நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்

This entry is part 29 of 31 in the series 11 ஜனவரி 2015

முனைவர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர்,
மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை
பாண்டியநாடு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகித்த நாடு ஆகும். பாண்டிய நாடு, சங்க காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஞான சம்பந்தப் பெருமானை அழைத்து வந்து சைவம் செழிக்க வைத்தது. தொடர்ந்து குமரகுருபரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் என்று நாளும் பக்திப் பயிர் வளர்க்கும் பகுதியாக பாண்டியநாட்டுப்பகுதி விளங்கி வருகின்றனது.
பக்தியும் தமிழும் ஒருசேர வளர்க்கும் பாண்டியநாட்டின் பல பகுதிகளுக்கு அருணகிரிநாதப்பெருமான் வருகை புரிந்து முருகன் உறையும் இடங்களைத் தேடிக் கண்டறிந்து, திருப்புகழ்பாடிப் பரவியுள்ளார். குளந்தைநகர் (பெரிய குளம்), தனிச்சயம், மதுரை, ஸ்ரீ புருஷமங்கை (வானமாமலை), இலஞ்சி, குற்றாலம், ஆய்க்குடி, திருப்புத்தூர், திருவாடானை, உத்தரகோசமங்கை, இராமேசுவரம் போன்ற பல பாண்டி நாட்டுத் தலங்களில் உள்ள முருகப்பெருமானைத் துதித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
திருவாடானை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியுள்ளார். திருவாடானை என்ற தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று பல நிலைகளிலும் பெருமை வாய்ந்தது. வாருணி என்ற தேவன் துர்வாச முனிவரால் யானை உடலும் ஆட்டுத்தலையும் உள்ள விலங்காக மாறச் சாபம் பெற்றான். அவ்வுருவத்துடன் வந்து வழிபட்ட தலம் திருவாடானை ஆகும். ஞானசம்பந்தப் பெருமான் இங்கு வந்து இங்குள்ள ஆதி இரத்தினேஸ்வரப்பெருமானைப் பாடிப்பரவியுள்ளார். இங்குள்ள அம்மன் சிநேக வல்லி ஆவார். இக்கோயிலின் சுவாமி சன்னதிக்குச் செல்லும் நுழைவாயிலில் ஞான தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
உள்ளே சுவாமி சன்னதியின் சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் நின்று அருள்பாலிக்கிறார். இவ்விரு மூர்த்தங்களுள் வெளியில் உள்ள தண்டாயுதபாணியே அருணகிரிநாதரால் பாடப்பெற்றிருக்கவேண்டும் என்று முடிய முடிகின்றது. திருவாடானைத் திருப்புகழில் ஞானாகமத்தை அருளும் முருகன் எனக்குறிப்பு இருப்பதால் இம்முருகனே அருணகிரிநாதரால் பாடப்பெற்றிருக்கவேண்டும் என்று முடியமுடிகின்றது.
திருவாடானை தண்டாயுதபாணி நான்கடி உயரம் உடையவராக அன்னாந்து பார்க்கும் நிலையில் காட்சி தருகிறார். அவரைக் காணுகையில் ஞானம் நிரம்பிய முகமும், அமைதி தவழும் வடிவமும் கண்முன் நிற்கின்றது.
அருணகிரிநாதர் இம்முருகனைப் பின்வரும் திருப்புகழ் கொண்டுத் துதிக்கின்றார்.
ஊன்ஆரும் உள் பிணியும் ஆனாக கவித்த உடல்
ஊதாரி பட்டு ஒழிய உயிர்போனால்
ஊரார் குவித்துவர ஆவா எனக்குறுகி
ஓயா முழக்கமெழ அழுது ஓய
நானா விதச் சிவிகை மேலே கிடத்தியது
நாறாது எடுத்து அடவி
நாணாமல் வைத்துவிட நீறாம் எனிப்பிறவி
நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே
மால்நாகம் துத்திமுடி மீதே நிருத்தம் இடு
மாயோனும் அட்டொழுகு
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும்
வானோரு மட்டகுல கிரியாவும்
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்கவரும்
ஆலாலம் உற்ற அமுது அயில்வோன் முன்
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள்
ஆடானை நித்தமுறை பெருமாளே
(திருப்புகழ், 985, பகுதி 5, கழக வெளியீடு)
என்று நாளும் ஞானம் உரைக்கும் பெருமானாக திருமுருகனை அருணகிரிநாதர் காணுகின்றார்.
உயிர்கள் இளமை, முதுமை பருவங்களை அடைந்து இறப்பை எய்துகின்றன. இறப்பின்போதுதான் இறந்த உயிருக்கும், இறந்த உயிரை எரியூட்டும் உயிர்களுக்கும் வாழ்க்கை நிலையாமை உடையது என்ற பொருள் புரிகின்றது,
நோய்களில் வெளிப்பிணி, உட்பிணி என்று இருவகை இருப்பதை அருணகிரிநாதர் இப்பாடலில் எடுத்துரைக்கின்றார். உட்பிணி என்பது உடலுக்குள்ளே உடலை உடையவருக்குத் தெரியமாலே கொள்ளும் நோய் ஆகும். உட்பிணி என்பது ஒரு நோய் மட்டுமல்ல. ஒரு நோய் வந்தால் பல நோய்கள் வந்து சேர்ந்துவிடும். அவ்வகையில் பல நோய்களின் வயப்பட்டு ஊதாரிப்பட்டு உடல் அழிந்து உயிர் போகும் காலம் வந்துவிட்டால் அ்வ்வுடலைப் பிணம் என்று சுற்றத்தார் கிடத்திவிடுவார்கள். இதுவரை அந்த உடலுக்கு இருந்த இயக்கம், மரியாதை எல்லாம் போய் முற்றத்தில் கிடத்தி விடுவார்கள்.
சுற்றத்தார் கூடி நின்று அழுவார்கள். அரற்றுவார்கள். துர்நாற்றம் வந்துவிடுவதற்கு முன்பாக பல்வகை அலங்காரம் கொண்டப் பல்லக்கின் மீது ஏற்றி அந்தப் பிணத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்வார்கள். நாணாவிதச் சிவிகை என்று அருணகிரிநாதர் சாவுப் பலக்கைப் பாடுகின்றார். அவர் காலத்திலும் சாவுப் பல்லக்கு பல்வித அலங்காரங்களுடன் இருந்துள்ளது. இக்காலத்திலும் பல்வகை அலங்காரங்கள், ஊர்திகள் என அது வளர்ந்துள்ளது.
இதன்பின் அந்த உடல் எரியில் வெந்து சாம்பலாகிப் போய்விடும். இந்த இழிநிலை வாராது என்னைக் காப்பாய் என்று மன்னுயிர்களின் சார்பாக வேண்டுகின்றார் அருணகிரிநாதர்.
திருவாடானைத் தலத்தில் உறையும் முருகன் உள்நோய்கள் வாராமல் காக்க அருளும் திறம் உடையவன் என்பதும், இழிவான சாவு நேரமால் அமைதியான உயிர்ப்படக்கம் தர வல்லவன் என்பதும் இப்பாடல் வழி அறியப் பெருகின்றது. அந்த அளவிற்கு அருளும் அமைதியும் நிரம்பியவராக திருவாடனைத் திருத்தல முருகன் காட்சி தருகின்றார்.
திருவாடானையில் உள்ள சிவபெருமானை வாழ்த்துவதாக பாடலின் அடுத்த பகுதி அமைகின்றது, காளிங்க நாகத்தின் மீது ஏறி நடனம் புரிந்த திருமாலும், தாமரை மலரில் நீங்காது உறையும் வேதநாயகன் நான்முகனும், தேவர்களும், எட்டிசைக் காவலர்களும், மலையில் வாழ்பவர்களும், அரக்கர்களும் வாழுமாறு ஆலகால விஷத்தை உண்டவர் சிவபெருமான். அவர் முன்பு ஆசார பக்தியுடன் ஞானாகமத்தை அருளும் முருகனாக திருவாடானை முருகன் காட்சியளிக்கிறார்.
வெளியில் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் நிற்க, கருவறையில் சுயம்பு லிங்கமாக ஆதி இரத்தினேசுவரர் தாழ்ந்து அமர்ந்து இருக்க -முருகன் ஞானாகமத்தை உபதேசிக்க அதைக் கேட்பவராக சிவபெருமான் இருப்பதாக அருணகிரிநாதருக்கு திருவாடனைத் திருக்காட்சி அமைகின்றது.
அன்னாந்து பார்க்கும் உயரத்தில் முருகப்பெருமான் காட்சிதருவதன் உட்பொருள் இதனால் இப்போது விளங்குகின்றது, மேலும் சிவகீதை இங்குதான் உபதேசிக்கப்பெற்றது என்ற வரலாறும் திருவாடானைக்கு உண்டு. அவ்வகையில் ஞானம் விளையும் பூமியாக திருவாடானை விளங்குகிறது. இங்குள்ள முருகன் ஞானமுருகன். நாளும் ஞானம் தரவல்லவன். அவனைத் தொழுதால் ஞானம், ஆகம் அனைத்தும் பெறலாம். திருவாடனைத் திருமுருகனை நினைவால் வழிபடுவோம். நித்தம் அமைதியும் அருளும் பெறுவோம்.

Series Navigationபேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…ஆனந்த பவன் -21 நாடகம்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *