாவுங்க?

 

அய்யங்கார்: வேணாம் ஏற்கனவே ஏகத் தீட்டு சாவுத் தீட்டு வேறே என்னத்துக்கு ஈஷிப்பானேன். இந்தக் கெளவி வேறே பேச்சுத் தொணைக்கு ஆள் பாத்துட்டு இருக்கா.. முடிச்சுட்டு கிளம்பும் ஓய்.

 

நாயுடு: ஏம்பா, சென்னகேசவான் உங்க பண்ணையார் மகளைக் காணோம்னு கேஸ

 

ப்ரோக்கர்: ஐயா, காணாமப் போனது பண்ணையார் மக இல்லீங்க.. ஐயா சொல்லியிருப்பாங்களே.. அவங்க அண்ணன் மக.. அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் வெகு காலம் முந்தி போய்ச் சேர்ந்துட்டாங்க.. புள்ளெயெ தத்தெடுத்து வளர்த்துட்டிருந்தார் நம்ம பண்ணையார் ஐயா..

 

கிழவி: சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தத்தெடுத்தானா சொத்தெடுத்தானா..

 

புரோக்கர்: ஏ கெளவி.. சொல்றேன் இல்லே.. சும்மா கிடக்க மாட்டியா? தாம்பூலம் கொடுத்து உன்னை படுக்க வச்சா நேரே நீட்டி நிமிந்து சவாரி.. அது வரைக்குமாவது அக்கடான்னு வாய் பாத்துக்கினு கெட ..

 

நாயுடு: பொணமா இருந்தா என்னய்யா, துப்பு துப்பு தானே? அப்போ பண்ணையார் மக இல்லே அந்தப் பிள்ளை..

 

புரோக்கர்: ஊருக்கே தெரிஞ்சது.. கெளவி செத்தும் நினைப்பு வச்சிருக்குன்னா பாத்துக்குங்க..

 

அய்யங்கார்: ஆமா நீர் ஜீவனத்துக்கு என்ன செய்யறீர்

 

புரோக்கர்: பிஜித்தீவு கரும்பு தோட்ட வேலை… ஆள் பிடிச்சு அனுப்பிட்டிருந்தேன்..

 

நாயுடு: இப்ப என்ன செய்யறாப்பல?

 

கிழவி (வாய்க்கட்டை அவிழ்த்தபடி): எங்கேயோ யுத்தமாம்.. ஆள் சேக்கறான்.. வர்ற துட்டை எல்லாம் பொண்டாட்டி காலடியிலே வச்சு கும்புட்டு விழறான் பய

 

நாயுடு: ஊமையனை எல்லாம் அனுப்புவீங்களா யுத்தம் செய்ய

 

புரோக்கர்: இல்லீங்க.. .சகலமும் சரியா இருக்கணும்.. ஆளுக்கு ஐம்பது ரூபா நம்ம கமிஷன்

 

நாயுடு: பொண்ணு எல்லாம் சப்ளை கிடையாதா

 

அய்யங்கார்: அவர் தொழிலையே மாத்தறீரே நாயுடு

 

சங்கு பூம் பூமென்று முழங்குகிறது.

 

புரோக்கர்: யோசித்து முன்னாடி காப்பிரி தேசத்துலே கரும்புத் தோட்டத்துக்கு அனுப்பிட்டிருந்தேன்.. யுத்தத்துக்கு எங்கே அனுப்ப? அப்படியும் சிலது வரும்.. ஆசிரமத்துலே சேர்ந்துக்கட்டும்னு சாமியாரம்மா கிட்டே அனுப்பி வைப்பேன்

 

நாயுடு : எந்த சாமியாரம்மா?

 

புரோக்கர் : கிழக்கே எட்டு கல் தொலைவிலே காட்டாம்பட்டி…. கமிஷன் எல்லாம் வாங்கறதில்லே ..தர்ம காரியம்…

 

நாயுடு: எம தர்மவான்யா நீ..உங்க அம்மா ரைட் ராயலா சுவர்க்கம் தான் போவாங்க.. கருமாதிக்கு கம்பங்களி மறக்காம படை .. என்ன?

 

அய்யங்கார்: ..(புரோக்கரிடம்) வீடு உம்மதா?

 

ப்ரோக்கர்: ஆமாங்க.. போன சித்தரைக்கு முடிச்சது.. சொந்த சம்பாத்தியத்திலே வந்த பணம் எல்லாம் இதிலே போட்டேன்

 

பிணம்: ஆமாமா.. நீயும் உம் பொண்டாட்டியும், என் நகையை ஒண்ணொண்ணா தூக்கிப் போய் வித்து….தெரியாதுன்னு நெனச்சுக்காதே. ..

 

புரோக்கர் : சாமி, இன்னிக்கு இந்தக் கெளவி பாடையிலே போவணும்.. இல்லே நான் போவணும்.. இதோட ராவடி தாங்கலே…

 

கூட்டம்: கோவிந்தா கோவிந்தா..

சங்கு சத்தம் ஓங்கி ஒலிக்கிறது.

 

 

காட்சி 15

 

காலம் பகல்   களம் உள்ளே

 

ஆசிரமம். நாலைந்து பெண்கள் மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேர் அரிசி களைந்து கொண்டிருக்கிறார்கள்.

 

நாயுடுவும் அய்யங்காரும் வருகிறார்கள்

 

பூ பெண் (இவர்களைக் கவனியாது): தெனத்துக்கும் வெண்டிக்கா.. சாப்பிட்டா மூளை வளரும்னு சொன்னாங்க.. மூணு வேளை தின்னா, மூளை வளருதோ என்னமோ ..

 

கேட்டபடி இரண்டு பெண்கள் கிசுகிசுவெனப் பேசி சிரிக்கிறார்கள்.

 

பூ பெண்: வெவஸ்தை கெட்டவளுங்கடீ.. மூணு வேளை தின்னா பேதி தான் ஆகுதுன்னு சொல்ல வந்தேன்..

 

 

நாயுடு: பெரியவங்களா வேறே யாராச்சும் உள்ளே இருக்கீங்களா?

 

பேச்சுக் குரல் கேட்டு அந்தப் பெண் கோபத்தோடு பார்க்கிறாள்.

 

அரிசி பெண்: யாருய்யா அது.. பாத்தாப் பெரிய மனுசங்க மாதிரி இருக்கீங்க..தெறந்த வீட்டுலே தடதடன்னு படி ஏறி வரீங்க

 

அய்யங்கார் (நாயுடுவைக் காட்டி) : யங் லேடி, அவர் பட்ணத்துலே கனவான்.. ரொம்ப பெரிய மனுஷர்.. நானும் தான்..

 

பூ பெண்: பெரிய மனுசன்னா மருவாதயக் காப்பாத்திக்கணும்.. அறியாப் பொண்ணுங்க பேசிட்டு இருக்கற போது குறுக்கே விழுந்துக்கிட்டு..

 

நாயுடு: சரிம்மா.. மருவாதையா பொத்திட்டு கேக்கறோம்மா… . பட்டணத்து கெழப் பயலுவ.. கோவில், சாமின்னா ஒரு பித்து..சாமியாரம்மாவைப் பாக்க வந்திருக்கோம் தாயி

 

அய்யங்கார்: அவரு கெழம் நான் பையன்

 

நாயுடு: ஐயா சொல்ற மாதிரி தான் தாயீ

 

அய்யங்கார்: சாமியாரம்மா பெயரு என்ன?

 

ஒரு பெண்: அவங்க சாமியாரெல்லாம் இல்லீங்க.. வெள்ளைப் புடவை கட்டியிருப்பாங்க அம்புட்டுதான்.. ..

 

அய்யங்கார்: இடுப்புலே வெள்ளைச் சேலை.. அம்புட்டுத் தான்னா, மேலே?

 

நாயுடு: யோவ் வக்கீல் ..

 

அய்யங்கார்: அவங்க என்ன செய்யறாங்கன்னு கேட்கறேன்

 

சத்தம் கேட்டு ஒரு மத்திய வயதுப் பெண் உள்ளே இருந்து வந்து நாயுடுவுக்கு வணக்கம் சொல்கிறாள்.

 

அய்யங்கார்: நீங்க தான் ஆஸ்ரம நிர்வாகமா?

 

சாமியாரிணி (வந்தவள்): இது ஆஸ்ரமம் இல்லே.. சகாய கிரஹம்.. உதவி இல்லம்னு தமிழ்ப் பண்டிதர் எழுதிக் கொடுத்தார்.. பலகையிலே எழுதினா ஜனத்துக்குப் புரியாதேன்னு விட்டுட்டோம்..

 

நாயுடு: அம்மா ஆமா நம்ம ஆளுங்களுக்கு தமிழைத் தவிர எல்லாம் அத்துப்படி.. நாலு ஜெர்மன் கப்பல் வந்து குண்டு போட்டா, அந்த ஊரு பாஷையிலே அ-னா ஆ-வன்னா படிக்க ஆரம்பிச்சுடுவோம்.. ஆமா, எத்தனை பொம்பளைப் பிள்ளைங்க இருக்குது அம்மா இங்கே?

 

சாமியாரிணி: இப்போதைக்கு பத்து பேர் ..

 

அய்யங்கார் : எப்படி இங்கே வந்தா அவாள்ளாம்?

 

நாயுடு: சில பேர் அநாதை. சாப்பாட்டுக்கும் வழி இல்லாம பட்டினி கிடந்து பிச்சையெடுத்திருக்கும்.. யாராவது இங்கே சேர்த்திருப்பாங்க. இன்னும் சில பேர் பட்டணத்துலே டாக்கியிலே நடிக்கணும், பெங்களூரு நாகரத்னம்மா மாதிரி ப்ளேட் கொடுத்து பிரபல்யம் வந்து காசு சம்பாதிக்கணும்னு வீட்டை விட்டு வந்தது..

 

நாயுடு: அட ராமா நிஜங்கானா? (நெசமாவா?)

 

சாமியாரிணி: நெசம் தான்..சிலது ஆம்பளைத் தறுதலப் பயபுள்ளே கூட ஓடியாந்து ஏமாந்து ஒதுங்கும்..இன்னிக்கு. வரும்.. நாலு நாள் இருக்கும் ..

 

நாயுடு: அப்பாலிக்கு?

 

சாமியாரிணி: நல்ல வார்த்தை சொல்லி சிலதை வீட்டுக்கு அனுப்பி விட்டுடுவோம்… சிலது போக்கிடம் இல்லாத அனாதைன்னு சொன்னேனே அதுகளை. வீட்டு வேலைக்கு பட்டணம், பம்பாய்னு நல்ல மனுஷாளா, குடும்பமாப் பார்த்து அனுப்பி வைக்கிறது உண்டுதான்.. (சட்டென்று நிறுத்தி) உங்களுக்கு என்ன வேணும்.. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?

நாயுடு: பேஷா.. நான் பட்டணத்துலே ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன் ஹெட் கான்ஸ்டபிள் முன்சாமி நாயுடு. இவரு என் சிநேகிதரு.. ஹைகோர்ட்டுலே கிரிமினல் லாயர்

 

சாமியாரிணி: பெரிய மனுஷா எல்லாம் நம்ம இடத்துக்கு வந்திருக்கீங்க.. உங்க மூலமா சகாயம் கேட்க மாட்டேன்.. நாலு பெரிய மனுஷாளைத் தெரியப்படுத்தினா சந்தோஷப்படுவேன்

 

நாயுடு: நாலு என்ன.. பட்டணத்துப் பெரிய மனுஷா எல்லாரையும் அய்யர் சாமிக்கு நல்லா தெரியும்.. அது அவர் டிபார்ட்மெண்ட்.. எனக்கு சின்ன மனுஷா.. திருடன், ஜேப்படிக்காரன், கொள்ளைக்காரன், முடிச்சவிக்கி..இவனுங்க எல்லாம் தாயாதி பங்காளி வக்கா…

 

அய்யங்கார் அவரை நிறுத்துகிறார்

 

அய்யங்கார்: அம்மா, உங்க கிட்டே ஒண்ணு கேக்கணுமே.. சமீபத்துலே கீழக்கட்டளை கிராமத்திலே இருந்து சில பொண்ணுங்களை ப்ரோக்கர் சென்னகேசவன் கூட்டி வந்தாரா?

 

சாமியாரிணி: சென்னகேசவனா .. இந்த வேடிக்கை பாருங்க..அவருக்கு வேண்டப்பட்டவன்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு சமீபத்துலே வந்துச்சு.. வந்ததுமே தெரிஞ்சுது.. அதுக்கு சென்னகேசவன் ஒட்டும் இல்லே உறவும் இல்லேன்னு

 

நாயுடு எட்லாக? (எப்படி?)

 

சாமியாரிணி: இது துண்ணூறு இட்டுக்கிட்டு சிவசிவான்னு நிக்குது. அந்தாளு துளசி இலை, நாமக்கட்டி.. நாராயணா ஆசாமி ஆச்சே

 

நாயுடு தனியாத்தான் வந்துச்சா?

 

சாமியாரிணி: பட்டணம் போய் வேலை பாக்கணும்னு இன்னும் ரெண்டு பொண்ணு கூடவே வந்துச்சு .. நாடகம் பாக்கோணும் பயாஸ்கோப் பாக்கோணும்.. அதுலே வேஷம் கட்டோணும்னு அசட்டுத்தனம்.. திட்டி திருப்பி அனுப்பிட்டேன்.. ரயில்வே ஸ்டேஷன் வரை கொண்டு விட சமையல்கார தாத்தாவை அனுப்பிச்சேன். இங்கே ஆம்பளை சகாயம் இப்படித்தான்..

 

நாயுடு: ஊர் போய்ச் சேரலை போலே இருக்கே

 

சாமியாரிணி? அப்படியா? அது தெரியாதுங்க.. வர்றவங்க பின்னாடி போய் எங்கே போறாங்க வராங்கன்னு பார்க்க நம்ம கிட்டே ஆள் அம்புன்னு சர்க்கார் ஆபீஸா நடத்தறோம்.. சொல்லுங்க.

 

நாயுடு: அதானே.. கிடக்குது.. சமையல் தாத்தனை பாக்க முடியுமா?

 

சாமியாரிணி: பேத்தி பெரியவளாயிட்டான்னு கிளம்பிப் போய்ட்டார்.. கும்மோணம் பக்கத்துலே ஏதோ கிராமம்..

 

அய்யங்கார்: நாயுடு விட்டுத் தொலையும்.. . கையிலே கொண்டு வந்தது இன்னிக்கு ஒரு நாள் தாக்கு பிடிக்கலாம்.. அஷ்டே..

 

நாயுடு: அது போவட்டும்.. இந்தப் பொண்ணு?

 

அவள் மௌனமாக இருக்கிறாள்.

 

நாயுடு உள்ளே இருக்குங்களா அல்லாரும்?

 

சாமியாரிணி: ஏமாத்திட்டு ஓடிட்டா.. கண்ணாலம் கட்டிக்க எந்த எளந்தாரியோ காத்திருந்தானாம்.. வீட்டுலே வேறே இடத்துலே நிச்சயம் பண்ணியாச்சாம்.. படிச்சுப் படிச்சு சொன்னேன்.. கேக்காம, விடிகாலைலே ஓடிட்டா கழுதை

 

நாயுடு (பரபரப்பாக) அந்த ஆள்? மீரு சூஸினாரா? எலாக உண்ட்டாடு?(நீங்க பார்த்தீங்களா? எப்படி இருப்பான்?)

 

சாமியாரிணி: பார்த்தேனே..எப்படி இருப்பான்னா… என்ன சொல்ல.. ஆங்..புளியங்கா கொத்து மாதிரி ஆறு விரலு.. ஒவ்வொரு கையிலேயும்

 

நாயுடு அப்படியா?

 

சாமியாரிணி: வாசல்லேயே தவம் கிடந்தான்.. எங்கையிலே வந்து என்னென்னமோ பேசிப் பாத்தான்.. கண்ணு மாதிரி வச்சுக் காப்பாத்துவானாம்.. டாபர் பய..

 

அய்யங்கார் நாயுடுவைப் பார்த்து சிரிக்கிறார்

 

அய்யங்கார்: அந்த ஆள் பேர்?

 

சாமியாரிணி: தெரியாதுங்க..

 

நாயுடு: எங்கே போயிருப்பாங்க? பட்டணமா?

 

சாமியாரிணி: கெட்டும் கெட்ட பயலுக எல்லாம் பட்டணம் தானே சேர்றது அய்யா?

 

நாயுடு: பட்டணம்னா தெருவா, வீடா, சத்திரம் சாவடியா? உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது தான்..அரசல் புரசலா அரைகுறை தகவல்னாலும்..

 

சாமியாரிணி: சவுக்கார் பேட்டையிலே ஏதோ சத்திரம் இருக்காம்.. அவங்க பரம்பரை சொத்தாம்.. இப்பதைக்கு அங்கே தங்கிக்கலாம்.. கண்ணு மாதிரி வச்சு காப்பாத்துவேன்னான்.. நம்பாதடீன்னேன்.. அவனும் அவன் முழியும்.. கேக்காம அவ விடிகாலையிலே சவாரி விட்டுட்டா…புத்தி போவுதே…

 

நாயுடு: சவுக்கார்பேட்டையிலே எங்கேயாம்?

 

அய்யங்கார்: தேடத்தானே வந்தது? வாரும் பட்டணம் திரும்பற வேளை கனிஞ்சிருக்கு பெருமாள் புண்ணியத்திலே.. இனிமே அடுத்த ஜன்மம் வரை என் பிராணனை வாங்காதீர்…ஏம்மா.. வந்து..

 

சாமியாரிணி: ஐயா மன்னிக்கணும். கை நெறைய வேலை இருக்கு..

 

(போகிறாள்)

Interval   இடைவேளை

Series Navigationமிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *