சுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 26 in the series 22 பெப்ருவரி 2015

 

செ. நடேசன்

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சுற்றுச்சூழல்பற்றிய 15 கட்டுரைகளைத் தொகுத்து 64பக்கங்கள் கொண்ட ’மேகவெடிப்பு’ என்ற நூலாக பொள்ளாச்சி எதிர்வெளியீடு வெளியிட்டுள்ளது. 10 நாவல்கள், 15சிறுகதைத்தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்பு உட்பட 40 நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  சுற்றுச்சூழல் பற்றி மிகவும் அக்கறை கொண்டவர்.அவரது எல்லா எழுத்துக்களிலும் அடிநாதமாக இந்த அக்கறை இழையோடிக்கொண்டே இருப்பதை இவரது எழுத்துக்கள் எல்லாவற்றையும் படித்தவர்கள் அறிவார்கள். இந்த நூல் இந்தப்புவனத்தின்மீதும், மானுடத்தின்மீதும், நமதுஅடுத்த தலைமுறைக் குழந்தைகள்மீதும் கவலை கொண்டுள்ள நமது உணர்வுகளை எதிரொலிக்கிறது.

1.முதல்கட்டுரைமேகவெடிப்பு : கடந்த 2014ஜூன்14 அன்று உத்தரகண்டில் 340மிமி மழைகொட்டிப்பல உயிர்களைப்பழிவாங்கியது. ‘மனிதப்பிணங்கள் மட்டுமல்ல, கால்நடைகளும் பிணங்களாக மிதந்துசென்றன. சிவபெருமானின் சிலை வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டே இருந்தது. “சாம்தாம்கள்” என்று அழைக்கப்படும் நான்கு புனிதத்தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பிணக்காடாக மாறின. இந்த இயற்கை அவலத்தை சுப்ரபாரதிமணியன் படம்பிடித்துக்காட்டுகிறார். இதற்குக் காரணம் என்ன?

இதோ அவரே கூறுகிறார்.:”உத்ரகாண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாகக் காடழிப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நிலச்சரிவும்,  நிலஅபகரிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.தொடர்ந்த யாத்ரிகர்களின் வருகையும்,போக்குவரத்தும் இமாலயத்தவறுகளாய் அடிக்கட்டமைத்து இமாலயசுனாமியை உருவாக்கிவிட்டன”.

”இயற்கையை நாம் நிராகரித்து வருவது எச்சரிக்கையாகிக் “கோடைவெடிப்பாகி” அதிரவைத்துவிட்டது’ என்கிறார் சுப்ரபாரதிமணியன்.

2.இரண்டாவது கட்டுரை இயற்கைவேளாண்விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மறைவின்போது இவர் எழுதிய “காலம் தந்த வேளாண்போராளி” என்ற கட்டுரை. நம்மாழ்வார் பசுமைப்புரட்சி ஏற்படுத்திய மோசமான விளைவுகளையும், இரசாயனம் சார்ந்த உரங்கள், பூச்சிமருந்துகள் ஆகியவற்றை எதிர்த்து நடத்திய விழிப்புணர்வு வேள்வியையும் விளக்கமாக நம்முன் வைக்கிறது. “சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கப் பல ஆயிரம் இளைஞர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் என்று நமக்கு திசைவழியை இந்தக்கட்டுரையில் சுப்ரபாரதிமணியன் சுட்டிக்காட்டுகிறார்.

3.வெப்பத்துள் கருகும் மனிதன் என்ற மூன்றாவது கட்டுரை “மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் ஏற்படும்’ என்பது மாறிப் பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக யுத்தம் வரும் என்ற புதுக்கருத்து நிலைகொள்ள ஆரம்பித்துள்ளதை விவரிக்கிறது. பருவ நிலைகளும், பருவமழைகளும் தாறுமாறாய் மாற வெள்ளமும் வறட்சியும் நாணயத்தின் இருபக்கங்கள்போல மாறிமாறி அலைக்கழித்துவருவதைப் படம்பிடித்துக்காட்டுகிறது.

  1. ஹயான்சூறாவளி என்ற நான்காவது கட்டுரை 7000 தீவுகளைக்கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில்2013 நவம்பரில் அந்த நாட்டையே நிலைகுலையவைத்த சூறாவளிப்புயலுக்கான காரணங்களை எடுத்துக்கூறுகிறது. பருவ நிலை மாற்றமும், வெப்பமும் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல:உலகம் முழுவதும் மக்களின் வாழ்வையும் நிலைகுலைத்துவருவதைப் பல நாடுகளின் அனுபவங்களோடு கூறுகிறது.
  2. இந்தோனேஷியப்புகை என்ற 5ஆம் கட்டுரை 2013 ஜூனில் மக்கள் மூச்சுத்திணறி அவதிப்பட்டதைக் கூறுகிறது. இந்தோனேஷியாவின் சுமத்ரா வனப்பகுதியில் பிடித்த தீ 10 நாட்கள் சிஙகப்பூர், மலேசிய நாடுகளையும் பாதித்தது. மலைகளில் உள்ள வனப்பகுதிகளை அழித்து எண்ணெய் பணப்பண்ணைகளை அமைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வைத்த தீயால் கரியமில வாயுவை அதிகரிக்கச்செய்து மக்களை முக்காடு போடவைத்துள்ள அவலம் இங்கு அம்பலமாகிறது.
  3. புதுவிலங்கு என்ற ஏழாவது கட்டுரை பூமிவெப்பமயமாதலும், காடழிப்பும், பருவ நிலைமாற்றமும் பல அரிய உயிரினங்களை அழித்துவரும் நாளில்  இந்த நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ‘டாப்ரியேல் கபோமணி’என்ற புதிய விலங்கு 2013ல் உலகுக்குத் தெரியவந்துள்ளதை கூறுகிறது. மனிதன் தோன்றுவதற்குமுன் தோன்றிய விலங்குகள் உணவுக்காகவும், மருந்துக்காகவும், தோலுக்காகவும் வேட்டையாடி அழிக்கப்பட்டுவருகின்றன. மனிதன் அழிந்தபின்னும் இந்த உலகில் உயிருடன் இருக்கக்கூடியவை கரப்பான் பூச்சிகள் மட்டும்தானாம்!

6.காடழிப்பு 8. நிலக்கரிக்கு டாட்டா, 9.கூகுளின் உலக்க்காடுகள் நிலப்படம், 10.கதிரியக்கப் பேராபத்து, 11 வேண்டாம் கார், 12. மீத்தேன், 13. கரியாகும் கரியமில வாயு 14. கெயில் எரிவாயுத்திட்டம் ஆகிய கட்டுரைகள் மத்திய மாநில அரசுகள் பன்னாட்டு பகாசுர நிறுவங்களின் சேவகர்களாக மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்தத் துடிப்பதை ஆதங்கத்துடன் கூறுகின்றன.

நூலதிர்வு என்ற 15ஆவது கட்டுரை இவரை அதிர வைத்த இரு நூல்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. 2008ல் மறைந்த பேரா.ஜான்சி ஜேக்கப் வாழ்க்கை பற்றிய ‘என் வாழ்க்கை தரிசனம்- இயற்கையை இசைந்த பெருவாழ்வு குறித்து’ என்ற நூல் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் பிறந்து சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் விலங்கியல் துறைத்தலைவராகப் பணிபுரிந்து ‘ இயற்கையுடன் இருத்தல்’ என்னும் முகாம்களை நடத்திய, நூல்களை மொழிபெயர்த்த  இயற்கை வாழ்வைக்கடைபிடிக்க முக்கியத்துவம் அளித்த மனிதாபிமானம் மிக்க நிகழ்வுகள் பலவற்றை மீட்கின்றன.

இரண்டாவது நூல் காலச்சுவடு பதிப்பகம் எஸ்.ராமனின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ள ’பச்சை விரல்’ என்ற தயாபாயின் சுயசரிதை நூல். இந்த நூல் சுப்ரபாரதிமணியனின் ‘புத்துமண்’ போல காவல்துறை, அதிகாரவர்க்கத்தின் பல்வேறு அடக்குமுறைக்கும், வன்முறைக்கும் ஆளான  ஒருவரின் அனுபவங்களை எடுத்துக் கூறுகின்றன.

சுப்ரபாரதிமணியனின் எழுத்துக்கள் யதார்த்தவாழ்வின் வெளிப்பாடுகளாக நம்முன் விரிகின்றன. சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி அவற்றுக்குத் தீர்வுகாண நம்மை அழைக்கின்றன. சங்கராபரணம் என்ற திரைப்படத்தில் வரும் இசைக்கலைஞர் சோமயாஜுலு தூங்கும்போதுகூட அவரது சரீரத்திலிருந்து இசை வெளிப்படுவதை ஒருகாட்சியில் காணலாம். அதுபோல சுப்ரபாரதிமணியனின் எந்த எழுத்திலும் அவரது சுற்றுசூழல் கவலை த்தும்புவதை நாம் காணலாம். மேகவெடிப்பு அதில் ஒருபகுதி.

இதுதொடர்பாக ஹெலனா நோர்பெர்க் ஹோட்ஜ் தயாரித்த  ‘மகிழ்ச்சியின் பொருளாதாரம்’ ‘எகனாமிக்ஸ் ஆஃப் ஹேப்பினஸ்’ என்ற 1 மணிநேரத்திரைப்படத்தை உங்களுக்கு நினைவு படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

இந்தப்பூமியில் மிக உயரத்தில் உள்ள மக்கள் வாழிடங்களில் ஒன்றான மேற்கு இமயமலையில் உள்ள ‘குட்டிதிபெத்’ஆன லடாக் உள்ளது. இதுபல நூற்றாண்டுகளாக வெளிஉலகம் அறிந்திராத, தனிமைப்பட்ட வெகுதொலைவில் உள்ள மலைப்பகுதி. அண்மைக்காலம்வரை லடாக்கியர்கள் விவசாயம் மற்றும் உள்ளூர் வியாபாரம் மூலம் தங்களைத் தக்கவைத்துக்கொண்டார்கள் இதுஒரு வாழ்க்கைமுறை. உள்ளூர்சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

1970களிம்மத்தியில் லடாக் திடீரென வெளியுலகுக்குள் வீசியெறியப்பட்டது. மானிய உதவிபெற்ற சாலைகளின்வழியாக, மானிய உதவிபெற்ற எரிபொருள்களால் ஓடும் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மானிய உதவிபெற்ற விலைமலிவான உணவுகள் லடாக்கின் உள்ளூர்ப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தன. பூலாஒஅ சொர்க்கமாக இருந்த லடாக் இன்று அந்தமக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம்,மொழி, நாகரிகம், ஆகியவற்றை இழந்து நரகமாக மாறியுள்ளது. இந்தத்தலைகீழ் மாற்றத்திற்கான காரணங்களைப் இந்தப்படம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் நேர்முகப்பேட்டிகளோடு விளக்கமாக்க் காட்சிப்படுத்துகிறது.

திருப்பூர் இன்று 20,000கோடி அந்நியச்செலாவணியை ஆடைகளின் ஏற்றுமதிமூலம் ஈட்டி ‘டாலர் சிடி’ என்ற பெருமையைப்பெற்றுள்ளது.இன்னும்சில ஆண்டுகளில் ஏற்றுமதி இலட்சம்கோடி டாலர்களாக உயர்க்கூடுமாம். இது ஒருமுகம். மறுமுகம்? நொய்யல் நதி எங்கே? பொன்விளைத்த விவசாய நிலங்கள் தரிசாகக் கிடப்பது ஏன்? நிலத்தடிநீரும் கெட்டுக் குடிநீருக்குக்கூட அவதிப்படும் நிலை ஏன்? மரம்,செடி, கொடிகளும் அழிக்கப்பட்டுச் சுவாசிக்கும் காற்றும்கூட மாசுபட்டிருப்பது ஏன்?

திருப்பூரின் ஏற்றுமதியாளர்களே, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் சொத்துக்கள் எவை? மலைவாசஸ்தலங்களில் நீங்கள் வங்கிக்குவித்துள்ள ஆடம்பர பங்களாக்களா? ஒருகோடி, இரண்டுகோடி மதிப்புள்ள ஆடம்பரக் கார்களா? வாங்கிப்போட்டுள்ள நிலம் நீச்சுக்களா? வங்கிகளில் குவித்துவைத்துள்ள பணமா? நகை நட்டுக்களா?

உங்கள் வாரிசுகள் மூச்சுவிடுவதற்குக்கூட பிராணவாயு இல்லாத சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டு, உங்களுக்குப்பின் நீங்கள்விட்டுச்செல்லும் சொத்துக்கள் அவர்களை உயிர்வாழ விடுமா? நம்குழந்தைகள் மகிழ்வோடுவாழ இயற்கைச் செல்வங்கள் உள்ள பூமியை விட்டுச்செல்வதுதானே அவர்களுக்கு உண்மையான சொத்து?

இத்தகைய கேள்விகளை எழுப்பி மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் மகத்தான பணியைச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் செய்துவருகிறார்கள். அந்தப்பணியில் தொடர்ந்துசெல்ல சுப்ரபாரதிமணியனின் எழுத்துக்கள் நம்மைத்தூண்டுகின்றன.

மனிதனின் பேராசையால் ஏற்படும் இயற்கையின் சீற்றங்கள் விளைவிக்கும் அவலங்களையும், அழிவுகளையும் மனிதகுலம் கடந்துசெல்ல இந்த எழுத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.ஏற்படுத்தும்.

Attachments area

Preview attachment DSC00087.JPG

Series Navigationமிதிலாவிலாஸ்-3நடுவுல கொஞ்சம் “பட்ஜெட்டை”க்காணோம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *