விதைபோடும் மரங்கள்

This entry is part 20 of 26 in the series 22 பெப்ருவரி 2015

அந்த ஊரில் இருந்த ஒரே பள்ளிக்கூடம் அதுதான். அதுவும் இப்போதோ அப்போதோ விழுந்து விடும் நிலையில்தான் இருந்தது. மழை பொய்த்துவிட்ட காலமாகிப்போனதால் இன்னும் ஓரிரண்டு வருடங்களுக்குத் தாங்கும் என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். பெண்கள் பேச்சு வேறாக இருந்தது. அவர்கள் அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் ஒருவித அச்சத்துடனே அந்தப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் கொண்டு போனார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பில் இப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டிருப்பவர்கள், பள்ளிக்கூடம் இடிந்து போனால் அந்த இடத்தை தங்கள் விற்பனைக்குத் தோதான இடமாக தேர்ந்தெடுத்திருப்பதை அறிந்ததிலிருந்து அவர்களது பீதி இன்னும் அதிகமாகியிருந்தது. கடைசி மூச்சை விடக் காத்திருக்கும் பெரியவர்களின் அருகில் அமர்ந்து சொந்த பந்தங்கள் பிரார்த்தனை செய்வதுபோல் மனதுக்குள் அந்த ஓட்டுக் கட்டிடம் விழுந்து விடாமலிருக்க வேண்டிக் கொண்டேதான் அப்பெண்கள் அதைக் கடந்து போனார்கள்.
அந்தப் பள்ளிக்கூடம் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைக் கூட அனுப்ப அச்சப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் குறைய குறைய சாராய வியாபாரிக்கு குஷி அதிகமாகிக் கொண்டிருந்தது. சண்முக வாத்தியார் தினமும் அங்கு வந்து மாலை வரை உட்கார்ந்து போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுவே சாராய வியாபாரிக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. அவனது ஆட்கள் அடிக்கடி பள்ளிக்கு அருகாமையில் வந்து நோட்டம் விட்டுச் செல்வார்கள்
0
சண்முகம் வாத்தியாரைப் பற்றி ஊரில் பெருமிதமாகப் பேசுவார்கள். ஆனாலும் அவர்களுக்குள் ஒரு கவலை இருந்தது! சண்முகம் வாத்தியார் இந்த ஊர்க்கார்ர் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இங்கே தள்ளி விடப்பட்டவர். ஆட்சி மாறியதும் அவருக்கு மாற்றல் உத்தரவு வரலாம் என்று பேசிக் கொண்டார்கள். தேர்தலும் அருகாமையில் வந்து விட்டது. முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிச்சயம் புதிய அரசு மறு பரிசீலனை செய்யும். அப்போது  சண்முகம் வாத்தியாருக்கு விடிவு காலம் பிறக்கும்.
சண்முகம் செய்த தவறு என்ன? அவர் ஆசிரியராக இருந்த பள்ளிப்பட்டு கிராமத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஒரு கட்சி அபிமானி. அதுவும் பிரதான எதிர் கட்சி. அதனால் அவருக்கு வகுப்பெடுக்கும் வேலையெல்லாம் கிடையாது. அதோடு கட்சி வேலையாக அவரை பல இடங்களுக்கு கூட்டிப் போய்விடுவார்கள் கட்சி ஆட்கள். மீதம் இருக்கும் இரண்டே  ஆசிரியர்கள் தலையில் மொத்த பள்ளிச் சுமையும் விடியும்.
முக்கியமான பிரச்சினைகள் ஏதும் வந்தால், அதைத் தீர்க்க தலைமை ஆசிரியர் இருக்க மாட்டார். அவருக்கு அடுத்ததாக சண்முகம் வாத்தியார் தான் அவைகளைத் தீர்க்க வேண்டும். சில சமயம் அவர் எடுக்கும் முடிவுகள், கட்சி ஆட்களுக்கு எதிராக இருக்கும்.
0
மாலை வேளைகளில் உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்த சண்முகம் வாத்தியார் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்: “ நீங்க எல்லாம் மாலையில் பள்ளியில் விளையாடுகிறீர்கள் தானே?”
வகுப்பில் நிசப்தம்!
“ யார் யார் என்ன விளையாட்டு விளையாடுகிறீர்கள் என்று ஒவ்வொருவராக இங்கு வந்து சொல்லுங்கள்”
ஒருவரும் எழுந்திருக்கவில்லை! அப்போதே சண்முகம் வாத்தியாருக்கு துணுக்கென்றது. வகுப்பை கலையச் சொல்லி விட்டார்! மாலையில் பள்ளி விட்டபின் தனக்கு மிகவும் நெருக்கமான, நன்றாகப் படிக்கும் பழனியப்பனை தன் அருகே அழைத்து விவரம் கேட்டார்! கிடைத்த செய்தி அதிரச் செய்தது!
மாலையில் பள்ளி கேட்டுகள் மூடப்பட்டே இருக்கும். அதைப் பூட்டி, சாவிகளை தலைமையாசிரியர் வீட்டுக்கு சென்று கொடுத்து விட்டு கடைநிலை ஊழியரான வேலுச்சாமி வீட்டிற்கு போய் விடுவான். பள்ளியின் மொத்த விளக்குகளும் அணைக்கப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு அங்கே வர பயம். அதனால் யாரும் விளையாட வருவதில்லை.
சென்ற வருடம் மாணவர்களின் கல்வித் தரத்தை சோதிக்க வந்த அதிகாரி மிகவும் மகிழ்ந்து போய் “ எக்ஸலென்ட்! இது ஒரு மாதிரி பள்ளி. இதற்கு ஏதாவது அரசிடம் சொல்லி செய்யச் சொல்கிறேன் “ என்றார்.
உடனே தலைமை ஆசிரியர், தனக்கு தனியாக ஒரு அறையும் அதில் குளிர்சாதன வசதியும்  இருந்தால் இன்னமும் பள்ளி மேம்படும் என்றார். அதை சட்டை செய்யாத அதிகாரி, சண்முகம் வாத்தியாரை நோக்கித் திரும்பினார்.
“ மிஸ்டர் சண்முகம்! நீங்க கேட்டா  சரியாக் கேப்பீங்க.. என்ன வேணும் கேளுங்க”
“ படிப்பு முக்கியம் தான் சார்! ஆனால் அதோடு உடற்பயிற்சியும் இருந்தால் தான் மனமும் உடலும் தெம்பாகும்.. பள்ளிக்கூட மைதானத்திற்கு இரண்டு பிரகாச விளக்குகள் தந்தால் பயனாக இருக்கும் சார் “
“ வெரி குட்! மாணவர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கற ஆசிரியர்களே நல்லாசில்ரியர்கள். மற்றவர்கள் எல்லாம் செல்லா சிறியர்கள்” என்று சிலேடையாக சொல்லிவிட்டு தலைமை ஆசிரியரை ஒரு பார்வை பார்த்தார்.
அன்றிலிருந்து ஆரம்பித்தது சண்முகம் வாத்தியாருக்கு தலைவலி. எதை சொன்னாலும் ஏறுக்கு மாறாக சொல்ல ஆரம்பித்தார் தலைமை ஆசிரியர். கூடவே “ நான் மாற்றல் வாங்கிக்கறேன்.. இவனோட என்னால வேலை செய்ய முடியாது “ என்று பகிரங்கமாக கட்சி ஆட்களிடம் சொல்ல ஆரம்பித்தார்.
நாட்கள் கடந்தன. அதிகாரி நியாயவான். பல தடைகளைத் தகர்த்து அவர் அந்தப் பள்ளிக்கு பிரகாச விளக்குகளை வழங்கிவிட்டார். ஆனால் அதை பொருத்துவதற்கு தலைமை ஆசிரியர் பல தடைகள் விதித்தார். அதிக மின்சாரம் செலவாகும் என்றார். அரசில் கேள்வி கேட்பார்கள் என்றார். கட்டிடம் தாங்காது என்றார். மின்கசிவால் பள்ளியே எரிந்து மாணவர்கள் கருகிப் போவார்கள் என்று பயமுறுத்தினார்.
மைதானத்தின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த இரண்டு வேங்கை மரங்கள் இருந்தன. உள்ளூர் மின்சார ஊழியர் ஒருவர் பள்ளிக் கட்டிடத்திலிருந்து வேங்கை மரங்கள் வரை மின் கம்பி கொண்டு வர உதவினார். ஜெகஜ்ஜோதியாக இரண்டு விளக்குகளும் வேங்கை மரத்தில் பொருத்தப்பட்டன.
கோடை காலத்தில் மின்விசிறிகள் இயக்கப்படும் வகுப்பறைகள், குளிர்காலத்தில் நிறுத்தப்பட்டன. பல சமயங்களில் மாணவர்களே விசிறி வேண்டாம் என தவிர்த்து விட்டனர். மீதமான மின்சாரம் அவர்களுக்கு மாலை பயன்பட்டது.
பழனிச்சாமி, மோட்டார் போடாமல் தண்ணீர் நிரப்பும் யோசனையைச் சொன்னான். அதன்படி கேணியிலிருந்து ராட்டினம் வழியாக மேல்நிலைத் தொட்டிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. அதை முறை வைத்துக் கொண்டு மாணவர்களே இயக்கினார்கள். மாலை விளையாட்டால் அவர்களது உடல் பலம் கூடியிருந்தது. அதனால் இந்த காரியம் சாத்தியமாயிற்று.
0
பழனிச்சாமி சொன்ன விவரத்தைக் கேட்ட சண்முகம் வாத்தியார், தானே அதை நேரில் ஆராய முடிவு செய்தார். மாலையில் பள்ளிக் கேட்டுகள் பூட்டியபின் வேலுச்சாமி அதை தலைமை ஆசிரியரிடம் கொடுக்க கிளம்பினான். அவனை வழிமறித்தார் சண்முகம் வாத்தியார்.
“ என்ன வேலுச்சாமி! எங்கே கிளம்பிட்டே? “
“ ஹெச் எம் வீட்டுக்கு  சார்! சாவியைக் கொடுக்கணும்.”
“ வழக்கமா நீ அதை உன் வீட்டுக்கு கொண்டு போயிடுவே இல்லே.. இப்ப ஏன் ஹெச் எம்? “
“ நாலைஞ்சு மாசமா இப்படித்தான் நடக்குது சார். சரியா அஞ்சு மணிக்கு கேட்டை பூட்டி சாவியை தன்னாண்ட கொடுக்கணும்னு அய்யா உத்தரவு போட்டுட்டாரு.. உங்களுக்கும் தெரியும்னாரே அய்யா? தெரியாதா?”
ஏதோ சதி நடக்கிறது என்பது மட்டும் சண்முகம் வாத்தியாருக்கு புரிந்தது. ஆனால் அதில் வேலுச்சாமியை இழுக்க அவருக்கு விருப்பமில்லை.
“ ஆங்! மறந்துட்டேன்! ஆமாம் ஆமாம்! தெரியும்.. இப்ப நானே ஹெச் எம் வீட்டுக்குத்தான் போறேன்.. நானே கொடுத்திடறேன்” என்று சாவியை வாங்கிக் கொண்டார். வேலுச்சாமி மறைவது வரை காத்திருந்த சண்முகம், தன் கைக்குட்டையை எடுத்து சிக்னல் செய்தார்.
நாலைந்து மாணவர்கள் பழனிச்சாமி தலைமையில் ஓடி வந்தார்கள்.
“ டேய் பசங்களா! இன்னிலேர்ந்து மைதானம் திறக்கப் போகுது. ஒவ்வொருத்தரும் எத்தினி பேருக்கு சொல்ல முடியுமோ சொல்லி கூட்டி வாருங்கள்”
பிரபல நாளேட்டின் நிருபராக இருந்த தன் பள்ளித் தோழன் சுரேஷை வரச் சொல்லி மாணவர்கள் விளையாடுவதை படம் பிடிக்கச் செய்து, தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரி பெயர்களூடன் மறுநாள் அதை பத்திரிக்கை செய்தியாக ஆக்கிவிட்டார் சண்முகம்.
தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரியிடமிருந்து பாராட்டும் வாழ்த்தும் வந்தது. அவரால் மீண்டும் மைதானத்தை மூட முடியவில்லை. ஆனாலும் நீறு பூத்த நெருப்பாக காழ்ப்பு உறங்கிக் கிடந்தது அவரது மனதில்.
அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் வந்து அவருடைய அபிமானக் கட்சி பதவிக்கு வந்தது. சண்முகத்திற்கு மாற்றல் உத்தரவு வந்தது. மைதானம் மீண்டும் மூடப்பட்டது.
0
இங்கே..சண்முகத்திற்கு வேறு பிரச்சினை. சமூக விரோதிகளிடமிருந்து எதிர்ப்பு. ஆனாலும் அஞ்சாமல் அவர் பள்ளிக்கூடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
சாராய வியாபாரி சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ வாத்தி உத்தரத்துக்கு கீழேதான் ஒக்காந்துகினுகீறான். உத்திரம் வுழுந்தா பொட்டுனு போயிடுவான். “
எப்போ உத்திரம் விழுவது, எப்போ இடத்தை ஆக்ரமிப்பது என்ற கவலையில் இருந்த அவனுக்கு உபாயம் ஒன்று சொன்னான் ரவுடி ரங்கன் .
“ வாத்தி தலையில ஒரே போடா போட்டுருவம். அப்புறம் உத்தரத்தை தள்ளி விட்டாப் போச்சு. “
துட்டு பார்க்கும் ஆசையில் கொலைக்கும் தயாரானான் சாராய வியாபாரி.
சனிக்கிழமை நாள் குறிக்கப்பட்டது. யோசனை சொன்ன ரங்கனே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனுக்கு அதிக சாராயம் கொடுத்து உற்சாகப்படுத்தினான் வியாபாரி.
0
மாலை ஐந்து மணியாகிவிட்டதை உணர்ந்த சண்முகம் வாத்தியார் தன் புத்தகங்களை எடுத்து பைக்குள் வைத்தார். இன்று இரண்டு பிள்ளைகள்தான் வந்திருந்தார்கள். அவர்களும் ஏதோ வேலையென்று முன்னதாகவே போய்விட்டிருந்தனர்.
எழ முயன்ற சண்முகம் வாத்தியாரை கொல்ல பின்னால் தயாராக நின்றிருந்தான் வேலுச்சாமி. அவன் கையில் பெரிய இரும்புத்தடி இருந்தது. கொஞ்சம் நீளமாக இருந்தது அது. கனமும் கூட. சட்டென்று தூக்க முடியாமல், கொஞ்சம் மூச்சிழுத்து மேலே தூக்கினான். எதிலோ பட்டு அது தெறித்தது!
ஏதோ முறிந்தாற்போல் சத்தம் கேட்டு திரும்பினார் சண்முகம் வாத்தியார். உத்திரம் விழுந்திருந்தது. அதனடியில் இரும்புத்தடியோடு அசைவற்று இருந்தான் வேலுச்சாமி.
0

Series Navigationஇருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்புமனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *