சுசீலாம்மாவின் யாதுமாகி

This entry is part 7 of 23 in the series 21 டிசம்பர் 2014

யாதுமாகி அட்டை

 

குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது.

 

முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் இன்றியமையாமையும் பெண்களின் நிலமையையும் ஏன் ஆண்களின் கட்டுப்பெட்டித்தனமான நிலைமையையும் விவரிக்கும் இக்கதை அங்கங்கே நம்மை உறைய வைக்கிறது.

 

மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்று அவர்களின் உணர்வுகளும் கூட மட்டுறுத்தப்பட்ட வாக்கியங்களுக்குள் வந்தாலும் திடீரென்று எதிர்பாராமல் ஏற்படும்கீறல்கள் போல சில உரையாடல்கள் நம்மை ஸ்தம்பிக்கச் செய்கின்றன.

 

நார்மடி உடுத்தி தலை மழித்த பெண்களை நான் சிறுவயதில் தஞ்சை மாவட்டத்தில் படிக்கும்போது கண்டிருக்கிறேன். துறவிகளின் வாழ்வை ஒத்தது ஒரு பால்ய விதவையின் வாழ்வும். மடி ஆசாரம் என்ற போர்வைகளுக்குள் தங்களைப் புதைத்துக்கொண்டு அவர்கள் தங்களை ஒரு ஆளண்டாப் பட்சிபோலக் காத்து வாழ்ந்து முடிவார்கள்.

 

அப்படிப்பட்ட ஒரு காலட்டத்திலிருந்து ஒரு நூற்றாண்டு காலப் பெண்மையின் வாழ்வை வரைந்து செல்கிறது நாவல். அதில் தேவி, சாரு நீனா என்று மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையைச் சொன்னாலும் தேவியின் வாழ்க்கைதான் மிகத் திருப்பங்கள் நிறைந்தது. அவர் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகளே சாருவும் தன் வாழ்க்கையின் துணிகர முடிவுகள் எடுக்கக் கை கொடுக்கிறது. இவர்கள் இருவரும் எதிர்கொண்ட எந்தப் பிரச்சனையுமில்லாமல் இன்றையக் காலகட்ட உற்சாகப் பெண்ணாக நீனாவும் அவளைப் புரிந்துகொண்ட அன்புக் கணவராக கிருஷ்ணா அழகான படிமங்கள். பாரதியின் வரிகள் ஒவ்வொரு அத்யாயத்தையும் உயிர்ப்பிக்கின்றன.

 

 

1900 களில் பெண் வேலைக்குச் செல்வது என்பது குறித்து சொல்லப்படும் கருத்துகள் ஜெயமோகனின் தளத்தில் அறிய நேர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவை எல்லாவற்றையும் எதிர்த்து தன் மகளைப் படிக்க வைக்கிறார் சாம்பசிவம். அப்போது அங்கே அவரின் மகள் போன்று பலருக்கும்  வாழ்வளிக்கும் கைம்பெண்களுக்கான ஹாஸ்டலை சிஸ்டர் சுப்புலெட்சுமி நடத்தி வருவதும் அவர்களின் பௌர்ணமி உற்சாகங்களும் நமக்கும் சந்தோஷமளிக்கின்றன.

 

ஒருவாறு கல்விதான் தன்னுடைய உய்வு என்று முடிவு செய்த தேவி படித்து வேலைக்குச் செல்கிறார். வாழ்வில் தனக்களிக்கப்படாத தான் கண்டுணராத கண்டுணர முடியாது என்று நினைக்கிற பல இன்பங்கள் மறுக்கப்பட்டுவிட துறவறம் பூண நினைக்கும்போது அந்தத் துறவு எண்ணத்தின் போதாமையை பட்டென்று வெளிப்படுத்தும் சிஸ்டர், தாங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்று கூறியதோடு மட்டுமல்ல தேவியைத் தன் வாழ்வைத் திருத்தியமைத்துக்கொள்ளச் சொல்கிறார். அதற்கேற்றாற்போல உறவினர் கிட்டுவும் நல்ல மாப்பிள்ளையைக் கொணர திருமணம் முடிந்து சாருவுக்குத் தாயாகிறார் தேவி.

 

தந்தையை விடத் தாயிடம் தேவிக்கு நெருக்கம் அதிகம். சாட்சாத் தேவி ப்ரத்யட்சமாவது போல தன் தாயின் பூஜை முறைகளையும் அதையே செட்டியாரும் சாஸ்த்ரிகளின் வாய்மொழியாக வெளிப்படுத்துவது தாயின்மேல் மீளாக் காதல் கொண்ட ஒரு பாசக்கார மகளை அடையாளம் காட்டுகிறது. இருந்தும் தாய் ( தந்தையின் மறைவுக்குப் பின் ) பூரணமாக பூஜைகள் செய்தும் அதை ஆத்மார்த்தமாக செய்கிறார்களா என்ற எண்ணம் ஏற்பட்டு அதை உடனே நீக்கிக் கொள்வதும் தாயை எடைபோடத் தான் யார் என்று சொல்லிக்கொள்வதும் அழகு,

 

வெவ்வேறு காலகட்டங்களில் அம்மாவுடனான உறவையும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லும்போது தாய் மகளிடையேயான உரையாடல் ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்குமான உரையாடலைப் போல முடிவுறுகிறது. நெகிழ்ச்சி இருந்தாலும் அதை முழுமையாக இருவருமே காண்பித்துக்கொள்வதில்லை. ஒரு தேர்ந்த ஞானத் தெளிவுள்ள இரு தோழியர் சேர்ந்து வாழ்வதைப் போலத் தாயும் மகளும் வாழ்கிறார்கள்.

 

தோளுக்கு மேலே வளர்ந்தால் தோழன் என்பதைப் போலத் தோளுக்கு மேல் வளர்ந்த தோழியாக மகள் மாறினாலும் மகளின் திருமண விஷயத்தில் இருவரும் குழப்பமுற்றுத் தவறான தேர்வைச் செய்துவிடுவதும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளும் கசப்பானவை. அந்த நிகழ்வு தன் வாழ்வில் எந்தச் சுவடையும் ஏற்படுத்தி விடக்கூடாதுஎன்று சாருவும் அவரின் அம்மா தேவியும் அதன் பின் தெளிந்து நடப்பது “Life must go on “ என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.

 

இதில் குறிப்பிட்டுச் சில மனிதர்களின் சுயநலம், வார்த்தைப் பிரயோகங்கள் சொல்லவேண்டும். பால்ய விதவையான சகோதரிக்கு, மகளுக்கு ஒரு வாழ்வு வேண்டும் என எண்ணாத குடும்பத்தார் அவளை தியாக தீபமாக உபயோகித்துக்கொள்ள எண்ணுவது, மேலும் வாழ்வை இழந்தவள் படித்து என்ன செய்யப்போகிறாள் நெருப்பிட்டது போலக் கேட்கும் ( இந்தக் கம்மனாட்டிப் பொண்ணு என்ன கலெக்டராகவா போறாள் ) எனக் கேட்கும் மனிதர்கள்.  மேலும் அதிகம் ( உமா ) படிக்க வைத்தால் அதைவிடப் பெரிய படிப்புப் படித்த மாப்பிள்ளை பார்க்கவேண்டும் அல்லது அவளுக்கும் இதே நிகழும் என வீட்டிலுள்ளோர் சொல்கிறார்கள் என்று சொல்லும் மாமா போன்ற பலரையும் கடந்து தேவி தன்னுடைய முயற்சியால் நன்கு படித்துப் பலரும் மதிக்கும் பெரிய உத்யோகத்தில் இருந்து விகசிக்கிறார்.

 

அப்போதும் அவரைக்காணவரும் உறவினர்கள் பசப்பலாகப் பேசி அவரிடமே கடன்பெற்று பட்டுப்புடவை வாங்கிச் சென்று விட்டுத் திருப்பியும் கொடுக்காமல் தம் தகுதிக்கு அதெல்லாமே ஒன்றுமில்லை எனப் புரட்டுவது என ஒவ்வொருவரின் சுயமுகத்தையும் உரித்திருக்கிறார் சாரு.

 

செட்டி நாட்டின் அழகையும் மனிதர்களையும் சொல்லும்போது படிப்பின் முக்கியத்துவத்தையும் அந்தப் பள்ளிக்கு பெண் தலைமை ஆசிரியையும் மற்ற பெண் ஆசிரியர்களும் வந்தால்தான் பெண்கள் கல்வி பெற வருவார்கள் என்று செட்டியார் முடிவு செய்து அழைத்ததையும் அந்தக் காலகட்டத்திய பெண்கள் வாழ்வில் ஒரு திருப்பமாகச் சொல்லலாம்.

 

லயன் வீட்டு வாழ்க்கையும் அதிலும் பெண்சிங்கமாக அம்மா வீட்டிலும் பள்ளியிலும் திகழ்ந்ததையும் முடிவிலும் கம்பீரமாகவே இருப்பதைக் காண்பிப்பதிலும் சாருவின் பார்வையில் தாய்தேவி எவ்வளவு மதிப்பிற்குரிய ஸ்தானத்தில் இருந்திருக்கிறார் என்று நெகிழ வைத்தது.

 

தாயின் சரித்திரத்தை விளக்க முற்படுகையில் ஒரு கடலைப்போல என்றும் அதன் அலைகள் போல எண்ணம் ஆக்கிரமிக்கத் தூங்கும் சாரு, அவர் கல்வி கற்கும் பருவத்தில் தாய் அன்னத்தின் கண்களில் அடக்கப்படும் காவேரி வாய்க்காலாகக் கிளை மாறிப் பாய்வதும், பின் முடிவில் மகள் சாருவின் பார்வையில் தூய்மையான கங்கையாக உருப்பெற்று மனிதர்களின் அழுக்குகளை, கீழ்மைகளை பொய்மைகளை வலுக்கட்டாயமாகக் கொட்டப்பட்ட கயமைகளை எல்லாம் சுத்தப்படுத்திச் செல்லும் புனித கங்கையாகத் தோன்றுவது ரசிக்க வைத்தது.

 

சில்வியா தேவியின் உரையாடலும், தந்தைக்காக தாய் ஓடியாடிச் செய்வதை தேவி பகிர்வதும் அதே போல அண்டை அயலார் குழந்தைகளை தாய் நேசத்தோடு கையாள்வதை நெகிழ்ச்சி கலந்த பொறாமையற்ற பார்வையோடு மகள் பகிர்ந்து கொள்வதும் நன்றாக வடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மொழி ஆளுமை செய்கிறது பல இடங்களில், ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்றாற்போல ஊர்களும் வருடங்களும் குறிப்பிடப்பட்டு கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களோடு அந்த ஊரில், உறவினர்களோடு , நண்பர்களோடு என்று பேசப்படும் விதம் விதமான உரையாடல்கள் சாருவுக்குக் கை வருகிறது.

 

பொதுவாக தாய் தந்தையரின் சரித்திரத்தை எந்தப் பிள்ளையாலும் முழுமையாக எழுதமுடியாது. அவ்வப்போது தாயே கேட்டுக்கொண்டாலும் தவிர்த்து வரும் சாரு முடிவில் தாய்க்கு முழுமையான நம்பிக்கையான தோழியாக இருந்த சில்வியாசித்தியைச் சந்தித்ததும் மூடிக்கிடந்த ரகசியங்கள் தெளிவுறப் பெற்று தாயைப் பற்றி எழுத வேண்டும் என எண்ணுகிறாள்.தன் தாய் ஆசிரியையாய்க் கூடுபாய்வதையும் அவளின் உள்மனக் காயங்களையும் உணர்ந்து ஒற்றியெடுப்பதும் , வேலைக்குச் செல்லும் தன்னைக் கணவன் , வேலையைத் தானே கல்யாணம் பண்ணிண்டிருக்கா “ என்று முடக்கிப்போட முயற்சிக்கும்போது விழித்துக்கொள்வதும், தன் தாயைக் கழுவிலேற்றும்போது பொம்மைக் கல்யாணம் முடிந்தது முறிந்தது என்று விட்டுவிட்டு வரும் துணிவும் சாருவை மிக மேன்மையானவளாக்குகின்றன. எந்தச் சமயத்திலும் மட்டுறுத்தப்பட்ட உணர்ச்சிகளோடு தரம்தாழ்ந்து பேசிவிடாமலே இருக்கும் பெண்கள் மூவரும் தங்கள் மேன்மையைப் பறைசாற்றுகிறார்கள்.

 

அவரின் மகள் நீனாவும் கரம்கொடுக்க விஸ்வரூபமெடுத்து யாதுமாகி நிற்கிறாள் தேவி. கல்வி, திருமண வாழ்வு மறுக்கப்பட்ட ஒரு பெண் திருமணம் செய்து தேவி போன்ற பன்முகத் திறமை வாய்ந்த ஒரு பெண்ணைப் பெற்றெடுப்பதும் கடமையே கண்ணாயினள் போல உத்யோகம் பார்த்து கடைசிவரை மகள் பேத்திக்குத் துணையாய்த் தோள்கொடுப்பதும் நம்பிக்கையையும் மன உறுதியையும் வாசிக்கும் அனைவருக்கும் கைகொள்ளச் செய்கிறது.

 

இத்தனை கஷ்டங்களையும் தாங்கிய தேவி ஒரு முறை கூட அழுவதில்லை. குழம்புவதில்லை. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாகத் தன் வாழ்வை அதன் சூறாவளியை எதிர்கொண்டு தன் மகள் சாருவையும் பேத்தி நீனாவையும் வழிநடத்துதலும் துன்பம் நேரும்போது சோரவிடாமல் தோள்கொடுப்பதும் சிறப்பு.

 

மூன்று காலகட்டதுப் பெண்களின் வாழ்வையும் வரைந்து செல்கிறது யாதுமாகி நாவல். அந்தநாள் வாழ்வு பெண்ணுக்கு எதை எதையெல்லாம் மறுத்தது இன்று சுதந்திரம் என்ற பெயரில் எதெல்லாம் கிட்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவாவது அனைவரும் யாதுமாகியைப் படிக்கவேண்டும். ஆத்மாவுக்குப் பிடித்தமான ஒன்றைத் தள்ளிப்போடாமல் ருசிக்க முடிவெடுத்த சாரு அதை நம்மோடு பகிர்ந்து உண்ணும் விதம் உன்னதம். சாருவுக்கு யாதுமான தேவி படிக்கப் படிக்க நமக்குள்ளும் நிறைந்து யாதுமாகி விடுகிறாள்.

 

நூல் :- யாதுமாகி

 

ஆசிரியர் :- எம் ஏ சுசீலா

 

பதிப்பகம் :- வம்சி

 

விலை ரூ 180.

Series Navigationதொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வு
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *