ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 6 “ஹாங்காங் என்னைச் செதுக்கியது”

author
0 minutes, 6 seconds Read
This entry is part 9 of 23 in the series 21 டிசம்பர் 2014

 

அ. செந்தில்குமார்

 

(அ. செந்தில்குமார் ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டங்களில் முன்கை எடுத்துச் செயல்பட்டவர். தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தவர். இளம் இந்திய நண்பர்கள் குழு நடத்தி வரும் தமிழ் வகுப்புகளின் ஆதரவாளர். பணி மாற்றத்தின் காரணமாக ஹாங்காங்கிலிருந்து செல்லும் அவருக்கு ஜனவரி 1, 2009 அன்று இலக்கிய வட்டம் நடத்திய வழியனுப்பு விருந்தில் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லி செந்தில்குமார் ஆற்றிய உரையிலிருந்து…)

அறிவு பின்னோக்கி, உணர்வு மேலோங்குகின்ற சமயங்களில் சிந்தனை ஓட்டம் அறுபடும்; வார்த்தை தடுமாறும். அது போன்ற ஒரு மனநிலையில் இப்பொழுது நான் இருக்கின்றேன்.

பிரிகின்ற தருணங்களில், விழி  ததும்பி வழிகையில்  வாழ்க்கை  நிரம்பி வழிகின்றது என்று ஈழத்துக் கவிஞர்.

வ.ஐ.ச செயபாலன் குறிப்பிடுவார். அவர்கள் பிரிவினுடைய வலியை முழுமையாக உணர்ந்தவர்கள்.

எங்கெல்லாம் பிரிவின் காரணமாக  கண்ணீர் வழிகின்றதோ, கண் ததும்புகிறதோ, அங்கு  ததும்புவது கண்

அல்ல, வாழ்க்கை, நம்முடைய வாழ்வு. வாழ்வு என்பது சட்டைப்பையில்  மட்டும் அடங்கி விடுவது அல்ல, அந்த சட்டைப்பைக்கு உள்ளிருக்கின்ற இதயத்தின் உள்ளும்  இருக்கின்றது வாழ்க்கை. அந்த வகையிலே

வாழ்க்கை  நிரம்பி வழிகின்றது. நல்ல மழைக்குப் பின்பு உழுத  ஒரு நிலத்தைப் போல எனது  நெஞ்சம்

நெகிழ்ந்திருக்கின்றது.

இங்கே பேசிய நண்பர்கள் இராமனாதன், அப்துல் அஜீஸ், ராம், ஜமால் மாமா மற்றும் யூனூஸ் ஐயா ஆகியோர் கூறிய வார்த்தைகளுக்கெல்லாம் நான் தகுதியானவன்தானா என்று  என்னை நானே ஒரு தராசிலிட்டு பார்த்துக் கொள்கிறேன். அந்த தகுதி வரவில்லை, வர வேண்டும் . இன்னமும் அந்த பத்து மைல், அந்த பத்து சதவிகிதம், இல்லை, இருபத்தைந்து சதவிகிதம்  கண்டிப்பாகச் செய்திருக்க  வேண்டும். நேரம்

குறைவு என்று சொல்வது முயற்சி இல்லாதவர்கள்  உடைய செயல்.இன்னும் முயன்றிருக்க வேண்டும்.

நண்பர் இராமனாதன், தமிழ் பண்பாட்டுக் கழகத்தில் இன்னும் செய்து முடித்திருக்க வேண்டியவற்றை உரிமையோடு  குறிப்பிட்டார். சில செயல்களை முன்னெடுத்திருக்கின்றோம். இன்னமும் முடித்திருக்கலாம். எல்லா நண்பர்களும் பொருளீட்டுகின்ற அவசரத்தில் உள்ள இந்த உலகத்தில், அனைவருமே பம்பரம் போல சுழன்று கொண்டிருக்கின்றோம். எனக்கு அடுத்து வருபவர்கள் கண்டிப்பாக அதைச் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஹாங்காங்கில் எனக்கு இருந்த முதல் தொடர்பு அருண் அவர்கள். பிறகு அலுவலகம், அலுவலகம் சார்ந்த நண்பர்கள். பிறகு சிறிது சிறிதாக என்னுடைய வட்டம் விரிவடைய ஆரம்பித்தது. ஆனால் கிட்டத்தட்ட அதற்கு ஒரு வருடம் பிடித்து விட்டது. அதற்குப் பிறகு நடந்தவை ஜெட் வேகத்தில் விறுவிறுவென்று சென்றன. எனது வாழ்க்கை, எனது வட்டம் இரண்டும் விரிவடைந்தது.

தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் முதலில் அலுவலகத்தில் ‘தீம்தரிகிட’ என்று ஒரு சஞ்சிகை, முன்னர் இங்கு பணியாற்றிய சம்பத்குமார் அவர்களுடைய இழுப்பறையில் கவனிப்பார் அற்று கிடந்தது. பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி, என் பாட்டன் , இவனுடைய புத்தகம் இங்கு எப்படி வந்தது என்று எடுத்துப் படித்தேன். ஒரு புதையல் கிடைத்தது போல இருந்தது. அப்போது அருண் வந்தார். ‘அண்ணாச்சி, தமிழ் புத்தகத்தை

நிறைய நாள் கழித்துப் பார்க்கிறேன், சந்தோஷமாக இருக்கிறது’ என்று சொன்னேன். ‘உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கிறேன்’ என்று சொன்னார்.

அப்படித்தான் ஒரு  குளிர்கால மாலை நேரத்தில் முதன்முறையாக இலக்கிய வட்டத்திற்கு கூட்டிச் சென்றார்.

இப்படியெல்லாம் ஹாங்காங்கில் நடக்கிறதா என்று வியப்படைந்தேன். நம்ம ஊரைவிட இங்கு நல்ல தமிழ் இருக்கிறது. உண்மையாகச் சொல்லப்போனால் நம்ம ஊரில் நல்ல தமிழ் குறைந்து வருகிறது. இங்கு நல்ல தமிழ் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இது முதலில் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம். மெதுவாக இலக்கிய வட்ட நண்பர்கள் நெருங்கி வந்தார்கள்.

அடுத்ததாக ஒருமுறை கோவிலில் மணி அவர்களைச் சந்திந்தேன். அவர்  மூலம் நமது தமிழ்ச்சங்க நண்பர்கள் அறிமுகமானார்கள். பிறகு ஒரு நாள் திரு. அலாவுதீன் அறிமுகமானார். திரு.அப்துல் அஜீஸ் வங்கியின் மூலம் பழக்கம் ஆனார். பிறகு இவர்களின் மூலம் தமிழ் வகுப்புகளும் குழந்தைகளும் அறிமுகம் ஆனார்கள்.

என்னை ஹாங்காங் செதுக்கியது என்பதே உண்மை. நான் ஒரு மழைத்துளிதான். மழைத்துளி எந்த நிலத்தில் வீழ்கின்றதோ அதை ஒட்டியே, சகதியோ, விளைநிலமோ, செம்புலமோ; நான் வீழ்ந்தது ஒரு சிப்பியில். ஹாங்காங் தமிழ் சமூகத்தில்; அதன் விளைவாக ஒரு முத்தாகத் தோற்றமளிக்கிறேன் என்று

கொள்ளலாம்.

 

முதலாவதாக இலக்கிய வட்டம் – நண்பர் இராமனாதன் அமைக்கும் வட்டக் கூட்டங்கள்; கற்றுக்

கொண்டவை நிறைய. ஒரு இலக்கிய வட்டக் கூட்டத்தில் நான் குறிப்பிட்டது போல, இராமனாதன்

ஒவ்வொரு முறையும் தண்ணீரில் தள்ளி விடுவார்.  முதலில் கை கால்களை உதைத்தாலும், பின்னால் தண்ணீரில் திளைப்பதும் நீந்துவதும் ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. இலக்கிய வட்டத்தின் தரத்திற்கு குறைவு நேராமல், அதில் பேசப்படும் உரைகளின் உயரத்திற்கு எந்த விதத்திலும் குறைந்து விடாமல் நல்ல பேச்சினைத் தர வேண்டுமென்ற தவிப்பில், நல்ல நூல்களை தேடிப் பிடித்துப் படித்து, உரை தந்து முடிக்கையில்,  நமது இலக்கிய அறிவு வளர்கிறது. வட்டத்தின் கூட்டங்களில் பேசுவதற்காக புத்தகங்களைத் தேடித் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அவற்றை வாங்கி அனுப்பிய ஈரோட்டைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் திருமதி.ராஜி சுப்பு மற்றும் பாரதி புத்தகசாலை இளங்கோவன் ஆகியோரை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன். இலக்கிய வட்டத்தின் காரணமாக தமிழ்பால் நான் கொண்டுள்ள பற்றும், எனது இலக்கிய ஆர்வமும், அறிவும், நுகர்வும் வளர்ந்தன. தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்தக் கால கட்டத்தில் இந்த துறையில் இவ்வளவு கற்றிருக்க முடியுமா என்பது ஐயமே !

 

 

இரண்டாவதாக தமிழ் பண்பாட்டுக் கழகம். அதன் தலைவராகப் பொறுப்பேற்றேன்.பல  நண்பர்களின்

அறிமுகம் கிடைத்தது. பலதரப்பட்ட பார்வைகள், உலகம் விரிவடைகின்றது. அமைப்பு ரீதியாகச்

செயல்படுவதும் நிகழ்ச்சிகளைக் கட்டமைப்பதும், ஒருங்கிணைத்திடும் தன்மையும் என்னுள் வளர்ந்தன. இது வாழ்விற்கு, அலுவலகத்திலும், வெளியேயும் பயன் தரக்கூடிய ஒரு பண்பல்லவா? மேலும், பகிர்ந்து கொள்ளும்

பண்பும் வளர்ந்தது. என்னுடைய விருப்பங்கள் இவை; உன்னுடைய விருப்பங்கள் இவை; இரண்டையும்

மதித்தல் வேண்டும் என்னும் பண்பு வளர்ந்தது.

 

மூன்றாவதாக, இளம் இந்திய நண்பர்கள்குழு- YIFCயின் தமிழ் வகுப்புகள். சனிக்கிழமை  மதிய நேரத் தூக்கம் ஒரு பரவசமான அனுபவம். என்றாலும் அதைப் புறக்கணித்துவிட்டு  அலாவுதீன் மற்றும் அப்துல் அஜீஸ்

ஆகியோரின்அழைப்பில் தமிழ் வகுப்புகளுக்கு சென்றேன். அஜீஸ் இங்கே பேசும்பொழுது என்னுடைய

ஆர்வத்தைப் பற்றிக் கூறினார். உண்மையில்  வகுப்புகளில் சிறுவர்களோடு சேர்ந்து  நாமும்  கற்றுக்

கொள்கிறோம் என்பதே உண்மை. எத்தனை விதமான வினாக்கள், தேடல்கள். கடந்த சில வாரங்களாக நான்

சில வகுப்புகள் எடுக்கவும்  செய்தேன். குழந்தைகளிடத்தில் வகுப்பெடுக்கையில், அவர்களிடம் நாம் பொய்

சொல்ல முடியாது; கூடாது. தெரியவில்லை என்றால் தெரியவில்லை ; சொல்பவற்றை சரியான முறையில் ஒழுங்காக சொல்லித் தர வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய சமூகம். உதாரணமாக  நாட்டுக்கு

உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பில் அண்ணல் காந்தியடிகளைப் பற்றிய வகுப்பில் உண்மையே பேச

வேண்டும் என்று கூறுகையில், மாணவன் இலியான் கேட்ட கேள்வி என்னால் மறக்க முடியாது.

 

இவ்வாறு ஒவ்வொரு அமைப்பிலுமே, நான் பணியாற்றினேன் என்பதை விட நான் கற்றுக்  கொண்டவை, என்னை செதுக்கி மேம்படுத்தியவையே அதிகம். நன்றிகள் பல. இன்னமும் பணிகள் செய்திருக்க வேண்டும்.

கடமைகள் செய்ய வேண்டியவை, முடிக்காதவை இருக்கின்றன. இந்த மதிய நேரத்தில், விடுமுறையன்று

நீங்கள் வந்திருப்பதும்,என்னை  வாழ்த்திப்  பேசுவதும்,  செய்த பணிகளைப் பற்றிக் கூறுவதும் நீங்கள் என்னிடம் வைத்துள்ள பேரன்பையும், பிரியத்தையுமே காட்டுகிறது. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் இன்னமும் உயர வேண்டும்.

 

நமது தமிழ் சமூகத்தைப் பற்றி எண்ணுகையில் என்னுடைய சில கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  • இங்கு சமய வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஹாங்காங்கில் சகோதரர்களைப் போல பழகி வருகிறோம். இதை நான்  மிகவும்  மதிக்கிறேன், மகிழ்கிறேன். தமிழகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நமது ஹாங்காங் சமூகத்தின் இந்த நற்பண்புகளைப் பற்றி கண்டிப்பாக கூறுவேன்.
  • அடுத்ததாக, கூட்டங்களுக்கு வருவதிலேயும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும்  நமது தமிழ்  சமூகத்தில் இன்னமும் விழிப்புணர்வும், ஒத்திசைவும் வளர  வேண்டும்  என்று   கருதுகிறேன்.
  • மூன்றாவதாக, நமது சமூகத்தின் Entrepreneurship-தொழில் முனையும்தன்மை- குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது ஹாங்காங் தமிழ் சமூகம் நிறைய வணிகர்களைக் கொண்டு இருந்தது. இன்றைய நிலை அவ்வாறு இல்லை. ஏன் இப்படி? இந்த நிலைமையை தீவிரமாக ஆராய்ந்து நாம் முன்னேற வேண்டும். நம்மிடம் அறிவு இருக்கிறது, நேர்மை இருக்கிறது, உழைப்பும் இருக்கிறது. இருந்தும் ஏன் முன்னேற தயக்கம். நமது தமிழ் சமூகம் இன்னமும் விழிப்புணர்வு, உழைப்பு, தொலைநோக்கு, தொழில் முனையும் தன்மை ஆகியவற்றைக் கைக்கொள்ள வேண்டும். மொழியின் மேல் மேலான பற்று வளர வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் வாழும்.  பொருள் இருந்தால்தான் இனம் செழிக்கும். ஒற்றுமை இருந்தால்தான் இனம் உயரும்.

இந்த புத்தாண்டு தினத்தின் முதல் நாளன்று உங்கள் அனைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பெற்றதை கடவுளின் ஆசியெனக்  கருதிப்  பெருமை கொள்கிறேன். அறிவியல் உலகைச் சுருக்கி விட்டது. தொடர்பில் இருப்போம். நன்றி.

asenth@rediffmail.com

 

(ஹாங்காங் இலக்கிய வட்டம் ஜனவரி 1, 2009 அன்று நடத்திய வழியனுப்பு விருந்தில் பேசியது)

Series Navigationமறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வுஇனி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *