இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்

author
0 minutes, 24 seconds Read
This entry is part 21 of 22 in the series 28 டிசம்பர் 2014

எஸ். நரசிம்மன்

 

##


(டிசம்பர் 27, 2010 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “மதிப்புரை” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியதிலிருந்து..)

இந்த இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு நண்பர் இராமனாதன் கொடுத்த “மதிப்புரை” என்ற தலைப்பு என்னவோ எங்கள் பள்ளியில் தமிழாசிரியர் கொடுத்த “கட்டுரை ஹோம் வொர்க்” போலத்தான் முதலில் தென்பட்டது. யோசிக்கையில், ஒரு படைப்பிற்குரிய முக்கியத்துவத்திற்கு இணையான அல்லது அதற்கு அடுத்தபடியான முக்கியத்துவம் மதிப்புரைகளுக்கும் உண்டு என்று தோன்றியது. முயற்சி செய்து பார்க்கும் ஆவல் வந்தது.

எனக்குத் திரைப்படங்களில் ஆர்வம் போய்ப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. எப்போதோ ஒரு “பருத்தி வீரன்” பார்ப்பதுண்டு. என்றாலும் தற்போதைய தமிழ்த் திரையின் நிகழ்வுகள் அத்துப்படி என்றே சொல்லலாம் – தேங்க்ஸ் டு தி மீடியா! தமிழ், ஆங்கில தினசரிகளில் அல்லது வேறெங்கேனும் ஏதாவது திரைப்பட விமர்சனம் கண்ணில் பட்டால் எடுத்துப் படித்து விடுவேன். நடிகர் ………ன் அடுத்த படத்தின் கதாநாயகி யார் என்றால் “டக்” என்று சொல்லத் தெரியும். ஆனால்,இதழ்களில் வரும் புத்தக மதிப்புரைகள் ஏனோ கண்ணில் படுவதில்லை அல்லது படிக்கத் தோன்றுவதில்லை.  இது என் குற்றம் தான் என்றாலும், புத்தக “மதிப்புரை” என்பது ஏன் மற்றைய விமர்சனங்கள் போல் நம்மைக் கவர்வதில்லை? நூல்களைத் தேடி எடுத்து படிப்பது நமக்குப் பிடிக்காமல் போய் விட்டதா ? அல்லது இப்போதெல்லாம் அமையும் வாழ்க்கையே நுனிப்புல் மேய்வது என்றாகி விட்டதா?

 

எப்படி இருப்பினும் விமர்சனம் எப்படித் திரைப்படத்தைப் பார்க்கத் தூண்டுகிறதோ அதே போல் மதிப்புரைகளும் நூலைப் படிக்க வழிகோலினால் நல்லது. ஆங்கில நாவல்கள், மற்றும் THE SEVEN STEPS FOR SUCCESS போன்ற மன வள நூல்கள், அவற்றின் அட்டையின் மீது எடுத்தாளப்படும் மதிப்புரைகளால் மனதைக் கவர்கின்றன. விற்பனையையும் அதிகரிக்கின்றன. முன்பு ஒரு இலக்கிய வட்டக் கூட்டத்தில் வைதேஹி ஸ்ரீதரனுடைய பேச்சு நினைவுக்கு வருகிறது- THE MONK WHO SOLD HIS FERRARI யில் வருகிற Monk, காரை விற்றாரோ இல்லையோ he managed to sell the book in millions.
மதிப்புரைகள் பெரும்பாலும் எழுத்தாளர்களைப் பாராட்டும் முகமாகவே அமைகின்றன. இதற்கு ஒரு காரணம் மதிப்புரை வழங்குவோருக்கு அந்த வாய்ப்பைத் தந்தவர் அந்த நூலின் ஆசிரியராகத்தான் இருக்கும். பணம்,புகழ்,பதவி,மதம்,சாதி தொடர்பான பயனுள்ள ஏதாவதைப் பெறும் எதிர்பார்ப்பு அல்லது பெற்றுக்கொண்டதற்கான நன்றி உணர்ச்சி இவற்றில் ஒன்று அல்லது இரண்டுமே எழுதியவரைக் கொண்டாடும் மதிப்புரைகளாக அமையும். விமர்சனக் கீற்றுகள் கொண்ட மதிப்புரைகள் அபூர்வமாகவே வருவதுண்டு.

 

நூலாசிரியரின் துதி பாடும் “சத்தில்லாத” மதிப்புரைகளை எளிதாக அடையாளம் காணலாம். இப்போதும் தமிழில் அப்படி தங்கள் வாசகர்களின் பெயரில் வெற்றுச் சொற்கள் மிகுந்த புத்தக மதிப்புரைகள் வருகின்றன. சில படைப்பாளிகள் தங்கள் எழுத்துக்கு அங்கீகாரம் பெறுவதற்காகவே “பெயர்” பெற்ற ஓருவரின் (அவர் வேறு துறையில் “பிரபலம்” ஆகி இருப்பார்) மதிப்புரையை விற்பனை கருதி போடுவதும் உண்டு.

 

மேலோட்டமான வாசிப்பில் ஒரு வாசகன் தவற விட்டு விடக்கூடிய ஒரு படைப்பின் ஆழத்தை, அசாதரணமான அழகை, நுட்பத்தை விவரித்து, ‘ படைப்பு முழுமை’ – கைகூடிய தருணத்தைப போகிறபோக்கில் சுட்டிக்காட்டி விடுவான் ஒரு நல்ல விமர்சகன்.   ஒரு படைப்பின் சிறப்பை சம காலப்படைப்புகளில் அதன் இடம் யாது என்பதை, பிற ஆக்கங்களில் படைப்பாளி தொட்ட உயரம் இப்படைப்பில் கைகூடாது போன துரதிருஷ்டத்தை – ஒரு விமர்சகன் சொல்லக்கூடும்.   இதனாலேயே அவனது விமர்சனம் படைப்பை விடவும் முக்கியமானதாக ஆகி விடாது.

 

இது தவிர உண்மையிலேயே அந்த நூல் தொடர்பான துறையின் நிபுணர் ஒருவரிடம் வாங்கிப்போட்ட மதிப்புரை அந்த நூலாசிரியருக்குப் பிடிக்காமல் போகும் வாய்ப்பும் உண்டு. பின்னும் அந்த மதிப்புரையை தங்கள் புத்தகத்தில் போட்டுக்கொள்ள அவர்கள் முட்டாள்களா என்ன ? எனக்குத் தெரிந்து அப்படிப்பட்ட ஒரு விமர்சன மதிப்புரையைத் தனது நூலில் பதிப்பித்துக் கொண்ட பாராட்டுக்குரியவர் வண்ணதாசன். (விமர்சனம் செய்தவர் சுந்தர ராமசாமி அவர்கள்)

 

நல்ல மதிப்புரைகள் என்றதும் பளிச் என்று நினைவுக்கு வரும் சில ::

 

வண்ண நிலவன் :

ஆரவாரமும் கலகமும் அற்ற ஒரு அமைதியான உலகத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த நாட்களில் வண்ண தாசனுடைய கதைகள் அந்த அமைதியான உலகை நோக்கி வாசகர்களை இட்டுச் செல்லக்கூடிய தகுதி படைத்தவை.

 

ஞானக்கூத்தன் :

எளிய நடை; கூடிய மட்டிலும் குறைவாக எழுதும் இயல்பு. தான் வியக்காமல் பாத்திரங்களைப் படைக்கும் திறமை – இவை

சா. கந்தசாமியின் எழுத்துக்களில் காணப்படும் அம்சமாகும்.

 

அசோகமித்திரன் :

திலீப் குமார் தமிழரல்லர், தமிழ் மொழி மீது ஆளுமை கொண்ட வேறு மொழி பிராந்தியக்காரர் என்பது அவரது கதை மாந்தரிலிருந்து தெரிந்தாலும் இது இலக்கியத்துக்குப் புறம்பான கவர்ச்சிப் பொருளாகப் பயன் படுத்தப் படுவதில்லை.

சுந்தர ராமசாமி :

புதுமைப் பித்தன் அறிய நேர்ந்த உலகம் மிகச் சிறியது தான். இந்தச் சிறிய உலகத்திலிருந்து தான் அவர் ஒரு மிகப் பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். ஒரு பிடி விதையிலிருந்து ஒரு கானகம் தோன்றுவது மாதிரி இது.

 

சா.கந்தசாமி

ஒரு சம்பவம் எப்படி வாழ்க்கையில் குறுக்கு வெட்டாகப் பாய்ந்து முழு வாழ்வுக்கும் அர்த்தம் தருகிறது என்பது சாதாரணமாகவே அவரது கதைகளில் காணப்படுகிறது, இலக்கியத் தரமான எந்த ஒரு சிறுகதைத் தொகுப்பிலும் தகுதி அடிப்படியிலே வண்ண நிலவன் சிறுகதை இடம் பெற்று விடும்.

 

இப்படி நேர்மையாகவும், யதார்த்தமாகவும் வரும் மதிப்புரைகள் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.

 

இங்கே நாம் பார்க்கப்போவது சிறந்த படைப்பாளி ஒருவரைப்பற்றிய நுட்பமான வாசக மனதின் பதிவுகள். அவ்வளவே. இந்த நுட்பமான மனம் பிரம்ம வித்தையல்ல. சிறந்த நூல்களை பத்தாண்டு கால நிதானமான தொடர் வாசிப்பில் எல்லோருக்கும் கிடைக்கும் எளிதான விஷயம் தான் .இந்த எளிதான விஷயம் உங்களுக்கும், எனக்கும் சாத்தியம் தான். சாத்தியமாக வேண்டும்.

பெருமாள் முருகன் தொகுத்த “உடைந்த மனோரதங்கள்” – கு.ப.ராவின் படைப்புலகம் குறித்த பல்வேறு மதிப்புரைகளின் தொகுப்பு. அவரது சிறு கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்று பல்வேறு முகங்களையும் விமர்சிக்கும் கட்டுரைகளின் மத்தியில் மறைந்த எழுத்தாளர் சத்தாரா மாலதியின் ஒரே ஒரு கட்டுரையை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
“முதலில் கு.ப.ராஜகோபாலன் பற்றி.. பிறப்பு: 1902 வாழ்வு: 42 ஆண்டுகள் மட்டுமே. முப்பதுகளில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம் எனத் தொடங்கியபோது கணிசமாக பங்களித்தவர். மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரைப் போலவே எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர். பாரதி மகாகவி இல்லை என்று கல்கி எழுப்பிய விவாதத்தில் “பாரதி மகாகவிதான்” என்று வாதிட்டவர்.எண்பதுக்கும் அதிகமான சிறு கதைகள். பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களைக் கொண்டு உருவானவை. வீடுதான் களம். ஆண்-பெண் உறவு முறைகளில் அக்கறை கொண்டு அழுத்தமாகப் படைத்திருக்கிறார். குறைவாக எழுதினால் போதும். வாசகன்தான் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர எழுத்தாளன் எல்லாவற்றையும் சொல்ல வேண்டியதில்லை என்பது இவரது வழி”

“கு.ப.ராவை வாசிக்கையில் தமிழகத்தின் ஆதி மனித உறவுச் சிக்கல்களை மீட்டெடுப்பு செய்கிற முயற்சி போல் தோன்றியது ” என்கிறார் மாலதி.

இனி வருபவை எல்லாம் மாலதியின் மதிப்புரைகள் :

“ கு ப ராவுடன் சேர்ந்து எழுதியவர்களில் பலர் காணமல் போய் விட எந்த வகையில் இவர் மட்டும் நிலைத் திருக்கிறார் என்பதுதான் செய்தி. அவரது எழுத்துக்கள் மனித உறவுகளை நேர்மையோடு அலசுவதால் இன்றும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. அவரது உக்கிரம், கலை மற்றும் இலக்கியத்துவம் ஆகியவை அவரது கதைகளில் பளிச்சிடுகின்றன.”

“உதாரணத்துக்கு “விடியுமா?” என்கிற கதை: திடீரென்று, பிறந்தகம் வந்த மனைவிக்கு “கணவன் நிலை கவலைக்கிடம்” என்று மருத்துவ மனையிலிருந்து தந்தி வருகிறது. தம்பியை உடன் அழைத்துக் கொண்டு இரவு ரயிலில் பட்டணம் வந்து சேர்கிறாள். இரவு முழுவதும், இருவருக்கும் மேவின கவலைகளும், பதை பதைப்பும், விடியும் முன் மருத்துவமனை வந்து சேர்ந்து, இறந்த கணவனின் உடலை பெற்றுக் கொள்ளுவதும். விடிந்து போவதுடன் கதை முடிகிறது. தந்தி வந்ததும் மனைவியின் வெளிப்பாடுகள் வித்யாசமாய் உள்ளன. பதறலில்லை, புலம்பலில்லை பிரமை தட்டிப் போய் இயந்திரம் போல் இருக்கிறாள்.

இரயிலில் ஏதோ சாப்பிடுகிறாள், வெற்றிலை மென்றவாறே ‘அந்த புருஷனுக்கு வாழ்க்கைப் பட்டு என்ன சுகத்தைக் கண்டேன் ?’ என்கிறாள். என்றைக்கும் சண்டை,என்றைக்கும் பிடிவாதம்.. நான் அழாத நாள் உண்டா? ‘ என்கிறாள். கடைசியில் “விடிந்தது” என்று முடிகிறது கதை.”

“விடியுமா” சிறுகதை மிகக் கூர்மையாக, மேற்கத்தியச் சிந்தனைக்கு எந்த விதத்திலும் குறைவு படாத மிக அழகான பதிவு. Kate Chopin 1894 இல் எழுதிய THE STORY OF AN HOUR கதையை இது நினைவு படுத்துகிறது. இறந்து போனதாகக் கருதிய கணவன் திடீரென்று வரும் போது, அதிர்ச்சியில் அவள் உயிர் விடுகிறாள். மகிழ்வினால் அல்ல – தாங்க முடியாத துயரத்தில். இங்கே அப்படி அதிரடியாக எதுவும் நடப்பதில்லை. கணவனின் இருப்பு ஒரு மங்கலச் சின்னம் , ஒரு சமூக அங்கீகாரம், ஒரு பொருளாதாரச் சார்பு, ஒரு பாதுகாப்பு மற்றும் சகலமும் என்றிருந்த அந்தக் கால கட்டத்தில், புருஷனை உயிருடன் பார்க்கும் துடிப்போடு பயணம் மேற்கொண்டவளுக்குத் தம்பியிடம் தன் தாம்பத்யத்தின் குறைபாட்டைச் சொல்லிக் கொள்ளத் தோன்றி விடுமா ?. இது போன்ற கதைகளை கு ப ரா வுக்குத்தான் சொல்லத் தெரிந்திருக்கிறது.”

“காதல் மற்றும் தம்பத்ய நுட்பங்கள் குறித்தும், கற்பு நிலை மீறல்கள் குறித்தும், பெண் நிலைப்பாடுகள் பற்றியும் வெவ்வேறு கதைகளில் கு.ப.ரா அலசியிருக்கிறார். காதல் தொடாமலே கூடும், மண வாழ்க்கை சிறக்கப் புரிதலுள்ள மனைவி வேண்டும், வியர்த்தக் கொள்கைகளை மனைவி என்பவள் மறக்கடிக்கக் கூடும், சகோதரியும் மனைவியும் வெவ்வேறு முனைகளிலிருந்து ஆடவனை பாதிக்கமுடியும் போன்றவற்றை மிக யதார்த்தமாகத் தொட்டுச் சென்றிருக்கிறார்”.

“நூருன்னிசா” ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை. காதலை நகர்த்திச் செல்பவள் நாயகி (‘எதுவும் வேண்டாம். புரிதல் தான் காதல், நீ எனக்கு, நான் உனக்கு என்று இருவரும் மனத்தால் உணர்வதே காதல்’ ).நினைவுகளில் வாழ வேண்டுமென்று அவள் சொல்ல, அதை அவன் ஏற்றுக் கொள்கிறான். பதிலைக் கூட அவள் எதிர் பார்ப்பதில்லை. கதையில், தொடுகையே வேண்டாம் என்கிறாள். “

“நேர்மாறான ஒரு நிலைப் பாட்டில், இன்னொரு பெண், சுலோச்சனா , இந்தத் தலைமுறை” என்ற் சிறுகதையில் சுவர் ஏறிக் குதிக்கச் சொல்லித் தருகிறாள். “வேரோட்ட”த்தில் ஆண் பெண் திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்ந்த பக்குவத்தையும் (Living together ) ஆணுக்குச் சமமாகத் தன்னை உணர்ந்த பெண்ணை நாட்டுப்புறத்து மாமனாரும், பட்டிக்காட்டு நாத்தனாரும் மெச்சிக்கொள்வதையும் மிக இயல்பாக உணர்த்துகிறார்.”

“சிறிது வெளிச்சம் – மிகத் துல்லியமாக ஒரு பெண்ணின் “திருப்தி” என்கிற விஷயம் வேறு என்பதைத் தெளிவு படுத்துகிறது. கணவன் விட்டு விலகி இன்னொருவனை நாடும் பெண்ணின் கதை இது- மிக ஜாக்கிரதையாகக் கையாளப் பட்ட சொற்கள்.”

“.மனைவி பாத்திரங்களின் மீது கு.ப.ரா கொள்கிற மரியாதை கலந்த அக்கறைஅலாதியானது. எவ்வளவு தீர்க்கமான எதிர்பார்ப்புக்கள் மனைவியிடமிருந்து ? இடைக்காலத்தின் சாபங்களுக்குப் பின் பெண் துணையை உயிர்ப்புள்ள ஒரு இருப்பாக- a living entity ஆக- முதன் முதலில் அங்கீகரித்தது கு ப ரா.வாகத்தான் இருக்கக்கூடும்.”

“எழுத்தே வாழ்வாக இருந்தாலும், ஏழ்மையை அவர் எழுதவில்லை. ஒரு எழுத்தாளன் தனது வாழ் முறைச் சிரமங்களை எந்த ஒரு பதிவிலும் வர விடாமல் பார்த்துக் கொண்டது வியப்பு தான். “

“நடுத்தெரு நாகரிகம்” முப்பத்தைந்து ரூபாய்க்கு அழகு சாதனம் வாங்கும் கதை- கடன் அட்டையும், காஸ்மெடிக் விளம்பரங்களும், அழகிப் போட்டிகளும்,உலகச் சந்தைகளும் வரும் முன்பே நுகர் பொருள் வணிகம் பற்றி அப்போதே பதிவு செய்துள்ளது”

“மனக்கோட்டை- காந்தியைக் கடவுளாக வழி பட்ட காலத்தில் விஸ்வநாதன் என்னும் இளைஞன் காந்திய எதிர்ப்புத் தெரிவிப்பதை எழுதியுள்ளார். எப்படி கட்டிடத்தின் அடித்தளம் அமைக்கப்படும் முன் விரிசல்களை முன் நோக்குகிறார் என்பதும் அதை எப்படி தைரியமாக தனது எழுத்துக்களில் வைக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டியவை. கு ப ரா குத்திக் கட்டுபவர் அல்ல…எடுத்துக் காட்டும் எழுதத்தாளர். எனவே அவரது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டியதில்லை..”

“உலக மக யுத்தம் முடிந்து, தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கையில் இங்கு கு ப ரா வோ சாவதானமாக ஆண் பெண் உறவு ஆராய்சிகளை செய்து வந்திருக்கிறாரே என ஆச்சர்யம் வரலாம். தமிழகம் நேரடியாக பாதிக்கப்படாததாலும், யூத விளைவுகள் அவர் காலத்தில் தெரியாததாலும் அவர், உலகப் பொதுவான செய்திகளையும், தனது எண்ணங்களையும் கட்டுரைகளோடு நிறுத்திக்கொண்டுள்ளார் எனலாம்.”

“கு ப ரா வின் சரித்திரக் கதைகள் காவியமாக, வித்தியாசமாக விரிகின்றன. புத்தர் ஆமிரபாலி வீட்டில் பிட்சை ஏந்தியது, திருநாராயண சிலைமேல் அக்பர் பாதுஷாவின் மகள் கொண்ட காதல், மேவார் இனத்தின் (எப்போதும் பேசப்படாத) விவேகம், சாகாக் காதலை நிறுவிய அனார்கலியின் பேச்சு.. இப்படி வரலாற்றுக் கசிவுகளை கற்பனை கலந்து கதைகளாக்கி இருக்கிறார். “தமிழ் மங்கை” என்கிற கதையில் , பாண்டியன் மாற வர்மன் மனைவி பூசுந்தரி, ஆண்டாளைச் சந்திக்கும் நிகழ்ச்சியில், கு ப ரா, ஆண்டாளை மிகச்சரியாக புரியவைத்திருக்கிறார். ‘நாச்சியார் திரு மொழி’ யாக விழுகிற பெண்மனப் பதிவுகள் இலக்கியத்தின் அபாரமான உணர்ச்சிப் பெருக்கங்கள். ஆண்டாள்தான் ஒரே பெண் கவி என்று சொல்லி வருகிறவர்கள் கூட எந்த வகையில் என்று சொன்னதில்லை. ஆண்டாளை வைத்துப் புனைந்த கதை கு.ப.ரா வின் மென்மையான ரசனையை வெளிப்படுத்துகிறது.”

கு ப ரா வைப் பற்றிய மாலதி சதாராவின் கட்டுரை வந்திருந்த புத்தகத்தில் (உடைந்த மனோரதங்கள்) பெருமாள் முருகன் சொல்வது :

“மாலதி சத்தாராவின் கட்டுரையை மட்டும் நான் எடுத்துக் கொண்டதற்கு காரணம் உண்டு. கு ப ரா சந்தித்த ஒரு விமர்சனம் – இவர் ஆண் பெண் உறவுகளைப் பற்றி மட்டும் அதிகம் எழுதுகிறார் என்று. ஒரு எழுத்தாளன் தன விருப்பம் போல் “பொருளையும் தளத்தையும்” எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. இதைப் பற்றி ஒரு பெண் விமர்சகரின் பார்வை எப்படி என அறியவே மாலதியைத் தேர்ந்தெடுத்தேன். கு ப ரா வின் எழுத்துக்களில் பெண் எப்படி எல்லாம் வெளிக்கொணரப் படுகிறாள் என்பதை மாலதி தனது கட்டுரையில் வெவேறு கதைகளில் தொட்டுக் காட்டியுள்ளார்.”

“மிகச் சிறிய உரையாடல்களும், சாதாரணப் பார்வைகளும் கூட கு.ப.ரா விடம் முக்கியத்துவம் பெறுகின்றன. ‘உண்மையாகவே மௌனங்கள் நிறைந்த சிறுகதைகளை அவர் ஒருவர்தான் எழுதிள்ளார் ‘ என்பது கு ப ரா பற்றி தி.ஜானகிராமனது கணிப்பு.”

“ஞானக் கூத்தன் சொல்வது போல் “பலரும் தொடுவதற்கே பயப்படும் பல விஷயத்தைத் தொட்டவர் அவர்”. முன்னமே சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்ட ஆண் பெண் உறவு பின்னர் எந்தெந்த நிலைக்கு ஆளாகின்றது என்ற அக்கறையோடு கவனித்து கவலைகளை எழுதியுள்ளார்”

“கு ப ரா வின் மேல் இன்னொரு குற்றச்சாட்டு உண்டு. அவரிடம் பிராமண மனம் இருந்தது என்று, அது அவருடைய படைப்புக்களில் வெளிப்பட்டது என்னும் விமர்சனத்தை புறந்தள்ள வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்குரிய இடத்தை அங்கீகரித்துக் கொண்டே அவர் மீதான விமர்சனங்களை வைப்பது இயல்பு தான். கு ப ரா வைக் காப்பாற்றிப் புனிதராக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை.”

“கு ப ரா தனது எழுத்து பற்றிக் கூறுகையில், ” என் கதைகளை விமர்சனம் செய்தவர்களில் யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் -இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று சொன்னதாக நினைவு. இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளி தான். நான் கவனித்த வரையிலும் என் அனுபவத்திலும் அவை தான் கண்ணில் படுகின்றன ”

கடைசியாக….மதிப்புரை பற்றிய என் கருத்துக்களை இயன்றவரை சொல்லியிருக்கிறேன். கு ப ரா பற்றிய மாலதியின் மதிப்புரையை மட்டுமே சொல்ல விரும்பிய எனக்கு, மதிப்புரையைத் தாண்டி கு ப ரா என்ற ஒரு ஆளுமையைக் கண்டு கொண்டு அவரது படைப்புக்களையும் அவர் பற்றிய விமர்சனங்களையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

நல்ல மதிப்புரைகள் ஒரு படைப்பைப்பற்றிய வெறும் கண்ணோட்டமாக மட்டும் நின்று விடாமல் வாசகனை அந்தப்படைப்பை நோக்கி இழுத்துச் செல்லும். நான் இழுக்கப் பட்டேன்.
கு.ப.ரா வின் சில சிறுகதைகளை ஆழமாக உள்வாங்கி, அழகான மதிப்புரை ஒன்றைப் படைத்து விட்டுச் சென்று விட்ட மாலதி சத்தாராவின் எழுத்துக்கு நன்றி. கு.ப.ரா என்னும் கடலுக்குள் என்னை முத்துக் குளிக்க வைத்த இலக்கிய வட்டத்துக்கும் நன்றி.

-நரசிம்மன்

snnbj@yahoo.com

 

##

(டிசம்பர் 27, 2010 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “மதிப்புரை” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியதிலிருந்து..)
[தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com]

 

 

Series Navigationஇயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..சாவடி 19-20-21 காட்சிகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *