கைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்

This entry is part 23 of 31 in the series 11 ஜனவரி 2015

கைபேசியின் கண்டுபிடிப்பு உலகத்தை சிறு கிராமமாக்கி விட்ட்து. அல்லது உள்ளங்கையில் உலகம் என்றாக்கிவிட்டது. அது வரமா, சாபமா என்ற விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது. கைபேசியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன இயல்புகள், வாழ்க்கை பற்றி நிறைய சொல்லப்படுகிறது.பலர் நியூட்ரான் குண்டுகள், எலக்ட்ரான் குண்டுகளின் அபாயம் என்றெல்லாம் கைபேசியை வர்ணிக்கிறார்கள். குழந்தைகள் பாடத்தைத் தவிர்த்து விட்டு கைபேசியைக் கையாளுகிறார்கள். வீட்டில் அவர்கள் இருக்கும் நேரங்களைப் பெரும்பாலும் தொலைக்காட்சி, கைபேசியுடன்தான் கழிக்கிறார்கள்.பிற தொற்று நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது போல் கைபேசியின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சபட்ச சாதனைகளைக் கொண்டிருக்கும் கைபேசி தரும் உலகத் தகவல்களும் பயனும் சொல்லி மாளாதபடி குவிந்து கிடக்கிறது.கைபேசி புனைவு இலக்கியத்தில் எப்படியாவது இணைந்து தன் பங்கைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.அப்படியான கற்பனையில் கொமாகோ இளங்கோவின் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் ஜி.மானஸா என்ற ஜிமாவுக்கு ஒரு புது கைபேசி கிடைக்கிறது,அவளின் புகைப்படத்தை அவள் செருக அதுவே சிம் கார்டாகி மினுங்குகிறது. டிப்பி என்று பெயர் வைக்கிறாள். டிப்பியில் பல தகவல்கள் அவளுக்கு வருகின்றன. தினம் இரு தரம் பல் துலக்க வேண்டும் என்பது முதல் கொசுவை விரட்டும் உபாயம் வரைக்கும்.எந்திரக்குருவியொன்றையும் அது வெளிப்படுத்துகிறது. கண்காணிப்பிற்கு பெரிதும் உதவும் அது. அது காண்பிக்கும் பல்வேறு மென்பொருட்கள் அவளின் வகுப்புத் தோழிகளுக்கும் பிடித்திருக்கிறது.குழந்தைகளுக்கு வைத்தியத்திற்கென்று அது தரும் டிப்ஸ்களும் ஏராளம். ஒரு நாள் அது கீழே விழுந்து சிதறுகிறது. ஜிமா அதிர்ந்து போவ்தோடு கதை முடிகிறது. கைபேசியை முன் வைத்து அறிவியல் சார்ந்து அது தரும் விஞ்ஞான சாத்தியங்களை கொ.மா.கோ.இளங்கோ விரித்துச் செல்கிறார்.விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் அசாத்தியங்களை கற்பனைக்கச் செய்கிறது.. எழுத்தாளன் தனித்து இயங்கும் எழுத்து என்றில்லாமல் குழந்தை வாசகர்களோடு உரையாடும் தன்மை சுலபமான வாசிப்பிற்கு இட்டுச் செல்கிறது. புராணக் கதையம்சங்கள், நீதிஅம்சங்கள், விலங்குகள் காட்டும் வினோத உலகம் என்ற சிறுவர் கதைஅம்சங்களிலிருந்து மாறுபட்டு விஞ்ஞான அற்புதங்களைச் சொல்கிறார். சிறுவயது குழந்தைகளின் மன இயல்பில் விளையாடும் வெகுளித்தன்மையும் பள்ளி உலகமும் எப்படி இருந்து வருகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். செல்போன் தரும் அன்பும் ஆதரவும் குழந்தைகள் பல சமயங்களில் பெற்றோர்களிடம், சக மனிதர்களிடம் பெற் முடியாத்தாக இருக்கிறது.சிறுவர்கதைகளில் புது பாதையும் பயணமும் கொண்டவர் இளங்கோ என்பதை இந்த புது நூலும் சொல்கிறது

ஜிமாவின் கைபேசி கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல். குழந்தைப்பாடல்கள் நிறைய எழுதி உள்ளார். குட்டி டாக்டர் வினோத், தேனென இனிக்கும் தீஞ்சுவைக் கதைகள் என்று இரு சிறுவர் நூல்களையும் முன்பே எழுதியவர். இறுக்கமான கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர் இயல்பான குழந்தைகளின் மனநிலையோடு எளிமையான சிறுவர் கதையை படைத்திருப்பதில் அவரின் இன்னொரு பரிமாணத்தையும் காட்டுகிறது.

subrabharathimanian-subrabharathi@gmail.com

( ஜிமாவின் கைபேசி கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்.ரூ40 புக்ஸ் பார் சில்ரன் பதிப்பக வெளியீடு சென்னை 044 24332424 )

Series Navigationதமிழுக்கு விடுதலை தாசேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *