[திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து]
கவிதையைப் பற்றிக் கூற வந்த கண்ணதாசன் ஒரு முறை சொன்னார். ”உண்மை கால், பொய் கால், ஒளிவு கால், மறைவு கால் சேர்ந்ததுதான் கவிதை”. திலகனின் ’புலனுதிர்காலம்’ கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வந்தது. மேற்கூறிய அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக திலகன் தன் கவிதைத் தொகுப்பை முன்வைத்துள்ளார்.
ஒரு படைப்பாளனின் படைப்பு எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதை இப்போது புறக் காரணிகள்தாம் தீர்மானிக்கின்றன. ”உன் குழந்தை எனக்குப் பிடிக்க வில்லை. அதைக் கொன்று விடு” என்று கூச்சலிடும் தீவிரவாதக் கருத்தாளர்கள் இப்போது இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்து ராஜாங்கம் நடத்தத் தீர்மானித்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் தன் கவி மனத்துக்குப் பிடித்ததையெல்லாம் திலகன் கவிதையாக்கி உள்ளார். குறிப்பாகக் கடவுள் பற்றிய அவர் கவிதைகளைச் சொல்ல வேண்டும். கடவுளைப் பற்றி ஆறு கவிதைகள் உள்ளன. அவர் கடவுள் பற்றி வெளிப்படையாக எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஒரு பூ தானாக மலர்வது போல கடவுள் பற்றி இவர் கவிதைகளைப் படிக்கும் வாசகன் தன் மனத்தில் கருத்துருவாக்கிக் கொள்ள வேண்டும். கடவுள் வடிவில்தான் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வயோதிகர்கள் எல்லாரும் இருப்பதால் இவர் கேட்கிறார்.
”கடவுளர்கள் / பூமியிலேயே தங்கி விட்டதால் / காலியாக இருக்கிறதோ / கடவுளின் நாற்காலி”
ஆகக் கடவுள் என்றால் அன்புடையவன், பிறர்க்கு உதவி செய்யும் அருள் மனம் கொண்டவன் என்பது புரிகிறது. இது கடவுள் பற்றிய உடன்பாட்டுக்கருத்து என்று எடுத்துக் கொண்டால் நாற்பது பெண்களைக் கடவுள் மணம் செய்வது கடவுளின் கல்யாண குணம் எனக் கருதியவன் அதைப் பயன்படுத்துகிறான் என்பதில் எள்ளலைக் காண முடிகிறது. ”பரலோகத்திலும் / பூலோகத்திலும் / நீக்கமற நிறைந்துதான் இருக்கிறது / இந்த கல்யாண குணங்கள்
என்ற கவிதை அடிகளில் பரலோகத்திலும் என்ற சொல்லாட்சி முக்கியமானது.
குழந்தைகள் பற்றிய இரு கவிதைகள் கவனத்துக்குரியன. குழந்தைகளிடம் இருக்கும்போது நாமும் குழந்தையாகிட வேண்டும். அப்போதுதான் அவர்களுடன் ஒன்றிணைய முடியும். கவிஞர் தன் பால்ய காலத்துக்குப் போகிறார். அதைப் பறவையாக்குவது நல்ல உவமை. ஏனெனில் காலம் ஒரு பறவையைப் போன்றது. அது எப்போதும் பறந்து கொண்டேதான் இருக்கும். அந்தக் காலம் கூட குழந்தையிடம் இருக்கும்போதே மனைவியிடமும் குடிகொள்கிறது. இப்போது குழந்தை தன்னுடன் ஒருங்கிணைந்தவரைப் பார்த்துச் சிரிக்கிறது. ஆனால் இவருக்கோ காலம் பறந்து போகிறதே என்று கவலை. அதனால் இப்படி எழுதுகிறார்.
”பேசத் துடிக்கும் காலத்தின் / வாயைப் பொத்துகிறேன் நான்”
குழந்தைகளுக்கு எப்பொழுதும் புனைவுகள்தாம் பிடிக்கும். நாம் குரங்காக யானையாக மாறி அவர்களிடம் விளையாடுவது அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அது எங்கே கொண்டு போய்விடும் என்றால் நாம் மனிதனாக இருந்து விளையாடுவது அவர்களுக்குச் சலிப்பூட்டும் அளவுக்குப் போய் விடும் என்பதால்தான் இந்த அடிகள் வந்துள்ளன.
”சலிப்பூட்டும் மனிதனாக இருப்பதை விட / சிரிப்பூட்டும் மிருகமாக இருந்து விடவே விரும்புகிறேன் நானும்”
ஒருவகையில் இந்த அடிகள் இன்றைய வாழ்வையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எல்லாருக்குமே வாழ்க்கை ஒரே மாதிரியாய் இயந்திரத்தனமாய் பொருளியல் சூழலால் நடத்தப்படுவதால் வாழ்வு சலிப்பூட்டுவதாகத்தானே இருக்கிறது. மிருகத்துக்கு இருக்கும் நிம்மதிகூட இன்று மனிதருக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது கவிதை.
“உலக உருண்டையும் தாங்கு கம்பியும்” கவிதை வாழ்வின் ரணங்களை மிகவும் மென்மையாய்ச் சொல்கிறது. பிறர் செய்யும் செயல்களுக்கு நாம் ஆட்பட வேண்டியிருக்கிறது. அதுபோல அவர்களின் துன்பங்களையும் சில நேரங்களில் நாம் சுமக்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் மாற்றாரின் குணங்களை நாம் அனுசரித்துக் கொண்டு போக வேண்டி இருக்கிறது. நம்முடைய செயல்கள் அவர்களுக்குத் துன்பம் தராதபடியும் அவர்களின் செயல்பாடுகள் நம்மை சிரமப்படுத்தாமலும் இருக்க எல்லை வகுக்கத்தான் வேண்டி இருக்கிறது.
உலக உருண்டையைப் பிரச்சனைகளாகக் கொண்டால் தாங்கு கம்பிக்கு ”அதன் சுழற்சியைப் பொறுத்துக் கொள்வதைத்தவிர வேறு என்னதான் வேலை” என்று கவிஞர் கேட்கிறார். கம்பியின் கடமை தாங்குவது என்பது நல்ல அறிவுறுத்தல். இதையேதான் ”வரலாற்றுக்குத் திரும்புதல்” கவிதையின் இறுதியில் “வரலாற்றில்தானே வாழ்ந்து தொலைக்க வேண்டி இருக்கிறது’ என்று இவர் எழுதுகிறார்.
”புத்தகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்” கவிதை படிக்கும்போது “மாதொருபாகன்” நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
’இந்தியாவின் காலடியில் கழட்டி விடப்பட்ட ஒற்றைச் செருப்பைப் போல அறுந்து கிடக்கிறது எங்கள் தேசம்’ என்ற ஈழக்குரல் பல்வேறு சிந்தனைகளை எழுப்புகிறது. ஆமாம்! எல்லாம் முடிந்து விட்டது. இனி அறுந்துபோன செருப்பால் என்ன பயன் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. என்ன செய்யலாம் பாரி மகளிர் பாடியதுபோல “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார்; என் குன்றும் பிறர் கொளார்” என்று பாடி நம் மனத் துயரை ஆற்றிக் கொள்ளலாம்.
”கவிதைக்குள் நகரும் கடிகார முள்” மற்றும் ”தன்னையருந்துமோர் தடாகம்” ஆகிய கவிதைகள் அடுக்குக் கவிதைகளாக நிற்கின்றன. அவற்றின் மையம் நெஞ்சில் நின்றாலும் கூறிய முறை வேறு விதமாக இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஆக திலகனின் ’புலனுதிர் காலம்’ ஒரு மலர்ப் பூங்காவினுள் நுழையும் போது நாம் காணும் பலவகைப் பூக்களை நுகரும் அனுபவத்தை நமக்கு அளிக்கிறது என்று துணிந்து கூறலாம்.
[ புலனுதிர் காலம்—கவிதைத் தொகுப்பு—திலகன்—வெளியீடு : புது எழுத்து, 2/205, அண்ணாநகர், காவேரிப்பட்டினம்—635 112.—பக்கங்கள் : 78—விலை : ரூ 70/ ]
=================================================================================
- பாரம்பரியத்தை பறைசாற்றும் கல்வெட்டுக்கள்
- மதநல்லிணக்கத்தின் சின்னமான நாகூர்
- மிதிலாவிலாஸ்-4
- அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்
- தொடுவானம் 57. பெண் மனம்
- தொலைக்கானல்
- ஆத்ம கீதங்கள் –18 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! மறுபடி நீ மணமகன் ஆயின் ..!
- வார்த்தெடுத்த வண்ணக் கலவை – திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து
- வெட்கச் செடியும் சன்யாசி மரமும்
- வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி
- தப்பிக்கவே முடியாது
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 4
- காக்கிச்சட்டை – சில காட்சிகள்
- ஒவ்வொன்று
- சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்