இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?

This entry is part 19 of 31 in the series 11 ஜனவரி 2015

மு.இராமனாதன்

##

(ஹாங்காங் ‘இலக்கிய வட்ட’த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மு இராமனாதன் ஆற்றிய நிறைவுரையிலிருந்து சில பகுதிகள்)

அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்.

இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. இது 25ஆவது கூட்டம். இந்த மைல்கல்லை அடைவதற்கு நமக்கு 6-1/2 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. நம்முடைய ஓட்டம், அல்லது நடை மிகவும் மெதுவாகத்தான் இருக்கிறது. இலக்கிய வட்டம் போன்ற ஒரு அமைப்பு, ஹாங்காங் சூழலில் அவசியம்தானா? இலக்கிய வட்டம் இது வரை என்ன சாதித்திருக்கிறது? இந்த அமைப்பிற்கான தேவை இருக்கிறதா? இதற்குப் பதில் சொல்லுவதற்கு முன்னால் நண்பர் குருநாதனைப் பற்றி நாலு வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

திரு. குருநாதன்

குருநாதன் அவர்களை இலக்கிய வட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே நான் அறிவேன். அவர் ஆரம்ப காலக் கூட்டங்களுக்கு வந்து, ஓர் ஓரமாக இருந்து கேட்டு விட்டுப் போய் விடுவார். அவர் முதன் முதலில் பேசியது 2003இல், தன் ஹாங்காங் அனுபவங்களைப் பற்றி. அந்த உரையில் அவரது ரசனையும், தமிழ் ஆளுமையும் வெளிப்பட்டன. அதுவரை நான் அறிந்திராத ஒரு முகம் துலங்கியது. 2004 இல் நடந்த ‘கம்பன் தரும் காவிய இன்பம்’ என்கிற கருத்தரங்கில் அவர் ‘காப்பிய நாயகன்’ என்கிற தலைப்பில் பேசினார். கம்பராமாயணத்தின் நாயகன் கம்பனே என்று தன் பேச்சின் மூலம் நிறுவினார். அப்போதுதான் பழந்தமிழ் இலக்கியங்களில் அவருக்கு இருந்த பிடிப்பும், படிப்பும் புலப்பட்டன. 2005இல் ஒரு முறையும், 2007இல் ஒரு முறையும் பாரதியைப் பற்றிப் பேசினார். அது பாரதியைப் பற்றி நாம் இதுகாறும் படித்ததையும், கேட்டதையும் உள்ளடக்கிய பேச்சல்ல. அந்தக் கருத்துக்களிலிருந்து ஒரு சிந்தனைத் தளத்தை, ஒரு புதிய கருதுகோளை அவர் உருவாக்கியிருந்தார். ஆக, குருநாதன் என்கிற தமிழ் இலக்கியத்தில் புலமையும், தமிழ் மொழியின்பால் மதிப்பும் மிக்க ஒருவரின் பலமுகங்களை இந்த மேடை வெளிக்கொணர்ந்து விட்டது என்று நான் நினைத்திருந்தேன் – சற்று நேரத்திற்கு முன்னர், அவர் அனுப்பிய வாழ்த்துரையைக் கேட்கும் வரை. அந்த உரையின் கடைசியில் இடம் பெறுவது ஒரு அக்மார்க் வெண்பா. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் , ஈற்றடியில் மூன்று சீர்களும்; இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வருகிற; நாள் மலர் காசு பிறப்பு எனும் வாய்ப்பாடுகளுள் ஒன்றான பிறப்பு எனும் வாய்பாட்டில் முடிகிற வெண்பா. இன்றைய வாழ்த்துரை அவருக்குள்ளே இருக்கிற ஒரு புலவரை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

இலக்கிய வட்டம் அவருக்கு வெண்பா எழுதப் படிப்பிக்கவில்லை; கம்பனையும், பாரதியையும் குறித்த கருதுகோள்களையும் அவருக்குப் புகட்டவில்லை. அவை அவருக்குள்ளே இருந்தவைதாம். எனில், அவற்றை வெளிக்கொணர இலக்கிய வட்டம் உதவியிருக்கிறது. நல்ல பித்தளைத் தகட்டிலே பொறிக்கப்பட்ட ஒரு பெயரை, தூசு மூடியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்; அதைப் பணியாளன் துடைக்கும் போது அந்தப் பெயர் துலங்குகிறது அல்லவா? அப்படி இலக்கிய வட்டம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இலக்கிய ஆர்வத்தைத் துலங்கச் செய்வதில் உதவுகிறது என்று சொல்லலாம்.

ரசனையும் பசுமையும்

இந்த இடத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ‘நதியின் பிழையென்று நறும்புனல் இன்மை’ , கம்பராமாயணத்தில் இடம் பெறும் இந்த வரியைப் பலரும் அறிவோம். நாஞ்சில் நாடனின் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலின் பெயரும் இதுதான். கனடாவிலிருந்து இயங்கி வரும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ கடந்த ஆண்டு சிறந்த அபுனைவுப் படைப்பிற்கான விருதினை இந்த நூலிற்கு வழங்கியது. இதில் ஒரு கட்டுரை, எழுத்தாளர் வண்ணதாசனைப் பற்றியது; அவரது அன்பு மயமான நட்பு ஆளுமை பற்றியது; நல்ல எழுத்துக்களைப் படிக்கிற போதெல்லாம், எழுதியவனைத் தேடிப்பிடித்து, முகவரி வாங்கிக் கடிதம் எழுதி ஊக்கமளித்து வருவதைப் பற்றியது. 1985 வாக்கில் எழுதுவதை ஏகதேசமாக நாஞ்சில் நாடன் நிறுத்திய போது, வண்ணதாசன் நாஞ்சில் நாடனுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிச் சொல்கிறார் :

“மிகவும் அற்புதமாக இயங்கி வந்த உங்களின் இலக்கிய முகத்தை சமீப காலத்தில் காணவே முடியவில்லை. அலுவலகம் தின்று துப்பிக் கொண்டிருக்கிற நம் ரசனையின் பசுமையை, நசுக்கூட்டான் அரித்த கொறுவாயுடன் பச்சையாக நிற்கிற செடி கொடி மாதிரி, நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நாஞ்சில் நாட்டின் வாழ்க்கையை உங்களைப் போல் அடையாளம் காட்டியவர்கள் சமீபத்தில் யாரும் இல்லை ………”.

இது வண்ணதாசன் என்கிற சி. கல்யாணசுந்தரம் எனும் வங்கி அலுவலர், நாஞ்சில் நாடன் என்கிற க. சுப்ரமணியன் எனும் தனியார் நிறுவன அலுவலருக்கு, நெல்லையிலிருந்து மும்பைக்கு எழுதிய கடிதம். தமிழ்ச் சூழலில் பிழைப்புக்கு ஒரு தொழில் வேண்டியிருக்கிறது. எழுத்து என்பது ஒரு பொழுதுபோக்குதான். எல்லாத் தமிழ் எழுத்தாளார்களைப் போலவும், நாஞ்சில் நாடனும், வண்ணதாசனும் பகுதி நேர எழுத்தாளார்களே. அவர்கள் தம்மையும், தம் குடும்பத்தையும் வேறு தொழில் செய்தே போற்ற வேண்டியிருக்கிறது. அந்தத் தொழில், நல்ல பச்சை இலைகளைக் கடித்து வைக்கிற நசுக்கூட்டான் மாதிரி, ரசனையின் பசுமையை, இலக்கிய ஈடுபாட்டைத் தின்று விடுவதற்கு அனுமதிக்கலாகாது என்று நாஞ்சில் நாடனை எச்சரிக்கிறார் வண்ணதாசன்.

அலுவலகம், இவர்களைப் போன்ற எழுத்தாளர்களின் ரசனையின் பசுமையை மட்டுமில்லை, நம்மைப் போன்ற சாதாரண வாசகர்களின் ரசனையையும், இலக்கிய ஈடுபாட்டையும் அரித்து விடுகிறது. பலரும் ஹாங்காங் போன்ற இடங்களில் உள்ள பணி அழுத்தத்தின் காரணமாக, இலக்கிய வட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடிவதில்லை என்று சொல்கிறார்கள். நான் நினைக்கிறேன் – அதனால் தான் – இந்த வேலைப் பளுவும், நிற்காத ஓட்டமும், பொருளீட்டும் ஆவேசமும், அவசரமும் உள்ள ஹாங்காங் போன்ற நகரங்களில்தான், நம் இலக்கிய ஈடுபாட்டைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் அதிகமாக இருக்கிறது. நல்ல ரசனை ஒருவனை நல்ல குடிமகனாக்க உதவும். வாழ்க்கையையும், சக மனிதர்களையும் நேசிக்கக் கற்றுத் தரும். இலக்கிய வட்டம் அதற்கான படிக்கற்களை அமைத்துத் தருகிறது என்று கருதுகிறேன்.

ஒருவருக்குள் உறைந்திருக்கும் இலக்கிய ஆர்வத்தை வெளிக்கொணர்வதிலும், அதை நசுக்கூட்டான்கள் அரித்து விடாமல் காப்பாற்றுவதிலும் உதவுவதோடு, இலக்கிய ரசனையை மேம்படச் செய்வதிலும் இலக்கிய வட்டம் உதவுகிறது என்று நான் நம்புகிறேன். இலக்கிய வட்டத்தின் இன்னொரு சிறப்பு, இங்கே நிலவுகிற கருத்துச் சுதந்திரம். உறுப்பினர்களுடைய கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால் யாரும் தங்களது கருத்துக்களை இந்த மேடையில் முன்வைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

நூலும் உருவாக்கமும்

இந்தக் கூட்டத்தில் இதுகாறும் வரை நடந்த 24 இலக்கிய வட்டக் கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய நூல் ‘இலக்கிய வெள்ளி’ வெளியிடப்பட்டது. செந்தில்குமார், நூலைச் செம்மையாக அறிமுகப்படுத்தினார். ‘இலக்கிய வெள்ளி’ நூலில் இடம் பெற்றிருக்கும் பதிவுகளை மிகக் குறுகிய காலத்தில் நண்பர்கள் எழுதித் தந்தனர். இந்தப் பதிவுகள் பலவிதமாக உருவாகியிருக்கின்றன. மொழிபெயர்ப்பு, ஒலிவட்டைக் கேட்டு எழுதியது, பழைய மின்னஞ்சல்களிலிருந்தும் உரைக் குறிப்புகளிலிருந்தும் எழுதியது, நினைவின் அடுக்குகளிலிருந்து மீட்டெடுத்தது – என்று இது பலவகைப்படும். இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள் : ராஜேஷ் ஜெயராமன், ஆர்.அலமேலு, சுகந்தி பன்னீர்செல்வம், எஸ். நரசிம்மன், கவிதா குமார், எஸ். வைதேஹி, நளினா ராஜேந்திரன், அ. செந்தில் குமார், கே.ஜி. ஸ்ரீனிவாசன் மற்றும் எஸ். பிரசாத்.

இதில் பல கட்டுரைகளைத் தட்டச்சு செய்து தந்தவர் ஜெய்னப் கதீஜா. ஆழமும், அழகும் மிக்க முகப்பு அட்டையை வடிவமைத்தவர் அ. சுவாமிநாதன். பக்கங்களை வடிவமைத்தவர் காழி அலாவுதீன். அச்சகத் தொடர்பான பணிகளைச் செய்தவர்கள் சுவாமிநாதனும், காழி அலாவுதீனும்.

எல்லாக் கட்டுரைகளும் ஒருங்குறி(unicode)யில்தான் தயாராகியது. கட்டுரைகள் கூகிள் ஆவணங்களில் தயாராகி, பகிர்ந்து கொள்ளப்பட்டன. கட்டுரையாசிரியரும், எடிட்டரும், பக்க வடிவமைப்பாளரும், சமயங்களில் குறிப்பிட்ட கூட்டங்களில் பேசியவர்களும் ஒரே நேரத்தில் இந்த ஆவணங்களைப் பார்வையிடவும், மேம்படுத்தவும் இது ஏதுவாக இருந்தது. இதுவரை ஒருங்குறி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அலாவுதீன் மாதிரிக் கட்டுரைகளை அச்சிட்ட போது, ஒருங்குறி எழுத்துருக்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. தமிழுக்காக மிகவும் பாடுபட்டு யூனிகோடில் இடம் பெற்றதாகச் சொல்கிறார்கள். அப்படிக் கிடைத்திருக்கிற எழுத்துருக்கள் கணினியிலிருந்து காகிதத்திற்கு இறங்கி வரும்போதும் காட்சிக்குச் சிறப்பாக இருக்க வேண்டாமா? இதைத் தொடர்ந்து சுவாமிநாதனும், அலாவுதீனும் பல எழுத்துருக்களை முயன்று பார்த்தனர் – திஸ்கி, தாப், பாமினி, இணைமதி என்று. சுரதா யாழ்வாணன் என்கிற ஈழத்தமிழர் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘பொங்கு தமிழ்’ என்கிற இணையதளத்தில் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றதற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்தச் சேவை முழுதும் இலவசம். முத்துலிங்கம் ஒரு முறை குறிப்பிட்டது போல, தமிழ் இணையத்தில் தவழுவதற்கு இப்படிப்பட்ட தன்னலமற்ற, முகந்தெரியாத, பிரதிபலன் கருதாத, எந்த விருதும் மரியாதையும் கிடைக்கப் பெறாத அல்லது அவற்றை நாடாத தமிழ் ஆர்வலர்களின் உழைப்பு தான் காரணம்.

ஒருவாறாக, இணைமதி எழுத்துருவைத் தேர்வு செய்து கட்டுரைகளை உருமாற்றம் செய்தபோது வேறு பிரச்சனைகள் முளைத்தன. சில எழுத்துக்கள் தாமே மாறிக்கொண்டன. ‘ஸ்ரீ’ எனும் எழுத்து ‘ஸ் ரீ’ என்றாகியது. ‘ஹ’ கேள்விக்குறியாக மாறிக்கொண்டது. பிறகு இவர் எல்லாக் கேள்விக்குறிகளையும் ஒரே ஆணையின் மூலமாக ‘ஹ’ என்று மாற்றினார். அப்போது ‘கீசு கீசு என்றெங்கும் ஆனைச் சாத்தான் பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!’ என்பது ‘கீசு கீசு என்றெங்கும் ஆனைச் சாத்தான் பேசின பேச்சரவம் கேட்டிலையோ ஹ, பேய்ப்பெண்ணே ஹ’ என்று மாறியது. இவற்றையெல்லாம் மீண்டும் சீர்படுத்த வேண்டியிருந்தது. வார்த்தைகளுக்கிடை யில் சீரான இடைவெளிகள் இருப்பதற்காக வரிகளின் கடைசியில் வரும் சில சொற்களை முறிக்க வேண்டி வந்தது. மென்பொருள்களின் உதவியின்றி இதை வரிவரியாகப் படித்துத் தான் செய்ய வேண்டி இருந்தது. இதையெல்லாம் அச்சகத்திற்குக் கொடுப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்பு வரை செய்து கொண்டிருந்தனர் சுவாமிநாதனும், அலாவுதீனும். இப்படிப் பலரின் உழைப்பில் இந்த நூல் உருவாகியிருக்கிறது. பாடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஓட்டம் தொடரும்

எனக்கு இன்னொரு விருப்பமும் இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கிற பதிவுகளின் தொகுப்பைத் தொடர்ந்து, இலக்கிய வட்டக் கூட்டங்களில் பேசப்பட்டவற்றில் சிறந்த உரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றையும் ஒரு தொகை நூலாக்க வேண்டும். இந்த மேடையில் பல நல்ல உரைகள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. இன்று பேசியவர்கள் சிலரும், தங்களைக் கவர்ந்த, பாதித்த பேச்சுக்களைக் குறிப்பிட்டார்கள். அந்தப் பேச்சுக்கள் ஹாங்காங்கில் நிகழ்த்தப்பட்டவை என்ற சலுகையைச் சேராதவை, தம்மளவில் சிறப்பானவை. விரைவில் அவற்றையும் தொகுத்து ஆவணப்படுத்துவோம். அது நம் ரசனையைப் பசுமையாக வைத்திருக்கும்.

25 என்கிற மைல்கல்லை கடக்கிற இந்தத் தருணத்தில், இலக்கிய வட்டத்தை நிறுவியவரும் அதன் ஆரம்ப கால ஒருங்கிணைப்பாளருமான திரு. எஸ். நரசிம்மன் அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். இலக்கிய வட்டக் கூட்டங்களைத் தமது வருகையால் தொடர்ந்து கவுரவித்து வரும் யூனூஸ் பாய் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறேன். இலக்கிய வட்டத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி, வணக்கம்.

(ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள், தொகுப்பு: மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

Series Navigationமதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….“பேனாவைக்கொல்ல முடியாது”
author

மு. இராமனாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *