அம்பு பட்ட மான்

This entry is part 3 of 33 in the series 4 ஜனவரி 2015

வளவ. துரையன்

அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை நோக்கி அவர்கள் அம்பு எய்தார்கள். அம்பு பெண் மான் மேல் தைத்து உள்ளே புகுந்தது. ஆண் மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைத் தாண்டி மறு கரைக்குப் போய் விட்டது.

பெண் மானும் தைத்த அம்புடன் அக்கரைக்கு ஓடும்போது வேறு சிலர் அவ்வழியே வந்து விட்டார்கள். அவர்கள் சென்ற பின்னர் போகலாம் என்று அந்தப் பெண் மான் அங்கிருந்த ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. அவர்கள் போனபிறகு போகலாம் என நினைத்தால் மேலும் வேறு சிலர் வந்துவிட்டார்கள். ஐயோ, இவர்கள் நான் இருக்கும் நிலை கண்டால் சிரிப்பார்களே என்று நினைத்து அந்தப் பெண் மான் இன்னும் மறைந்து நிற்கிறது.

அந்த மானைப் போல என் மனம் நிற்கிறதே என்று முத்தொள்ளாயிரத் தலைவி எண்ணுகிறாள். பாண்டியன் உலா வருகிறான். தலைவி அவனைப் பார்க்கிறாள். அவள் மனத்தில் மன்மதனின் அம்பு போய்த் தைக்கிறது. ஆனால் பாண்டியன் எக்கவலையுமின்றி அரண்மனை சென்று விடுகிறான். தலைவியோ இங்கே இருந்தால் இந்த மன்மதனின் அம்பு நம்மை கொன்று விடும் என்று எண்ணுகிறாள். எனவே தன் மனத்தை ‘ஓடு, ஓடு, என்று அரசனின் பின்னே செல்ல விடுக்கிறாள். அதுவும் அவன் பின்னே செல்கிறது.

ஆனால் அரண்மனை வாயிலில் ஒரே கூட்டம். மனம் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நிற்கிறது. பல்வேறு காரியங்களுக்காக அரசனைக் காண பலர் உள்ளே செல்வதும் வருவதுமாக இருக்கிறார்கள். ”பாண்டியன் எப்போது தனியாக இருப்பான்? தலைவியின் நிலையை அவனிடம் கூறலாம்” என்று மனம் எட்டிப் பார்க்கின்றது. கூட்டமோ குறையவே இல்லை. உள்ளே செல்பவர்களுக்கும் வெளியே வருபவர்க்கும் இடம் விட்டு இந்த மனம் கதவு ஓரமாக நின்று கொண்டிருக்கிறது. ’அட, இந்த மனத்தைப் பாரடா; அம்பு தைத்து அத்துடனேயே வந்து நிற்கின்றது’ என்று பேசிச் சிரித்துக் கொண்டிருப்பாரைக் கண்டு நாணி நிற்கிறது. அவள் மனம் பாண்டிய மன்னனின் பின்னே சென்றது. ஆனால் அவன் இருக்கும் அரண்மனைக்குள் செல்ல முடியவில்லை. ”மன்னனைக் காண்பதற்காக உள்ளே செல்பவருக்கும், அவனைப் பார்த்துவிட்டு வெளியே வருபவர்க்கும் வழிவிட்டு தன் நிலை கண்டு சிரிப்பார்க்கும் நாணி அம்பு பட்ட பெண் மானைப் போல என்மனம் நிற்கிறதே” என்று அவள் தன் தோழியிடம் கூறுகிறாள்.

தலைவின் ஏக்கம், இரக்கம், மன்மதனின் மலர்க்கணை பட்டு அவள் நெஞ்சு கலங்கியுள்ள நிலை எல்லாம் இப்பாட்டில் நிறைந்து இருக்கின்றன

”புகுவார்க்[கு] இடம்கொடா போதுவார்க்[கு] ஒல்கா
நகுவாரை நாணி மறையா — இகுகரையின்
ஏமான் பிணைபோல் நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றஎன் நெஞ்சு.
[முத்தொள்ளாயிரம்—42]
இப்பாடலில் இடங்கொடா, ஒல்கா, மறையா, எனும் மூன்று எச்சங்களைப் பார்க்கிறோம். இவை ’செய்யா’ எனும் வாய்பாட்டு எச்சங்கள். இவை வாசிப்போர்க்குத் தலைவியின் நிலையை உணர்த்தி உணர்ச்சியை அதிகமாக்குகின்றன. இதே போன்ற மூன்று எச்சங்களை நளவெண்பாவிலும் காண முடிகிறது.
”மக்களைமுன் காணா மனம்நடுங்கா வெய்துயிரா
புக்கெடுத்து வீரப் புயத்தனையா”
என்று நளன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத நிலையில் தன் புதல்வர்களை எடுத்து அணைப்பதை அவலச்சுவை தோன்ற புகழேந்திப் புலவர் பாடுவார்.
மேலும் ’பிணை’ என்ற அருமையான சொல் இப்பாடலில் உள்ளது. ஆண்மானைக் ’கலை’ என்றும் பெண் மானைப் ’பிணை’ என்று சொல்வது மரபாகும். ஏமான் என்பதில் ’ஏ’ என்பது அம்பைக் குறிக்கும். ’மரை’ எனும் சொல்லும் மானைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
”தாமரைபோல் வாண்முகத்துத் தையலீர் காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு” என்று திணை மாலை நூற்றைம்பதில் வருகிறது.
திருவாய்மொழி வியாக்கியானத்திலும் ஏ எனும் சொல் இருப்பதைக் காண முடிகிறது.
”இன்ன காட்டிலே மான்பேடை ஏவுடனே கிடந்து உழையா நின்றது, என்று ஊரிலே வார்த்தையானால், எய்தவன் கை உணராதோ”
என்பது வியாக்கியானமாகும்.
இவ்வாறு முத்தொள்ளாயிரம் தலைவின் பிரிவாற்றாமையை ஓர் அம்பு பட்ட மானைக் காட்டி சுவையாகக் கூறுகிறது.

Series Navigationதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.கலவரக் கறைகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    Meenakshi Balganesh says:

    மிகவும் அழகான விளக்கம். இப்படி ஒரு பாடலைத் தேடிச் சுவைமிக விளக்கம் கூறியதற்கு நன்றி. இன்னும் இதுபோன்று தமிழ்ச் சுவையை எதிர்பார்க்கிறேன். வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *