This entry is part 13 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

மனித இயங்குதலில்

முதுகெலும்பு

விரைவுகளில்

வாகனங்கள் இவை

மையமாய்க் கொள்ளும்

சங்கிலி

 

மூன்று ராட்சதக்

கண்ணிகளில்

காலத் தொடர்ச்சி

நினைவு அடுக்குகளில்

மூன்றாம் பிறையாய்

சில

 

பசுமை விரியும் காடுகள்

மண்ணுள் விரையும் வேர்கள்

எதன் கண்ணிகளும் ஆகா

அவை

உயிர்ப்பின் சுதந்திர வடிவங்கள்

 

பிணைத்து நெருக்கி

வழி நடத்தும்

உறவு பணியிடச் சங்கிலிகள்

அதிர்ச்சிப் புதிராய்

அவ்வப்போது விலக

மின்னி மறையும்

விரியும் நீள் பெருவழி

 

பாதுகாப்பு

தளை

சங்கிலியில்

கட்புலனாகும் இரு

பரிணாமங்கள்

 

வெவ்வேறு இரவுகளை

வெட்டித் துண்டுகளைக்

கண்ணிகளாய்

வார்த்துப்

பிணைக்கும் மாயை என்னும்

மூன்றாம் பரிணாமம்

 

Series Navigationதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)