சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள் தரப்பட்டிருந்து. அவற்றில் சரியான ஒரு விடையைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. தவறான விடை தந்தால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்! சுலபம்தான். ஆனால் படித்து பார்க்கும்போது ஐந்தும் சரியான விடைபோன்று தெரியும். அதுதான் சிக்கல். நான் நிதானமாக ஒவ்வொரு பதிலையும் படித்துப் பார்த்து எனக்கு சரி எனப்பட்டதை தேர்ந்தெடுத்தேன். விடை தெரியாவிட்டால் பதில் சொல்லாமல் விட்டு விடுவதே நல்லது. தவறாக சொல்லி மதிப்பெண்களை ஏன் இழக்க வேண்டும்? ஒரு வகையில் எனக்கு கவலை இல்லை. இதில் தேர்ச்சி பெற்றால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அங்கு ஒரு வேளை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தால்தான் வாய்ப்பு அதிகமாகும். தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை. மருத்துவத்தை அதோடு மறந்துபோக வேண்டியதுதான். இருக்கவே இருக்கிறது தமிழ் இலக்கியம்! அதில் சேரவேண்டுமென்று இந்நேரம் வெரோனிக்கா பிரார்த்தனைகூட செய்துகொண்டிருப்பாள்.
தேர்வு எழுதுகிறேன் என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் கிடு கிடுவென்று அந்த ஐநூறு கேள்விகளுக்கும் பதில் தந்துவிட்டு தேர்வு நேரம் முடிவதற்குள் வெளியேறிவிட்டேன்! மற்றவர்களில் பெரும்பாலோர் இன்னும் எழுதிக்கொண்டுதான் இருந்தனர்.
மிகுந்த ஆர்வத்துடன் தாம்பரம் திரும்பினேன். அத்தை வீட்டில் மதிய உணவு தயாராக இருந்தது. அத்தை மகள் ஆர்வத்துடன் உணவு பரிமாறி மகிழ்ந்தாள். தேர்வு பற்றி கேட்டாள். சுலபமாக இருந்தது என்றேன். நிச்சயம் நீங்கள் பாஸ் செய்துவிடுவீர்கள் என்றாள். அவளுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. அப்போது டாக்டர் அத்தான் என்று அழைக்கலாம் அல்லவா ?
கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கினேன். மாலையில் வெரோனிக்கவைப் பார்க்க புறப்பட்டேன். அவள் நிச்சயம் எனக்காகக் காத்திருப்பாள் நான்தான் முன்பே கடிதம் எழுதியிருந்தேனே.
அவளின் தாயார் என்னை மிகுந்த அன்புடன் உபசரித்தார். அவளுடைய தந்தையும் அன்பாகப் பேசினார். தங்களுடைய மகள் நெருங்கிப் பழகும் கல்லூரித் தோழனைப் பற்றி அவர்கள் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் விருந்துபசரிப்பது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டியது. அவள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலித்தது. ஒரு வேளை நாங்கள் இருவரும் வேதாகமம் தொடர்புடைய ஓய்வு நாள் பள்ளியுடன் தொடர்புடைய நண்பர்கள் என்பதால் அந்த நம்பிக்கை கொண்டிருக்கலாம். கடவுளின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் தவறான வழியில் செல்லமாட்டோம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.
சிற்றுண்டியும் தேநீரும் பரிமாறினார்கள். அன்று எழுதிய தேர்வு பற்றி கேட்டார்கள். நன்றாக எழுதியதாகச் சொன்னேன்.
” மெடிக்கல் கிடைக்கணும் என்று நான் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கிறேன். ” அவளின் தாயார் கூறினார். அவளைப் பார்த்தேன்.அவள் புன்னகைத்தாள். நிச்சயம் அவள் மருத்துவம் கிடைக்கக் கூடாது என்றுதான் வேண்டியிருப்பாள்.
அறைக்குள் புகுந்து சேலை அணிந்துகொண்டு வெளியில் செல்ல தயாரானாள். அதைப் புரிந்துகொண்ட பெற்றோர் இரவு உணவுக்குள் திரும்பிவிடச் சொன்னார்கள்.
” பரவாயில்லை அம்மா. நாங்கள் வெளியில் சாப்பிடப்போகிறோம் ” அவள் கூறினாள் .
” ஆமாம். மவுண்ட் ரோடு வரை செல்ல வேண்டும். அப்படியே சாப்பிட்டுவிட்டு திரும்புகிறோம். ” நான் கூறினேன்.
வீட்டை விட்டு வெளியேறி வேகமாக தாம்பரம் இரயில் நிலையம் சென்றோம். அங்கு மின்சார இரயில் நின்றது. கூட்டம் அதிகமில்லை. அருகருகே அமர்ந்து கொண்டோம். இரயில் புறப்பட்டது. அரை மணி நேரத்தில் சென்னை பூங்கா நிலையம் வந்துவிட்டது.
ஆட்டோ மூலம் மெரினா கடற்கரை சென்றோம். அங்கு கரையில் இருந்த ஒரு தனிப் படகின் அருகே மணல் பரப்பில் அமர்ந்தோம்.
அப்போதுதான் , ” எப்படி இருக்கீங்க? ” என்று ஆவல் பொங்க கேட்டாள்.
” நான் அப்படியே .இருக்கேன். நீ எப்படி இருக்கே? ” நான் பதிலுக்குக் கேட்டேன்.
” நானும் அப்படியேதான் இருக்கேன். ” இது அவளின் பதில்.
” அந்த ” அப்படியே ” என்பதின் அர்த்தம் தெரியாமலேயே அவ்வாறு கூறிக்கொண்டோம். ”
” எப்படி எழுதினீர்கள்? ”
” எழுதுவதற்கு ஒன்றுமில்லை.’ டிக் ‘ தான் அடிக்கணும். எது பற்றியும் யோசிக்காமல் கிடு கிடுவென்று டிக் செய்துவிட்டு வெளியேறிவிட்டேன்.”
” இதில் பாஸ் ஆனதும் மெடிக்கல் கிடைத்துவிடுமா? ”
” இல்லை. அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவேண்டும். என்னை அழைப்பார்களா என்பது தெரியவில்லை. அகில இந்திய ரீதியில் மொத்தம் நூற்று இருபது பேர்களைத்தான் அழைப்பார்கள்.அவர்களில் நான் ஒருவனாக இருக்க வேண்டும். அவர்களில் அறுபது பேர்களை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும். அப்போதுதான் மருத்துவம். இல்லாவிட்டால் இலக்கியம். ”
” இடம் இல்லாவிட்டால்தான் இலக்கியம்! எனக்காக இல்லை! அப்படித்தானே? ”
” ஆமாம். அப்படிதான். இது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கட்டம். நான் இங்கு வந்ததே மருத்துவம் பயிலத்தான்.என் அப்பாவின் கனவு அது …”
” உங்கள் கனவு? ”
” எனக்கும் அந்த ஆசை உள்ளது. ஆனால் இங்கு வந்தபின்… தமிழ் வகுப்புச் சென்றபின்… உன்னைக் கண்டபின்…இலக்கியம் மீதும் ஆர்வம் பிறந்துள்ளது! இந்த இரண்டில் எது கிடைத்தாலும் சரிதான்.”
அவள் பதில் பேசவில்லை.
அவளின் மனநிலை எனக்குப் புரிந்தது. உனக்காக மருத்துவம் பயில்வதை தியாகம் செய்துவிடுகிறேன் என்று நான் சொல்வேன் என்றுகூட அவள் எதிர்பார்த்திருக்கலாம். மருத்துவம் கிடைக்காவிட்டால்தான் நீ என்று சொன்னது போன்றிருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?
பாவம் அவள்! தெரிந்தோ தெரியமலோ என்மீது தன்னுடைய மனதைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறாள்!
இந்தக் காதலே இப்படித்தான்! எவ்வளவுக்கு எவ்வளவு துடிப்பு இருக்குமோ அதே அளவுக்கு தவிப்பும் இருக்கும்!
- மிதிலாவிலாஸ்-5
- கவிதைகள்
- ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்
- நப்பின்னை நங்காய்
- வைரமணிக் கதைகள் -6 ஈரம்
- பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை
- தொடரகம் – நானும் காடும்
- ஒரு தீர்ப்பு
- தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !
- விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு
- உயரங்களும் சிகரங்களும்
- ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]
- தொடுவானம் 58. பிரியாவிடை
- பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்
- என் சடலம்
- சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு
- யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)
- மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை
- திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்
- பேருந்து நிலையம்
- நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 5