மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்

author
1
0 minutes, 42 seconds Read
This entry is part 19 of 23 in the series 15 பெப்ருவரி 2015

gmoடேவிட் ஜெ.பிரவீன்

UZACHI இயக்கம் செயல்பட்டு வந்த Calpulapan பகுதியை சுற்றி இருக்கும் நிலங்கள் உலக சோள உற்ப்பத்தியின் தாய்மண். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதியில்தான் முதன் முதலில் சோள பயிர் விவசாய கண்டுபிடிப்பு உள்ளானது என்பது பொதுவாக வரலாற்று ஆய்வுளகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம். சோளப் பயிரின் தாய்மடியான இந்த பகுதிகளுக்கு NAFTA (North American Free Trade Agreement) மூலம் வந்து சேர்ந்தது வினை.

NAFTA என்கிறப் பெயரே தன் விளக்கதை கொடுத்திருக்கம் என்பதில் சந்தேகம் இருக்கவாய்பில்லை. வட அமெரிக்க மற்றும் கனடா நாட்டில் உற்ப்பத்தியாகும் விவசாய மற்றும் தொழில் நுட்ப உற்ப்பத்திகள் அனைத்தும் எத்தகைய அகப் புறத் தடைகள் இன்றி மெக்சிக்கோ நாட்டு சந்தைக்களில் வந்து குவிவதற்கு வசதியாக இந்த ஒப்பந்தம் வட அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு அரசாங்கங்களால் மெக்சிக்கோ மீது திணிக்கப்பட்ட ஒன்று. மெக்சிகோ நாடே சோள உற்பத்தியில் முன்னியில் இருந்தாலும் வட அமெரிக்கா கனடா நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் பல டன் சோளம் மெக்சிகோவில் இறக்குமதி செய்யப்பட்டது.

அமெரிக்க விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு மெக்சிகோவில் இறக்குமதியான இந்த டன் கணக்கிலான சோளத்திலிருந்துதான் பிரச்சனை தொடங்கியது. அமெரிக்காவில் விளைந்த இந்த சோளம் மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified Organisms GMO) தொழில்நுட்பத்தில் உருவாக்கபட்டது. மெக்சோவில் இறக்குமதியான அமெரிக்க சோளத்தில் 60% இந்த தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்பட்டது. மரபணு மாற்று தொழில்நுட்பத்தை கையாளும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணி செய்திருந்த Ignacio Chapela-க்கு மரபணு மாற்றம் முறையில் விளைந்த சோளம், சோளத்தின் பூர்விகமாக கருத்தப்படும் பகுதிகளில் டன் கணக்கில் சேமிப்பு கிடங்குகளில் குவித்துவைக்கப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியது.

கிடங்குகளில் இருக்கும் மரபணு மாற்ற சோளத்தின் நிலைக் குறித்து தன் கீழ் பணி செய்துகொண்டிரந்த ஆராய்ச்சி மாணவரான David Quist-யை அக்டோபர் மாதம் 2000-ஆம் ஆண்டு Oaxaca பகுதிக்கு அனுப்பிவைத்தார் Chapela. தன்னுடைய ஆராய்ச்சிகளை முடித்துகொண்டு Oaxaca-வை விட்டு அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பு, அமெரிக்கா Berkeley கல்லூரியிலிருந்த Chapela-வை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு David Quist சொன்ன தகவல்கள் Chapela-வை அதிரவைத்துவிட்டது. அந்த தகவலை தொலைப்பேசியில் மேலோட்டமாக சங்கதே முறையில் சொன்ன David Quist தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை படு இரகசியமாக பத்திரப்படுத்திக்கொண்டு அமெரிக்கா போய் சேர்ந்தார்.

அதற்கு அடுத்த ஒராண்டுகள் Chapela-வும் David Quist-வும் Oaxaca பகுதியில் இருந்துகொண்டுவரப்பட்ட அந்தப் பகுதியிலேயே விளைந்த சோளத்தின் மாதரிகளை வைத்துக்கொண்டு தீவிர ஆராய்ச்சிகளில் இடுப்பட்டார்கள். ஒருமுறைக்கு பலமுறைகள் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மறு ஆராய்ச்சி உட்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளுக்கு பலமுறை Berkeley கல்லூரியின் ஆராய்ச்சி கூடமும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. இறுதியில் தங்களுடைய ஆராய்ச்சி முடிவின் நமபகத்தன்மையை March 2001-ஆம் ஆண்டு இருவரும் இறுதியாக உறுதி செய்துகொண்டார்கள்.

அவர்களுடைய பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு கிடைத்த ஆராய்ச்சி முடிவுகளை, பிரிட்டனின் மிகவும் மதிப்பு வாய்ந்த அறிவியல் ஆராய்ச்சி இதழான Nature-க்கு அனுப்ப இருவரும் முடிவு செய்தார்கள். தங்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் ஆய்வுளகில் எச்சரிக்கை மணி ஒசையை எழுப்புவதுடன் தங்களுக்கு நல்ல மதிப்பையும் பெற்றுத் தரும் என்று நினைத்திருந்த இருவருக்கும் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த Nature இதழின் எதிர்வினைதான் இறுதியில் பரிசாகக் கிடைத்தது.

அவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவுகள் பேசிய உண்மை, மரபணு மாற்று தொழில்நுட்ப முறையில் அமெரிக்காவில் விளைவிக்கப்பட்டு மெக்சிகோவின் Oaxaca கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சோளம், Oaxaca பகுதிகளில் விளையும் பூர்விக சோளப் பயிர்களுடன் மகரந்த (Pollinisation) சேர்க்கையில் ஈடுபட்டிருக்கின்றன என்பதுதான். பொதுவாக மரபணு மாற்றப்பட்ட பயிர் விதைகள் மலட்டுத் தன்மை கொண்டவைகள் என்றும் அந்த விதைகளின் மூலம் விளைவிக்கப்படும் பயிர்களால் மகரந்த சேர்க்கையில் ஈடுபட முடியாதென்றும் மரபண மாற்று தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்களால் சத்தியம் செய்யப்படுகிறது.

இந்த சத்தியத்திற்கும் Chapela-வின் ஆராய்ச்சி முடிவுகளுக்கும் இருக்கும் முரண்பாட்டைத் தெரிந்துக்கொள்ள மரபணு மாற்று தொழில்நுட்பம் குறித்து சிறிது அறிந்திருப்பது அவசியமாகிறது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரனத்திற்கும் அதற்கே உரித்தான தனித்துவமான சாதக பாதக குணாதிசயிங்கள் உடைய மரபணுக்கள் (DNA) இருக்கும். ஒரு உயிரினத்திலிருக்கும் சாதக மரபணு அமைப்பை, மற்றொரு உயிரினத்தின் பாதக மரபணு அமைப்பை சரிகட்ட அந்த உயிரினத்தின் மரபணுக்களுக்குள் செலுத்துவதே மரபணு மாற்றுத் தொழில் நுட்பம். இந்த தொழில் நுட்பம் பெரும் பாலும் மனித இனத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்டதல்ல அப்படி சொல்லப்பட்டாலும். மனித இனத்தின் நன்மைகளுக்கான விசயங்களை மனிதன் நெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடிப்பதற்கு முன்பே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்திவைத்துவிட்டது.

பயிர்களின் உற்பத்தியை பெருக்கவும், உற்பத்தியான விளைபொருட்கள் இயற்க்கையின் நியதியை மீறி அதிக நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்குமே இந்த தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. பங்குச் சந்தைகளுக்குத் தேவையான அதிக உற்பத்தி என்கிற இலக்கும், சந்தையின் சூதாட்டம் நிற்னயிக்கும் காலக்கெடுவரை கெட்டுப்ப்போகாமல் தாக்குப்பிடிக்கும் திறனுமே மரபணு மாற்றத் தொழில் நுட்ப பயிர்களின் இறுதி இலக்கு. மரபணு மாற்று என்பது இயற்க்கையின் படைப்பு வழிக்கு முற்றிலும் எதிரானது என்பதால் இத்தகைய பயிர்களின் விதைகளை சோதனைக் கூடங்களில் மட்டுமே உருவாக்க முடியும் என்று இந்த தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது அப்பட்டமான பொய் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும்.

இந்த பொய்க்கு பின்னால் இருப்பது விதை வியாபாரம். விவசாயிகளின் சொத்தான விதைகளை அவர்களிடமிருந்து பிடுங்கி அதை கடை சரக்காக மாற்றும் உத்தியின் ஒரு பகுதி இந்த பொய். ஒரு முறை பெற்ற விதைகளைக் கொண்டு விவசாயிகள் தங்களுடைய உற்பத்தியை காலத்திற்கும் தொடர்ந்துவிடாமல் ஒவ்வொரு பருவ பயிர் உற்பத்தியின் போதும் இந்த நிறுவனங்களிடமே விதைகளை வாங்க சொல்லப்படும் பொய். இந்த மரபணு மாற்ற விதைகள் மலட்டுத்தன்மை கொண்டவை என்று சொல்லும் அதே நிறுவனங்கள் ஒரு பருவத்திற்கென்று வாங்கப்படும் விதைகளை அடுத்த பருவ உற்பத்திக்கென்று இருப்புவைப்பதையோ மற்ற இயற்க்கை விதைகளோடு கலப்பதையோ தடைசெய்கின்றன.

இந்த விதைகளின் மூலம் உருவாக்கப்படும் பயிர்களின் மகரந்த தூள்கள் மலட்டுத்தன்மை கொண்டவைகளாதலால் அவைகளால் காற்றில் பரவி இயற்க்கையின் மற்ற செடியினங்களோடு மகரந்த சேர்க்கையில் ஈடுபடமுடியாது என்பது இந்த தொழில் நுட்பம் செய்யும் சத்தியம். ஆனால் இந்த பயிர்களால் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டு சூழலியலின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. இந்த உண்மை அந்த பெரும் நிறுவனங்களின் ஆராய்ச்சி கூடங்களிலேயே நிருபனமான விசயம்.

இத்தகைய நிறுவனங்களின் ஆய்வுக் கூட ஆராய்ச்சியாளராக இருந்து இந்த உண்மையை நன்கு உள்வாங்கியிருந்த காரணத்தினாலேயே, Oaxaca பகுதியில் குவிக்கப்படும் மரபணு மாற்ற சோளத்தால், இயற்க்கையான சோள பயிர்களுக்கு ஆபத்து ஏற்ப்பட்டிருக்கும் என்கிற அச்சத்திற்கு Chapela உள்ளானது. இந்த உண்மைக்கு பின்னாலிருக்கும் அவருடைய அச்சமே அவருடைய ஆய்வு முடிவுகள். மரணுப் பயிர்கள் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டு இயற்க்கையின் மற்ற பயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்காது என்கிற பொய்யின் அடிப்படையிலேயே இந்த தொழில் நுட்பத்திற்கு உலகளவில் உரிமம் பெறப்பட்டிருக்கிறது. இந்த உரிமத்தை காட்டியே இந்த விதைகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பல நாடுகளின் விவசாய நிலங்களிலிருந்து தங்களுடைய லாபத்தை அறுவடை செய்துகொண்டிருக்கின்றன. நம் நாட்டின் விவசாய நிலங்களும் கூட இந்த நிறுவனங்களின் லாப அறுவடைக்காக கையளிக்கப் பட இருக்கின்றன.

ஊர் உலகத்திலிருக்கும் இயற்க்கையியல் ஆராய்ச்சியாளர்கள் முதற்கொண்டு பல முன்னிப் பல்கலைக் கழகங்களின் ஆய்வுக் கூட ஆய்வுக் கட்டுரைகள் வரை இந்த உண்மை தெரிந்திருந்தும், இந்த பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நேரடி மறைமுக பொருளியல் ஆதாயங்களை கணக்கிட்டு வாய் மூடி இருப்பதோடு மட்டுமில்லாமல் இந்த நிறுவனங்கள் சந்தையில் கட்டமைக்கும் பொய்களுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் Chapela தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை Nature இதழலில் வெளியிட்டு இந்த பொய்களுக்கு எதிராக உலக மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார். இந்த முயற்ச்சி பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து எத்தகைய எதிர் வினையை உண்டு பண்ணும் என்பதை Chapela உணர்ந்தேயிருந்தார். அவர் இந்த பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான பிற்பாடு Novartis என்கிற பெரு நிறுவனத்தோடு இணைந்துவிட்ட Sandoz-ல் மரபணு மாற்ற ஆராய்ச்சியாளராக இருந்த சமயத்தில் மரபணு மாற்று ஆய்வு முடிவுகள் எப்படி நிறுவனங்களின் லாப நோக்கத்திற்கெற்ப மாற்றி எழுத்தப்படுகின்றன என்பதை நேரில் பார்த்தவர்.

தங்களுடைய லாப வேட்டைக்கு எதிரான ஆய்வு முடிவுகளைக் கொண்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை Chapela-வும் அவருடைய ஆராய்ச்சி மாணவரும் எழுதிக்கொண்டிருப்பதையும், அந்த கட்டுரை Nature இதழுக்கு அனுப்பப்பட இருக்கிறது என்பதையும் முன் கூட்டியே மோப்பம் பிடித்துவிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் Chapela-வின் கட்டுரையை முடக்குவதற்கான வேலைத் திட்டத்தை தொடங்கினார்கள். அவருடைய கட்டுரையை வெகு சாதாரணமாக இல்லாமல் ஆக்கிவிட முடியாது என்பது அந்நிறுவனங்கள் அறிந்த ஒன்று. ஏனென்றால் Chapela அந்நிறுவனங்களில் ஒன்றான Novartis-ன் ஆய்வகத்தால் முதன்மையான ஆராய்ச்சியாளர் என்று இனம் காணப்பட்டவர். Novartis-ன் இந்த அங்கிகாரமே அவருக்கு அமெரிக்க California Berkely பல்கலைக் கழகத்தில் Environment Science Department-ல் துணைப் பேராசிரியர் பதவியைப் பெற்றுத்தந்தது.

முதல் கட்டமாக அவருடைய சக பணியாளர்கள் மூலம் அவருக்கான அழுத்தம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் விளைவிக்கப்படும் மரபணு மாற்ற பயிர்களின் பாதிப்புகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தும்படியும் மற்ற நாடுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க தேவையில்லை என்கிற ரீதியில் அவருடைய சகபணியாளர்கள் அவருக்கு ஆலோசனை சொல்லத்தொடங்கினார்கள். இதற்கு அவர் செவி சாய்காததால் அடுத்த நடவடிக்கையான ‘உருட்டல்’ தொடங்கியது. இம்முறை நடவடிக்கை வந்தது மெக்சிகோ அரசாங்கத்திடமிருந்து.

Chapela-வின் கட்டுரை ஒருவகையில் மெக்சிகோ அரசாங்கத்தின் ஊழல்களையும் வெளிக்கொண்டுவந்துவிடும் என்பதால், அவர் மெக்சிகோவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொய்களை பேசி வருவதாக மெக்சிகோ அரசாங்கம் அவர் மீது குற்றம் சுமத்தியது. இந்த குற்றச்சாட்டு வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் Chapela-வுக்கு தனிப்பட்ட முறையில் கடிதமாக அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கும் அவர் மசியவில்லை. அடுத்து ‘மிரட்டல்’ நடவடிக்கை தொடங்கியது. ஒரு மாலைப் பொழுதில் Chapela-வுக்கு ஒரு அழைப்பு. ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலிருக்கும் பாழடைந்த கட்டிடத்திற்கு வரும்படி. அழைப்பு விடுத்தவர் மெக்சிகோ நாட்டின் Bio-Commission-னின் இயக்குனர் Dr. Fernando Ortiz Monastrio.

Monastrio தன்னுடைய பேச்சின் வார்த்தைகளிலேயே சாம தான பேத தண்டங்களை உபயோகித்துப்பார்த்தார். இறுதியில் Monastrio அவரிடம் சொன்னது – உன்னால் எங்களைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. இந்த சந்திப்புக் குறித்து பின்னர் ஒரு நேர்காணலில் Chapela இப்படி விவரிக்கிறார் ‘அது ஒரு கெட்ட mafia movie-யில் நடைப்பெறும் காட்சிப்போலிருந்தது’

இதற்கும் Chapela மசியாமல் கட்டுரையை வெளியிடுவதில் முனைப்பாக இருந்ததால் அடுத்த நடவடிக்கையான ‘விரட்டல்’ நடவடிக்கைத் தொடங்கியது. மற்றொரு ஊடகத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை எந்த இதழும் வெளியிடாது என்பதால் California Berkely பல்கலைக் கழகத்திலிருந்த Chapela-வின் கட்டுரை நகல் பெறப்பட்டு பாரிஸில் இருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிக்கையான அதிக வாசகர் கவனம் பெறாத Le Monde-வில் வெளியிடப்பட்டது. இந்த வேலைகள் ஒருபுறம் நடந்துக்கொண்டிருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் Nature இதழையும் நெறுக்கத் தொடங்கியிருந்தன. இந்த நெறுக்குதலின் அழுத்தத்தை தாங்க முடியாத Nature இதழ், Chapela-வின் கட்டுரை தங்களுடைய பொது வாசகர்களின் கவனத்தை கவரக்கூடியதாக இல்லையென்று சொல்லி Chapela-வின் கட்டுரையை பிரசுரிக்காமல் தவிர்க்க காரணம் சொல்லிக்கொண்டிருந்தது.

ஆனால் மெக்சிகோ அரசாங்கமும், பன்னாட்டு நிறுவனங்களும் எதிர்பாராத விதமாக Le Monde பத்திரிக்கையில் வெளியான Chapela-வின் கட்டுரை பொதுவெளியில் பெரும் அதிர்வை உண்டுப் பண்ணிவிட்டது. Chapela–விற்கு வைக்கப்பட்ட குறி திசை மாறி அவர்களையே தாக்கிவிட்டது. இத்துறையில் முன்னனி இதழாக கருதப்படும் Nature-வும் வெறு வழியில்லாமல் Chapela-வின் கட்டுரையை வெளியிடவேண்டியதாகிவிட்டது. தங்களுடைய அனைத்துவிதமான அழுதங்களையும் மீறி கட்டுரை வெளிவந்து பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பாது விளைவுகளை ஏற்படுத்தம் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியது.

இம்முறை Chapela-வின் கட்டுரையை முறியடிக்க தொழில் நுட்பத்தை கையிலெடுத்தன பன்னாட்டு நிறுவனங்கள். மரபணு தொழில் நுட்பத்தின் ஜாம்பவான் Monsanto களத்தில் இறங்கியது. அமெரிக்க வாசிங்கடன் நகரைச் சேர்ந்த Bivings Group எனப்படும் மக்கள் தொடர்பு நிறுவனத்திடம் Chapela வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரையின் நம்பகத்தன்மையை முறியடிக்கும் வேலை ஒப்படைக்கப்பட்டது. முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்னும் அனுபவமொழியை நல்லவர்கள் கையாளுகிறார்களோ இல்லையோ நன்மைகளுக்கு எதிரானவர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். Bivings-கும் முள்ளை முள்ளால் எதிர்கொண்டது.

முதல் வேலையாக AgBioWorld என்கிறப் பெயரில் ஒரு இணைய தளத்தை உருவாக்கியது Bivings. உலகில் இருக்கும் தலைசிறந்த, தலைகொழுத்த இயற்க்கையியல் விஞ்ஞானிகள் எல்லாம் அந்த இணைய தளத்தில் உறுப்பினர்களாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. உலகின் தலை சிறந்த மரபணு மாற்று கட்டுரைகள்! எல்லாம் அந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. அனைத்தும் மரபணு மாற்ற தொழில் நுட்பத்திற்கு வக்காளத்து வாங்கும் கட்டுரைகள். அனைத்து கட்டுரைகளும் மரபணு மாற்ற விதைகள் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுவதற்கு சாத்தியமே இல்லை என்று அந்த இணைய தளத்தை வாசிப்பவர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்தன.

இப்படி தலையில் அடித்து சத்தியம் செய்த விஞ்ஞானிகளில் ஒருவரான Mary Murphy பொங்கி எழுந்து Chapela-வின் ஆராய்ச்சி முடிவுகளுக்கு எதிராக வசைமாறி பொழிந்தார். அத்தோடு நில்லாமல் AgBioWorld இணைய தளத்தையே முடக்கும் விதமாக Chapela-வுக்கு எதிரான மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கிவிட்டார். அனைத்து மின்னஞ்சல்களும் Chapela-வின் ஆராய்ச்சியில் எந்த வித அடிப்படை உண்மைகளும் இல்லையென்பதை ஆராய்ச்சியின் அடிப்படையில் நிருபிக்கும் வேலையை விட்டுவிட்டு Chapela-வின் பின்னனி குறித்தும் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிப் போட்டிருக்கும் பல்கலை கழகங்களின் ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்துக்கொண்டு பிரச்சனையை திசைத் திருப்பும் வேலையை செய்வதாக இருந்தன.

வெறு வழியில்லாமல் Chapela-வின் கட்டுரையை வெளியிட்டு விட்ட Nature இதழ் தொடர்ந்தும் Monsanto, Novartis போன்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு உள்ளாகிகொண்டுதான் இருந்தது. AgBioWorld இணைய தளத்தை கலக்கிக்கொண்டிருக்கும் Mary Murphy-யின் குற்றச்சாட்டுகளை வாய்ப்பாக பயன்படுத்தி இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த காரியத்தை Nature இதழ் செய்தது. அந்த இதழின் 130 வருட காலத்தில் நடைப்பெற்றேயிராத அந்த காரியம் முதல் முறையாக சுபயோக சுப தினத்தில் நடந்தெரியது. 2001-ஆம் ஆண்டு November மாத Nature இதழின் ஆசிரியர் பக்கத்தில் Chapela கட்டுரையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்பப்பட்டு Chapela-வின் கட்டுரை Nature இதழின் பதிப்பிலிருந்து முற்றிலும் திரும்ப்பெற்றுக்கொள்ளபடுவதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் மரபணு மாற்ற விதைகள் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்கிற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒருவழியாக Chapela-வின் கட்டுரைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனால் மழை விட்ட வானம் தூவானமாகத்தானே இருக்கும். Nature இதழின் இந்த பின்வாங்களை லேசில் விட்டுவிட விரும்பாத பிரிட்டன் நாட்டை சேர்ந்த மரபணு மாற்ற தொழில் நுட்பத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் Norfolk Genetic Information Network-யை சேர்ந்த Jonathan Matthews என்பவர், விஞ்ஞானி Mary Murphy-யின் பின்னனி குறித்த விசாரணையில் இறங்கினார். இவருடைய விசாரணை Monsanto-வும் Bivings நிறுவனமும் வெறிப்பெற்ற இரகசியங்களை வெளிப்படுத்தியது.

Bivings நிறுவனத்தின் இணைய தளத் துறையின் தலைவர் Todd Zeigler, BBC செய்தித் தொலைக்காட்சிக்கு இதுதொடர்பாக அளித்த நேர்காணல் ஒன்றில், Chapela-வின் ஆராய்ச்சி முடிவுகளை முறியடிக்கவென்றே தங்கள் நிறுவனத்தால் பொய்யாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் Mary Murphy என்கிற உண்மையை ஒப்புக்கொண்டார். காலம் கடந்தே இந்த உண்மை வெளிவந்தது இருந்தாலும் Nature இதழின் பின்வாங்களையே மரபணு மாற்ற தொழில் நுட்பத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் தங்கள் தரப்பை நிருபிக்க ஆயுதமாக எடுத்துக்கொள்கிறார்கள். Jonathan Matthews வெளிக்கொண்டு வந்த உண்மையை வசதியாக மறைத்துவிடுகிறார்கள்.

Series Navigationஇலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்சமூக வரைபடம்
author

Similar Posts

Comments

 1. Avatar
  ஷாலி says:

  ஒருபுறம் பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழப்படும் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன். இன்னொரு பக்கம் இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவர் என்ற சாபத்தையும் எதிர்கொள்கிறார்.
  இந்தியாவுக்கு மரபணு மாற்றப் பயிர்கள் தேவைதானா? என்ற கேள்விக்கு.
  தேவை. ஆனால், அவற்றின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன? மக்களிடத்தில் அவை கொண்டுசெல்லப்படும்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறதா என்பதை யெல்லாம் உறுதிப்படுத்த நமக்கு ஒழுங்குமுறைக் கட்டுப் பாட்டு அமைப்பு தேவை. முதலில் அது உருவாக்கப்பட வேண்டும்.
  ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு இந்தியாவில் சாலையோரக் கடைகளில்கூட மரபணு மாற்றக் காய்கறிகள் விற்கப்படுகின்றன. விற்பவர்-வாங்குபவர் இரு தரப்பினருக்குமே அவை மரபணு மாற்றப் பயிர்கள் என்பது தெரியவில்லை. மக்கள் பரிசோதனைக் கூட எலிகளாக்கப்படுகிறார்கள்?
  இது தவறு. அரசின் அமைப்புகள் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதி அளிக்க வேண்டும்.

  இந்திய விவசாயிகளிடத்தில் விஞ்ஞானிகள் கொண்டுவந்த பசுமைப் புரட்சியில் தவறே இல்லை என்கிறீர்களா? என்ற கேள்விக்கு;

  இந்தப் பசுமைப் புரட்சி என்கிற சொல்லாடலிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்றைக்கு நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்ய நம்முடைய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்கேற்ற புதிய ரகப் பயிர்களையும் கூடுதல் மகசூல் தரும் சாகுபடி முறைகளையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளான நாங்கள் போராடினோம். நாங்கள் கண்டறிந்தவற்றைப் பரிந்துரைத்தோம். அவ்வளவுதான். அரசாங்கம் அதை நம் விவசாயிகளிடம் எடுத்துச்சென்றபோது, ஒரு கோடி டன்னாக இருந்த நம்முடைய உணவு உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயர்ந்தது. இந்திரா காந்திதான் முதலில் அதைக் கோதுமைப் புரட்சி என்றார். கோதுமை மட்டும் அல்லாமல் நெல், பயறு வகைகள் எல்லாவற்றிலும் கூடுதல் உற்பத்தியைத் தரும் ரகங்களை நாங்கள் கொண்டுவந்திருந்ததால், வில்லியம் காட் என்ற அமெரிக்கர் அதைப் பசுமைப் புரட்சி என்றார். எல்லோரும் அதைப் பிடித்துக்கொண்டார்கள். உண்மையில், புதிய ரகப் பயிர்களிடமோ, நவீன வேளாண் முறையிலோ தவறு இல்லை; தவறு என்பது அவற்றை மனிதர்களாகிய நாம் பயன்படுத்திக்கொண்ட முறையில்தான் இருக்கிறது; மனிதனின் பேராசையில் இருக்கிறது. நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி.
  -தி இந்து நாளிதழ்.12-May-2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *