இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 32 in the series 29 மார்ச் 2015

முனைவர் எச். முகம்மது சலீம், சிங்கப்பூர்

ramakannabiran
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமிடையே உருவான ஆக்கபூர்வமான அரச தந்திர உறவுகளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவருகின்றன. இருநாட்டு அரச தந்திர உறவின் பன்முகத்தன்மையினை பிரதிபலிப்பதுபோல இருநாட்டு இலக்கியப்படைப்பாளிகளின் பங்களிப்பும் இந்நிகழ்வுகளில் கவனம் பெற்றன. இதன் தொடர்பில் கடந்த பெப்ருவரி 14-22 தேதிகளில் புது டில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகச் சந்தை 2015ல் சிங்கப்பூர் நூற்கள் சில வெளியீடு கண்டன. இந்நிகழ்வில் சிங்கப்பூர் தமிழிலக்கியப் படைப்பாளிகளின் சார்பில் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான் கலந்து கொண்டார். இப்புத்தகச் சந்தையில் பரிசுபெற்ற படைப்பாளர்கள் வரிசையில் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் கிரிம்சன் எர்த் சிங்கப்பூர் பதிப்பகத்தினரால் இராம கண்ணபிரானின் வாழ்வு என்னும் தலைப்பில் நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு வெளியிடப்பட்டது.

கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர், சிங்கப்பூரிலும் தமிழிலக்கிய வெளியிலும் பேசப்படும் இலக்கியப்படைப்பாளி, சிறுகதைகள் , குறுநாவல்கள், கட்டுரைகள் திறனாய்வுகள் என்று ஏராளமாய் எழுதிக்குவித்துள்ள மனிதநேயப் பண்பாளர் என்னும் பல்வேறு தகுதிகளை ஒருசேரப் பெற்றிருப்பவர் இராம கண்ணபிரான். இவரது இலக்கிய ஆளுமையை மெச்சி இவரைத் தேடிவந்த விருதுகளில் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தினரால் 1988-ல் வழங்கப்பட்ட சிறப்பு எழுத்தியல் அறிஞர் விருது, தாய்லாந்தில் 1990-ல் வழங்கப்பெற்ற தெற்காசிய எழுத்தாளர் விருது, 1997-ல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் புலத்தின் ‘மாண்ட் பிளாங்க்’ இலக்கிய விருது, 1998-ல் சிங்கப்பூர் கலைகள் மன்றம் வழங்கிய இலக்கியப் படைப்புகளுக்கான பண்பாட்டு விருது , 2004-ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய தமிழவேள் விருது, 2007-ல் சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக்கழகம் வழங்கிய பாரதி-பாரதிதாசன் விருது, 2013-ல் சிங்கப்பூரின் கவிமாலை அமைப்பு வழங்கிய கணையாழி விருது என்று இவரது ஆற்றலையும் பங்களிப்பையும் மெச்சி தரப்பட்ட விருதுகளும் சிறப்புகளும் பற்பல. இவைதவிர சிங்கப்பூர் இலக்கிய திறனாய்வுக் கலை மற்றும் பண்பாட்டு அமைப்புக்களில் உறுப்பியம் என்று இவர் தொடர்ந்து தொட்டுவரும் உச்சங்கள் மெச்சத்தக்கன.

இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பில் வாழ்வு என்னும் குறுநாவலும் அன்னை நெஞ்சம் , அருமை, சோழன் பொம்மை, என்று மூன்று சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரின் தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழி பயன்பா ட்டிற்கும், மொழி ஆர்வத்தினை தூண்டுவதற்கும் பயன்படும் நோக்கில் இத்தொகுப்பின் குறு நாவலும் சிறுகதைகளும் தேர்ந்தேடுகப்பட்டுள்ளதாய் கண்ணபிரான் தனது நன்றியுரையில் குறிப்பிடுகிறார். எனினும் இத்தொகுப்பு இந்த நோக்கத்திற்கும் அப்பால் தமிழாசிரியர்கள், படைப்பாளர்கள், தமிழ் மொழிக் கல்வி கற்றல் கற்பித்தல் துறை ஆய்வாளர்கள் மற்றும் பொதுவான சிறுகதை வாசகர்கள் என்று பல்வேறு தரப்பினரும் வாசித்துப் பயன்பெறத்தக்க பல்வேறு கருத்துக்களையும் , கதைசொல் முறைமைகளையும் கதை கட்டமைவு நுணுக்கங்களையும் எளிய முறையில் விளங்கிக்கொள்ள வாழ்வு கதைத்தொகுப்பு பனுள்ள புதுவரவாகக் காணமுடிகிறது.

நூலில் இடம்பெற்றுள்ள முதல் குறுங்கதை வாழ்வு. சிங்கப்பூரின் பல இன மற்றும் பன்மொழிப் பண்பாட்டுச் சூழலில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழ் மாணவர்கள் , அவர்தம் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் சந்திக்கும் தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சவால்களைப் பதிவு செய்கிறது. அச்சவால்களை எவ்வாறு ஆர்வமும் முனைப்பும் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்றும் பாசமுமுள்ள ஆசிரியர்கள் வெற்றிகொள்கின்றார்கள் என்பதை வாழ்வு சொற்சித்திரமாய் விரித்து வைக்கிறது. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் கல்வித்துறை, ஆர்வமுடன் உழைக்க முன்வரும் தமிழாசிரியர்கள் இவர்களுக்கு எவ்வாறு சக ஆசிரியர்களும் அவர்களின் மேலதிகாரிகளும் உதவிக்கரம் நீட்டுகின்றார்கள் என்பது கதை நிகழ்வுகளில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.. தமிழ் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் பிள்ளைகளின் தமிழ் கல்வி மேம்படப்
பெறுவதற்கு எவ்வாறு ஆசிரியர் முயன்று அதில் வெற்றிபெறுகிறார் என்ற செய்திகளை கதை இயல்பாகச் சொல்லிச் செல்கிறது. எண்பதுகளுக்கு மத்தில் சிங்கப்பூரில் நிலவிய தமிழ் கல்விச் சூழல் இக்கதையின் களம். நாடு விடுதலை பெற்று ஐம்பதாம் ஆண்டு நிறைவினை பெருமிதத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மொழி கல்வி வாய்ப்புக்கள் சிங்கப்பூரில் இன்று மழலையர் பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை எத்தனை முற்போக்கு கண்டுள்ளது என்பதை வாழ்வு குறுங்கதையை வாசித்து முடித்த ஒவ்வொரு வாசகனும் உணர்ந்து பெருமிதம் கொள்ள முடியும்.

அன்னை நெஞ்சம் அடுத்த கதை. உடன்பிறந்த சகோதரர்கள் இருவர். அவர்களில் இளையவன் தம் அன்னை மூத்தவனிடம் தன்னிடம் காட்டுவதைவிடக் கூடுதல் பற்றும் பாசமும் வைத்துள்ளார் என்பதைக் கண்டு வருந்துகிறான் . ஏன் அன்னை அப்படி நடந்துகொள்கிறாள் என்பது புதிராகவே அவனுக்கு இருந்து வருகிறது. நோய்வாய்ப்பட்ட அன்னை இறந்துவிடுகிறார். அவரது மரணத்துக்குப்பின் அவர்களின் குடும்ப வழக்குரைஞர் மூலம் இளைய மகனுக்குக் காண்பிக்கச் சொல்லி மரணத்துக்கு முன் அவனது அன்னை எழுதிய கடிதம் தரப்படுகிறது. மூத்தவன் சிறு பிள்ளையாக இருந்த பொது அவர்களின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் துவண்டுகொண்டிருந்த காலம். பிள்ளைக்கு வேண்டியது செய்ய இயலா வறுமை நிலை. இளையவன் பிறந்த பின்தான் வளம் சேரத் தொடங்கியது. தந்தையும் காலமாகிவிட்டார். பிள்ளைப்பருவத்தில் பட்ட துயரங்களுக்கு ஈடுகட்டுவதுபோலத்தான் மூத்த மகனிடம் சற்று அதிகமாகவே பாசமும் பரிவும் காட்டுவதாக அன்னை கடிதத்தில் விளக்குகிறார். இளையவன் அன்னையின் நிலையை உணர்கிறான்.

இக்கதை மூன்று கருத்துக்களை வலியுறுத்துகிறது. பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பில் ஏற்ற தாழ்வு பாராட்டுவது அவர்களிடையே மனக்கசப்பையும் பெற்றோர்பால் கொண்டிருக்கும் மதிப்பைக் குறைக்கவும் வழிகோலும். ஏதேனும் காரணங்களால் அவ்வாறு நடந்துகொள்ளும் நிலை ஏற்ப்பட்டால் அதனை வெளிப்படையாக பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும். இத்தகு வெளிப்படையான போக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் பற்றும் பாசமும் வளர வழிசெய்யும் என்னும் பெற்றோர் பிள்ளைகள் உறவு தொடர்பான மூன்று கருத்துக்களை இக்கதை பதிவு செய்கிறது. அன்னை நெஞ்சம் நூலாசிரியர் எண்பதுகளில் எழுதிய கதை.

‘அருமை’ ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி தன் மகனைத் திருத்தும் தந்தையின் கதை. ஊரும் எறும்புகளையும் உலவும் சிற்றுயிர்கள் மற்றும் பறவைகளையும் வதைத்துத் துன்புறுத்தி இன்பம் காண்கிறான் பள்ளிப்பருவத்து இளைய மகன். அவனைத்திருத்த எண்ணி விடுமுறைக்கு குடும்பத்துடன் அழைத்துச் செல்கிறார் தந்தை. ஆனால் அவர்கள் பயணப்படும் வழியில் அவரது மனைவி கடத்தப்படுகிறாள். கடத்தல்காரர்கள் ஓரிரு நாட்கள் சென்று தொலைபேசியில் பணம் தந்தால் தாம் பிடித்துவைத்துள்ள அவரது மனைவியை விடுவிப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத்தொலை பேசி உரையாடலை மகனும் கேட்கிறான். கூண்டில் அடைபட்ட பறவையாக பரிதவிக்கும் அன்னையை பணம் தந்தேனும் விடுவித்து அழைத்து வாருங்கள் என்று தந்தையைக் கோருகிறான். தான் ஒருபோதும் இனி எவ்வுயிரையும் வதைக்கமாட்டேன் என்று உறுதி கொள்கிறான் மகன். அன்னை திரும்பிவருகிறார். தந்தை மகனைத திருத்த நடத்திய நாடகம் பலன் தருகிறது. அன்பின் வழியது உயிர்நிலை என்பது குறள். மனிதர்கள் தம்மையும் தாண்டி மற்றை உயிர்களையும் நேசிக்கவேண்டும் அவற்றின்பால் அன்பு காட்டவேண்டும் என்பதே இக்கதைமூலம் கண்ணபிரான் முன்வைக்கும் மதியுரை.

சோழன் பொம்மை என்பது இத்தொகுப்பில் இடம்பெறும் இறுதிக்கதை. ஒரு சின்ன மனத்தாங்கலில் பெற்றோருடன் வசித்துவந்த ஒரு இளைஞன் தன மனைவி கைக்குழந்தையுடன் வெளியேறி தனிக்குடித்தனம் போகிறான். ஒருநாள் குழந்தை ஓயாமல் அழுது அரற்றுகிறது. என்ன காரணம் என்று இளம் பெற்றோர் தெரியாமல் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். என்ன கொடுத்தாலும் குழந்தையின் அழுகை ஓயவில்லை. இறுதியில் குழந்தை பாட்டி வீட்டில் வைத்து விழியாடிய சோழன் பொம்மையைத் தேடித்தான் அழுகிறது என்பதை என்று கண்டறிகிறார்கள் . பக்கத்து வீட்டு பெரியவர்களில் உதவியால் அப்படி ஒரு பொம்மை மீண்டும் குழந்தையின் கைக்கு வந்து சேர்கிறது. அழுகை அடங்குகிறது. பிரிந்த உறவினர்கள் பிணக்கு மறந்து ஓன்று சேர்கிறார்கள்

சராசரி குடும்பங்களில் நிலவும் உறவு நிலைகள் எத்தனை மென்மையானவை. குடும்ப ஒற்றுமை ஒங்க எவ்வாறு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்னும் மையக்கருத்து கதையின் அடிநாதமாய் இழைக்கப்பட்டுள்ளது. இக்கதையும் ஆசிரியர் தொன்னூறுகளில் எழுதியது.

வாழ்வு என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள இக்கதைத் தொகுப்பு சில அரிய செய்திகளை முன்வைக்கிறது. சிங்கப்பூர் தமிழ் சமுகத்தின் வாழ்க்கை, தொழில் , பழக்க வழக்கங்கள் , அவர்களின் அபிலாசைகள் போன்றவை எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் எப்படி இருந்தன என்பதை ஒரு காட்சிப் படிமமாக பல்வேறு கதைக்களங்களில் வெவ்வேறு கதைமாந்தர்களை உலவவிட்டு அவர்களின் சொல்லாடல்கள் மூலம் இந்நூல் பதிவு செய்கிறது.

கதைகள் கற்பனையானவை. ஆயின் அவை காட்டும் பின்னணி உண்மையானது. ஒரு சமூகத்தின் வரலாற்றின் சில கூறுகள் இக்கதைகளில் வழிந்தோடுகிறது. ஒரு கைதேர்ந்த சிற்பியின் கலைநுணுக்கத் திறனுடன் எழுத்தாளர் இராம கண்ணபிரான் இக்கதைகளைத் வடித்துத் தந்துள்ளார்.. பள்ளிச் சிறுவர்களுக்கு சொல்லப்பட்ட இக்கதைகள் பருவங்கள்தாண்டி பலரையும் சென்றடையும் வீச்சும் வல்லமையும் கொண்டவை என்றே பார்க்க முடிகிறது. துடிப்புமிக்க சிங்கப்பூர் தமிழிலக்கியப் படைப்பு வெளியில் வாழ்வு செறிவூட்டும் மற்றொரு புதுவரவு.

Series Navigationதமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *