1968 இல் அமரர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் காலத்திலேயே ஆனந்த விகடன் என்னைப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் செய்திருந்தாலும் அவரது மறைவுக்குப் பின்னர் ஆசிரியராய்ப் பொறுப்பு ஏற்ற திரு எஸ். பாலசுப்ரமணிபன் அவர்களை 1983 இல் தான் நான் நேரில் சந்தித்தேன்.
வாசக இளைஞர் ஒருவர் ஒரு நாள் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது ஆனந்த விகடன் எழுத்தாளராக ஓரளவு நான் பிரபலமாகி யிருந்ததால் விகடன் அலுவலகத்தில் தனக்கு ஏதேனும் வேலை வாங்கித்தர முடியுமா என்று அவர் கேட்டார். அந்த அளவுக்கெல்லாம் எனக்குச் செல்வாக்கு இல்லை என்றும், விகடன் ஆசிரியரை நான் பார்த்தது கூட இல்லை என்றும் கூறினேன். எனினும் அவரது நிலை இரங்கத்தக்கதாக இருந்ததால், முயற்சி செய்வதாய்க் கூறி, தொலைபேசியில் ஆசிரியரோடு பேசி விஷயத்தைச் சொன்னதும், “ இங்கே வேலை எதுவும் தற்சமயம் காலி இல்லை. எனினும் அவரை வரச்சொல்லுங்கள், “ என்று அன்புடன் கூறி நாளும் நேரமும் தெரிவித்ததோடு அவரது பெயரையும் கேட்டுக் குறித்துக் கொண்டார்.
அவ்வாறே அவரைச் சந்தித்த இளைஞர் தம்மைப் பற்றிய விவரங்களை ஆசிரியர் குறித்துக்கொண்டதாகவும், காலி இடம் வரும் போது கூப்பிடுவதாய்ச் சொன்னதாகவும் திரும்பி வந்து கூறிப் போனார். விகடன் மூலம் அறிமுகமாகிப் பதினைந்து ஆண்டுகள் கடந்தும் அவரை நேரில் சந்தித்து எனது மரியாதையைத் தெரிவிக்காதது அதன் பின் என்னை உறுத்தத் தொடங்கியது. பல எழுத்தாளர்கள் அவ்வப்போது விகடன் அலுவலகத்துக்குச் சென்று வருவது பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த விகடன் அலுவலகம் சென்று யாரையும் நான் சந்திக்க எண்ணியதில்லை.
அதற்கு முன்னர் ஒரு முறை தினமணி கதிரில் உதவி ஆசிரியராக இருந்த சி. ஆர். கண்ணன் அவர்கள் ஒரு முறை என்னைத் தோலைபேசியில் அழைத்துப் பேசுகையில், “தினமணி கதிர் நாவல் போட்டியில் பரிசு வாங்கினீர்கள். சாவி அவர்களும் உங்கள் கதைகளை அடிக்கடி போடுகிறார். இவ்வளவு அருகில் உங்கள் அலுவலகம் இருக்கும் போது, மரியாதை நிமித்தம் நீங்கள் வந்து அவரைச் சந்திக்க வேண்டாமா?” என்று கேட்டதும் அதன் பின் அவரை நான் சந்திக்கச் சென்றதும் ஞாபகம் வர, ஆனந்த விகடன் ஆசிரியரையும் நேரில் ஒரு முறை பார்த்து எனது நன்றியைத் தெரிவிப்பது என்று முடிவு செய்தேன்.
அதன்படி நான் அவரை மரியாதை நிமித்தம் பார்க்க விரும்புவதாய் ஒரு நாள் சொன்னதும், மறு நாள் மாலை ஆறு மணிக்கு ஜூனியர் விகடன் அலுவலகத்துக்கு வந்து சந்திக்கப் பணித்தார். அப்போது என்னிடம் நெடிய நகைச்சுவை நாடகம் ஒன்று இருந்தது. அப்படியே அதை நேரில் அவரிடம் கொடுப்பது என்று முடிவு செய்து எடுத்துச் சென்றேன். என் தோழி ஒருவருடன் அலுவகம் விட்டுக் கிளம்பி ஜூனியர் விகடன் அலுவலகத்துக்குச் சென்றேன்.
“வேறொன்றுமில்லை. விகடன் என்னை அறிமுகம் செய்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்களை நேரில் சந்தித்து என் மரியாதையையும் நன்றியையும் நான் தெரிவித்ததில்லை. முக்கியமாய் அதற்காகத்தான் வந்தேன்,” என்று நான் சொன்னதும், “அப்படியெல்லாம் நேரில் வந்து நன்றி சொல்லவேண்டும் என்றெல்லாம் கிடையாது..” என்று கூறிவிட்டு இருவருக்கும் காப்பி வரவழைத்துக் கொடுத்தார்.
பொதுவய்ப் பேசிய பின், “நான் ஒரு நாடகம் எழுதி முடித்திருக்கிறேன். சொந்தங்கொண்டாடும் அம்மாவுக்கும், உரிமை கொண்டாடும் மனைவிக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு நல்ல இளைஞன் பற்றிய நகைச் சுவைத் தொடர் நாடகம். விகடன் மட்டுமே தொடர் நாடகம் வெளியிடுவதால் அதை எடுத்து வந்திருக்கிறேன். உங்களிடம் கொடுப்பது முறை யில்லை யெனில், வழக்கம் போல் தபாலில் அனுப்புவேன்!” என்றேன்.
”அதனால் பரவாயில்லை. நான் விகடன் உதவி ஆசிரியர்களின் குழுவில் சேர்த்துவிடுவேன்….” என்று கூறி அதை வாங்கி வைத்துக் கொண்டார்.
”நான் அடிக்கடி பெண்ணுரிமைக் கதைகள்தான் எழுதுவேன். இது மிகவும் மாறுபட்டது. இரண்டு பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண் பற்றிய அதை இது!” என்று நான் சொல்லவும், “ So? You have shifted your sympathy!” என்றார்.
நான் சிரித்துவிட்டேன். இருப்பினும், “அப்படியெல்லாம் இல்லை. என் சிம்பதி எப்போதும் பெண்கள் மீதுதான். ஆனால், துன்பப்படும் இது போன்ற ஆண்களுக்காகவும் பரிந்து எழுதுவேன்,” என்றேன். புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டார்.
பிறகு விடை பெற்றுக் கிளம்பினேன். (”மத்தளங்க்ள்” எனும் அது விகடனில் வெளியாகவில்லை என்பதும் ஆனால் சில நாள் கழித்துப் புத்தகமாக வெளி வந்ததன் பின் திரைப்பட இயக்குநர் திரு கே. பாலசந்தர் அவர்களால் ஏற்கப்பட்டு, ராஜ் டி.வியில் ஒளிபரப்பானது என்பதும் வேறு விஷயங்கள்.)
அமரர் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் எளிமையானவர். செருக்கு என்பதே இல்லாதவர். என்னைப் போன்ற எழுத்தாளர்களை மதித்து அவர்களின் கடிதங்களுக்குப் பதில் எழுதியவர். அவரோடு(ம்) நான் கடிதம் மூலம் சண்டை போட்டதுண்டு. பொறுமையாக எனக்குப் பதில் எழுதியதோடு, எனது தாக்குதலை மனத்தில் வைத்துக்கொள்ளாமல் அதன் பின்னும் என் கதைகளை அவர் வெளியிட்டார்.
தம் பத்திரிகை உலக அனுபவங்கள், திரைத்துறை அனுபவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து அவர் ஒரு நூல் எழுத வேண்டும் என்று நான் அவருக்கு வேண்டுகோள் விடுத்ததுண்டு. ஏனோ அவர் அதைச் செய்யவில்லை.
பத்திரிகை உலகில் திரு எஸ். பாலசுப்ரமணியன் போன்றவர்கள் அரிதானவர்கள். அவரது ஆன்மா நிச்சயம் சாந்தியடைந்திருக்கும்.
…….
- கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்
- மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்
- என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?
- திரையுலகின் அபூர்வராகம்
- ஒரு காமிரா லென்ஸின் வழியே…..
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!
- கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்
- புத்தாண்டு வரவு
- நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்
- ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்
- பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam
- தொடுவானம் 48 . புதிய பயணம்
- ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- ஆனந்த பவன் நாடகம் காட்சி -19
- தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்
- தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்
- சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்
- 19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி
- இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..
- இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்
- சாவடி 19-20-21 காட்சிகள்