தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது.
“வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு எங்கேயாவது அடி பட்டு விட போகிறதே என்று அவனுக்கு கவலையாக இருந்தது. மெயின் ரோட் அருகிலேயே தன்னை இறக்கி விடச் சொல்லி கேட்டுக்கொண்டான். மைதிலி காதில் வாங்கவில்லை. அவன் ஆட்சேபணையை பொருட்படுத்தவும் இல்லை. “மழை வரும் போல் இருக்கிறது. வீட்டு வாசலில் இறக்கி விடுகிறேன்” என்று தெரு முனையில் திரும்பினாள்.
சந்துக்குள் வீடுகளுக்கு முன்னால் காய்கறி வண்டிகள், தேநீர் விற்கும் வண்டி, சைக்கிள்கள் தாறுமாறாக இருந்தன. வண்டி ஒன்று சாலைக்கு நடுவில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
மைதிலி ஹாரனை அடித்தாள். வண்டிக்கு சொந்தக்காரன் வந்து வண்டியை பக்கத்தில் நகர்த்திவிட்டு காரை ஒட்டிக கொண்டிருந்த மைதிலியை, பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தார்த்தாவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். கார் குறுகலான சந்துக்குள் திரும்பியது. தெருவுக்கு நடுவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நகரச் சொல்லி ஹாரன் அடித்தபடி சித்தார்தாவின் வீட்டுக்கு முன்னால் வந்து நிறுத்தினாள். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எல்லோரும் காரைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள். மைதிலி அவர்களை நட்புடன் நோக்கினாள். அவர்கள் சந்தோஷம் தாங்க முடியாமல் கார் மீது கையை வைத்து ரசிக்கத் தொடங்கினார்கள்.
வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்த சித்தார்த் பின்னால் திரும்பி பார்த்தான்.
குழந்தைகள் எல்லோரும் மௌனமாகி விட்டார்கள். கார் மீது வைத்திருந்த கைகளை எடுத்து விட்டார்கள். சித்தார்த் அவர்களையே பார்த்து கொண்டிருந்தான்.
“வாங்கடா… வாங்க..’ குழந்தைகள் அவர்களுக்குள் பேசியபடி அங்கிருந்து போய் விட்டார்கள்.
மைதிலி சீரியசாக இருந்த சித்தார்த்தாவை, தொலைவில் போய்க் கொண்டிருந்த குழந்தைகளை மாறி மாறி வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் மைதிலியை விடை பெறுவது போல் பார்த்தான். மைதிலி உடனே அங்கிருந்து போகவில்லை. “உங்க பாட்டியைப் பார்த்துவிட்டுப் போகிறேன்” என்றாள்.
அவன் ஒரு நிமிஷம் மௌனமாக நின்றான். கண்களை நிமிர்த்தி மைதிலியைப் பார்த்தான். அந்தக் கண்களில் விருப்பமின்மை.
மைதிலி அதை கவனிக்காதவள் போல் சும்மா இருந்தாள். காத்திருப்பது போல் நின்று கொண்டிருந்தாள்.
சித்தார்த் பின்னால் திரும்பி போய் கதவைத் தட்டினான்.
“யாரது?” உள்ளேயிருந்து குரல் கேட்டது.
“நான்தான்” என்றான்.
“நீதானா? வந்துவிட்டாயா? இப்போ என் ஞாபகம் வந்ததா? நான் கதவைத் திறக்க மாட்டேன். போடா போ. இந்த ஜென்மத்தில் உன் முகத்தைப் பார்க்க மாட்டேன். நான் செத்துப் போனாலும் உனக்கு ஒன்றுமில்லை என்று சொன்னாய் இல்லையா? திரும்பவும் ஏன் வந்தாய்?”
“பாட்டீ! கதவைத் திற.” பற்களைக் கடித்தபடி சொன்னான் சித்தார்த்.
“திறக்க மாட்டேன். என் பேச்சை கேட்க மாட்டேன் என்று சொன்னாய் இல்லையா? எனக்குத் தெரியாதா? நீ இங்கே வராமல் எங்கே போவாய்?”
“பாட்டீ! கதவைத் திறக்கப் போகிறாயா? இல்லையா?” பற்களை மேலும் இறுக்கிக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டே சொன்னான்.
“திறக்க மாட்டேன். வீட்டு வாசப்படி ஏற விட மாட்டேன். வேலை வெட்டி இல்லாத பயல். இருபது வயது கூட ஆகவில்லை. பெரிய ஆண்மகனை போல் பேச்சு! எங்கேயாவது போய் தொலை.”
கதவுகள் லேசாக திறந்து கொண்டன. அவனுடைய புத்தகங்கள், துணிமணிகள் அந்த இடுக்கு வழியாக வெளியில் வந்து சித்தார்த், மைதிலியின் கால்களுக்கு அருகில் தொப் தொப் என்று விழுந்து கொண்டிருந்தன.
“பாட்டீ!” அவன் கதவு இடுக்கு வழியாக அவளிடம் ஏதோ சொல்லப் போனான்.
“”வாயை மூடு! உன்னை எவ்வளவு தடவை வெளியில் துரத்தினாலும் ‘பாட்டீ’ என்று திரும்பவும் வந்து நிற்பாய்..” பழித்துக் காட்டுவது போல் ‘பாட்டீ’ என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னாள். “நான் இதற்கெல்லாம் இளகி விடுவேன் என்று நினைத்தாயா? போடா போ! போக்கிடம் இருக்கும் இடத்திற்கு போய்க் கொள்.” சுமக்க முடியாமல் சுமந்து கொண்டே பெட்டி ஒன்றை கொண்டு வந்து வெளியில் வீசினாள். டிரங்க் பெட்டி சத்தத்துடன் விழுந்ததுடன் அதிலிருந்து உடைகள், டைரிகள், போட்டோக்கள் சுற்றிலும் சிதறியது போல் விழுந்தன. ஒரு போட்டோ தரையில் விழுந்து கண்ணாடி உடைந்து தூள் தூளாகியது.
சித்தார்த் சட்டென்று போய் அதை எடுத்துக் கொண்டு மார்பில் புதைத்துக் கொள்வது போல் அழுத்திக் கொண்டான். தொலைவில் விழுந்த நோட்டுப் புத்தகத்தை கண்ணாடித் துண்டுகளை லட்சியம் செயாமல் நடந்து போய் எடுத்துக் கொண்டான்.
அவன் முகம் சிவப்பாக கன்றி விட்டிருந்தது. துக்கத்தை அடக்கிக் கொள்வது போல் இதழ்களை இறுக்கிக் கொண்டாலும் கண்களில் நீர் பொங்கி வந்தது.
கோபம் எரிமலைக் குழம்பாய் புஸ் என்று சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அந்த நிமிடம் அவன் முகத்தில் குழந்தைத்தனத்தின் இயலாமையும் தாங்கொண்ணாத கோபத்தின் வெளிப்பாடும் இரண்டும் போட்டியிட்டுக் கொண்டிருந்தன.
திரும்பிப் போய்க் கொண்டிருந்த குழந்தைகள் இந்த ரகளையைக் கண்டு பயந்து போனவர்களாய் கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தம்மாள் கதவைத் தடாலென்று திறந்து கொண்டு வெளியில் வந்து சித்தார்த்தின் தலைமுடியை பிடித்துக் கொண்டு முதுகில் நான்கு அடிகளை வைத்தாள். “எவ்வளவு திமிரு உனக்கு? என் பேச்சை கேட்காதவன் திரும்பவும் எதுக்கு வந்தாய்? அப்படியே போய் தொலைய வேண்டியதுதானே?” மூச்சிரைக்க கத்தினாள். அழுதுகொண்டே மறுபடியும் வசை பாட தொடங்கினாள்.
அந்த நிமிடத்தில் சித்தார்த் பைத்தியத்தின் பிடியில் வசமாக மாட்டிக் கொண்டவன் போல் காட்சி அளித்தான்.
எதிர்பாராமல் நேர்ந்த இந்த ரகளைக்கு மைதிலி வாயடைத்து போனவள் போல் ஆகிவிட்டாள். என்ன செய்வது என்று ஒரு வினாடி தோன்றவில்லை. இந்த நேரத்தில் தான் இங்கே வந்தது சரியில்லை என்று தோன்றியது.
அதற்குள் வழுக்கைத் தலை ஆசாமி ஒருவர் ஓடோடி வந்தார். “அன்னம்மா! என்ன இது? உனக்கு மூளை கலங்கி விட்டதா என்ன?” என்று அதட்டினார்.
“அவன் என் பேச்சை கேட்காவிட்டால் கொன்று போட்டு விடுகிறேன். இன்றைக்கு கொலைதான் விழப் போகிறது. அன்னக்காவடிப் பயல்! சின்ன வயதில் இவனுக்கு பாலுக்காக பிச்சைக்காரியை போல் டம்ளரை எடுத்துக் கொண்டு தெருத் தருவாய் அலைந்தேன். அவனுக்கு சாப்பாடு போடுவதற்காக பற்றுப் பாத்த்ரம் தேய்த்தேன். ஐந்து வயது இருக்கும் போது துரத்திவிட்டால் பாட்டீ என்று திரும்பவும் வந்து ஒட்டிக் கொண்டு விட்டான் தரித்திரம் பிடித்தவன். போடா போ. திரும்பவும் ஏன் வந்தாய்?” அந்தம்மாள் பேய் பிடித்தது போல் அவனை உலுக்கிக் கொண்டிருந்தாள்.
வந்தவர் அவளை பின்னால் இழுத்தார். “வீட்டுக்கு பெரிய மனிதர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை கவனியுங்க முதலில். தினமும் இருக்கும் ரகளைதானே இது.”
“எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் செய்கிறான். தரித்திரப் பயல்!” என்றபடி சித்தர்த்தாவைப் பிடித்து தள்ளிவிட்டாள்.
அந்தத் தள்ளலை சமாளித்துக் கொள்வதற்குள் அவன் மைதிலியின் மீது விழுந்தான். மைதிலி அவனை சட்டென்று பிடித்துக் கொண்டாள்.
“சாரி! ஐ யாம் சாரி!’ இதழ்கள் நடுங்க தன்னையும் அறியாமல் சொன்னான்.
மைதிலியின் ஆழ் மனதில் கோபத்தின் ஜுவாலைகள் அடிப்பட்ட பாம்பாய் சீறிக் கொண்டிருந்தன. அடுத்த நிமிடம் அவள் கைகள் நீண்டு அந்தக் கிழவியின் கன்னத்தை பதம் பார்த்திருக்க வேண்டியதுதான். கோபமாய் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளி வந்திருக்க வேண்டியதுதான்.
அங்கே வந்த பெரியவர் மைதிலியை வணங்கிவிட்டு “வாங்கம்மா. நீங்க எங்கே இந்தப் பக்கம்? என் பெயர் கண்ணாயிரம். எங்களுக்குத் தெரிந்தவர்கள்தான். பாட்டி பேரனுக்கு நடுவில் ஏதோ தகராறு” என்றார்.
அப்பொழுதான் அங்கே புதிய நபர் இருப்பது சொரணை வந்தது அன்னம்மாவுக்கு. ”அன்னம்மா! இவங்க மைதிலி அம்மா. சித்தூவுக்கு வேலை கொடுத்த முதலாளியின் மனைவி. நான்தான் சொல்லியிருக்கிறேனே. ரொம்ப பெரிய மனம் படைத்தவங்க” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
அன்னம்மா கண்ணிமைப்பதற்குள் மைதிலியை ஏறயிறங்க பார்த்து விட்டாள். அவள் தோற்றம், ஆடை அணிகலன் எல்லாம் பார்த்த போது பெரிய வீட்டை சேர்ந்தவள் என்று புரிந்து விட்டது. கண்ணாயிரத்தின் அதட்டலும் புத்தியில் உரைத்தது.
“உள்ளே வாங்கம்மா” என்றாள் பணிவுடன்.
வேறு வழியில்லாமல் மைதிலி உள்ளே அடியெடுத்து வைத்தாள்.
கண்ணாயிரம் நாற்காலியை கொண்டு வந்து போட்டார்.
“நான்தான் சித்தூவை வேலைக்காக உங்களிடம் போகச் சொன்னேன்” என்றார் பணிவு கலந்த குரலில்.
அப்படியா என்பது போல் பார்த்துவிட்டு அந்த அறையை சுற்றிலும் பார்த்தாள். அடித்தட்டு மக்கள் வாழும் நிலையில் இருந்தது. ஜன்னல் கதவில் கிழிந்த டவல், பிறையில் அலுமினியம் டம்ளர்கள், மூலையில் கந்தலும் கிழிசலுமாக பாய் ஒன்று, கொடியில் வெளுத்துப்போன புடவை.. மைதிலிக்கு அந்த வீட்டின் பொருளாதார நிலை என்னவென்று புரிந்துவிட்டது.
“குடிக்க தண்ணீர் கொண்டு வரட்டுமா அம்மா.” கண்ணாயிரம் உபசரிப்பது போல் கேட்டார்.
“வேண்டாம்.”
“உங்களிடம் வேலை கிடைத்து விட்டதாகக் சித்தூ சொன்னதும் அதிர்ஷட்க்காரப் பயல் என்று நினைத்தேன் அம்மா” என்றார்.
மைதிலி காதில் வாங்கிக் கொண்டே வாசல் பக்கம் பார்த்தாள். சித்தார்த் பாட்டி வாசலில் விட்டெறிந்த பொருட்களை ஜாக்கிரதையாய் பொறுக்கி பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தான். அக்கம் பக்கத்து குழந்தைகள் தொலைவில் விழுந்த பொருட்களை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்கள். மைதிலிக்கு தானும் போய் உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது.
“பையன் ரொம்ப நல்லவன் தான். விவரம் தெரியாத வயது. அவனிடம் பெரிய சிக்கல் என்னவென்றால், வாயே திறக்க மாட்டான். அதுதான் வேதனை. அவன் மனதில் இருப்பதை நாமாகப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அவன் சொல்ல மாட்டான். ரொம்ப கஷ்டப்பட்டு படித்தான். அவனுடன் யாருக்கும் எந்தவிதமான தொல்லையும் இல்லை. பாட்டியம்மாதான் அவ்வப்பொழுது அவனை தொந்தரவு செய்து எரிச்சலை மூட்டிக் கொண்டிருப்பாள். வயதானவள்! அந்தக் காலத்து மனுஷி. கஷ்டப்பட்டு வளர்த்தாள். கோபம் வந்த போது வீட்டை விட்டு போகச் சொல்லி கத்துவாள். இரண்டு மூன்று நாட்கள் காணாமல் போய் விடுவான். நாங்கள் போய் தேடி கண்டுபிடித்து அழைத்து வருவோம். இன்று காலையில் கூட கோபமாக சாப்பிடாமல் வீட்டை விட்டு போய் விட்டானாம். அதான் அந்தம்மாளுக்கு ஒரே பதற்றம், கவலை. ஏற்கனவே ரத்தக் கொதிப்பு மனுஷி.”
மைதிலி கேட்டுக் கொண்டிருந்தாள்.
“எங்க சித்தூ உங்களிடம் வேலை செய்கிறானா அம்மா?” அன்னம்மா கேட்டாள்.
மைதிலி தலையை அசைத்தாள்.
“வீட்டில் ஒரு வார்த்தை என்னிடம் சொல்ல மாட்டான். எந்த வேலையில் வைத்துக் கிட்டீங்க?” ஆர்வத்துடன் கேட்டாள்.
”படம் வரைவான்.”
“படமா?” அந்தம்மாள் நெற்றியைச் சுளித்தாள். “படம் வரைந்தால் பணம் எதுவும் கிடைக்காதே? ஏற்கனவே நிறைய பேர் அவனை படம் வரையச் சொல்லி வேலை வாங்கிக் கொண்டு சல்லிக்காசு தராமல் ஏமாற்றி விட்டார்கள். பாழாய்போன படங்கள்!”
“அன்னம்மா!” கண்ணாயிரம் குரலை உயர்த்தி சத்தம் போட்டார். கண்களை உருட்டி கோபமாகப் பார்த்தார்.
“சம்பளம் எவ்வளவு தருவதாகச் சொன்னீங்க?” தூண்டித் துருவி கேட்பது போல் கேட்டாள்.
மைதிலிக்கு அந்தம்மாளின் சுபாவம் புரிந்து விட்டது. “உங்க சித்தூவிடமே கேளுங்கள்” என்றாள்.
“அவன் சொல்வதாக இருந்தால் எனக்கு இந்த திண்டாட்டம் ஏன்? வாயே திறக்க மாட்டான். கத்தி கத்தி என் தொண்டை காய்ந்து போக வேண்டியதுதான்.”
“அன்னம்மா! அம்மாவுக்கு கொஞ்சம் டீ தண்ணியாவது கொடுப்பாயா?”
“பால் எங்கே இருக்கு இந்த பாபாழாய் போன வீட்டில்? இரண்டு நாட்களாய் பட்டினி. முதலாளியிடம் சம்பளப் பணம் கொஞ்சம் அட்வான்ஸ் கேட்டு வாங்கி வா என்றேன். அவன் வாயைத் திறந்தால்தானே?”
மைதிலி திகைத்துப் போனாற்போல் பார்த்தாள்.
கண்ணாயிரம் “நான் போய் டீ கொண்டு வருகிறேன்” என்று வேகமாக போகப் போனார்.
மைதிலி தடுத்து விட்டாள். “நான் கிளம்புகிறேன்” என்று எழுந்து கொண்டாள்.
“உட்காருங்கள் அம்மா” என்றார் பணிவுடன்.
“இன்னொரு முறை வருகிறேன்” என்று கிளம்பினாள்.
“வயதில் சின்னவன். உங்களுடைய ஆதரவு இருந்தால் பெரியவனாக வருவான். ஏதாவது குற்றம் குறை இருந்தால் சொல்லி திருத்துங்கள் அம்மா” என்றார் கண்ணாயிரம் கைகளை கூப்பிக் கொண்டே.
“அப்படியே ஆகட்டும்” என்றாள் மைதிலி.
“சம்பளம் மட்டும் சரியாக முதல் தேதி அன்றே கொடுக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா. வீட்டுக்காரியுடன் தினமும் சண்டைதான். நானோ கிழவியாகி விட்டேன். என் கைகளில் வேலை செய்யும் தெம்பு குறைந்த பிறகு என் பேரனுக்கு பட்டினியும் பசிதான் கதியாகி விட்டது.”
மைதிலி பின்னால் திரும்பினாள். “ஆகட்டும் அம்மா. இன்று முதல் உங்களுக்கும், உங்க சித்தூவுக்கும் எந்த குறையும் இருக்காது. போதுமா?” என்றாள்.
இந்த அனுசரணை வார்த்தைகள் கேட்டதும் அன்னம்மாவின் முகம் மலர்ந்து விட்டது. கண்களில் நீர் சுழன்றது. “ஆகட்டும் அம்மா” என்றவள் கண்ணாயிரத்தைக் காண்பித்துவிட்டு “இவர் உங்களை எங்களுக்குக் காண்பித்து புண்ணியம் கட்டிக் கொண்டார். நல்லவர்கள் என்றும், வசதி படைத்தவர்கள் என்றும் சொன்னார். நீங்களும், உங்க புருஷனும் குழந்தை குட்டியுடன் நன்றாக இருக்கணும்” என்று வாழ்த்தினாள்.
மைதிலியின் முகத்தில் கரிய மேகமானது திரையாய் படிந்து அதே வேகத்தில் மறைந்து போயிற்று.
மைதிலி வெளியே வந்தாள். கண்ணாயிரமும் பின்னாலேயே வந்தார்.
அங்கே ட்ரங்க் பெட்டி மட்டும் இருந்தது. சித்தார்த் இருக்கவில்லை. குழந்தைகள் கும்பலாக கூடி மைதிலியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“சித்தூ எங்கே?” கண்ணாயிரம் கேட்டார்.
“அவன் போய் விட்டான்.” சிறுமி ஒருத்தி பதில் சொன்னாள்.
அங்கே தரையில் இரத்தத் துளிகள் தென்பட்டன.
“என்ன இது?” மைதிலி கேட்டாள்?
“சித்தூவின் காலில் கண்ணாடித் துண்டு குத்தி ரத்தம் வந்தது” என்றான் பையன் ஒருவன்.
கண்ணாயிரம் சித்தூவுக்காக அங்கே இங்கே தேடினார். மைதிலி கார் அருகில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாயிரம் இரண்டு மூன்று வீடுகளில் தேடிவிட்டு “இல்லை அம்மா! பாட்டீ திட்டினாள் இல்லையா? அதிலும் உங்கள் முன்னால். அவனுக்கு அவமானமாக இருந்திருக்கும். எங்கேயாவது போயிருப்பான்” என்றார்.
“தேடுவோமா?” என்றாள்.
“வேண்டாம். எங்கே போனானோ? அவனாகத்தான் திரும்பி வர வேண்டும். கட்டாயம் வந்து விடுவான். பாட்டியை தனியாக விட மாட்டான். அந்தம்மாளின் வாயைக் கண்டால் அவனுக்குக் கோபம். அவள் என்றால் உயிர். இது அவர்களுக்கு பழக்கம்தான்” என்று சொன்னார்.
மைதிலி வேறு வழியில்லாமல் காரில் ஏறினாள்.
“கருணை காட்டுங்கள் அம்மா.” அன்னம்மா கைகளைக் கூப்பினாள்.
“டேய் பசங்களா! வழியை விடுங்கள்.” கண்ணாயிரம் குழந்தைகளை அதட்டினார். குழந்தைகள் வழியிலிருந்து விலகினார்கள்.
மைதிலி காரை ஸ்டார்ட் செய்தாள். காரில் வரும் போது மைதிலியின் மனதில் வேதனையும், கவலையும் பரவியிருந்தன.
அபிஜித் சொன்ன பிறகும் தான் சித்தார்த்தை சாப்பிட்டுத்தான் ஆகணும் என்று கட்டாயப் படுத்தவில்லை.. அவன் இரண்டு நாட்களாக பட்டினியாம்.
மைதிலிக்கு எப்படியோ இருந்தது. அன்னம்மாவின் வசவுகள் நினைவுக்கு வந்தன. அந்த வெசவுகளுக்குப் பின்னால் இருக்கும் வேதனை புரிந்தது.
மைதிலிக்கு சித்தார்த் எங்கே இருக்கிறானோ தேட வேண்டும் என்று தோன்றியது. மணியைப் பார்த்துக் கொண்டாள். எட்டரை ஆகி கொண்டிருந்தது. ஏற்கனவே ஒரு மணி நேரம் தாமதம்.
மைதிலி சாரதா மாமியின் வீட்டுப் பக்கம் காரைத் திருப்பினாள். தூறல் தொடங்கி காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. மழை வலுக்கத் தொடங்கியது.
மைதிலியின் கார் போர்டிகோவுக்கு வந்ததும் அபிஜித் ஓடி வந்தான்.
“என்ன ஆச்சு மைதிலி? இவ்வளவு தாமதம் ஏன்? மழையில் கார் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி விட்டதோ என்று பயந்து கொண்டிருந்தேன். போன் கூட செய்யாததால் கவலையாக இருந்தது.”
கொஞ்சம் தாமதம் ஆனாலும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
“சொல்கிறேன்” என்றாள் மைதிலி. ”வீட்டுக்கு போகலாம். சாரதா மாமி இல்லை. தம்பி மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாக போன் வந்தது. மாமி கிளம்பிப் போயிருக்கிறாள்” என்றான் அபிஜித்.
மைதிலி காரை ஸ்டார்ட் செய்தாள்.
- தொடுவானம் 61. வேலூர் நோக்கி….
- இந்தப் பிறவியில்
- காப்பியமாகும் காப்பிக் கலாச்சாரம்
- கோழி போடணும்.
- ஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2 [தொடர்ச்சி]
- சிரித்த முகம்
- கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது
- இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை
- தமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வை
- மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்
- நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்
- உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்
- றெக்கைகள் கிழிந்தவன்
- திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.
- கூடு
- அழகிய புதிர்
- டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
- மூளைக் கட்டி
- உலகத்துக்காக அழுது கொள்
- தெலுங்கு எழுத்தாளர் ஒல்கா அவர்களின் படைப்பு , தமிழில்
- நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் குள்ளக் கோள் புளுடோவை நெருங்குகிறது.
- சிலம்பில் ஊர்ப்புனைவுகள்
- புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
- குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்
- “எதிர்சினிமா” நூல் வெளியீடு
- “தனக்குத்தானே…..”
- “மெர்ஸல்”ஆகிப்போனார்கள்…
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015
- வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)
- மிதிலாவிலாஸ்-7
- எனது நூல்களின் மறுபதிப்பு