ஊர்வலம்

This entry is part 24 of 26 in the series 22 பெப்ருவரி 2015

 

 

டந்த ஒரு வாரமாய் தயார் செய்த டெண்டர் டாக்குமெண்ட் பாபுவின் கையில் இருந்தது. சாலை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் அதை அவன் மாலை நான்கு மணிக்குள் டெண்டர் பெட்டியில் போட்டாக வேண்டும். அவசரம் என்பதால் ஆபீஸ் காரை கம்பெனியில் கொடுத்து இருந்தார்கள். வேகமாய் போய்க் கொண்டிருந்த அவர்கள் கார் ஒரு டிராபிக் ஜாமில் நின்று போக, அவனுக்கு கோபமாய் வந்தது.

 

“ என்ன முருகா.. ஏன் இப்படி வண்டிங்க நிக்குது..” டிரைவரிடம் கேட்க,

 

“ விஷயம் தெரியாதா உங்களுக்கு.. நம்ம முதலாளி ஐயா தான் ஊர்வலம் நடத்திக்கிட்டு வர்ராரு.” என்று டிரைவர் முருகன் சொன்னான்.

 

“ எதுக்கு..”

 

“ நீங்க இப்ப டெண்டர் போடப் போறீங்களே.. அந்த ரோடு புராஜக்டை தடை செய்யணும்னு சொல்லி..”

 

“ என்ன முருகா நீ சொல்றது.. அவரு டெண்டர் போடற புராஜக்டை அவரே வேணாம்னு சொல்வாரா..” கேட்டான் பாபு.

 

மெதுவாய்ச் சிரித்தான் டிரைவர் முருகன்.

 

“ கம்பெனி அவரு பேர்ல இல்ல.. வேறு ஒருத்தர் பேர்ல இருக்குது… அது உங்களுக்கு தெரியுமா..”

 

திகைப்பாய் இருந்தது முருகன் சொன்னது.

 

“ இருக்கட்டும்.. இந்த புராஜக்டை வேணாம்னு அவர் சொல்ல காரணம்..” .

 

“ அதுதான் பிஸினஸ். இப்படி அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சா, பயந்து போய் வேற யாரும் அதுக்கு டெண்டர் போட மாட்டாங்க… அதிக தொகைக்கு அந்த ரோடு வேலையை டெண்டர் எடுத்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம்…”

 

பாபுவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

 

அவன் இந்த தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததே, அது தன் மனதுக்கு பிடித்த ஒரு பெரிய மனிதரின் கம்பெனி என்று யாரோ சொன்னதினால் தான்.

 

எல்லாம் பொய்யா.. எல்லாம் ஏமாற்று வேலையா..

 

ஊர்வலம் போன பிறகு, அவர்கள் கார் புறப்பட்டு சாலை பராமரிப்புத் துறை அலுவலகம் வந்து சேர்ந்தது.

 

அவர்கள் கார் வந்து சேரும் போது நான்கு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது.

 

டெண்டர் பெட்டியை மூன்றாவது மாடியில் வைத்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

லிப்டுக்காக கூட்டம் நின்று கொண்டிருந்ததால், படிகளில் தாவித்தாவி ஓடி மூன்றாவது மாடிக்கு வந்து, டெண்டர் பெட்டியின் எதிரில் நின்றான். ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது.

 

திடீரென்று ஏதோ மனதில் உறுத்தியது. தன் கையில் கொண்டு வந்த டெண்டர் டாக்குமெண்டை அந்த டெண்டர் பெட்டியில் போடாமல், அங்கு இருந்த ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்தான்.

 

மணி நான்கை தாண்ட ஆரம்பித்தது. டெண்டர் டாக்குமெண்டை பெட்டியில் போடுவது இல்லை என்று முடிவு செய்தான். நான்கு மணி கடந்த பின் அந்த டெண்டர் பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே போய்விட்டார்கள். டெண்டர் டாக்குமெண்டை கையில் எடுத்துக் கொண்டு திரும்பினான் பாபு.

 

வேலை போய்விடும் என்று தெளிவாய் தெரிந்தது.

 

இருந்தாலும் அவன் மனதுக்கு திருப்தியாய் இருந்தது.

 

 

————————————————————————————————————————

Series Navigationரௌடி செய்த உதவிமருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *