“ எதுவும் மாறலாம் “ குறும்படம்

This entry is part 18 of 19 in the series 25 ஜனவரி 2015

 

 

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இவ்வாண்டின் அவ்விழாவில் ” நம்மூர் கோபிநாத்”  அவர்களைச் சந்தித்தேன். கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அவரின் கவிதையில் நவீனத்துவம் இல்லாவிட்டாலும் மரபின் தொடர்ச்சியாய்  செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைக் கண்டேன். அவர் இணைந்து பணியாற்றி, நடித்துமிருந்த  “ எதுவும் மாறலாம் “ குறும்படத்திலும் இதைக் காண முடிந்தது.

“புறச்சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் நிலவும் அறியாமை  ஆகிய மூன்று மலைகளை ஒரு ஆண் முதுகில் சுமக்கிறான்” என்று புகழ் பெற்ற வாசகம் ஒன்று உண்டு.  அதை மெய்ப்படுத்துவது போல் இந்தக்குறும்படத்தில் வரும் இரு சக்கர வாகன மெக்கானிக் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறான். வேலைக்காகப் போடப்படும் பில்லை உதவியாளரிடம் கொடுத்தே படிக்கச் சொல்கிறான். வண்டிக்குப்பின் மறைவாக உட்கார்ந்து திருட்டுப்பார்வை பார்த்து மது பாட்டிலை உடைத்து, மூன்று சொட்டை தெய்வத்திற்குச் சம்ர்ப்பிப்பது போல் உதறி விட்டு குடிக்கிறான். சிறுவன் உதவியாள் பையனுக்கும் தருகிறான். வடநாட்டு வெள்ளத்தில் பெற்றோர் செத்துப் போன ஒரு அனாதைக்குழந்தையை பள்ளிக்கூட்டிச்செல்லும் ஒரு முதியவளிடம் இதெல்லாம் தேவையா.. ஒர்க்‌ஷாப்பில் சேர்த்து விடு என்று சொல்ல அவள் திட்டுகிறாள். இந்தப் பையனுக்கு படிப்பு சொல்லி  பெரியாள் ஆக்குகிறேன் பார் என்கிறாள்.   போதை  ஏறவில்லை என்று  சிறுவனை ஏவுகிறான் இன்னொரு பாட்டில் வாங்கிவர…  கைபேசியை பேசியபடி வரும் ஒரு இரட்டைச் சக்கர ஓட்டியின் வாகனத்தில் மோதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுகிறான் சிறுவன். போதையில் கிடப்பவனை எழுப்பி தகவல் சொல்லப்படுறது. மருத்துவமனைக்கு வருபவன் மது பாட்டிலைக் கொண்டு வந்து அடிபட்ட பையனுக்கும் கொடுத்துக் குடிக்கிறான். மருத்துவர் பார்த்து கண்டித்து விட்டு அடிக்கிறார்.” நானும் படிச்சிருந்தா உம்மாதிரி டாக்டர்  ஆகியிருப்பேன் “ என்கிறான். மருத்துவர் அந்தப்பையனை குழந்தைத் தொழிலாளியாகவே பார்க்காதே . படிக்க வைத்து முன்னேற்று என்கிறார். அந்த அறிவுரை  அவனுக்குள் பல சிந்தனைகளைப் பரப்புகிறது. அவனுக்குள் இருக்கும் ஆதிக்கம் , அறியாமை எல்லாம் ஒரு நிமிடம் அவன் முன் நிற்கிறது. நிலைகுலைந்து போகிறான்.சிறுவனை பள்ளியில் சேர்க்கிறான். மகிழ்வுந்தில் போகும் மருத்துவர் பார்த்து விட்டு  நெகிழ்ந்து போய் சையால் வாழ்த்துச் சொல்கிறார்.

மதுவின் தீமை, கைபேசியை உபயோகித்துக் கொண்டே வண்டி ஓட்டுவது, குழந்தைத் தொழிலாளர்முறை, குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்று பல செய்திகளை பூடகமாகச் சொல்லியிருக்கிறார்கள். “ அன்பைக்  காட்டுங்கள். யாரும் அனாதையல்ல “ என்ற வாசகங்களுடன் படம் முடிகிறது. செய்திகள் சொல்வது படைப்பின் ஒரு நோக்கம் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார் நம்மூரு கோபிநாத்.

Series Navigationகுப்பண்ணா உணவகம் (மெஸ்)ஆனந்த பவன் -காட்சி-23 இறுதிக் காட்சி
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *