மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது. திருவிடந்தையை அடுத்து சற்றேரக்குறைய 500 மீட்டர் தூரத்தில் சாலையை விட்டுப்பிரியும், கவனிப்பாரின்றி நாதியற்றுக் கிடக்கும் ஒரு மண் சாலை, இப்போது அனேகம் போலீஸ் தலைகளும், சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நின்று கும்பல் கும்பலாய் வேடிக்கை பார்க்கும் அக்கம்பக்கத்து பொதுஜனமும், இவையெல்லாக் கலேபரத்தையும் சாலையிலிருந்தபடியே சுற்றுலாவில் கிடைத்த உபரி சுவாரஸ்யமாய் கார் பஸ்களிலிருந்தபடியே பார்த்துச்செல்லும் பட்டாளங்களுமாய் அன்றைய தினத்தை சற்று வித்தியாசமாகவே கழித்துக்கொண்டிருந்தது அந்த இடம்.
சாலையோரம் போலீஸ் ஜீப்புகள் இரண்டும், ஹுண்டாயின் போலீஸ் ரோந்து கார்கள் இரண்டும், நெடுஞ்சாலைப் பாதுகப்புத்துறையின் ஆன்புலண்ஸும் நின்றுகொண்டிருந்தது இன்னும் பரபரப்பை அதிகமாக்கிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் சவுக்கு மரங்கள் சீராக வளர்ந்திருக்க, இடையில் இருந்த மண் சாலையில் சற்று தொலைவில் ஒரு டாடா இன்டிகா டாக்ஸி கார் கடலை நோக்கி நின்றிருக்க, அதன் இரு பின் கதவுகளும் திறந்திருந்தது. உள்ளே வெள்ளை அரைக்கை சட்டை, கருப்பு பாண்ட் அணிந்த ஒருவன் டிரைவர் சீட்டில் சாய்ந்து அமர்ந்தவாறே மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் காய்ந்திருந்தபடி மல்லாந்து கிடந்திருந்தான். மண்டையில் எதனாலோ பலமாகத் தாக்கப்பட்டிருப்பதறகான அத்தாட்சியாய் அடர்த்தியாய் தலைமயிருடன் ரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தது. காயத்தைப் பார்க்கையில் அடர்த்தியான சதுர வடிவம் கொண்ட இரும்பால் தாக்கப்பட்ட தோரணை இருந்ததை உணர முடிந்தது.கண்கள் அரைத்தூக்கம் கொண்டது போல் மூடியும் மூடாமலும் செருகிக்கிடந்தன. உட்கார்ந்தவாறு அவனைப் பார்க்கலாம் அவனது உயரை ஐந்தடி மூன்றங்குளம் இருக்கலாமென்று தோன்றியது. அதைச் சுற்றுச் சுற்றி ஒரு ஃபோட்டோக்ராபர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே போலீஸ் தலைகள் நின்று அவரவர்க்கு கிடைத்த வாக்கி டாக்கிகளில் யாருக்கோ எதையோ சொல்லிக்கொண்டிருக்க, அந்தக் காரின் பக்கவாட்டில் காரையே பார்த்தபடி நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் சேது. அவருக்குப் பக்கத்திலேயே சப்இன்ஸ்பெக்டர் சங்கர் கையில் ஒரு ஃபைலில் தான் எழுதிக்கொண்ட ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்டை சரிபார்த்துவிட்டு சேதுவை நெருங்கினார்.
‘சேது, எளனீ கடைக்காரர் மருது சொன்னத வச்சி எஃப்.ஐ.ஆர் எழுதிட்டேன் சேது. அவர் காலைல 10 மணிக்கு பாத்திருக்கார். உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கார். நாம 10:15 க்கு வந்திருக்கோம். ஃபோட்டோ செஷன் சொல்லி முடிஞ்சாச்சு. இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றதுக்கான பேப்பர் வொர்க் கூட முடிஞ்சது. நாம இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணிடலாமா?’.
‘உனக்கு என்ன தோணுது சங்கர்?’.
‘ம்ம்.. கேப் டிரைவரை அடிச்சி கொன்னிருக்கானுங்க. அதுவும் ஹைவேஸ்க்கு பக்கத்துல. எதாவது கள்ளக்கடத்தல் இல்லேன்னா வழிப்பறி சண்டையா இருக்கும் சேது. அந்த ஆங்கிள்ல ப்ரோசீட் பண்ணலாம்னு தோணுது. வாட் டூ யூ சே?’.
‘ம்ம்.. இல்ல சங்கர். வண்டிய பாத்தியா? இவன் ஒரு ரெஜிஸ்டர்டு கேப் டிரைவர். இவன மாதிரி ஆள வச்சிலாம் கள்ளகடத்தல் பண்ணிருக்கமாட்டாங்கன்னு என் இன்ஸ்டிங்ட் சொல்லுது. அப்புறம், அவன் பாக்கேட்ல பாத்தியா, பணம் அப்படியே இருக்கு. வழிப்பறி பண்ணனும்னு நினைச்சா ஏன் பணத்தை விட்டுட்டு போகணும்?’.
‘ம்ம்… அதுவும் சரிதான். அப்போ எப்டிதான் ப்ரொசீட் பண்றது சேது?’.
‘தெரியல. சரி, கார்ல எவ்ளோ பெட்ரோல் பாக்கி இருக்குன்னு பாரு?’.
‘ஓகே சேது’ என்றுவிட்டு அகன்றார் சங்கர்.
வண்டியின் டாகுமென்ட்ஸ் எல்லாம் டாஷ்போர்டில் இருந்தது. அதன்படி செத்தவன் பெயர் கதிர். வயது முப்பது. வண்டி 2007 மாடல். ஐந்து வருட லோனில் எடுக்கப்பட்டிருப்பதாக ஆர்.சி யில் இருந்த ஹைப்போதிகேஷன் முத்திரை தெரிவிக்கிறது. வண்டியில் சிகரெட் லைட்டரோ அல்லது வத்திப்பெட்டியோ அல்லது லைட்டரோ இல்லை. அவன் உதடுகளைப் பார்க்கையில் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவனாகத் தோன்றவில்லை. பார்க்கவும் டீசன்டாக இருந்தான். ஷூ அணிந்திருந்தான். தலை படிய வாரப்பட்டிருந்தது. காருக்குள் ஆண்கள் பயன்படுத்தும் வேக்ஸ் பாடி ஸ்ப்ரே வாசம் அடிப்பதை சேது குறித்துக்கொண்டார்.
சங்கர் இப்போது சேதுவின் அருகில் வந்தார்.
‘சேது, டாங்க்ல இன்னும் 9 லிட்டர் டீசல் இருக்கு சேது’.
‘சங்கர், 10 லிட்டர் டீசல் போட்டிருக்கான். 9 லிட்டர் இருக்கு. இன்டிகாவொட மைலேஜ் 18 கிலோமீட்டர் லிட்டருக்கு. அப்படின்னா 18 கிலோ மீட்டர் வந்திருக்கான். இங்கிருந்து 18 கிலோமீட்டர் முன்னாடி யாரோ ஏறியிருக்காங்க. அவந்தான் சஸ்பெக்ட். அவந்தான் கொன்னிருக்கனும்னு எனக்கு தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?’.
‘கரெக்ட், சேது’.
‘என்கூட வாங்க சங்கர்’ என்று விட்டு நேராக ஜீப்பை நோக்கி நடக்க, சங்கர் தொடர்ந்தார். சேது கைக்கடிகாரத்தில் மணி பார்த்துக் குறித்துக்கொண்டார். ஜீப் உருமி, இருவரையும் உள்வாங்கிப்பறந்தது.
‘சேது, நாம எங்க போறோம்?’.
‘கதிரோட கார்ல ஒரு லிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கு. அதாவது 18 கிலோமீட்டர். சோ, முதல்ல அந்த பதினெட்டு கிலோமீட்டர் நாம போய் பாக்கலாம். அங்க ஏதாவது க்ளூ கிடைக்கும்’
~ * ~
சேதுவும், சங்கரும் 18 கிலோமீட்டர் தள்ளி வந்து பார்த்தபோது, அங்கே வெறும் பெட்ரோல் பங்க் மட்டுமே இருந்தது. விசாரித்ததில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் வேக்ஸ் பாடி ஸ்ப்ரே வாசம் வீசுகிறதா என்று சோதிக்க எண்ணுவதே அசட்டுத்தனமான ஐடியாவாக இருந்தது. கிடைத்த ஒன்றையும் க்ளூ என்று சொல்லிக்கொள்வதற்கில்லை. சேது நற நறவென பற்களை கடித்துவிட்டு ஜீப்பில் ஏற, உச்சி வெய்யிலில் ஒரு இள நீர் கூட வாங்கித்தரவில்லையே என வெறுப்பில் சங்கரும் சேதுவை முறைத்தபடியே ஜீப்பில் ஏறினார்.
~ * ~
போலீஸ் ஸ்டேஷனில், :
‘க்ளூ எதுமே கிடைக்கலையே சேது’ என்றார் சங்கர்.
சங்கரிடம் பாடி ஸ்ப்ரே பற்றி சொல்ல நினைத்து,
‘கொலையானவன் வீட்டுக்கு சொல்லியாச்சா’ என்றார் சேது.
‘இல்லை சேது..வண்டி பிரைவேட்டு.. ஆர்.சி லாம் செக் பண்ணிட்டேன்.. ரிஜிஸ்டர் ஆகி இருக்கிற இடத்துல ஆள் இப்போ கரன்டா இல்லை.. பர்சுல காசு தான் இருக்கு.. மொபைல் இல்லை..சோ ஆள் யாரு என்னன்னு தெரியலை’
‘அப்போ யாராவது டிரைவர் காணோம்ன்னு கம்ப்லெயின்ட் பண்ணிருக்காங்களா பாருங்க’
~ * ~
கொஞ்ச நேரம் கழித்து சேதுவை நெருங்கினார் சப் இன்ஸ்பெக்டர்.
‘சேது, வினோதமான தகவல்.. இதே மாதிரி போரூர் ஏரிகிட்ட ஒரு கார்ல டிரைவர் கத்தியாக குத்தப்பட்டு செத்திருக்கான்.. கொலை செய்யப்பட்டவன் டிரைவர்ங்குறதை தவிர வேற ஏதும் தெரியலை…பேரு சசி… அந்த கேஸும் கொலையாளி யாருன்னு தெரியாம தான் இருக்கு’
‘அப்படீன்னா இதை சீரியல் கொலைன்னு சொல்றீங்களா?’
‘இருக்கலாம்ல..சேது, ஒரு பொண்ணு கம்ப்ளெயின் பண்ணியிருக்கு…பேரு வசந்தி… ஒரு டிரைவரை காணோம்ன்னு’
‘அப்படியா.. எப்போ?’
‘அது இருக்கும் ஒரு பத்து நாள்.. இந்த டிரைவர் இன்னிக்கு தானெ செத்திருக்கான்.. இவனா இருக்காது சேது’
‘ஆங்.. அப்படி விட முடியாது.. ஒரு வேளை இவனே கைவிட்டுட்டு வந்திருக்கலாம்ல.. போட்டோ ஏதாவது குடுத்திருக்கா?’
‘இல்லை.. ‘
‘அந்த பொண்ணு அட்ரஸ் என்ன’
~ * ~
அரசு பொது மருத்துவமனையில், பிணவறையை விட்டு வெளியே வந்த போது, அந்த பெண் முகத்தில் சலனம் இல்லை.
‘அப்போ, அது உன் காதலன் இல்லைன்னு சொல்ற இல்லையா?’ என்றார் சேது.
அந்தப் பெண் ஆம் என்பதாய் தலையசைத்தாள். சங்கர், சேதுவின் காதருகே வந்து, சன்னமாய்,
‘சேது, அனுப்பிடலாமா?’ என்றார்.
‘இருங்க’ என்ற சேது, அந்த பெண்ணிடம் திரும்பி,
‘வசந்தி, ஃபோட்டோ இருந்தா தான் தேட முடியும்.. ஊரு எது? விலாசம் ஏதாச்சும் இருக்கா? ஆள் பாக்க எப்படி இருப்பான்னு சொல்லு அடையாளம் சொல்லு’ என்றார்.
‘சொல்றேன் சார்.. பேரு முருகன்… ஊரு கோவில்பட்டி சார்.. பஸ்ஸ்டாண்டுக்கு பக்கத்துல புள்ளையார் கோயில் சார்.. அதுக்கு பக்கத்துல இரண்டாவது வீடு சார் ….அவனை நம்பி தான் சார் என் வாழ்க்கையே இருக்கு..என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டு ஓடிட்டான் சார்… எப்படியாவது கண்டுபுடிச்சி குடுத்துடுங்க சார்’ என்றாள் அவள்.
‘அப்போ, முதல்ல ஸ்டேஷனுக்கு வாம்மா. அங்க எங்க ஆளுங்க இருப்பாங்க.. அவங்க கிட்ட அடையாளம் சொல்லு.. மத்ததை அவங்க பாத்துக்குவாங்க’ என்றுவிட்டு சேது ஜீப்பிற்கு நடக்க, சங்கரும், அந்தப் பெண்ணும் பின்னால் நடந்தார்கள்.
~ * ~
கோவிபட்டி கிராமத்தில் சேதுவும், சங்கரும் சசி மற்றும் கதிர் புகைப்படங்களை காட்டி விசாரித்த போது, யாரும் சரியாக தகவல்கள் சொல்லவில்லை.
‘அவன் ஒரு உதவாக்கறை சார்.. படிப்பு இல்ல.. மெட்ராஸ் போய் பொளச்சிக்கிறேன்னு போயிட்டான்’ ஒருவர் சொன்னார்.
‘அவன் குடும்பம்லாம் இங்க இல்லை சார்.. ஆளு தனிக்கட்டை …அவ்ளோதான் தெரியும்’ என்றார் இன்னொருவர்.
‘இவன் அவன் கூடத்தான் எப்பவும் திரிவான்.. வெட்டிப் பயலுக’ என்றது ஒரு கிழம்.
~ * ~
‘என்ன சேது, இந்தக் கேஸும் அம்பேலாயிடும் போல இருக்கு?’ என்றார் சங்கர்.
‘ம்ம்ம்… பார்க்கலாம் சங்கர்… இதை மாதிரி எத்தனை பாத்திருக்கோம்’ என்று சேது சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, மூச்சிறைக்க ஒருவன் ஓடி வந்தான்.
‘சார், சார், என்னை காப்பாத்துங்க சார்’
சேது மேஜையிலிருந்த புகைப்படத்தையும், அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு, சங்கரிடம் திரும்பி,
‘கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்தாமாதிரி ஆயிடுச்சு பாருங்க’ என்றுவிட்டு, அவனிடம்
‘ஏன்ய்யா இப்படி அரக்கபரக்க ஓடி வர.. கம்பி எண்ணுறதுக்கு இவ்ளோ அவசரமா..?’ என்றார்.
‘சார், என்னை கொலை பண்ண பாக்குறா சார்..’
‘என்னய்யா சொல்ற?’
‘சார், ஒரு பொண்ணு சார்.. லவ் பண்றேன்னு சொன்னா.. எனக்கு லவ்லாம் இல்ல சார்.. சும்மா அனுபவிக்கலாம்ன்னு சரின்னேன்.. ஒரு நாள் குடி போதையில நானும், என் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து அவளை கெடுத்துட்டோம் சார்.. தப்பு நடந்து போச்சு சார்.. கல்யாணம் பண்ணுன்னா..முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சார்.. ஒருத்தன் போரூர்ல செத்துட்டான்.. இன்னொருத்தன் இன்னிக்கு ஈ.சி.ஆர் ல செத்துட்டான் சார்.. அவளா தான் சார் இருக்கும்.. அவ வந்து அவனையும் கொண்ணுட்டா சார்.. என்னையும் கொன்னுடுவா.. காப்பாத்துங்க சார்.. ஏதாவது கேஸுல போட்டுடுங்க சார்… லாக்கப்புல உயிரோடயாவது இருந்துக்குறேன் சார்..’
சேதுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அரசு பொது மருத்துவமனையில் வைத்துப் பேசிய அந்த பெண், இரண்டு கொலைகள் செய்திருப்பாளா? கொலை செய்பவள் மாதிரியா இருக்கிறாள் அவள்? ஆனா, இப்படியெல்லாம் ஏதேனும் நடந்தால் தான் பயப்படுகிறான்கள் என்று நினைத்துக்கொண்டார்.
‘சரி சரி..அந்த லாக்கப்புல உக்காரு’ சேது சொல்ல, லாக்கப்புக்குள் ஓடிச்சென்று உட்கார்ந்து கொண்டான் முருகன்.
யோவ், இவன் சரண்டர் ஆனது அவளுக்கு தெரிஞ்சிருக்காது.. அவளை நைஸா கூப்பிடு ஸ்டேஷனுக்கு.. காணமா போனவனை கண்டுபுடிச்சிட்டோம்ன்னு..இங்க வச்சே விசாரிச்சு தெரிஞ்சிக்கலாம்’ என்றார் சேது சங்கரிடம்.
சங்கர் தலையாட்டியபடி, தனது செல்போனை உருவி, அந்த பெண்ணின் எண்ணை ஒற்றினார்.
~ * ~
சற்றைக்கெல்லாம், அக்கம்பக்கத்து லாட்ஜ்களில் பிடித்துவரப்பட்ட விபசாரப் பெண்கள், மாமாக்களுடன் ஸ்டேஷனுக்குள் அழைத்து வரப்பட்டு, குந்தி உட்காரவைக்கப்பட்டனர். ஒரு பச்சை புடவை அணிந்த விபசாரப்பெண் அமர இடம் இல்லாமல், ஜெயில் கதவுகளை உரிமையாகக் திறந்து உள்ளே அமர்ந்தாள்.
அப்போது அந்த பெண் வசந்தி சிகப்பு சுடிதாரில் வந்தாள். முகம் சலனமற்று இருந்தது. எடுத்தவுடன் ஆர்பாட்டம் காட்டினால் அவள் உஷாராகி பிறழ்ந்துபேசக்கூடும் என்பதால், சேது மெளனமாக இருந்தார். ஆனால் விழிப்பாக இருந்தார். அப்போது அங்கே, வேக்ஸ் பர்ஃப்யூம் வாசம் ஏதும் வீசவில்லை. ஒருவேளை, போலீஸை குழப்புவதற்காகவே, அந்தப் பெண் அப்படி மாற்றி பர்ஃப்யும் பயன்படுத்தியிருப்பாளோ என்று தோன்றியது.
சங்கர் சேதுவின் அருகில் வந்து, சற்று குனிந்து.
‘சார் பொண்ணு வந்துடுச்சு.. ‘ என்றார்.
‘பாத்தேன்.. அந்த சுடிதார் பொண்ண லாக்கப்புல விடாத.. பென்ச்சுல உக்கார வை..’ என்றார் சேது.
வசந்தி பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டாள்.
விபசார கேஸ் ரொட்டீன். மாதா மாதம் கணக்கு காட்டவென பிடிக்கப்படும் கேஸ்கள். போன முறை பிடித்தவர்களையே இந்த முறையும் காட்டக்கூடாது. பிடித்து வரப்பட்ட பெண்களுள் யாருக்கும் இதற்கு முன் கேஸ்கள் இருந்தால் அதை வேறு விதமாய் ஹாண்டில் செய்ய வேண்டி வரும். இது போன்ற எண்ணற்ற தலைவலிகளை கவனிக்க வேண்டும்.
கூட்டம் அதிகமாக இருந்தது. வசந்தி எழுந்து,
‘பாத்ரூம் எஙகே?’ என்று கேட்டாள். சங்கர் வழி காட்டினார். வசந்தி செல்கையில்,
‘எனக்கும் வருது’ என்றுவிட்டு பச்சை நிற புடவை கட்டிய ப்ராத்தல் பெண் ஒருத்தி தானும் எழுந்து சென்றாள்.
~ * ~
சேதுவும் சங்கரும் உள் அறையில், பழைய ஃபைல்களை உருவி, எதையோ நோண்டிக்கொண்டிருந்தபோதும், வசந்தி குறித்து மனதோரத்தில், ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்துகொண்டே இருந்தது இருவருக்கும்.
‘சங்கர் அந்த சிகப்பு சுடிதார் வசந்தி மேல ஒரு கண்ணு இருக்கட்டும்’ என்றார் சேது.
‘சரி சேது’ என்ற சங்கர், திரும்பி எக்கி பார்க்க, சற்று தள்ளி சிகப்பு சுடிதார் மற்றும் பச்சை புடவையின் முதுகுப்புறம் தெரிந்தது. சிகப்பு சுடிதாரின் வாளிப்பான பின் புறம், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில், மனதுக்குள் விசுக்கென்று ஏதோ செய்தது.
சற்று நேரத்தில் செல்போனில் அழைப்பு வர,
‘ஹலோ, ஹலோ ‘ என்று இரண்டுமுறை கத்திப்பார்த்துவிட்டு, டவர் கிடைக்காமல், சுடிதார் பெண், மொபைலுடன் வாசலுக்கு சென்றாள்.. சங்கர் ஓரக்கண்ணால் அவளை நோட்டம் விடுவது தெரிந்து, சேது ஃபைலை நோண்டுவதை தொடர்ந்தார்.
ஆயினும், சேதுவுக்கு ஏதோ மனதில் பொறி தட்ட, பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை அப்படியே கீழே போட்டுவிட்டு, லாக்கப்பிற்கு அவசரமாய் விரைய, சேது பதட்டமாக விரைவதைப் பார்த்து திடுக்கிட்டு, சங்கரும் சேதுவைத் தொடர்ந்து லாக்கப்பினுள் நுழைந்தார்.
அங்கே முருகன், ரத்த வெள்ளத்தில் கொலையாகி கிடந்தான்.
போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் ரத்த வெள்ளத்தில் ஒரு சடலத்தை பார்த்து, போலீஸ் ஸ்டேஷனே சலசலத்தது. விபசாரப் பெண்கள் ‘ஹோ..’வென அலறி அங்குமிங்கும் ஓட, காக்கிச்சட்டைகள் சில அவர்களை கட்டுப்படுத்தினார்கள்.
‘யோவ் அந்த சுடிதார் பொண்ணை விடாத’ சேது அலற, சங்கர் உடனே வாசலுக்கு சென்று அங்கே வெய்யிலுக்கு தலைக்கு துப்பட்டாவை போட்டுக்கொண்டு, போனில் பேசிக்கொண்டிருந்த சிகப்பு சுடிதார் பெண்ணை கெட்டியாக பிடித்து உள்ளே இழுத்து வந்தார்.
சேது கோபத்துடன், சுடிதார்ப்பெண்ணின் துப்பட்டாவை விலக்கி அறைய கைகளை ஓங்க, சுடிதாருக்குள் அந்த ப்ராத்தல் பெண் ‘அய்யோ’ என்று அலறினாள்.
சங்கர், ப்ராத்தல் பெண்ணை சுடிதாருக்குள் பார்த்துவிட்டு மெர்சலானார்.
‘இந்த சுடிதார்ல நான் ராசாத்தி மாதிரி இருக்கேன்ல…அந்தப் பொண்ணு கேட்ட உடனே குடுத்திடிச்சி.. தங்கமான பொண்ணு’ என்றாள் பிராத்தல் பெண், அசிங்கமாக சிரித்தபடி.
~ * ~
இரண்டு தெரு தள்ளி பச்சை புடவை அணிந்த வசந்தி ஆட்டோவில் ஏறினாள்.
‘எக்மோர் போப்பா’ என்றாள்.
ஆட்டோ எக்மோர் விரைந்தது. அக்குளை சற்று உயர்த்தி, முகர்ந்து பார்த்து அசூயையாக முகம் சுளித்தாள்.
ரத்தம் படிந்த கத்தி ஓடும் ஆட்டோவிலிருந்து சாலையில் விழுந்தது.
- ஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்
- சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
- சோசியம் பாக்கலையோ சோசியம்.
- அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்
- வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை
- பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)
- நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு
- புது டைரி
- Caught in the Crossfire – another English Book – a novel
- கோசின்ரா கவிதை
- வாய்ப்பு
- தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
- மூன்றாம் பரிமாணம்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)
- விடாது சிகப்பு
- நகைகள் அணிவதற்கல்ல.
- வேறு ஆகமம்
- தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு
- மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி
- கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்
- திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
- மிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
- மரபு மரணம் மரபணு மாற்றம்
- இலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்