தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !

This entry is part 29 of 33 in the series 4 ஜனவரி 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

அன்று சனிக்கிழமை காலை.

புதிய வருடத்தில் புதிய உறவைத் தேடிய பயணம் இது. நேற்றே துணை வட்டாட்சியர் திருமதி. மலர்க்கொடி அவர்கள், பாதி நேரம் வந்துட்டு போய்டும்மா என்று பணித்திருக்க, அலுவலகம் செல்லும் எண்ணத்தோடு எழுந்த எனக்கு காத்திருந்தது இறுக்க உணர்வு. துவைக்கப்படாத துணிக்காக அலுத்து, பழைய உடைகளை மாற்றி மாற்றி போட்டு எதுவும் சரிப்படாததால் இப்படி முடியாமைக்கு அலுத்துக் கொண்டேன். இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல், கொஞ்சம் துணியை துவச்சிருக்கக் கூடாதாம்மா என்று என் அருமை மகளைக் கடிந்து கொண்டேன்.

அவள் கண்களை கசக்கிக்கொண்டு நின்றாள், எக்சாம் மம்மி டிரஸ் இருக்கும்ன்னு நெனைச்சேன் என்று.

எப்போதும் துவைத்துப் போடும் எனக்கே நினைவில்லாத போது மகளை நொந்து என்ன செய்வது என்றெண்ணிக் கொண்டேன்.

பிறகு அவளே தேடி ஒரு ஆரஞ்சு நிற சுடிதாரைக் கொண்டு வந்து கொடுத்தாள் இது சரியா இருக்கும் மம்மி என்று.

இடையில் ஏற்பட்ட இறுக்க உணர்வு தொடர, ஆண்டுகள் கடந்து கொண்டே இருக்கிறது பெரியதாய் என்னத்தை சாதித்துக் கிழித்தோம் என்ற விரக்தி மனநிலை ஒட்டிக் கொண்டது.

முன்று சக்கர சைக்கிள் வண்டியில், எங்கள் தெருவை கடந்த போது அங்கு ஒரு மேடிருக்கும். முன்பெல்லாம் அந்த மேடேற சிரமப்படுவேன். இப்பொழுதோவெனில் அங்கிருக்கும் வாகனக் காவல் கடையில் இருக்கும் இளைஞர்கள் மேடேற்ற என் அனுமதியை எதிர்பார்ப்பதில்லை. இப்போதும் அதே போன்றொரு இளைஞன் உடன் வந்து மேடேற்றினான்.

முன்பெல்லாம் மூத்திரச் சந்தாய் காட்சி தரும் அவ்விடம் தெய்வீகமாய் காட்சி தந்தது. எல்லாம் அந்தப் பகுதி இளைஞர்களின் முயற்சி. எச்சரிக்கை செய்ய, சுவரில் கிறிஸ்து, முருகர், இஸ்லாம் என்று மூன்று படங்களையும் வரைந்திருந்தார்கள்.

அதன் எதிர்ச்சாரியில் சிறு குடிசை போன்று அமைத்து இளைஞர் நற்பணி மன்றமாம் அந்த குடிசைக்குள் ஒரு பென்சும் ஒரு நாற்காலியும் இருந்தன.

அந்த குடிசையின் சுவராய் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேனரில் சிரித்தார். எப்படியோ இங்கொரு இளைஞர் இயக்கம் உருவாகிவிட்டது. இடம் தூய்மையாக இருந்தால் சரி என்றெண்ணியபடி சாலையைக் கடந்தேன்.

கைகள் சைக்கிளின் கைப்பிடியைச் சுழற்றிய போதும், நினைவு வாழ்க்கையின் விரயத்தையே யோசித்துக் கொண்டிருந்தது. அலுவலகம் உள் நுழைந்த போதோ ஒருவரும் வந்த பாடில்லை. இன்று சனிக்கிழமை அலுவலகம் வந்ததும் கால விரயம்தான் அப்படியிருந்தும் ஏன் அலுவலகம் வர நிர்பந்திக்க வேண்டும் என்று எண்ணி சலித்துக் கொண்டேன்.

வழியில் பார்த்த ஒரு வயோதிகரின் நோயுற்ற கால் நினைவிற்கு வந்தது. சிறு சிறு கட்டிகள் பாதம் சுற்றி யிருக்க அதிலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது. இயற்கைக்கு நன்றி சொன்னேன். அப்படி ஏதும் அருவெறுக்கும் அளவிற்கு எனனை வடிவமைத்திட வில்லை என்ற திருப்தி. இருப்பினும் எப்போதேனும் சக அலுவலர்கள் என் முதுகில் இருக்கும் கூனைப் பற்றி பேசும் போது எனக்கு வருத்தம் ஏற்படுவதுண்டு.

இயல்பு நிலையை அப்படியே ஏற்றுக் கொள்வது எப்படி?

அன்று மதியம் ஒரு மணிக்கு என்னைத் தேடி சிநேகிதி நிர்மலா [மாற்றுத் திறனாளி] வந்தாள்.

எங்கடி இவ்ளோ தூரம் என்றேன் ?

சும்மா தான்க்கா ரெண்டு பேர் ஓட்டர் ஐடி கேட்டாங்க அதைப்பத்தி விசாரிச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன் என்றாள்.

அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவளுடைய அனுபவத்தை என்னிடம் கூறியது நான் விதைத்த விதை ஒன்று செழிப்பாய் வளருகிற உணர்வு ஏற்பட்டது.

ஒரு பத்து நாளா டைப்ரைட்டிங் போறேன்கா, இத்தனை நாள் அந்த சார் வேண்டாம்மா உங்களால மாடியில ஏறமுடியாதுன்னு சொல்லிட்டிருந்தார். எப்படி இருந்தாலும் வந்தே தீருவேன்னு வந்துட்டேன் அக்கா !

முதல் நாள் முட்டியிலே ஏறி மேல போனதும் மூச்சு வாங்கிடுச்சு. என்னால சேர்ல ஏறி உட்கார முடியல, சார் ஏதோ ஆர்வத்துல வந்துட்டேன் சார் என்னால முடியலேன்னு அந்த சார்க்கிட்ட சொல்லிட்டேன் அதுக்கு அவர் ஏம்மா நானே வேண்டாம்ன்னு சொன்னப்பவெல்லாம் முரண்டு பிடிச்சு இவ்ளோ தூரம் முயற்சி செய்து வந்துட்டு இந்த சேர்ல ஏறி உட்கார முடியலேன்னு சொல்றியே உன்னால ஏற முடியும் முயற்சி பண்ணுமான்னு சொன்னார்க்கா. அந்த நேரத்துல அவர் மட்டும் ஊக்கப்படுத்தாம இருந்திருந்தா என்னால இந்த 10 நாள் கிளாஸ் போயிருக்க முடியாது என்றாள்.

நிர்மலாவிற்கு வீட்டிலேயே பயிற்சி செய்ய சொல்லி ஒரு டைப்ரைட்டிங் மெஷினை தந்திருந்தேன். வீட்லயும் டைப் பண்றியா நிர்மலா என்ற என் வினாவலுக்கு இல்லேக்கா இவ்ளோ தூரம் சைக்கிள் மிதிச்சுட்டு வந்துட்டு வீட்ல போய்ச் செய்ய முடியல டயர்ட் ஆகிடுது என்று கூறினாள்.

இந்த வருடம் ஏதாவது உருப்படியா செய்யனும் நிர்மல் என்றேன் நான்.

பேச்சு வாக்கில் மில்லத் நகரில் இருக்கும் ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பற்றி நிர்மலா கூற இன்று போய் அவளைப் பார்ப்பது என்று நான் முடிவு செய்தேன். இருக்கும் சிநேகிதிகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் நேரத்தில் அவரவருக்கென்று தங்குவதற்கும், போக்குவரத்திற்குமான இடையூறுகள் நேர்ந்து, தடைக்கற்களாய் வந்து அமைந்து விடுவதுண்டு.

நிர்மலா கூறினாள்: உங்களால முடியாதுக்கா! இந்த முனையில இருந்து அந்த கோடிக்குப் போகனும் அவ்ளோ தூரம் சைக்கிள் ஓட்ட முடியாது, உங்கள் கைவலிக்கும் அக்கா என்றாள்

சரி அதையும் பார்த்துவிடலாம் கைவலித்தால் திரும்பிவிடலாம் என்று கூறினேன் அவளைச் சமாதானப் படுத்தும் விதமாக.

இருவரும் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து சைக்கிளில் சென்றது அனைவரும் பார்க்க ஒரு காட்சியாக அமைந்தது. அக்கா எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க என்றாள் நிர்மலா.

கண்ணிருக்கு பார்க்கிறாங்க என்றேன் நான்

பாலத்தைக் கடந்த போது இராட்சத கண்டெய்னர் டிரக் ஒன்று சீறிக்கொண்டு எங்கள் முன் சென்றது. அதன் ஒசையும் காற்றுக் கிழித்த வேகமும் ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அதோ அந்த அண்ணா தெரியுறாரான்னு பாருங்க என்றாள் நிர்மலா

நமக்கு சைக்கிள் ரிப்பேர் பண்றவர் தானே என்றேன்

ஆமாம்க்கா அவர் வீட்டுக்கு பக்கத்துல தான் நாம போறோம் என்றாள்.

நாங்கள் அவரை நெருங்குகையில் அவர் எங்களோடு இணைந்து நடந்தார்

என்ன இவ்ளோ தூரம் ?

உங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு பொண்ணு இல்லையா, எங்கள மாதிரியே ? அந்த பொண்ணைத்தான் பார்க்க போறோம் என்றாள்.

என்ன சொல்லி என்ன அவங்க கேக்கப் போறதில்ல, நம்மளாள சொல்லத்தான் முடியும், செய்யறதுக்கு அவங்க பெத்தவங்கதான் முடிவு செய்யனும் என்றார். வழியில் ஒரு பள்ளத்தில் இறங்கி, ஒரு மேடு ஏறி ஒரு யு டேர்ன் அடித்து திரும்பிய தெருவில் இருந்த ஒரு கடையில் இருவருக்கும் லிவோ வாங்கித்தர மறுக்க முடியாமல் கையில் வாங்கிய கணம் தொலைப்பேசி அழைத்தது.

ஹார்ட் பீட் டிரஸ்டின் லோகோ கேட்டு பிரேம் ஆனந்த் என்பவர் போன் செய்ய அவரிடம் பேசி முடித்து, என்னிடமிருந்த லிவோவை அவரிடமே கொடுத்தேன். நானும் நிர்மலாவும் ஷேர் பண்ணிக்கறோம்ன்னா! இதை நீங்க குடிச்சிருங்க என்று கூற அவர் அதை அவர் மனைவிக்காக எடுத்துக் கொண்டார்.

நாங்கள் அவர் பின்னேயே சென்று அந்த கடைக் கோடி வீட்டினுள் முன் நின்று குரல் கொடுக்க கோன் என்ற வினவலுக்குப் பிறகு, சிவந்த தேகமும் சற்று தடுமனான உடல்வாகும் கொண்ட அந்த பெண் வெளியில் வந்தாள். மழலைத்தனம் மாறாத முகம். அள்ளி முடிந்திருந்த கூந்தல் அவளின் கூந்தல் அடர்த்தியைக் காண்பித்தது. ஏனோதானோவென்று அலங்காரம் ஏதுமின்றி இருந்த முகம்.

வாங்க என்று வரவேற்றாள்

நிர்மலாதான் அவளோடு வள வளவென்று பேசிக்கொண்டிருந்தாள்.

ஒயர் பேக் போடத் தெரியுமா? குர்ரான் படிப்பாயா? தமிழ் பேசத் தெரியுமா? உருது படம் பார்ப்பாயா ? இன்னவிதமான கேள்விகள்.

உன் பேர் என்ன என்றேன்

ரேஷ்மா

என்ன படிச்சிருக்க

எதுவும் படிக்கலேக்கா !

ஏன் ?

ஜொரம் வந்துச்சு கால் பெருசா வீங்கிடுச்சு; அப்புறம் பார்த்தா உள்ள எலும்பு உடைஞ்சுடுச்சாம், அதனால ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் நடந்ததுதான் மிச்சம். ஸ்கூலுக்கு போகல எங்களுக்கு ரெண்டு வீடு இருந்துச்சு; ரெண்டு வீட்டையும் வித்துட்டோம். இப்ப வாடகையில இருக்கோம்

எவ்ளோ வாடகை ?

3000 ரூபாக்கா !

அப்பா என்ன வேலை பாக்குறார் ?

டிரைவர்.

இப்பத்தான் அண்ணாவுக்கும் லாரியில தார்பாய் ஏறிக் கட்டும் போது கீழ விழுந்து தலையில அடிப்பட்டுடுச்சு என்றாள்.

அவளுடைய ஒரு கால் குட்டையாய் இருந்தது.

உனக்குப் படிக்க விருப்பமா என்றேன்

விருப்பம் தான்க்கா.

எங்க அலுவலகத்திற்கு வருவியா ?

எப்படி வர்றதுக்கா, என்னால இவ்ளோ தூரம் நடக்க முடியாதே என்றாள்.

அக்கா நம்மாள எல்லாரையும் ஒரு இடத்துக்கு வரவழைக்க முடியாது; இப்போ எப்படி அவங்க இடத்துக்குப் போய் கத்துக் கொடுக்கறமோ அதையே கொஞ்ச நாளைக்கு செய்ய வேண்டியது தான் என்றாள் நிர்மலா.

இடையில் இவர்களின் கல்வி தடைப்படுகிறதே நிர்மல், நமக்கு வேலை இருக்கும் போது இவர்களை வந்து பார்க்க முடிவதில்லை. அதற்குள் இவர்கள் நாம் கற்றுக் கொடுத்ததையும் மறந்து பழைய நிலைக்கே திரும்பி விடுகிறார்கள் என்றேன்.

என்னக்கா செய்ய என்னை வெளிய கொண்டு வரவே உங்களுக்கு ஏழு வருடம் ஆயிடுச்சே. ஏழு வருடத்தின் விடாமுயற்சி தானே நான் இப்படி வெளியே உங்களோடு வருவது இதுவே உங்களுக்கான வெற்றிதான்க்கா என்றாள்.

ரேஷ்மாவின் எதிர் வீட்டில் அந்த இளைஞன் இருந்தான்; அவனின் தலை பெரியதாய் இருந்தது. யாரையோ அழைப்பது போல இரு கைகளையும் அசைத்துக் கொண்டிருந்தான்.

அவர யார் பாத்துக்கறது என்றேன்

யாரை முன்னாவையா அவங்க அப்பா என்றாள் ரேஷ்மா

அவங்க அம்மா இல்லையா?

அது எங்க பாக்குது ? இங்கதான் எங்கயாச்சும் கெடக்கும் என்றார் எதிர்வீட்டுக்காரர்.

இத்தகையவர்களை காணும் போதெல்லாம் இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்ட வண்ணமே இருக்கிறது. அங்கிருந்து விடைபெற்று சிறிய தூரம் வரை நிர்மலாவும் சாலையில் ஒரு சேரப் பயணித்து பிரான சாலையின் கிளை வழி பிரிய, அது நிர்மலா வீட்டிற்கு செல்லும் பாதை யாகையால் அங்கிருந்து அவளுக்கு விடைகொடுத்து என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஏன் மேடம் இந்த வெயில்ல சுத்திட்டு இருக்கீங்க ? ஒரு இடத்துல உட்கார மாட்டீங்களா? வாங்க டீ குடிச்சுட்டு போகலாம் என்று அதட்டாலாய் வந்த குரலுக்கு சொந்தக்காரனை எனக்கு முன் பார்த்ததாய் நினைவில்லை. ஒரு புன்னகையை பதிலாக்கி கடந்தேன் அவ்விடம் விட்டு, எனக்கு தெரியாதவர்களுக்குக் கூட என்னைத் தெரிந்திருக்கிறது.

வீடு வந்து சேர்ந்த போது என் உடைகள் அத்தனையும் துவைத்து சீராய் கொடியில் தொங்கிக் கொண்டிருந்தன.

சுகிர்தா என்ற அழைப்பிற்கு என் மகள் அருள்மொழி ஓடிவந்தாள். தினமும் சாகிறேன்னு சொன்னாதான் வேலை ஒழுங்கா நடக்கும் போல என்றேன்

பாருங்க அம்மாச்சி, மம்மி என்ன சொல்றாங்க என்று வருத்தமாய் அவள் கூவ.

சாரிடா செல்லம்! ஐ லவ் யு வெரிமச் என்றேன்.

அவள் சமாதானம் அடைந்தவளாய் என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

[தொடரும்]

Series Navigationரவா தோசா கதாஇளஞ்சிவப்பின் விளைவுகள்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *