வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்

This entry is part 15 of 26 in the series 22 பெப்ருவரி 2015

வாரத்தில் ஒருநாள் திருநாகேச்சுரத்துக்கு வந்துவிட வேண்டும் பாலாமணிக்கு. இந்த நாள், இன்ன மணி, இந்தக் கிழமை என்றில்லை.

ஓய்கிற நாள். ஓய்கிற வேளை. இன்று ஓய்ந்தது. இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டாள். டவுன் பஸ்ஸில்தான்.

கும்பகோணத்திலிருந்து திருநாகேச்சுரத்திற்கு டவுன் பஸ்ஸாய்ப் பறக்கிறது. மணிக்கூண்டு, மார்க்கெட், மாமாங்கக்குளம் என்று மெஸ்ஸுக்கு காய்கறியோ, மளிகைச் சாமானோ வாங்க பாலாமணி அலைகிற போதெல்லாம் திருநாகேச்சுரம் போகும் பஸ் கண்ணில் தட்டுப்படும்.

‘இன்னிக்கு ஓயல்லேம்மா. நாளைக்கு வந்துடறேன்’ என்று மனசுள் பாலாம்பிகையிடம் சொல்லிக் கொள்வாள்.

திருநாகேச்சுரத்து பஸ்காரன் கூரியர் சர்வீஸ் புறாப்போல அந்தச் செய்தியை பாலாம்பிகை யிடம் சேர்ப்பித்து விடுவான் என்று உருவில்லா நினைப்பு.

வெளியே தெரியாது. ஒருவருக்கும் சொன்னதில்லை. பனிரெண்டு வருஷமாகத் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகுகிற டாக்டர்ஆராவமுது கூட அறிய மாட்டான்.

தெரிய என்ன அவசியம்?

சாரப்பள்ளத்தை விட்டு, பிரஹதீச்வரனையும் போகசக்தி அம்மனையும் விட்டு விட்டு கையில் ஒரு சூட்கேஸும் தோளில் ஒரு தொங்கு பையுமாக குழந்தை அபயம் ஆட்டுக்குட்டி போல் பின்தொடரக் கிளம்பிய நாள் இன்ன விதம் என்று சொன்னால் புரிந்து கொள்வார்களோ?

பெருவுடையார் கோபுர விமானத்திற்கு சாரப்பள்ளத்தில் இருந்துதான் பிரமரந்திரத் தளக்கல் போயிற்றாம். அழகி என்ற கிழவி வீட்டுப் பக்கம் இருந்த கல். இருபத்தைந்தடி சதுரம்.

இங்கிலீஷ்காரன் டன் கணக்கில் எண்பது.

அங்கிருந்துதான் சாரம் கட்டி இழுத்துச் சென்றார்களாம்.

பிரஹதீச்வரனுக்கே கல் நீங்கியதும் விழுந்த பள்ளத்தின் சோகம் தாங்கவில்லை போலும். அவனே ஒப்புக் கொண்டானாம் கோவில் ராஜராஜனுடையது; ஆனால் தான் தங்கியிருப்பது அழகி வீட்டு நிழலில் என்று.

வீட்டு நிழல் விட்டு நீங்கிய பாலாமணி மனசின் பள்ளம் எத்தனை அடி ஆழம் என்று துருவ யாருக்கு அக்கறை? அவரவர் மனசில் என்னென்ன பள்ளங்களோ!

ராகு சந்நிதியில் வற்றாத கூட்டம். அவன் தலையில் வழிகிற அபிஷேகப் பாலுக்கு ஓய்வில்லை. காவிரிக் கரையில் மாடும் எருமையும் மடிமடியாய்ச் சுரந்து தள்ளுகின்றன.

அந்தப் பால் சிந்தியாவது மனசின் பள்ளம் தூர்ந்து விடாதா என்று ஜனம் தவிக்கிறது.

பாலாமணி கோவிலுக்குப் போனால் காலூன்றி நிற்க மாட்டாள். விளக்கு ஏற்றுகிறவன் ஒவ்வொரு விளக்காக ஏற்றிச் செல்வது போல ஒரு நிதான விரைவு. வேலை பார்க்கிற கரிசனம்.

சந்நிதி சந்நிதியாக ஒரு நோட்டம். மூர்த்தியின் மீது, மூர்த்திக்கு முன் நின்று கலங்கும் முகங்கள் மீது.

புறப்பட்டு விடுவாள்.

பாலாமணி திருநாகேச்சுரத்தில் இருந்தவள்தான். மூன்று வருஷம் முந்தி ஆராவமுது கும்பகோணத்தில் காரோணர் சந்நிதிக்கு எதிர்ச்சந்தில் கிளினிக் ஆரம்பிக்கிற வரை பாலாமணி மெஸ் திருநாகேச்சுரத்தில் தான்.

கும்பகோணத்தில் டவுன் பஸ்ஸிலும் சைக்கிளிலும் போய்ப் படிக்கிற பிள்ளைகளுக்காகத் துவங்கிய மெஸ்.

ஹாஸ்டல் கிடைக்காத, ஹோட்டலுக்குக் கொடுக்க வசதி யில்லாத ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்கான மெஸ். ஏழை மெஸ்.

அங்கேயிருந்து போய் ப்ளஸ் டூ படித்தவன் தான் ஆராவமுது.

ஹவுஸ் சர்ஜன்ஸி முடித்ததும் கும்பகோணத்தில் கிளினிக் திறந்தான்.

“திருநாகேச்சுரம் என்ன பாவம்டா பண்ணித்து?” என்று கேட்டாள்.

“சரி” என்று மாலை நேரத்தில் அங்கு வர இன்னொரு கிளினிக் திறந்தான்.

அவள் வீட்டு நிழலில் ஒண்டி, அவள் வைத்த வத்தக் குழம்புக்கும் வடுமாங்காய்க்கும் வீங்கி வளர்ந்த பிள்ளை. சொல் தட்டுவானோ!

ஆறுமாதம் ஓடியது அவனும் டவுன் பஸ்ஸில் ஓடி வந்தான்.

“ஸ்ப்லெண்டரா’வது யமாஹாவாவது வாங்கிக்கயேன்!” என்றாள்.

“தொழில் நன்னா பிக்கப் ஆகணுங்கறே” என்று இடக்காகக் கேட்டான் ஆராவமுது.

பாலாமணியும் காவிரித் தண்ணீரில் வளர்ந்தவள் தானே! இடக்கு மடக்கெல்லாம் பொசுக் கென்று உறைத்து விடும்.

“என்னால அலைச்சல் படறியேண்ணு சொன்னேன்!” என்று இறங்கி வந்தாள்.

“நோக்கு அலைச்சல் படலாம். நேக்கு அலைச்சல் வாண்டாமோ?”

“எந்த அலைச்சலைச் சொல்றே?”

“அடுப்படி அலைச்சல். பனிரெண்டு வருஷம்.”

அவன் சொன்னபின்தான் காலம் நினைவு வந்தது.

அதற்குப் பதில் சொல்லி யிருப்பாள். தேவையில்லை.

ஆராவமுதுக்கு எல்லாம் தெரியும். நன்னாத் தெரியும். சாதம் போடறது சந்தோஷம். திருப்தியா சாப்டுட்டு ‘பாலாமணி மெஸ்’தான் என்னோட ‘ஸ்டடி. இம்ப்ரூவ்மெண்ட்டு’க்குக் காரணம்னு சொல்லிண்டு போவாளே. அதைக் கேக்கற சந்தோஷம். இல்லே. அத விடப் பெரிசு. கும்பம் குளிர வைக்கிற சந்தோஷம்.

‘ஆராவமுதுக்கு அங்கலாய்ப்பு. எங்கிட்டே பீஸ் வாங்கிக் கட்டி, என் மூலம் முன்னுக்கு வந்துட்டு கைகால் ஓஞ்சு அக்கடான்னு உட்கார்ந்து சாப்பிட மாட்டாளாங்கற அங்கலாய்ப்பு.’

ஆனால் அவள் உட்கார்ந்து சாப்பிட மாட்டாள். அவனுக்கும் தெரியும்.

ஆராவமுது ஆறாம் மாசம் முடிவில், “அம்மா” என்று சட்டையை மாட்டிக் கொண்டே இழுத்தான்.

பாலாமணி சொந்த அம்மா இல்லை. ஒரு சொந்தமும் இல்லாதவனுக்கு அது ஒரு பெரிய சுதந்திரம். எந்த இரவல் கூட்டிலாவது தன் மனசை அக்கடாவென்று வைத்து விடலாம். ‘மாமி’ சிறிது அந்நியம்.

‘அம்மா’ அப்படியில்லை.

“என்ன?” என்று குழம்பிற்கும் ரசத்திற்கும் புளி கரைத்தவாறே கேட்டாள் பாலாமணி.

“ஜாகையைக் கும்மோணத்துக்கு மாத்தீண்டுடவா?”

“ஏன் திடீர்னு?”

“கும்மோணத்து டாக்டர் திருநாகேச்சுரம் வரலாம். திருநாகேச்சுரம் டாக்டர் கும்மோணத்துக்கு வரப்படாது.”

“அப்படி ஒரு சாஸ்திரம் இருக்கோ.”

“சாஸ்திரம் இல்லே. சம்பிரதாயம். வில்லேஜ் டாக்டரான்னு கும்மோணத்திலே நெத்தி சுளிக்கறா.”

“மருத்துவம் பாக்கறதிலேயும் வில்லேஜ், டவுன்னு பாகுபாடு இருக்குன்னு சொல்லு.”

“மருத்துவத்திலே இல்லே. நோயாளி மனசுலே இருக்கு.”

“மாத்திக்கயேன்.”

“என்ன ‘ஏ’காரத்திலே சொல்றே?”

“பின்ன எப்படிச் சொல்லட்டும்?”

“மாத்திக்கலாம்னு சொல்லு.”

“எப்படியாவது பாலாமணி கையக் காலைக் கட்டி ஒக்காத்தி வச்சுச் சாதம் போட்டுடணும் நோக்கு!” என்று கொசுவத்தில் கை துடைத்துக் கொண்டே அவனைக் குறுகுறுவென்று பார்த்தாள்.

மூக்கும் பார்வையும் நெற்றிப் பொட்டின் வட்டத்தைச் சுற்றி திமிர்ந்து நின்ற வியர்வையும் நாற்பத்தி மூன்று கடந்தும் அவள் யௌவன எழில் பாங்கு கெடாததை உணர்த்தின.

அவனுக்கு இப்படி அபூர்வ வேளையில் அபயம் நினைவு வந்துவிடும். மாடு மாதிரி நெஞ்சை முட்டும். வலிக்கும். கலங்கி விடுவான்.

அபயம், பாலாமணியின் மகள்தான். வேறு ரகம்.

அபயம் பாலாமணியைப் பின்புலமாக வைத்து வரைந்த சித்திரம். தேஜஸ் ஜாஸ்தி.அம்மா கொஞ்சம் மனுஷி, கொஞ்சம் அப்சரஸ். மகள் சுத்த கந்தர்வக் கன்னி.

பாலாமணி பார்த்தால், சிரித்தால் மனசு சற்று உதறும். தசைக் கவர்ச்சி சுண்டி இழுக்கிறதோ என்று சுதாரிக்கத் தோன்றும்.

அபயம் நிர்ப்பயமான வஸ்து. வெள்ளையாய் சிறகு முளைக்க விட்டு விண்ணிற்கு எழுப்பும் பார்வை. பால் வழியும் சிரிப்பு. பனி மலரும் வார்த்தை. நினைத்தாலே கலங்குகிறது.

“என்னடா?”

ஆராவமுது கண் கவிழ்த்தான்.

“சொல்லேண்டா!”

அவன் ஒன்றும் சொல்லாமல் சற்று நின்றான். பின் வெளியேறினான்.

பாலாமணிக்குப் புரிந்தது. ஆராவமுதுக்கு அபயம் நினைவு வந்துவிட்டது.

அது ஒரு சாரப் பள்ளம். லேசில் அகலாது.

ஆராவமுது பேதை.

“அப்பா, உப்பிலியப்பா” என்று அவன் வெளியேறிய சூன்யம் பார்த்துக் கூப்பிட்டாள்.

வயசுக்கு வந்து ஒரு வருஷம் இருந்தாள் அபயம். செவ்வாயிலும் வெள்ளியிலும் துர்க்கை சன்னிதியில் எரியும் தீபக் கொலு போல.

வெளிச்சக் கோலாகலத்திலேயே நீடித்தால் கண் மழுங்கி விடும் என்று எதற்கோ தோன்றி யிருக்கும். அது அவித்து விட்டது.

மரண காரணத்திற்கு இப்பொழுது புதிது புதிதாய் பெயர்கள். அப்போது வெறும் ஜுரம்.

ஆராவமுதுக்கு அபயத்தின் மீது நாட்டம் இருந்ததை அவள் உயிரோடிருந்தபோதே அவள் அறிவாள். இதைக் கண்டுபிடிப்பது என்ன பிரமாதம்? சுலபமாய்த் தெரிகிற விஷயம்.

அப்போது அவள் கோபப்படவில்லை.

இது எங்கு முடியும் என்றுதான் கவலை. பயமில்லை.

பாலாமணி பயப்படுகிறவள் அல்ல.

புத்தி தெரிந்த பெண்ணைப் பக்கத்தில் பாயில் உடன் படுக்க வைத்திருக்கும் பாதி ராத்திரியில், வேறொருத்தியுடன் அவள் கணவன் கையில் பாட்டிலுமாய் வந்ததைப் பார்த்தவள். மனிதன் மிருகமானதைக் கண்டவள்.

“வெளியே போய்டுங்கோ!” என்று விரல் நீட்டிப் பத்ரகாளியாக நின்றவள்.

“என்னடி பண்ணுவாய்?”

முன்னே ஓடி பாலாமணி அவர்கள் நுழைந்து வந்த கதவை விரியத் திறந்து விட்டாள்.

“ம்ம்ம்” என்று கைநீட்டி வழிகாட்டி புலி மாதிரி உறுமினாள். கதவோரம் ஒரு கடப்பாரை. அதையும் அவளையும் விசுவநாதன் மாறி மாறிப் பார்த்தான்.

“உன்னைப் பாத்துக்கறேண்டி. நீ வாடி!” என்று கூட்டி வந்தவள் தோளில் கை போட்டுத் திரும்பித் திரும்பி முறைத்துக் கொண்டே வெளியேறினான் விசுவநாதன்.

எப்படி இவர் இப்படி குப்பையானார்?

நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்!

எதுக்கு இப்படி நீசமாகணும்? மனுஷாளாலே இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழ முடியுமா?

அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின் மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

அபயம் தான் பயப்பட ஒன்றுமில்லை என்று மிஞ்சிய அச்சாணி.

பிழைக்க வழிகாட்டியது சுண்டல்.

மணிக்கூண்டு முதல் மாமாங்கக்குளம் வரை அவள் போட்ட சுண்டலை கும்பகோணம் விரும்பி வாங்கிச் சாப்பிட்டது. பயப்பட ஒன்றுமில்லை. பிழைத்துக் கொள்ளலாம்.

திருநாகேச்சுரத்துக்காரர் ஒருநாள் சுண்டல் வாங்கிச் சாப்பிட்டு விட்டு விளையாட்டாகச் சொன்ன வழிதான் ஸ்டூடண்ட்ஸ் மெஸ்.

இங்கே ஆராவமுது கிடைத்தான்.

இப்போது அபயத்திற்கு அடிபோடுகிறான். இவனும் ஆண்தானே! நல்ல பிள்ளைதான். சாது. சூட்சுமம் உள்ளவன். ஆனால் சூதுவாதில்லை.

எனினும் இவனும் ஆண்.

“ஆராவமுது, நீ ஐயங்கார். நாங்கள்ளா ஸ்மார்த்தா.”

நறுக்கென்று விஷயத்திற்கு வந்தாள் ஒரு நாள். என்னது திடீர் வேற்றுமை என்று அவன் முகம் மேலும் வெளுத்தது.

“ஏம்மா… அநாதைன்னு பூடகமாகச் சொல்றியா?”

“அதில்லே வந்து…”

நாற்காலி முதுகைப் பிடித்துக் கொண்டு ஆராவமுது கம்மென்று நின்றான்.அவன் பிளஸ் டூ முடித்து ரிசல்ட் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது.

முதுகைத் திருப்பி நெடுநேரம் முற்றத்து வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாலாமணி.

ஒரு விசும்பல் சத்தம்.

திரும்பினாள். அபயம்

ஆராவமுதையும் பாலாமணியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவள் அம்மா முகம் திரும்பவும் விருட்டென்று புழக்கடைக்குப் போனாள்.

காலடி யோசை கேட்டு நிமிர்ந்தான் ஆராவமுது. பாலாமணி அவனைப் பார்த்தாள்.

வெள்ளை வெளேரென்ற முகத்தில் கண்ணீர்ச் சாரல்.

மீண்டும் தலை கவிழ்த்து அவன் வெளியே போனான்.

‘அப்பா உப்பிலி யார் அநாதை?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். இனி தலையிடுவ தில்லை என்று முடிவு செய்தாள்.

மே, ஜூன்.

இரண்டு மாதங்கள்.

அபயமும், ஆராவமுதும் கனவு கண்ட காலம் அவ்வளவுதான். அனுமதியும் காபந்தும் இருந்த கனவு.

அபயம் போய் விட்டாள்.

ஆராவமுது அடிபட்ட குருவி போல மூலையில் விழுந்தான்.

என்னமோ ஆச்சரியம். பாலாமணி தெளிந்து விட்டாள்.

உப்பிலியப்பனையும் பாலாம்பிகையையும் ஒருமுறை போய்ப் பார்த்தாள்.

அகால இரவில் கிரௌஞ்ச பட்சிக்கு விமோசனம் கிட்டிய அஹோராத்ர புஷ்கரிணியில் மூன்று முழுக்குப் போட்டாள். அவ்வளவுதான்.

வீட்டுக்கு வந்தால் துக்கப் பூனைக் குட்டி சுருண்டு படுத்திருந்தது.

“ஆராவமுது…”

அவன் தலை தூக்கிப் பார்த்தான். கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன.

“எழுந்திரு.”

அவன் எழவில்லை.

“நல்ல டாக்டர் இருந்தா அவளைக் காப்பாத்தி இருக்கலாமாம்.”

“யார் சொன்னது?”

அவன் குரல் கம்மிற்று.

“கடைத் தெருவிலே சாமிநாது சொல்றார்.”

அவன் தலைமீது முழங்கை வைத்து விட்டதைப் பார்த்தான்.

“நீ எண்ட்ரன்ஸ் எழுது. எம்.பி.பி.எஸ். கிடைக்கும்.” அருள்வாக்கு மாதிரி சொன்னாள்.

அவன் திரும்பிப் பார்த்தான்.

“நிறைய அபயங்கள் இருக்காடா குழந்தே!” அவள் குரல் தழுதழுத்தது.

அவன் எழுந்து உட்கார்ந்தான்.

சொன்னபடி நடந்தது. எம்.பி.பி.எஸ். கிடைத்தது. கும்பகோணத்தில் ஒரு கிளினிக். திருநாகேச்சுரத்தில் ஒரு கிளினிக்.

நிறையத்தான் அபயங்கள். ஓய்வு ஒழிவில்லாமல் காப்பாற்ற வேண்டியிருந்தது. சமயத்தில் அலுப்பாய் விடும்.

அன்று மாலை தான் கும்பகோணத்துக்கு ஜாகை மாற்ற ஆராவமுது கேட்டிருந்தான்.

இரவு கடைசி பஸ்ஸில் அவள் வீடு திரும்பியபோது “ஜாகையை மாத்திக்கலாம். ஆனா…” என்று தொடங்கினாள்.

“நீ மெஸ்ஸை விடமாட்டே. அதானே.”

அவன் சட்டை பேண்டைக் கழற்றியவாறே கேட்டான்.

“கை கால் உள்ள வரைக்கும் நாலு பேருக்கு உபகாரமா இருக்கணும் ஆராமுது.”

“கும்பகோணத்திலே பார்த்திருக்கிற வீடு பெரிசு. கீழே தாராளமா மெஸ் நடத்தலாம்.”

அவள் பேசவில்லை. யோசித்து விட்டுப் பின்பு சொன்னாள்.

“நோக்கு ஒரு நல்ல ஐயங்கார் பொண்ணா பாத்து கல்யாணத்தை முடிச்சுட்டேன்னா…”

கேட்டுக் கொண்டே கைகால் அலம்பி முகம் துடைத்தான் ஆராவமுது.

“நீ ஹாய்யா மெஸ் நடத்துவே. நான் வேற நடுவிலே ஒரு தொல்லை” என்ற சொல்லியவாறு சாப்பாட்டுத் தட்டின் முன் உட்கார்ந்தான்.

சாதம் போட்டு பொறித்த குழம்பை ஊற்றினாள் பாலாமணி.

“அம்மா! விஷக்கடியை ஒருமுறை வாங்கினா போறாதோ.”

அவள் கை கரண்டியோடு உயரத்தில் நின்று விட்டது.

அவன் நிமிர்ந்தான்.

“நான் அபயத்தைச் சொல்லலே” என்றான்.

அப்பளத்தை எடுத்து வைத்தாள்.

“இது போதும்மா. வேற வேண்டாம்.”

மீண்டும் அவள் நிமிர்ந்தாள்.

நெஞ்சு விம்மிற்று.

திருநாகேச்சுரத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போதே மனசில் கலக்கம். இன்று என்னமோ நடக்கப் போகிறது!

நினைப்பிற்கும் நடப்புக்கும் ஒரு துரித சம்பந்தம் சில வேளையில் அமைந்து விடுகிறது.

“பாலாமணி”

யாரோ கூப்பிட்டார்கள்.

லாரி ஒன்று நின்றிருந்தது. தெருவிளக்கு தள்ளியிருந்ததால் முகம் தெரியவில்லை. லுங்கி தெரிந்தது.

“பாலாமணி…”

பரிச்சயமான குரல்.

யார்? கணவன் விசுவநாதனா?

ஒரு மின்னல் கொடியோடுகிற நேரம், மெஸ், ஆராவமுது அபயம் என்று மனசில் எல்லாம் பளிச்சிட்டன.

சரசரவென்று யோசித்து படீரென்று முடிவுக்கு வந்தாள். சாலைத் திருப்பத்துச் சந்தில் நுழைந்து மூச்சு வாங்க ஓடினாள். இருள் தங்கிய ஒரு வீட்டுத் திண்ணையில் மறைந்து நின்று கொண்டாள்.

“பாலாமணி,” “பாலாமணி” கூப்பிட்டுக் கொண்டே ஒன்றுக்கு இரண்டு முறை ஓர் ஆணுருவம் அந்தச் சந்தில் ஓடிவந்து இடமும் வலமும் பார்த்து நடந்தது. ஐந்து நிமிஷம் அவள் மூச்சை அடக்கி நின்றாள்.

ஒரு தெருநாய் குலைத்தது.

சாலையில் நின்ற லாரி ஹார்ன் ஓசை கேட்டது. விட்டு விட்டு மூன்று முறை.

மேலும் சிறிது நேரம் கழிந்தது. நடமாட்டமில்லை. திரும்பிப் போயிருக்க வேண்டும்.

“போலாம் ரைட்!” என்று ஒரு சாலைக்குரல். அடுத்த சில விநாடியில் லாரி கிளம்புகிற ஒலி.

பாலாமணி சாலைக்கு வந்தாள்.

யாரோ யாரையோ கேட்டார்கள்.

“டிரைவர் ஃபுல்லா இருக்கான். தடுமாறிட்டிருக்கான்.”

“யாரையோ கூப்பிட்டானே.”

“ஆமாம்… வாடா மணி… வாடா மணின்னான். ஒம் பேரு மணியாச்சே. ஒன்னைக் கூப்பிட்டறான்னு நினைச்சேன்.”

“குசும்புடா ஒனக்கு! இந்த லோடிலே போறானே இவன் போய்ச் சேருவானா…?”

“பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்குச் சாமான் போவுது. போயிடுவான்… போயிடுவான்.”

பாலாமணி திரும்பிப் பார்த்தான்.

தூரத்தில் போகும் லாரியின் சிவப்பு விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

“பிரஹதீஸ்வரா” என்று தனக்குள் கூவிக் கொண்டாள்.

லாரியின் கியர் மாறும் ஓசை துல்லியமாகக் கேட்டது.

——————————————————————–

Series Navigationபலிசிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *