ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22

This entry is part 20 of 23 in the series 18 ஜனவரி 2015

இடம்: கிருஷ்ணாராவ் தோட்டம்.

நேரம்: மறுநாள் காலை மணி ஏழு.

பாத்திரங்கள்: ராஜாமணி ஜமுனா.

(சூழ்நிலை: ராஜாமணி ஜமுனா கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு பக்கத்திலிருந்த பெஞ்சின் மீது டம்ளரை வைக்கிறான். அவள் தலை குனிந்து அங்கே நின்றிருக்கிறாள்)

ராஜாமணி: சரி ஜம்னா… நானும் அம்மாவும் வந்த வேலை முடிஞ்சுடுத்து! ஒங்க மன்னியையும் ஒன் மருமானையும் கொண்டாந்து ஒன்கிட்டயே சேத்தாச்சு… பொறப்படறோம்.

ஜமுனா: ம் ம் ம்.

ராஜாமணி: நேத்தியிலேர்ந்து நீ என்கிட்டே ஒண்ணுமே பேசலே. அம்மாட்டேயும் ஒண்ணும் பேசலே.

ஜமுனா: (வருத்தம் கனக்கும் குரலில்) பேச என்ன இருக்கு?

ராஜாமணி: ஒண்ணுமே இல்லையா.

ஜமுனா: (அவனை நிமிர்ந்து பார்க்கிறாள்) இப்பத்திக்கு ஒண்ணுமில்லே.

ராஜாமணி: ஒன் மன்னியைப் பிடிச்சிருக்கா?

ஜமுனா: ஊம்ம்

ராஜாமணி: ஊருக்கு எப்போ வரப் போறே?

ஜமுனா: தோணறச்சே வர்றேன்.

ராஜாமணி: சமீபத்திலே வரமாட்டியோ?

ஜமுனா: ஊஹூம்.

ராஜாமணி: அப்பாவைப் பார்க்கணும்ணு தோணல்லியா?

ஜமுனா: அவருக்கு என்னை பார்க்கணும்ணு தோணினா, நேக்கும் அப்போ தோணும்.

ராஜாமணி: அவர் தவிர வேற யாரையும் பார்க்கத் தோணாதோ?

ஜமுனா: ஊர்ல வேற யார் இருக்கா?

ராஜாமணி: நான் இல்லியா? (ஜமுனா நிமிர்ந்து அவனைப் பார்க்கிறாள்) என்னைப் பார்க்கணும்ணு நோக்குத் தோணாதா?

ஜமுனா: (சற்று கண்டிப்பாக) ராஜு!

ராஜாமணி: என்ன ஜம்னா?

ஜமுனா: நீ ஒரு வெகுளி ராஜு!

ராஜாமணி: நான் வெகுளியோ… முட்டாளோ… நான் இருக்கேன், ஒனக்கா நான் இருக்கேன்.

ஜமுனா: (அதைக் கேட்கவே சகிக்காதவள் போல) ஷ்ஷ்ஷ்ஷ்

ராஜாமணி: என்ன ஜம்னா ?

ஜமுனா: ஒம் மனசு நோகக் கூடாதுண்ணு தயங்கறேன்.

ராஜாமணி: பரவாயில்லே சொல்லு ஜம்னா!

ஜமுனா: என்னை அகங்காரின்னு நெனச்சுப்பியோண்ணு ஒரு சின்ன கிலேசம் வர்றது.

ராஜாமணி: எதுவாயிருந்தாலும் பரவாயில்லே… மனம் விட்டு சொல்லு! நீ எதைச் சொன்னாலும் நான் கேட்டுக்கச் சம்மதிக்கிறேன். நேக்கு நீ சொல்றது எதுவுமே தப்பாத் தோணாது.

ஜமுனா: நீ ரொம்ப நல்லவன் ராஜு.

ராஜாமணி: இதுக்கா இத்தனை பீடிகை போட்டே?

ஜமுனா: ஆனா நீ பேத்தறே!

ராஜாமணி: ஜம்னா?

ஜமுனா: பாத்தியா வருத்தப்பட்டுட்டே.

ராஜாமணி: இல்லே இன்னும் என்ன வேணும்னானாலும் சொல்லு!

ஜமுனா: கொட்டின பால், மறுபடியும் கிண்ணத்துக்கு வராது ராஜு.

ராஜாமணி: அது பிறத்தியார் நெனைக்கறது தானே!

ஜமுனா: பார்த்தியா… மறுபடியும் பேத்தறே… மறுபடியும் வேணும்னா வழிச்சு வழிச்சு பாத்திரத்திலே சேர்த்துண்டுடலாம். அழுக்கும் கசண்டுமா இருக்கும்.

ராஜாமணி: அதைத் தீர்மானிக்க வேண்டியது நான்தானே?

ஜமுனா: இல்லே… நான்தான் அதைத் தீர்மானிக்கணும். ஒரு வழி தவறிட்டா இன்னொரு வழிண்ணு எங்கேயோ போய்ச் சேர்ந்தா போறும்னு நான் தானே தீர்மானிக்கணும்!

ராஜாமணி: நீ என்ன சொல்றே?

ஜமுனா: எனக்கு வழி மாறியாச்சு!

ராஜாமணி: எங்கே?

ஜமுனா: இங்கேயே… ஸ்கூல்… நர்ஸரி… இப்போ மோனிகா… யோகி

ராஜாமணி: இதெல்லாம் நிரந்தரமில்லே.

ஜமுனா: மறுபடியும் நீ எனக்காக என்னை முன்னிட்டு யோசிக்கறே… ரொம்ப நன்றி… இந்த அக்கறைக்காக

நான் ஒண்ணை நெனச்சுப்பேன்… ஆனா…

ராஜாமணி: ஆனா என்ன?

ஜமுனா: எது நிரந்தரம்னு நான் தானே தீர்மானம் பண்ணணும்?

ராஜாமணி: ஜம்னா

ஜமுனா: உன் பிரியத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கேன் ராஜு…

ராஜாமணி: பரவால்லே ஜம்னா.

ஜமுனா: பாத்தியப்படல்லே…

ராஜாமணி: (பெருமூச்செறிகிறான்) ஓகே! ஜம்னா, நாங்க பொறப்படறோம்.

ஜமுனா: நீ டி எஃப் ஓ ஆகணும்னு கனவு கண்டே.

ராஜாமணி: எதெதுக்கோ ஆசைப்படறோம்… உரியதுதான் கெடைக்கறது. ஆல்ரைட்!

ஜமுனா: கெடைக்கறது தான் உரியதுண்ணு ஏத்துண்டா மனசுலே நோவு இருக்காது. இது ஒண்ணும் அட்வைஸ் இல்லே. அப்படி ஏத்துண்டேன் நான்.

ராஜாமணி: சரி அப்புறம் எப்பவாவது சந்திப்போம்! நீ எப்படி இருக்கே நான் எப்படி இருக்கேண்ணு பரிமாறிப்போம். அதோ, அம்மாவும் மாமா மாமியும் வந்துண்டிருக்கா… இத்தனை நாழி நாம தனியாப் பேசிண்டதே அவாளுக்கு ஒரு மாதிரியா இருந்துருக்கும் சரி வரட்டுமா… குட்பை.

ஜமுனா: குட்பை.

(திரை)

[தொடரும்]

Series Navigationமெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல்கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழ் ஸ்டுடியோவின் கையெழுத்து இயக்கம்…
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *